இராபர்ட் கால்டுவெல்
திராவிட ஒப்பியல் இலக்கணம் என்னும் அரிய கருவூலத்தை அளித்த வள்ளல் கால்டுவெல்லின் பிறந்த நாள் இந்நாள் ( 1814).
தென்னிந்திய மொழிகளை நன்றாக ஆராய்ந்த அறிஞர் கால்டுவெல் இவை வடமொழியினின்று தோன்றியவை அல்லவென்றும், வடமொழி திராவிடத்திற்குக் கடன்பட்டுள்ளதென்றும் கூறியுள்ளார் என்று அண்ணா தம் ஆய்வுப் பெட்டகமான ஆரிய மாயை நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மொழியின் அரும் பெரும் செல்வமான மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தமிழுக்குச் சூட்டிய விலை மதிப்பில்லா அணிகலன் - ஆவணம் ஒப்பியல் மொழி நூல் என்பதாகும். அந்த நூலை எழுதுவதற்கு ஆதராச் சுருதியாக இருந்ததும் இந்த நூல்தான் என்று பாவாணரே பதிவு செய்துள்ளார் என்றால், அறிஞர் கால்டுவெல்லின் அளப்பரிய தமிழ்த் தொண்டு எத்தகையது என்பதை அறிய முடியும்.
சமஸ்கிருதம்தான் மூலவம் என்ற அறிவில் மூலநோய் கொண்ட அழுக்காறுக் கூட்டம் ஆடிப் பாடிய கால கட்டத்தில் அதற்கு ஆப்பு அடித்துத் தமிழின் தனித் தன்மையை நிறுவிய நெறியாளர் இவர்.
கால்டுவெல் தமிழ் உலகிற்கு அளித்த நூல் திராவிட உணர்வுக்குப் புத்தொளியை அளித்தது என்பதில் அய்யமில்லை.
திருவள்ளுவரே பார்ப்பனருக்கும், புலைச்சிக்கும் பிறந்தவர்தான் என்று கதை கட்டியவர்கள் உண்டே! கீதையின் தழுவல்தான் திருக்குறள் என்று சொன்ன கிறுக்கர்கள் இந்த நாட்டில் இல்லையா?
திருக்குறளில் உள்ள அறத்துப் பாலை அதிலும் முதல் பத்துக் குறட்பாக்களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு, பொருட்பால், காமத்துப்பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னவர்தான் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்.
இப்படி ஆரியம் தன் அழுக்காறை தமிழின்மீது உமிழ்ந்ததையும், அதே நேரத்தில் அயர்லாந்தைச் சேர்ந்த கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஓர் அறிஞர் தமிழுக்குச் செய்த தொண்டினையும் ஒரு கணம் தமிழர்கள் ஒப்பிட்டு எண்ணிப் பார்ப்பார்களாக!
தமிழுக்கு கால்டுல் செய்த காலத்தாற் செய்த தொண்டிற்கு நன்றிச் சின்னமாக சென்னையில் 1968 இல் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின்போது, சென்னைக் கடற்கரையில் அவருக்குச் சிலையை நிறுவினார் முதலமைச்சர் அண்ணா.
1838 ஆம் ஆண்டு ஒரு மத போதகராகத்தான் கால்டுவெல் தமிழ்நாடு வந்தார். நெல்லைப் பேராயராகப் பொறுப்பேற்று, தமிழ் கற்று, ஓலைச் சுவடிகளையும், கல்வெட்டுகளையும் பயின்று, பாண்டியர் காலத்திற்குச் சொந்தமான கயல் சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங்களைக் கண்டுபிடித்து, நெல்லையைப் பற்றி வரலாற்றையும் எழுதிய இந்த வரலாற்று நாயகரை வாயார, மனமார, கையாரப் போற்றுவோம்!
------------------------ மயிலாடன் அவர்கள் 7-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment