உழைப்பின் பயனை உறிஞ்சி, உழைப்போரை என்றும் வெறும் சக்கைகளாகவே பிழைப்பு நடத்த வேண்டிய நிலையில் வைத்திருப்பதில், இந்து மதக் கலாச்சாரத்திற்கு இணையாக வேறு எதையும் சொல்ல முடியாது.
பொய் மூட்டைகள்
தொன்மைக் காலத்தில், அரசர்கள் ஆண்டபொழுது, சத்திரியர்களுடன் சேர்ந்துகொண்டு, சில சமயங்களில் வைசியர்களையும் இணைத்துக் கொண்டு, சூத்திரர்களைச் சுரண்டுவதற்கு வேதம், இதிகாசம், புராணம், ஜோதிடம் முதலிய பொய் மூட்டைகளைப் பார்ப்பனர்கள் பயன்படுத்தினார்கள்.
நவீன அறிவியல் காலத்திலும் பகுத்தறிவற்ற படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள், பதவியை நாடும் அர-சியல்வாதிகள், பேராசை கொண்ட பணக்காரர்கள் முதலியவர்களை இதிகாச, புராணக் கதைகளைக் காட்டி மதவாதிகளும், ஜோதிடர்களும், சாமியார்களும் ஏமாற்றுவது தொடர்வது பரிதாபத்திற்கு உரியதாகவும் வருந்தத்தக்கதாகவும் இருக்கிறது.
ஓராண்டு முழுவதும்.. .
அதில் ஒன்றுதான் அட்சய திருதியை எனும் ஏமாற்று. இது அண்மையில் சில ஆண்டுகளாக பிரபலம் ஆக்கப்படும் நகைப்புக்கு உரிய ஒரு கூத்து. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், அப்படி வாங்குவோருக்கு எல்லாம் அந்த ஆண்டு முழுவதும் தங்கம் வாங்கிக் கொண்டே இருக்கும் அளவுக்குச் செல்வம் கொழிக்குமாம்! ஆசை வயப்பட்டவர்களுக்குப் பேராசையைத் தூண்டும் ஓர் அற்புதமான மூடநம்பிக்கைக் குளிகை இது.
பாரதம்
இந்த மூட நம்பிக்கையை உண்மையைப் போல் நம்ப வைப்பதற்குப் பயன்படுத்துவது இதிகாசப் புராணக் கதைகள்தானே! அட்சய திருதியையை நம்ப வைப்பதற்கு மகாபாரதத்தில் இருந்து ஒரு கப்சாவைப் பயன்படுத்துகிறார்கள்.
துர்வாசர் என்பவர் முனிவர்களுக்குத் தலைவன். அவனுக்கு ஏராளமான சீடர்கள். அவன் ஏதேனும் அரசரின் இருப்பிடத்திற்குச் சென்றால், அவனுக்கும் அவனுடைய சீடர்களுக்கும் உணவளித்து உபசரிக்க வேண்டும். இல்லை என்றால், முன் கோபியான துர்வாச முனிவரின் சாபத்திற்கு உள்ளாகி அரசன் அவதிப்படுவான்.
ஒருநாள், துரியோதனனின் அரண்மனைக்கு துர்வாசனும் அவனுடைய பார்ப்பனச் சீடர்களும் செல்கிறார்கள் காலை நேரத்தில். நல்ல உணவு கிடைக்கிறது. மனத்திருப்தி அடைந்து துரியோதனனை வாழ்த்தி விடைபெற முனைகிறார், முனிவர் துர்வாசர். அப்பொழுது துரியோதனன் கூறுகிறான்: இன்று அட்சய திருதியை, மிக நல்ல நாள்; உங்களுக்கு விருந்து வைக்கும் நல்ல வாய்ப்பும், உங்கள் அருளும் எனக்குக் கிடைத்தது. இதே சிறப்பைப் பாண்டவர்களும் பெறவேண்டும். ஆகையால் காட்டில் வாழும் அவர்களுடைய இருப்பிடத்திற்குச் சென்று விருந்துண்டு, அவர்களையும் ஆசிர்வதிக்க வேண்டும் என்றான்.
அவ்வாறே செய்வோம் என துர்வாசர், துரியோதனனிடம் கூறிவிட்டுப் பாண்டவர்கள் வாழும் காட்டிற்குச் சென்றான்.
துர்வாச முனிவரின் சீடர்கள் மிகப் பலர். அவர்கள் அனைவருக்கும் உணவு சமைக்கப் பாண்டவர்கள் அவதிப்படுவர்; அவர்களால் முடியாது. திரவுபதியிடம் ஓர் அட்சயப் பாத்திரம் உண்டு. அதில் அள்ளஅள்ள உணவு குறையாது. ஆனால், ஒரு நாளில் ஒரு முறை அதைப் பயன்படுத்திய பின்பு, அதைக் கழுவி வைத்துவிட்டால், அதை மீண்டும் மறுநாள்தான் பயன்படுத்த முடியும். துர்வாசர், காலையில் துரியோதனன் அரண்மனையில் தன் பார்ப்பனச் சீடர் பலருடன் வயிற்றை நிரப்பியாயிற்று. இனி, மதிய உணவிற்குத்தான் பாண்டவர் இருப்பிடம் செல்வார்கள். அதற்குள், திரவுபதி அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்திருப்பாள். துர்வாசரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவ்வளவு பேருக்கும் சமைக்க முடியாது; பசியினால் துர்வாசரின் கோபம் பொங்கி எழும்; பாண்டவர்களைத் தன் சாபத்திற்கு உள்ளாக்குவார்; அவர்கள் அழிவார்கள். இது துரியோதனனின் திட்டம் என்று பாரதத்தில் வியாசர் கதை அளக்கிறார்.
துரியோதனன் வேண்டியபடியே துர்வாசன் பாண்டவரிடம் செல்கிறான்; மதிய உணவு தங்கள் அனைவருக்கும் அளிக்கவேண்டும் எனக் கூறிவிட்டு, ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வருவதாகச் சொல்லி சீடர்களுடன் ஆற்றுக்குச் செல்கிறான்.
கிருஷ்ண பகவான்
பஞ்சபாண்டவர்களின் பத்தினி திரவுபதிக்குக் கவலை கவ்விக் கொள்கிறது. துரியோதனன் எதிர்பார்த்தபடியே, அட்சய பாத்திரத்தை முற்பகலில் பயன்படுத்தி, வந்தவர்களுக்கு விருந்தளித்து, அதைக் கழுவி கவிழ்த்து வைத்திருந்தாள். என்ன செய்வது? உடனே எப்பொழுதும் போல் கிருஷ்ண பகவானின் நினைவு வந்தது. மனதுக்குள் முறையிட்டாள்; பகவானும் வந்தார். அட்சய பாத்திரத்தை எடுத்து வரும்படி கூறினார்: அது பயன்படாது, கழுவியாயிற்று என திரவுபதி கூறினாள். இருப்பினும் பகவான் வற்புறுத்தினார். பாத்திரத்தைக் கொண்டு வந்தாள்; அதில் ஒரு சோற்றுப் பருக்கை ஒட்டிக் கொண்டிருந்தது. பருக்கை ஒட்டிக் கொள்ளாமல் கழுவவேண்டுமெனக் கிருஷ்ணன் அறிவுரை கூறவில்லை. அதற்கு மாறாக, அந்தப் பருக்கையை வாயில் போட்டு விழுங்கினான். உலகில் உள்ளவர்கள் பசியை எல்லாம் அந்த ஒரு சோற்றுப் பருக்கை போக்கிவிட்டது. துர்வாச முனிவரும் அவனு-டைய சீடர்களும் அவ்வாறே வயிறு நிரம்பியதாக உணர்ந்தனர். பாண்டவர்களிடம் வந்து அவர்களை வாழ்த்தினர்.
கதையின் நோக்கம் என்ன?
அட்சயப் பாத்திரத்தின் மகிமையைச் சொல்வதாக வரும் இந்த இதிகாசக் கதை நிகழ்ச்சி எதற்காகச் சொல்லப்பட்டது? ஒன்று, வருண தர்மத்தையும் ஜாதி பேதத்தையும் தனது கீதையில் உபதேசித்த கிருஷ்ணனுக்கு மகிமை ஏற்படுத்தி அவன் மீது பக்தி உண்டாக்க வேண்டும் என்பது. இரண்டு, முனிவர்கள் எனத் தங்களைச் சொல்லிக் கொண்டு, எத்தனை பார்ப்பனர்களுடன் அவர்கள் வந்தாலும் அரசர்கள் அவர்களுக்கு வயிறு நிரம்ப உணவு அளித்துப் பரிசுகள் வழங்கவேண்டும் என்பது. மூன்றாவதாக, இந்நாட்டின் பழங்குடிகளை பல மூடநம்பிக்கைகளில் மூழ்கடித்திருப்பது போதாது என்று, அட்சயபாத்திரம் என்ற மேலும் ஒரு மூடநம்பிக்கையிலும் ஆழ்த்தவேண்டும் என்பது. இந்த மூன்று சூதான திட்டங்களிலும், பார்ப்பனர்கள் இன்றுவரை பெருமளவில் இந்திய மக்களை, இந்துக்கள் எனப்படுவோரை, ஏமாற்றியே வருகிறார்கள்.
அட்சயப் பாத்திரத்துடன் தொடர்புடையது அட்சய திருதியை நாள். அட்சயப் பாத்திரத்தில் உணவு பெருகுவதைப் போலவே, இந்த நாளில் செய்யும் நல்ல காரியம் ஓராண்டு முழுவதும் பலமடங்கு பெருகும் (மற்ற நாளில் செய்யும் நல்ல காரியத்துக்கு மகிமையில்லையா?). அதற்கு ஒரு கதை வேண்டும் அல்லவா?
ஆதிசங்கரர் ஒரு நாள் பிச்சை எடுத்து வந்தார். ஏழைப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றார். ஆதிசங்கரரின் பெருமையை அந்தப் பெண் அறியாதவளாம். ஆகையால் தன்னிடம் இருந்த மாம்பழத்தைப் பிச்சையாகப் போட்டாளாம். (இதில் என்ன சிறுமை அல்லது குறையைக் கதையளப்பவர் கண்டாரோ தெரியவில்லை.) உடனே, ஆதி சங்கரரின் அருளால், அப்பெண்ணின் இல்லத்தில் தங்கத்தால் ஆன கனிகள் குவிந்தனவாம்!
இந்தக் கதையை விளம்பரப்படுத்தி எதை வலியுறுத்துகிறார்கள்? அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், அந்த ஆண்டு முழுவதும், அதற்குச் செலவிட்ட தொகை பல மடங்கு பெருகுமாம்! (அடுத்த ஆண்டு பலன் பெற மீண்டும் தங்கம் வாங்க வேண்டும். எப்படி ஏமாற்றுவித்தை?).
பெரியார்
திட்டமிட்டு, உழைத்து, வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்திற்கு இந்தக்கதை உதவுமா? இந்த மூடநம்பிக்கை,தங்கநகை வணிகம் செய்வோருக்கு லாபத்தைப் பெருக்குவதற்குத்தானே பயன்படும்? ஆகையால் தானே, இந்து மதமும் அதன் அடிப்படையில் அமைந்த கதைகளும், மக்களை ஏமாற்றவும், சோம்பேறிகள் ஆக்கவும் படைக்கப் பட்டிருக்கின்றன எனத் தந்தை பெரியார் கூறினார்.
முடக்கமா? முதலீடா?
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி வீட்டில் முடக்குவது நாட்டின் பொருளாதாரத்தை முடக்குவதற்குத்தானே பயன்படும்! நாட்டின் ஒட்டு மொத்தச் செல்வத்தை உயர்த்தும் முதலீடாக அது இருக்கமுடியுமா? பாமரர்களைச் சுரண்டி, கொள்ளை லாபம் பெறுவதற்குத்தானே தங்கத்தில் மோகம் கொள்ளச் செய்வது உதவும்!
------------------------கு.வெ.கி. ஆசான் அவர்கள் 11-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment