தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தால் எல்லாம் கிடைத்துவிடுமா?
கோவையில் தமிழர் தலைவர் பதிலுரை
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தால் எல்லாம் கிடைத்து விடுமா? என்று கேட்கின்ற சில மனநோயாளிகளுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பதில் அளித்து விளக்கவுரையாற்றினார்.
கோவையில் 8.5.2010 அன்று குடிஅரசு தொகுதிகள், செம்மொழி மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை யின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
மனிதன் ஒழுக்கமாக இருக்க
மனிதன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் யோக்கியமாக நடக்க வேண்டும் என்று சொன்னால் அவனுக்குத் தண்டனை உண்டு என்று காட்டியாக வேண்டும் அல்லது அவன் மீண்டும் தவறான வழிக்கு செல்லாத அளவுக்கு இருக்க வேண்டும்.
இந்த பிராயச்சித்தம் என்பதிருக்கிறதே, அது ஆரிய கலாச்சாரம் வடமொழிக்கலாச்சாரம். பிரார்த்தனை பிராயச்சித்தம்.
பாவமா? கும்பகோணம் போ!
நீ என்ன தவறு வேண்டுமானாலும் செய். வெள்ளிக்கிழமை போய் உண்டியலிலே போடு அல்லது அய்யப்பன் கோவிலுக்கு வேண்டுதலை செய்து கொண்டு இருமுடி ஏந்தி கோவிலுக்குப் போனால் சரியாகப் போய்விடும் அல்லது இதையும் மீறி சில்லரை பாவம் வருகிறது என்று சொன்னால் நீ வேறு எங்கும் போகாதே. கும்பகோணத்திற்குப் போ. அங்கே மகாமக குளம் இருக்கிறது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பாவத்தை ஹோல்சேலாக கழுவி விடலாம் என்று வைத்தால் என்ன நிலை? மனிதன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லையே என்பதுதான் தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு மூலமாக விடுத்த கணை.
பெரியாரின் போர்முறை விசித்திரமானது
அண்ணா அவர்கள் சொன்னார்கள். பெரியாரின் போர் முறை விசித்திரமானது-. மற்றவர்கள் எல்லாம் எதிரே படை இருக்கும்; அவர்களோடு போர் புரிந்துகொண்டிருப்பார்கள். ஆனால் பெரியார் அவர்களுடைய போர் முறை கண்ணுக்குத் தெரியாத படைகள் அங்கே இருக்கும். மூலபலம் எங்கேயிருக்கிறது என்று பார்த்து அந்த மூலபலத்தை முறியடிப்பதுதான் பெரியாரின் போர் முறை என்று சொன்னார்கள்.
எனவே தந்தை பெரியார் அவர்களுக்கு பெரிய ஆயுதமாகத்தான் குடிஅரசு அறிவாயுதம் திகழ்ந்தது. அதனுடைய விளைவுதான் இந்த உணர்வுகள் எல்லா பக்கத்திலும் கிளம்யிருக்கிறது.
பெரியார் மய்யம் கொண்டார் என்று அற்புதமாக வர்ணித்தார். அய்ந்தாவது முறையாக பொற்கால ஆட்சியைப் படைத்து வருகின்ற நம்முடைய முதல்வர் அவர்கள் ஆறாவது முறையும் அவர்தான் முதல்வர் என்று சொல்லக் கூடிய அளவுக்கு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற முதல்வர் கலைஞர் டில்லி பெரியார் மய்யத் திறப்பு விழாவிலே டில்லிதலைநகரத்திலே முழங்கினார்.
பெரியார், மய்யம் கொண்டிருக்கிறார்
பெரியார், மய்யம் கொண்டிருக்கின்றார் என்று சொன்னார். பெரியார் மய்யம் கொண்டிருக்கின்றார் என்று சொன்னால் அதற்கு என்ன பொருள்? மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அழகாகச் சொன்னார்கள்.
அவருடைய ஊர் பொங்கலூர். எங்களுக்கோ மகிழ்ச்சி பொங்கியது. அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அவர்கள் நாம் பெரியார் மய்யத்தை இங்கே தொடங்க வேண்டும் என்று சொன்னார்கள்.
கோவையில் பெரியார் மய்யம்.....!
நிச்சயமாக நீங்கள் இன்றைக்கு ஒரு விதையை நட்டிருக்கின்றீர்கள். அந்த விதை கிளம்பும். எவ்வளவு விரைவாக முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக செய்வோம். காரணம் உங்களுடைய தோன்றாத் துணை இருக்கிறது.
இரட்டைக் குழல்கள் இங்கே இருக்கிறது. எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று சொல்லக்கூடிய தெம்பும், துணிவும் இருக்கிறது. எங்கள் மீது வீசப்பட்ட கற்களைத் தவிர வேறு நாங்கள் பெற்றதில்லை. அதற்குரிய வாய்ப்பை பெற்றதில்லை.
எல்லா துறைகளிலும் இருக்கக் கூடியவர்கள் சொல்லுகிறார்கள். பெரியார் இல்லாவிட்டால், நாம் இல்லை என்று மிகப்பெரிய அளவுக்கு சிந்திக்க ஆரம்பித்திருக்கின்றார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு தெளிவாக இந்த கொள்கையைச் சொல்லுகிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 1931லே தரங்கம்பாடி என்ற பகுதியிலே சுயமரியாதை மாநாடு. மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஊர் இது. பொறையாருக்குப் பக்கத்திலே இருக்கிறது.
எமனையே எட்டி உதைத்தவன்
மார்கண்டேயன் என்றும் 16. அவன்தான் எமனையே எட்டி உதைத்தவன் என்றெல்லாம் கதை சொல்லுவார்கள். 60 வயதுக்கு மேல் ஆனவர்கள் நீண்டநாள் வாழ பொறையாருக்குத்தான் செல்லு வார்கள். அங்கேயிருக்கின்ற கடவுளைத்தான் பார்க்க விரும்புவார்கள். பொறையாருக்குப் பக்கத்திலே இருப்பதுதான் தரங்கம்பாடி. தந்தை பெரியார் அவர்கள் 1931ஆம் ஆண்டு தரங்கம்பாடியிலே நடைபெற்ற மாநாட்டிலே பேசும்பொழுது சொல்லுகிறார்கள்.
1931இல் பெரியார் சொன்னார்
தந்தை பெரியார் 1925 லே குடிஅரசு இதழைத் தொடங்கினார்கள். 1931 லே குடிஅரசைத் தொடங்கும்பொழுது சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிச் சொல்லுகிறார்கள்.
நான் சற்று நேரத்திற்கு முன்னாலே கோவை மு.ராமநாதன் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சொன்னேன். அவரே சொன்னார். இளைஞர்களுக்கு நாம் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருக்க வேண்டும். அவர்களை சரியான பாதைக்குக்கொண்டு வரவேண்டும். அந்தப் பணிதான் இப்பொழுது முக்கியமாகத் தேவைப்படுகின்ற பணி.
வேர்கள் சரியாக இருந்தால்
ஓர் இயக்கத்திற்கு சோதனை ஏற்படும் பொழுது பல நேரங்களில் அந்த இயக்கத்தை விட்டு ஓடிப் போகிறவர்கள், இரட்டை வேடம் போடக்கூடிவர்கள். இப்படி எல்லாம் போடுவது எதற்காக? அடித்தளம் சரியாக இருந்தால், வேர்கள் சரியாக இருந்தால் விழுதுகள் பழுதாகாது. அந்த அடிப்படையிலே 1931 லே தந்தை பெரியார் எழுதுகிறார்.
அவர் சொல்லுகிறார். நம்மைப் பொறுத்த வரையிலே நம் கொள்கையின் பேரிலோ நமது செய்கையின் பெயரிலோ ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை. எவ்வளவு அழுத்தம் திருத்தமாக அதுவும் தொடங்கக்கூடிய இயக்கத்தின் சார்பாக எவ்வளவு தெளிவாகச் சொல்லுகிறார் பாருங்கள்.
அட்வான்ஸ் வாங்கவில்லை
அய்யா சொல்லுகிறார். நல்லதோ, கெடுதியோ, நமது இயக்கத்தின் தற்கால நிலை காரணமாக இருந்து வருகிறது. ஏனெனில் யாரிடத்திலும் நமது இயக்கத்திற்காக இப்படிச்செய்கிறேன், அப்படிச் செய்கிறேன் என்று வியாபாரம் பேசி ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் வாங்கவில்லை.
(அய்யா அவர்கள் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் பாருங்கள் நான் இதைச் செய்யவில்லை. அதைச் செய்யவில்லை என்னப்பா என்று கேட்க முடியுமா? என்று கேட்கிறார்.)
ஒருவருக்கும் கட்டுப்பட்டு ஏதாவது ஒரு விசயத்தை நம்பச்செய்து அதனால் நஷ்டம் அடையுங்கள் என்று யாருக்கும் நஷ்டத்தை உண்டு பண்ணவோ, யாருடைய தயவை எதிர்பார்த்தோ இதுவரையில் வைத்துக்கொள்ளவில்லை.
நம்மை பொறுப்பாளியாக்கிக்கொண்டு
நாம் சொல்வதற்கும், செய்வதற்கும், சொல்லாதற்கும், செய்யாததற்கும் நம்மையே பொறுப்பாளியாக்கிக் கொண்டிருக்கின்றோம். (இந்த எழுத்தினுடைய வேகம், கருத்தினுடைய சிந்தனை, எப்படியிருக்கிறது என்பதை தெளிவாக எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு அமைப்பை எவ்வளவு வேகமாக கட்டி ஒரு தலைவர் கொண்டு போவதை எண்ணிப்பார்க்க வேண்டும். அது மட்டுமல்ல அவர்மேலும் சொல்லுகிறார்.
மலைபோன்ற காரியத்தை
முன்பு ஒரு சமயம் நாம் சொன்னதைப் போல மலைபோன்ற ஒரு காரியத்தை கொண்டு வருவதற்காக தலைமுடி போன்ற அற்ப சக்தியைக் கொண்டு கட்டி இழுக்கப் பார்க்கிறோம். வந்தால் மலை போன்ற கொள்கைகள் வரட்டும்.
வராமல் அறுந்து போனால் நமது அற்ப முயற்சிகள் வீணாகப் போகட்டும் என்று அய்யா அவர்கள் சொல்லுகிறார். மேலும் சொல்லுகிறார். நமக்கு அதைப் பற்றி கவலை ஒன்றும் இல்லை. இதனால் பெரிய நஷ்டம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை என்று கருதிக்கொண்டு சொல்லுகிறோம். இவ்வளவு பெரிய இயக்கத்திற்கும், நமது மன உறுதியும் நிர்தாட்சண்யமும்தான் ஆட்சியாகவும், மூலப்பொருளாகவும் இருக்கின்றதே தவிர, வேறு இல்லை. இவ்வளவு தெளிவாக குடிஅரசு தனது பயணத்தைச் தொடங்கியது. தந்தை பெரியார் தொடங்கினார்.
இந்தியாவுக்கு வழிகாட்டிக்கூடிய ஆட்சி
இன்றைக்கு இந்தியாவுக்கே வழிகாட்டக் கூடிய ஓர் ஆட்சி இருக்கிறதென்றால் அது தமிழகத்திலே நடைபெறக் கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதற்கு இந்த கொள்கையினுடைய வெற்றியினுடைய பரிமாணங்களாகத்தான் பன்முகங்களிலே தெரிகிறது. இப்படி எத்தனையோ சொல்லலாம்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது தந்தை பெரியாரின் பெருவிருப்பம். தந்தை பெரியார் மறைந்த பொழுது அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவேன் என்று சொன்னார். அதன்படியே கலைஞர் செய்தார். இது சாதாரண காரியமல்ல.
தி.மு.கவுக்கே உண்டு
பாலங்கள் கட்ட முடியும், சாலைகள் கூட அமைக்க முடியும் மற்றவர்களால். அது வேறு அதைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் சமூகப் பிரச்சினையிலே கைவைக்கக் கூடிய துணிவு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர, அதிலும் குறிப்பாக நமது ஒப்பற்ற தலைவர், கலைஞர் அவர்களைத் தவிர வேறு யாருக்கும் வராது.
எவ்வளவு எளிதாக ஒரு துளி ரத்தம் சிந்தாமல் துப்பாக்கித் தூக்காமல் இராணுவத்தை அனுப்பாமல், அறிவாயுதத்தை மட்டுமே ஏந்தி பெரியார் பக்குவப்படுத்தினார். அந்த நிலத்தைப் பக்குவப் டுத்தினார்.
-----------------தொடரும் ... "விடுதலை” 30-5-2010
0 comments:
Post a Comment