Search This Blog

10.5.10

அஜ்மீர் குண்டு வெடிப்புக்கு ஆர்.எஸ்.எஸே காரணம்



இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடைபெற்ற குண்டு வெடிப்புகள், சதிச் செயல்களுக்கு ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பலே காரணமாக இருந்திருக்கிறது; வன்முறைகளுக்குக் காரணமான இந்தக் கும்பலே பழியை மற்றவர்கள்மீது சுமத்தித் தப்பிக்கும் கீழ்த்தரமான வேலைகளில் இறங்கி வந்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

தென்காசியில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டை வெடிக்க செய்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்று பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. சதுமுகை என்னும் ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு, பழியை மற்றவர்கள்மீது சுமத்தப் போட் டிருந்த திட்டமும் பிறகு அம்பலமானதுண்டு.

சூரத் நகரில் மரங்களில் எல்லாம் வெடிகுண்டுகள் இருந்ததை குஜராத் மாநிலக் காவல்துறை கண்டுபிடித்தது என்று சொல்லப்பட்டது. உண்மை வேறுவிதமானது என்றும் தெரியவந்தது. கான்பூர், மகாராட்டிரம் நந்தித், மாலேகான் போன்ற இடங்களிலும் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தவர்களும் இந்தச் சங்பரிவார்க் கும்பலே என்று கண்டுபிடிக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டில் அஜ்மீர் தர்காவுக்கு அருகில் பள்ளி வாசலில் ரமலான் நோன்பு திறக்கும் வேளையில் குண்டு வெடித்தது. இதற்குக் காரணம் முசுலிம்களே என்று கதை கட்டினார்கள். முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யவும் பட்டனர். ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க., முசுலிம் இளைஞர்களைப் படாத பாடுபடுத்தியது. மூன்ற ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவேந்திர தாஸ் குப்தா, சந்திரசேகர் என்ற இரண்டு ஆர்.எஸ்.எஸ். வன்முறையாளர்கள்தான் அஜ்மீர் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். மாலேகான் குண்டுவெடிப்புச் சதிகாரர்களான பெண் சாமியார் பிரக்யாசிங் தாக்கூர் மற்றும் இந்திய இராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டு, இந்துத்துவாதிகளுக்கு இராணுவப் பயிற்சியும் அளித்துக் கொண்டிருந்த இசுரேல் வரை சென்று இந்துத்துவா ராஜ்ஜியத்தை உண்டாக்க சதித் திட்டம் தீட்டிய ஸ்ரீகாந்த் புரோகித்துக்கும் இந்த இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த இருவரும் மொபைல் தொலைப்பேசி சிம் கார்டை வைத்தே கண்டுபிடிக்கப்பட் டுள்ளனர்.

தோண்டத் தோண்ட புதையல் கிடைப்பது போல ஒவ்வொரு தகவலாக வெளிவந்து கொண்டே இருக்கின்றது. நாடு தழுவிய அளவில் கலவரங்களை ஏற்படுத்துவதுதான் இவர்களின் திட்டம். அதன்மூலம் வாக்கு வங்கியை இந்துத்துவா என்று ஓர் அணியும், மற்ற சிறுபான்மையினர் என்பவர்கள் இன்னொரு அணி என்றும் பிரித்துக் காட்டி இந்துக்களின் பிரதிநிதிகள் தாங்களே என்று (குஜராத் பாணி) மார்தட்டி ஆட்சியைப் பிடிக்கலாம்; இந்து சாம்ராஜ்ஜியத்தை அமைக்கலாம் என்பதுதான் அவர்களின் அந்தரங்கத் திட்டமாகும். பாபர் மசூதி இடிப்பு முதல் குஜராத், ஒரிசா கலவரங்கள் வரை இந்தப் பின்னணிகளில் தான் நடந்து வந்திருக்கின்றன.

இந்த நிலையில் இத்தகைய அடிப்படைவாத அமைப்புகளை நாடு எப்படி அனுமதித்துக் கொண்டு இருக்கிறது? அரசு எப்படி அனுமதித்துக் கொண்டு இருக்கிறது என்பதுதான் நியாய பூர்வமான கேள்வியாகும்.

மதச் சார்பற்ற சக்திகள் ஏதோ தேர்தல் காலத்துப் பணி என்று கருதி விடாமல் ஆபத்தின் அளவினைப் புரிந்து கொண்டு, ஒன்றிணைந்து மதவாதி சக்திகளை அம்பலப் படுத்தி, அப்புறப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான கடமையும், பணியுமாகும்.


------------------"விடுதலை” தலையங்கம் 10-5-2010

0 comments: