Search This Blog

28.5.10

திராவிடர் இயக்கம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன சாதித்தது?

கா.அப்பாதுரையார்

எப்பாத் துறைக்கும்

இவனோர் பழம்புலவன்

அப்பாத் துறை யறிஞன்

ஆழ்ந் தகன்ற முப்பாலே

நூலறிவு நூறு புலவர்கள் சேரினவன்

காலறிவு காணார் கனிந்து

என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களால் பாராட்டப்பட்ட பன்மொழிப் பெரும் புலவர் கா. அப்பாதுரையார் நினைவு நாள் இந்நாள் (1989).

திராவிடர் இயக்கம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் என்ன சாதித்தது என்று கேட்கும் அறிவுச் செவிடர்களின் செவிப்பறை கிழியும் அளவுக்கு அறிவு நூல்களை ஆய்ந்து தந்த புலவர் பெருமக்கள் வரிசையில் அப்பாதுரையாருக்குத் தனிச் சிம்மாசனமும் வைர மகுடமும் உண்டு.

தந்தை பெரியாரின் சீடர், திராவிடர் இயக்கத்தின் தூண்களில் ஒருவர்.

ஷேக்ஸ்பியர் கவிதைக் கொத்து (1941) இன்ப மலர் (1945), சிறுகதை விருந்து (1945), விந்தன் கதைகள், புத்தார்வக் கதைகள், பலநாட்டு சிறுகதைகள், ஆண்டியின் புதையல் (1953) நாட்டுப் புறச் சிறுகதைகள் ( 1954) ஷேக்ஸ்பியர் கதைகள், கட்டுரை முத்தாரம், எண்ணிய வண்ணம், செந்தமிழ்ச் செல்வம், தளவாய் அரியநாதர், குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு, இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு, பிளாட்டோவின் குடியாட்சி, வருங்காலத் தலைவர்களுக்கு என்ற எண்ணிறந்த நூல்களை யாத்த பெருமகன் ஆவார்.

திராவிட இயக்கத்தோடு அப்பாதுரையார் மிகவும் நெருக்கமாக ஆனதற்குப் புரட்சிக் கவிஞர் முக்கிய காரணமாவார்.

விடுதலை, லிபரேட்டர் ஏடுகளுடன் அப்பாதுரையார் அவர்களுக்கு நெருக்கம் அதிகமாகும்.

செந்தமிழ்ச் செல்வம், கலைமாமணி, விருதுகள் தமிழ்நாடு அரசால் இவருக்கு அளிக்கப்பட்டன.

5.6.1983 அன்று சென்னை பெரியார் திடலில், சங்கராச்சாரி யார்? என்ற தலைப்பில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உரையாற்றியனார். அன்று அக் கூட்டத்திற்கு அப்பாதுரையார் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.

அதில் திடுக்கிடும் ஓர் அரிய தகவலை வெளியிட்டார். ஆதி சங்கரர் கடைசியாக எழுதிய நூல் மனேசாப் பஞ்சகம் என்பதாகும். அதில் ஒரு சுலோகம் கடவுளை எதிர்ப்பது. அதன் காரணமாக ஆதிசங்கரர் உயிரோடு வைத்துப் புதைத்துக் கொல்லப்பட்டார் என்ற தகவலைக் கூறினார். (விடுதலை, 15.6.1983).

அப்பாதுரையார் அவர்கள் பற்றி அறிவுச் சுரங் கம் அப்பாதுரையார் என்னும் அரிய நூலை முகம் மாமணி எழுதியுள்ளார். அதனைப் பாராட்டி பேராசிரியர் வெள்ளையன் பகுத்தறிவு இலக்கிய அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி ரூ.10 ஆயிரம் பரிசளிக்கிறார்.

------------------- மயிலாடன் அவர்கள் 26-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: