குழப்புகிறது உள்துறை
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் திரட்டப்படவேண்டும் என்பது நியாயமானது மட்டுமல்ல; சட்ட ரீதியாகவும் சரியான ஒன்றே!
ஜாதி இன்னும் சட்ட ரீதியாக ஒழிக்கப்படவில்லை. ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதும் சட்ட ரீதியாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் வரும்போதுகூட, நீதிபதிகள் கேட்கும் முதல் வினா இத்தனை சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கான அளவுகோல்புள்ளி விவரம் உள்ளதா? என்பதுதான்.
மக்கள் தொகையில் பெரும்பகுதியினராக இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்டவர்களின் சதவிகிதம் அவரவர்களுக்குத் தோன்றிய வகையில் அள்ளிக் கொட்டப்பட்டுள்ளன.
அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய சட்ட அமைச்சர் மிக அழகாக இதுபற்றிக் கூறியுள்ளார். அரசாங்கத்திற்கு இந்தப் புள்ளி விவரம் தேவைப்படுகிறது என்று அழுத்தமாகக் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஆ. இராசா மிகச் சரியாக அவருக்கே உரித்தான சட்ட அறிவுடன் திராவிட இயக்கக் கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.
மத மறுப்பாளன், கடவுள் மறுப்பாளன்கூட இந்து மதத்தில்தான் வைக்கப்படுகிறான் ஏதோ ஒரு ஜாதிக்குள் அடைக்கப்படுகிறான் இந்த நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பது அவசியமாகிறது என்று மிகத் தெளிவாகவே கூறியுள்ளார்.
இதில் மத்திய அரசின் உள்துறை ஏன் குளறுபடியைச் செய்கிறது என்று தெரியவில்லை.
வேறு மாநிலத்தவர்கள் இன்னொரு மாநிலத்தில் குடியிருந்தால் ஜாதிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுவதாக உள்துறை சொல்கிறது. இதில் குழம்புவதற்கு என்ன இருக்கிறது?
வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் இங்கு வந்து கல்லூரிகளில் படிக்க வந்தால் அவர்களின் சொந்த மாநிலத்தில் அவரின் ஜாதி எந்தப் பட்டியலில் உள்ளதோ, அந்தப் பட்டியலில் தானே வைக்கப்படுகிறார்?
ஏதேனும் அய்யப்பாடு இதில் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மாநிலப் பட்டியலைப் பெற்றுக்கொள்வதில் என்ன சிரமம்?
அறிவியல் வளர்ந்த இந்தக் கணினி யுகத்தில் இதில் குழப்பம் வருவதற்கு எங்கே இடம் உள்ளது?
மத்திய அமைச்சர் ஆ. இராசா அவர்கள் குறிப்பிட்டதுபோல, கார் இருக்கிறதா? வீட்டில் குளியல் அறை இருக்கிறதா? என்று தகவல் கேட்டுப் பதிவு செய்யும்போது (இவை மாறக்கூடியவை) மாறாத தன்மை வாய்ந்த ஜாதியைப்பற்றி விவரம் கேட்பதை ஏன் தவிர்க்கவேண்டும்?
அனந்தகுமார் போன்ற பார்ப்பனர்கள் குறுக்குச்சால் ஓட்டுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூகநீதியைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ள வாய்ப்புள்ள ப. சிதம்பரம் போன்றவர்களுக்கு தெளிவு இருக்கவேண்டாமா?
ஜாதியை சட்ட ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் ஒரு பக்கத்தில் காப்பாற்றிக் கொண்டு, அந்த ஜாதியின் காரணமாக உரிமைகள் இழக்கப்பட்டு வந்திருக்கிற மக்களுக்காக தேவைப்படும் ஒரு புள்ளி விவரத்தைத் திரட்டத் தயங்குவது பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் ஜனநாயக ரீதியான முடிவுக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதப்படும்.
பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியாகவேண்டும். அதில் ஒரு முக்கிய நடவடிக்கைதான் வரும் 10 ஆம் தேதி திராவிடர் கழகம் நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டம்!
துண்டு அறிக்கைகள், முழக்கங்கள் தலைமைக் கழகத்தின் சார்பில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்ல வகையில் பிரச்சாரம் செய்து ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி, ஆர்ப்பாட்டத்தின் வீச்சு மத்திய அரசை எட்டும் வகையில் நடத்திக் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-----------------------"விடுதலை” தலையங்கம் 7-5-2010
0 comments:
Post a Comment