Search This Blog

27.5.10

நாடெங்கும் பிள்ளையார் பொம்மைகள் உடைத்து நொறுக்கப்பட்ட நாள்


பிள்ளை-யார்?

புத்தர் ஜெயந்தி நாளில் (மே 27) பிள்ளையாரை வீதிக்கு வீதி உடைத்து நொறுக்குங்கள் என்று சிதம்பரத்தையடுத்த வடக்குமாங்குடி பொதுக்கூட்டத்தில் அறிவித்தார் தந்தை பெரியார் (28.4.1953).

அதன்படி 27.5.1953 அன்று நாடெங்கும் பிள்ளையார் பொம்மைகள் கருஞ்சட்டைத் தோழர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.

கோயிலுக்குச் சென்று அந்தப் பிள்ளையாரை உடைக்கவேண்டாம்; மண்ணால் செய்து உடையுங்கள்; இரகசியமாக வேண்டாம்; புத்தர் ஜெயந்தி கொண்டாட என்று அனுமதி கேட்டு அந்தக் கூட்டத்தில் உடையுங்கள் என்று ஆணை பிறப்பித்தார் அய்யா (விடுதலை, 7.5.1953).

முதலமைச்சர் யார் தெரியுமா? சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

நாஸ்திகர்களிடமிருந்து இந்த நாட்டைக் காக்குமாறும், அறிவில்லாதவர்களுக்கு மதி விளக்கம் உண்டாகவேண்டுமென்றும் யானைமுகனை அனைவரும் வேண்டிக்கொள்ளவேண்டும் என்றும் கூறினார் முதலமைச்சர் ஆச்சாரியார்.

நாடெங்கும் பிள்ளையார் பொம்மைகள் உடைத்து நொறுக்கப்பட்டன. சென்னையில் அன்றைய மவுண்ட் ரோடு இந்து அலுவலகத்திலிருந்து சுதேசிமித்திரன் அலுவலகம்வரை நடைமேடைகளில் பிள்ளையார் பொம்மைகள் சுக்கல் நூறாக அடித்து நொறுக்கப்பட்டன.

திருச்சியில் டவுன் ஹாலில் தந்தை பெரியார் பேசினார். 15,000 மக்கள் பேரணியில் பங்கு கொண்டனர். இலட்சோபலட்சம் மக்கள் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

புத்தர் போதனையும், பிள்ளையார் வணக்க சிறுமையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்தப் போராட்டத்தை பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மறைமுகமாக வன்முறையைத் தூண்டினார் முதலமைச்சர். அதன் காரணமாக பல இடங்களில் கழகத் தோழர்களைக் காலிகள் தாக்கினர்.

திருச்சி பெரியார் மாளிகையைக் கொளுத்த முயன்ற காலியைக் கருஞ்சட்டைத் தோழர்கள் கையும் களவுமாகப் பிடித்து விட்டனர்.

சில இடங்களில் தந்தை பெரியார் படங்களைக் கொளுத்தவும் செய்தனர். அது கண்டு 20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற புத்தரான தந்தை பெரியார் அலட்சியப் புன்னகை செய்தார். அதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். (விடுதலை, 29.5.1953).

என் படத்தைக் கொளுத்த நானே ரூபாய் 50 தருகிறேன். அவர்கள் கொளுத்தட்டும் அந்த இடத்திற்கு யாரும் செல்லவேண்டாம். என் படத்தைக் கொளுத்தி யதாலேயே நான் செத்தா போய்விடுவேன்? என்று அறிக்கை விட்டு ஆச்சாரியாரின் ஆணவத்தை அடக்கினார்.

மதுரையில் திருவருள் நெறி மன்றத்தாரால் மதுரை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டிடம் போராட்டத்தை எதிர்த்து வழக்கும் தொடுக்கப்பட்டது. திருச்சி வீரபத்திர செட்டியார் என்பவரால் வழக்கும் தொடுக்கப்பட்டது. தள்ளுபடி செய்யப்பட்டது.

பிள்ளையார் ஒரு பொம்மை; சக்தியாவது வெண்டைக்காயாவது என்பதைப் பக்தர்கள் உள்படப் பெரும்பாலானோர் புரிந்துகொண்டனர்.

-------------- மயிலாடன் அவர்கள் 27-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு ஓவியா அவர்களுக்கு ...

// 20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற புத்தரான தந்தை பெரியார்... //
அப்படியே வழி மொழிகிறேன் தோழர் ...

புத்தர் பயணித்தது 96000 சதுர மீட்டர் என படித்திருக்கிறேன் ...
அதற்கிணையானது தானே நம் தந்தையின் உழைப்பும் மற்ற பிறவும் ...

நன்றிகள் பல தோழர்!

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர்

மதன்செந்தில் said...

நல்ல பதிவு தொடருங்கள்

www.narumugai.com