தொழிலாளர்கள்
சென்னைப் பார்ப்பனத் தலைவர்கள் தாங்கள் தான் தொழிலாளர்கள் விஷயத்தில் அதிக அக்கறையுள்ளவர்கள் என்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய சகல சவுகரியங்களும் தங்களால் தான் செய்யக்கூடுமென்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய பிரதிநிதித்துவங்களெல்லாம் தங்களால் தான் வாங்கிக் கொடுக்கக் கூடும் என்றும், சொல்லி இது கால பரியந்தம் தொழிலாளர் களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுகளைப் பெற்று பதவி பெற்று வந்தது பலருக்கும் தெரிந்த விஷயமே. சென்ற வருஷத்திய முனிசிபல் தேர்தல்களிலும், சட்டசபைத் தேர்தல்களிலும், அதற்கு முன் நடந்த தேர்தல்களிலும் இப்பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை அறியாமல் ஏமாந்து, தொழிலாளர்கள் தங்களுடைய ஓட்டுகளையெல்லாம் பார்ப்பன அபேட்சகர்களுக்கே கொடுத்து பார்ப்பனரல்லாதாரைத் தோற்கடிக்கச் செய்ததும் பலருக்கும் தெரிந்த விஷயமே. இப்படியிருக்க, இப்போது மேற்படி தொழிலாளச் சகோதரர்களில் தாங்களுக்கு தாங்களே பிரதிநிதியாய் இருக்கலாமெனக்கருதி, வரப்போகும் சென்னை முனிசிபல் தேர்தலுக்கு தங்கள் சகோதரர்களிலேயே இரண்டொருவரை அபேட்சகர்களாய் நிறுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள். இதை அறிந்த மேற்படி பார்ப்பனர்கள் தொழிலாளர்களை ஏமாற்ற புதிதாய் ஒரு வழி கண்டுபிடித்தி ருக்கிறார்கள். அது என்னவென்றால் தொழிலாளர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டுமானால் அவர்கள் காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியில் சேர வேண்டுமாம். இல்லாவிட்டால் அவர்கள் நிற்கக் கூடாதாம். இது எவ்வளவு வஞ்சகமானதென்பதை வாசகர் யோசிக்க வேண்டும்.
என்னவெனில், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியிலோ, தொழிலாளர்கள் சேருவதானால் தொழிலாளிகளின் முதலாளிமார்கள் அதனை எப்படியாவது கெடுத்துவிடக்கூடும். அதனால் தொழிலாளிகள் காங்கிரசில் சேர முடியாமல் போய்விடலாம். இந்த சாக்கை வைத்துக் கொண்டு தொழிலாளர்களை சுலபமாகத் தள்ளிவிடலாம் என்பதுதான்.
தொழிலாளிகளுடைய ஓட்டுப் பெறும்போது மாத்திரம் யாரையாவது பிடித்து அவர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுகளைப் பெற்று விடலாம் என்கிற தந்திரத்தின் பேரில் தான் பார்ப்பனர்களின் தொழிலாளர் அநுதாபம் ஏற்கிறது. நமது தொழிலாள நண்பர்களோ இந்த சூழ்ச்சிகளை அறியாமல் எடுப்பார் கைக் குழந்தைகளாயிருக்கின்றார்கள். இவைகளை எல்லாவற்றையும் அறிந்தேதான் நாம் தொழிலாளிகள் அரசியல் சம்பந்தமான எந்தக் கட்சியிலும் சேரக்கூடாது என்றும், அவர்கள் தங்கள் கால்களிலேயே நிற்கக்கூடிய சக்தியைப் பெற வேண்டும் என்றும், அது கொஞ்சகாலம் தாமதமானாலும் குற்றமில்லை என்றும், பேசியும் எழுதியும் வந்தோம். நாம் இப்படிப் பேசி எழுதி வந்ததைப் பற்றி பல தொழிலாளர்கள் தலைவர்களுக்கும் தம்மீது மனஸ்தாபமேற்பட்டது நமக்கு தெரியும்.
ஈரோட்டில் கூடிய தொழிலாளர் மாநாட்டு உபசரணைத் தலைவர் முறையிலும், இதையே சொன்னோம். மித்திரன் அதைப்பற்றி மிகுதியும் கோபம் கொண்டது. ஆனபோதிலும் இன்னமும் நாம் அதே கொள்கையுடன் தான் இருக்கிறோம். இப்போது சென்னை காங்கிரஸ் கமிட்டியில் முனிசிபல் தேர்தலுக்கு அபேட் சகர்கள் நிறுத்தும் விஷயத்தில் ஸ்ரீமான்கள் சிங்காரவேலு, செட்டியாருக்கும், சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார் முதலியவர்களுக்கும் நடந்த சம்பாஷணை, அடிதடி சண்டை முதலியவைகள் நடந்திருப்பதையும், தொழிலாளர் கூட்டத்தில் ஸ்ரீமான்கள் சிவராவு, கல்யாண சுந்தரமுதலியார் முதலியவர்கள் பேசிய பேச்சுக்களிலிருந்தும் பார்ப்பனத் தந்திரங்கள் நன்றாக விளங்குகின்றன.
இனியாவது நமது தொழிலாள சகோதரர்கள் இவ்வரசியல் புரட்டுகளின் மாய்கையில் இருந்து விலகுவார்களா என்பது தான் நமது கோரிக்கை. அப்படி அவர்கள் விலகித் தனிப்பட்ட ஓ காலை தொழிலாளி என்கிற முறையில் தேர்தலுக்கு நிற்பார்களானால், நாமும் நம்மாலானதைச் செய்யத் தயாராயிருக்கிறோம் என்றும், எந்தக்கட்சி எதிர்த்தாலும் அதை ஒரு கை பார்த்துவிடலாம் என்றும், நமது தொழிலாளர் சகோதரர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
----------தந்தைபெரியார்- “ குடிஅரசு” - தலையங்கம் - 24.04.1927
****************************************************************************************
விடுமுறை வேலை
விடுமுறை காலத்தில் பார்ப்பனரல்லாத மாணாக்கர்களும், வக்கீல்களும், தங்கள் நேரத்தை வீணாகச் செலவு செய்யாமலும், அனாவசியமாய்த் தங்கள் பணங்களைச் செலவு செய்துகொண்டு கண்டவிடங்களில் சுற்றித்திரியாமலும் தங்கள் தங்கள் ஊர்களில், கிராமங்களில் உள்ள பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பார்ப்பனரின் புரட்டுகளை விளக்கிப் பார்ப்பனீயத்தை ஒழிப்பதும், சுயமரியாதை யின் தத்துவத்தை எடுத்துச் சொல்லுவதும், ஜஸ்டிஸ் திராவிடன் குடிஅரசு முதலிய பத்திரிக்கைகளுக்குச் சந்தா தாரர்களைச் சேர்ப்பதுமான வேலை யிலேயே ஈடுபட வேண்டும். இதற்குத்தான் ஓய்வு கிடைத்திருக்கிறது. மாணவர்கள் படித்துத் தேறி இனி மேல் தேசத்திற்குச் செய்யப்போகும் துரோகத்திற்கும், வக்கீல்கள் செய்த, செய்து வருகிற, செய்யப்போகிற துரோகத்திற்கும் இதுவே பிராயச்சித்தமாகும்.
--------------------- தந்தைபெரியார் - “குடிஅரசு” - அறிவிப்பு - 24.04.1927
0 comments:
Post a Comment