தொழிலதிபர்களின் இரட்டைவேடம்!
இந்தியாவின் தொழிலதிபர்கள், பார்ப்பனர்கள், பனியாக்கள் இப்பொழுதெல்லாம் ஜாதி வித்தியாசம் பார்ப்பதில்லை என்று சொன்னால், நாட்டு மக்கள் நம்பித்தான் தொலைக்கவேண்டும். காரணம் அவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் ஆயிற்றே!
ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது முடிந்து போனவிஷயம். தற்போது இந்தியாவில் செயல்பட்டுவரும் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் ஜாதி, மதத்தை எல்லாம் தாண்டி சென்று விட்டன. இந்தச் சூழ்நிலையில் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு அவசியம் இல்லாதது என்று இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஹரிஸ் பாரதி கூறியுள்ளார்.
தொழில் கூட்டமைப்பின் பொது இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி கூறுகிறார்: ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது முடிந்துபோன விஷயம். அதற்கு மீண்டும் உயிர் கொடுப்பது கவலை அளிக்கிறது. இது அவசியமற்ற நடவடிக்கை என நினைக்கிறோம். தொழில் நிறுவனங்கள் இந்தத் தடைகளையெல்லாம் கடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று பரப்புரை செய்கிறார்.
இந்தியாவில் சட்டப்படி ஜாதியிருக்கிறது. யதார்த்த நிலையிலும் ஜாதி இருக்கிறது. இந்தியத் தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்களை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டுவிட்டதாகக் கூப்பாடு போடுகிறார்கள்.
முதலில் இவர்கள் ஜாதிகளைக் கடந்தவர்கள்தானா? வீட்டுத் திருமணங்களை ஜாதிகளைக் கடந்துதான் நடத்துகிறார்களா? இந்தக் கூட்டமைப்பில் உள்ள பார்ப்பனர்கள் ஆவணி அவிட்டத்தன்று பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதில்லையா? தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பூணூல் கலியாணம் நடத்துவதைவிட்டு விட்டார்களா?
ஜாதி ஒழிப்புக்காக இவர்கள் நகர்த்திய காய்கள் என்ன? மனச்சான்றுடன் கூறுவார்களா?
அரசு ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பதற்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் ஏன் இதில் மூக்கை நுழைக்கவேண்டும்?
ஜாதிகளைக் கடந்து நிறுவனங்களை நடத்துகிறார்களா? இவர்களின் தொழில் அமைப்பில் நிருவாக இயக்குநர்களாக இருப்பதில் எத்தனைப் பேர் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள்? கணக்குக் கொடுப்பார்களா?
ஜாதிவாரி கணக்கு எடுக்கப்படுமேயானால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் இத்தனை சதவிகிதத்தில் இருக்கிறார்கள். ஆனால், இந்தத் தனியார்களின் நிறுவனத்தில் இவர்களுக்குரிய இடங்கள் எத்தனை சதவிகிதம் என்ற கேள்வி எழுமே எத்தனை நாள்களுக்குக் கேள்விகளையே கேட்டுக்கொண்டு இருப்பார்கள்? அடுத்து போராட ஆரம்பித்துவிடுவார்களே தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை என்ற உரிமைக்குரல் ஏற்கெனவே வெடித்துக் கிளம்ப ஆரம்பித்துவிட்டது அந்த உதறலில்தான் பெரிய ஜாதி ஒழிப்பு வீரர்கள்போல முண்டாதட்டிப் பேசுகிறார்கள்.
ஜாதிகளைக் கடந்து சென்றுவிட்டதாக இந்தியாவுக்குள் பேசும் இவர்கள் வெளிநாடுகளில் தொழில்களைத் தொடங்கும்போது எப்படி நடந்துகொள்கிறார்கள்?
தென் ஆப்பிரிக்காவில் கறுப்பர்கள் பொருளாதார அதிகாரம் பெறுதல் என்னும் கொள்கைக்கு இந்தியத் தொழில் அதிபர்கள் கட்டுப்பட்டுதான் அங்கெல்லாம் தொழில்களைத் தொடங்குகிறார்கள்.
தென் ஆப்பிரிக்காவில் ஒரு தொழில் நிறுவனத்தில் கறுப்பர் ஒருவர் தலைமைச் செயல் அலுவலராக இருப்பதும், ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டில் கறுப்பர்கள் மேலாண்மையினராக இருப்பதும் கட்டாய மட்டுமன்று; தொழில் நிறுவனங்களின் பங்குகளும் கறுப்பர்களுக்குத்தான் தரப்படவேண்டும்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள தனது தொழில் நிறுவனங்களின் பங்குகளை டாடா குழு கறுப்பர்களுக்குக் கொடுத்திருக்கிறது.
தலைமைச் செயல் அலுவலராக கறுப்பரை நியமிப்பது இப்பொழுதுள்ள வழக்கம். அதன் காரணமாக வெள்ளையர் நிறுவனங்கள் கறுப்பர்களில் பல இளைஞர்களுக்குத் தலைமைச் செயல் அலுவலர்களாக நியமிக்கின்றன என்று தென்னாப்பிரிக்க வர்த்தக தொழில் துறையின் தலைமை இயக்குநர் இக்பால்மீர் சர்மா கூறியுள்ளார். (ஆதாரம்: 27.5.2005, பிசினஸ் ஸ்டாண்டர்டு).
வெளிநாடுகளில் நிறத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடுக்குப் பச்சைக்கொடி தூக்கும் இந்தியத் தொழில் அதிபர்கள் உள்நாட்டில், இந்தியாவில் வேறு நாக்கில் பேசுகிறார்களே இவர்களின் இரட்டை வேடத்தை இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
--------------------- “விடுதலை” தலையங்கம் 18-5-2010
0 comments:
Post a Comment