1948 இல் வரலாறு படைத்த தூத்துக்குடியில்
வரும் 20 ஆம் தேதி தந்தை பெரியார் சிலை திறப்பு
திராவிட இயக்க உணர்வாளர்களே! குடும்பம் குடும்பமாக வாரீர்! வாரீர்!!
தமிழர் தலைவர் அழைக்கிறார்
வரும் 20 ஆம் தேதி தூத்துக்குடியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவிற்குக் குடும்பம் குடும்பமாக வந்து கலந்துகொள்ளுமாறு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
நமது திராவிடர் இயக்க வரலாற்றில் தூத்துக்குடி ஓர் மறக்க முடியாத சரித்திர நகரமாகும்.
நம் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் மனமகிழ்ந்து திராவிடர் கழக மாநாட்டின் வெற்றியைப் பாராட்டிய நிகழ்வு மாநாடு முடிந்த பிறகு.
தந்தை பெரியார் அவர்கள் தமது இயக்கத் தொண்டர்கள் எப்படி, கட்டுப்பாட்டின் இலக்கணங்களாகத் திகழவேண்டும் என்பதற்கு வகுப்பு எடுத்து, பாடம் நடத்திய மாநாடு அம்மாநாடு.
என்னைப் பொறுத்தவரையில்...
அம்மாநாட்டில் அவர்கள் ஆற்றிய வழிகாட்டும் பேருரையில்,
என்னைப் பொறுத்தவரையில் என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்கவேண்டுமென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து என் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள்தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா, முட்டாள்களா, பைத்தியக்காரர்களா, கெட்டிக்காரர்களா என்பதுபற்றி எனக்குக் கவலை இல்லை.
சர்வாதிகாரம், பொது நன்மைக்காகவே!
...சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படுகிறேன் என்று தோன்றலாம். இது ஓரள-வுக்கு சர்வாதிகாரம்தான் என்பதையும் ஒப்புக்கொள்ளுகிறேன்.
ஆனால் தோழர்களே! நீங்கள் சிந்திக்கவேண்டும். இந்தச் சர்வாதிகாரம் எதற்குப் பயன்படுகிறதென்று! என்னுடைய சர்வாதிகாரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காக, பொது நன்மைக்காகப் பயன்படுத்துகிறேனே தவிர, எந்த சிறு அளவுக்கும் எனது சொந்த பெருமைக்காகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.
(1948 இல் நடந்த தூத்துக்குடி திராவிடர் கழக மாகாண மாநாட்டில் தலைமையுரை, குடிஅரசு, 29.5.1948)
இப்படி துணிச்சலாகப் பேசி, உண்மைகளை உருக்கமாக சொல்லிய உத்தமத் தலைவர் தந்தை பெரியார் அவர்களைத் தவிர வேறு யார் இருக்க முடியும்?
திராவிட நாட்டுக் கவர்னர்
அன்றைக்கு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் மதிப்பிற்குரிய திரு. நீதிமாணிக்கம் அவர்கள். செயலாளர்களில் குறிப்பிடத்தக்கவர் கே.வி.கே. சாமி அவர்கள்.
அவரது ஆற்றலைக் கண்டு மகிழ்ந்து, நாடு தனி நாடானால் (அப்போது கேட்கும் உரிமையும்) திராவிட நாட்டுக்கு கவர்னராக நியமிக்கப்பட வேண்டியவர் என்றெல்லாம் அய்யா சொன்னார்.
தூத்துக்குடியில் அப்போது மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் திரு. நீதிமாணிக்கம் ஆவார்! கோயில்பட்டி ஈ.வெ.அ. வள்ளிமுத்து போன்று தூத்துக்குடியில் செல்வாக்கு மிகுந்த வணிகப் பிரமுகர்.
முதுபெரும் சுயமரியாதை வீரர்கள், மானமிகு சண்முகம், சின்னமணி, காளிமுத்து, இராமசாமி இப்படி பட்டியல் தொடர்ந்துகொண்டேயிருக்கும்!
தி.மு.க. தோழர்கள்மீது கிரிமினல் வழக்கு
புதுக்கிராமம் என்ற பகுதியில் அக்கிரகாரத்தில் தாக்குதல் நடந்தது என்று தி.மு.க. தோழர்கள்மீது ஆச்சாரியார் ஆட்சியில் (1952_53) அழி வழக்குகள் போடப்பட்டு, கே.வி.கே. சாமி போன்ற பல தி.மு.க. பொறுப்பாளர்கள்மீது குற்றம் சுமத்தியபோதுகூட, தந்தை பெரியார் (இயக்கம் பிரிந்த நிலையிலேகூட) தி.மு.க. தோழர்கள்மீது கிரிமினல் வழக்குப் போட்ட ஆச்சாரியார் அரசுக்கு எதிராக வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கத் தவறவில்லை!
தி.க., தி.மு.க. இரட்டைக்குழல் துப்பாக்கி
அப்போதே தி.க.,வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்ற அறிஞர் அண்ணாவின் கருத்து வெறும் கற்பனை அல்ல என்பது நாட்டினரால் உணரப்பட்டது!
வாதாட போதுமான தமிழர் கழக ஆதரவு வழக்குரைஞர்கள்கூட கிடைப்பது அரிது அந்தக் காலகட்டம் (62 ஆண்டுகளுக்குமுன்) என்பதால், கடலூரிலிருந்து தி.மு.க. வழக்குரைஞர் இரெ. இளம்வழுதி அவர்கள் தூத்துக்குடி சென்று வழக்குகளை நடத்தி வந்த நிலை.
தூத்துக்குடியில் கோலாகல விழா
இன்றைக்கு திராவிடர் இயக்கம் வளர்ந்தோங்கிய நிலையில், தூத்துக்குடியிலிருந்து அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று பலரும் திராவிடர் இயக்கத்தின் அணிகலன்களாக, அறப்போர்க் கருவிகளாக கிடைத்துள்ளனர்!
அப்படிப்பட்ட தூத்துக்குடியில், வரலாறு படைக்கும் பகுத்தறிவுத் திருவிழா வரும் 20 ஆம் தேதி (20.5.2010) வியாழன் அன்று மாலை கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கிறது! தந்தை பெரியார் சிலை திறப்பு விழா!
சுயமரியாதை இயக்கப் பாடி வீடு
தூத்துக்குடியில் நன்றி உள்ள தமிழர்களுக்குப் பஞ்சமில்லை; சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்பகால பாசறை, பாடி வீடுகளில் ஒன்றாக இருந்தது இன்றும் தொடருகின்றது!
மறைந்தும், மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் சண்முகனார், சிவன் அணைந்த பெருமாள், காளிமுத்து, இராமசாமி போன்றோர் நினைவோடு விழா மாட்சி பெறவிருக்கிறது!
தவறாது கலந்துகொள்வது
நம் கடமை அல்லவா?
மிகப்பெரிய பகுத்தறிவுப் பிரச்சாரப் பெருவிழா, மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி, தீமிதி உள்பட நடத்தி, வரலாறு படைக்கவிருக்கும் தென் மாவட்டத் திருவிழாவில் திராவிடர் இயக்கத்தவர், பாசமிகு கழகக் குடும்பங்கள் அனைவரும் சங்கமம் ஆகும் வண்ணம் தவறாது வந்து கலந்துகொள்ளுவது நம் கடமை அல்லவா?
முக்கியப் பிரமுகர்கள்
பெரியார் கொள்கையின் வெற்றி மலர்களாகி காட்சியளிக்கும் மாண்புமிகு மானமிகு அமைச்சர் திருமதி கீதாஜீவன் என்.எஸ்.ஆர். தி.மு.க.வின் செயல் வீரர் மாவட்டச் செயலாளர் திரு. பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜெயதுரை, திருச்செந்தூர் வெற்றி வீரர் திரு. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் மற்றும் சிலை அமைப்பதற்கு அரும்பாடுபட்டு, அரும் ஒத்துழைப்பு தந்த அனைத்துத் தோழர்களும், தூத்துக்குடி மாநகரத்தின் மேயர் திருமதி இரா. கஸ்தூரிதங்கம் அம்மையார் அவர்களும் பங்கேற்கவிருக்கும் இந்தத் திராவிடர் இயக்கத் திருவிழாவிற்கு திரண்டு வரவேண்டாமா?
தூத்துக்குடியில் கூடுவோம்;
சுயமரியாதை முத்துக்களை எடுப்போம்!
தூத்துக்குடியில் வங்கக் கடல் உண்டு. ஆனால், அம்மக்கள் கருஞ்சட்டைக் கடலையும் கண்டு, புதியதோர் எழுச்சி சரித்திரம் படைக்கவேண்டாமா? இளைய தலைமுறையினர் தொடங்கி முதிய இளைஞர்கள் வரை, அனைவரும் குடும்பம் குடும்பமாக, குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ள கழகக் குடும்பத்தினர் சந்திப்பு நிகழ்வாக அதனை ஆக்கிட வாரீர்! வாரீர்!! என்று உங்கள் தொண்டன், தோழன் வேண்டுகிறேன்.
தூத்துக்குடியில் கூடுவோம்!
சுயமரியாதை முத்துக்களை எடுப்போம் வாரீர்! வாரீர்!!
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
17.5.2010
***************************************************************************
தூத்துக்குடி அழைக்கிறது! 1948-க்குப் பிறகு 2010
ஜாதிகள் என்பவையே இந்நாட்டிலிருந்து ஒழிக்கப்படும் வரை ஜாதிவாரிப் பிரதிநிதித்துவ முறை அரசாங்க அலுவல்களில் நிரந்தரமாக இருந்து வர வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.
சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் இந்திய யூனியன் அரசாங்கம் சென்னை மாகாண ஜாதிவாரிப் பிரதிநிதித்துவ முறைச் சட்டத்தை தபால் தந்தி, ரயில்வே, அகில இந்திய ரேடியோ, அகில இந்திய உத்தியோகங்களில் அனுசரிக்க வேண்டுமென இம்மாநாடு அரசியலாரை கேட்டுக் கொள்கிறது.
நாட்டில் மத சம்பந்தமில்லாத ஆட்சி நிலவ வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டு விட்டதால், பள்ளிக் கூடத்தில் மத சம்பந்தமான, புராண சம்பந்தமான பாடங்கள் கற்பிக்கக் கூடாது என்றும், அரசாங்கம் பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் பணம் எவ்வகையிலும் கொடுக்கக் கூடாது என்றும், கட்டாய இலவச ஆரம்பப் படிப்புக்கும் செகண்டரி படிப்புக்குமே சகல பண உதவியும் அரசாங்கம் செய்ய வேண்டுமென்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
எல்லாத் தொழிற்சாலைகளிலும், தொழிலாளிகளுக்கு அவர்கள் பணம் செலுத்தாமலே மூலதனத்தில் 5-இல் ஒரு பாகம் கட்டாயமாக ஒதுக்கப்படுவதுடன் தொழிலாளிகளுக்கும், முதலாளி-களுக்கும் தகராறு ஏற்பட்டால், தொழிலாளர் பிரதிநிதியும், முதலாளி பிரதிநிதியும், இருவராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரும் ஆகி மூவர் அடங்கிய ஒரு போர்டாக அமைத்துத் தகராறு தீர்க்கப்பட வேண்டுமென்று இம்மாநாடு சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது.
இந்த முத்து முத்தான தீர்மானங்கள் முத்துக்குளிக்கும் தூத்துக்குடியில் நிறைவேற்றப்பட்டன.
கழக வரலாற்றில் காலமெல்லாம் பேசப்படுவது தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக 18ஆவது மாகாண மாநாடாகும். (8,9.5.1948).
அம்மாநில மாநாட்டில் தான் மேற்கண்ட தீர்மானங்களும் சேர்த்து 32 முத்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அம்மாநாட்டின் செயலாளராக இருந்த கே.வி.கே. சாமிபற்றி 80 வயதுக்கு மேற்பட்ட பெரியார் பெருந்தொண்டர்கள் பேசும்போது மிகப் பெரிய அளவு பிரமிப்பு ஏற்படத்தான் செய்யும்.
அம்மாநாட்டின் தடபுடலான ஏற்பாடுகளும், நிகழ்ச்சிகளும் தந்தை பெரியார் அவர்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்து, மாநாட்டின் செயலாளராகவிருந்து பணியாற்றிய தோழர் கே.வி.கே. சாமி அவர்கள் குறித்து அம்மாநாட்டிலேயே தந்தை பெரியார் பேசியது அதற்கான நற்சான்றுப் பத்திரமாகும்.
நான் தோழர் கே.வி.கே. சாமி அவர்களை இதுவரை ஒரு விளையாட்டுப் பிள்ளை என்று நினைத் திருந்தேன். அவர் இம்மாநாட்டுச் செயலாளராக யிருந்து பணியாற்றியதைப் பார்த்ததிலிருந்து அவர் இத்திராவிட நாட்டின் கவர்னர் பதவியைக் கொடுத்தால்கூட அதையும் பார்த்துக் கொள்ளக் கூடிய திறமை பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டியிருக்கிறது என்று தந்தை பெரியார் போற்றியுரை புகன்றுள்ளார் என்பதிலிருந்தே மாநாட்டின் செழிப்பும், செயல்பாடும் எவ்வளவு நேர்த்தியானவைகளாக இருந்தன என்பதை எளிதிற் தெரிந்து கொள்ளலாம்.
அம்மாநாட்டில் தந்தை பெரியார் கூறிய கருத்து இன்றைக்கும் பொருந்தக் கூடியதாகும்.
என் அருமைப் பார்ப்பனத் தோழர்களே! நீங்கள் வாழை இலையைப் போல் மென்மையானவர்கள் நாங்கள் முள்ளுச் செடி போல வன்மையும், கூர்மையும், வாய்ந்தவர்கள்; முள் வாழையிலைமீது உராய்ந்தாலும் வாழையிலைதான் கிழியும்! வாழையிலையே வந்து முள்ளுடன் மோதினாலும் வாழை யிலைதான் கிழியும். அதுபோல நீங்களாக வந்து எங்கள் இனத்துடன் மல்லுக்கு நின்றாலும், உங்களுக்குத் தான் நஷ்டம் - அல்லது, நாங்களாக வந்து உங்களிடம் போரிடத்தக்க நிலை ஏற்பட்டாலும் உங்களுக்குத்தான் நஷ்டம்.
ஆகையால் கூறுகிறேன், நம் இருவருக்கும் போரோ, பிணக்கோ, பூசலோ, பகையோ நேரும் விதத்தில் நடந்து கொள்ளாதீர்கள்! அப்படி நடந்து கொண்டால் கஷ்டம் உங்களுக்குத்தான்; எங்களுக்கல்ல; வாழையிலை முட்செடியும் மோதிக் கொள்ளும் நிலை நேரிட்டால் காயம் இலைக்குத்தான்; முள் செடிக்கல்ல
அய்யாவின் தூத்துக்குடி இந்த உரை தூரப் பார்வை கொண்டது! இன்று வரை பார்ப்பனர்கள் அதன் உட்கிடக்கையை உணர்ந்தார்கள் இல்லை, என்ன செய்வது காயம் படக் காத்திருக்கிறார்கள்.
62 ஆண்டுகளுக்குப்பின் அதே தூத்துக்குடியில் அடேயப்பா, எத்துணை எழுச்சி! எங்கிருந்து வருகிறது இந்தக் கருஞ்சட்டைப் பட்டாளம்! என்று வியக்கும் வகையில் வரும் 20ஆம் தேதி மாலையில் தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மகத்தான பெரு விழாக்கள்!
கழக வரலாற்றில் கற்கோட்டை என்ற முத்திரை பதித்த தூத்துக்குடியில் அமைச்சர் மாண்புமிகு கீதாஜீவன் அவர்கள் தலைமையில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலையைத் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் திறந்து வைக்கிறார். குடிஅரசு தொகுதிகள் வெளியிடப்பட உள்ளன. முட்டவரும் மூடநம்பிக்கைகளைத் தூள் தூளாக்கும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் உண்டு; விடுதலை வாசகர் வட்டம் தொடங்கப்பட உள்ளது.
ஏற்பாடுகளைக் கழகத் தோழர்கள் சுழல் வீச்சில் செயல்படுத்திக் கொண்டுள்ளனர்.
தூத்துக்குடியில் அய்யா சிலை திறக்கப்பட வேண்டும் என்ற கனவின் வயது அதிகம். தூத்துக்குடியின் இரட்டையர்களாகச் செயல்பட்ட சிவனணைந்த பெருமாள், எஸ். காளிமுத்து ஆகியோர் உணர்வால் நம்மிடையே சுயமரியாதைச் சுடரொளியாகி ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கனவை நனவாக்கியுள்ள கழகக் குடும்பத்தினர் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி கழகத்தின் கலங்கரை விளக்கமாகக் காட்சி அளித்தது.
தூத்துக்குடி துறைமுகத் திட்டம்பற்றி திராவிடர் இயக்க மேடைகளில் முழங்கப்பட்டன. சேது கால்வாய்த் திட்டம் என்பதில் தூத்துக்குடிக்கு முக்கியமான இடம் உண்டு. அத்திட்டத்தின் செயல்பாட்டு மூலம் பல்லாயிரக்கணக்கானவர் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்.
தென் மாநிலம் பொருளாதாரச் செழிப்பின் விளைச்சல் பூமியாக மலரும்; அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் என்ற எண்ணத்தின் உற்சாகத்தில் தமிழர்கள் இருந்து வருகிறார்கள்.
இந்தத் திராவிடத்து எண்ணத்தின் எதிர்பார்ப்பின்மீது ஆரியத்தின் ராமனை மோதவிட்டு முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஒரு சிறு நரிக் கூட்டம்!
விளைந்து நிற்கும் விஞ்ஞானத்தின்மீது மூடநம்பிக்கைப் புரட்டை மோத விடும் முயற்சி இன்றும் நடந்து கொண்டேயிருக்கிறது என்பதற்கு இது ஓர் அடையாளமாகும்.
1948 தூத்துக்குடி மாநாட்டுத் தீர்மானம் மதச் சார்பற்ற ஆட்சிபற்றி சுட்டிக்காட்டுகிறது. அதே கருத்தை இன்றும் சுட்டிக் காட்ட வேண்டிய நிலையில் தான் நாடு பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பதற்கான அடையாளம் இது.
எழுங்கள் தோழர்களே! அய்யாவின் இந்தச் சிலை திறப்பு விழாவில் நம்முடைய தமிழர் தலைவர் கொடுக்கும் சங்கநாதம் சிங்கநாதமாக முழங்கப் போகிறது!
மயங்கிக் கிடக்கும் மத்திய அரசுக்கு மக்களின் இதய முழக்கம் எது என்பதைக் காட்டித் தெளிய வைக்கும் இலட்சிய விழாதான் தூத்துக்குடி மாநாடு.
பெரியார் சிலை திறப்பு விழா என்பதேகூட, தமிழர்களின் களம் தளம்தான்!
கத்தும் கடல் சூழ்ந்த தூத்துக்குடியில் கழகக் கடல் அலைகளின் சீறிடும் முழக்கம், டெல்லி கோட்டைவரை எதிரொலிக்கச் செய்வோம். கூடுங்கள்! கூடுங்கள்!! நாம் கூடி முழக்கமிட்டது எதுவும் புறமுதுகு கண்டதில்லை; புது புறநானூறு படைப்போம் புறப்படுங்கள் தோழர்களே!
1948 இல் இதே மே மாதத்தில் தூத்துக்குடி கருப்பு அலைகளால் சிவந்தது என்றால், 2010 மே 20 புதிய அலைகளால் தூத்துக்குடி புது ரத்தம் பாய்ச்சப்பட்ட புதிய பூமியாக ஜொலிக்கட்டும்!
1948 இல் பிறக்காதவர்கள் ஏராளம். 2010அய் பார்த்தவர்கள் நாம் என்ற பெருமையைத் தேடுவோம், வாருங்கள் தோழர்களே வாருங்கள்! தூத்துக்குடி அழைக்கிறது!
-------------------மின்சாரம் அவர்கள் 16-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment