Search This Blog

30.5.10

ஆரியமும் அண்ணா சொன்னதும்







திராவிடர் கழகத்தில், ஒரு சில சொந்தக் காரணங்களுக்காக, நான் என்னைஇணைத்துகொள்ளவில்லையே தவிர, நான் என் 16_17 வயதிலிருந்தே, பெரியாரின் பற்றாளனாக உள்ளேன். என்னைப்போன்ற பல பேர், திராவிடர் கழகத்தில் உறுப்பினர்களாக இல்லாமல், வெறும் ஆதரவாளர்களாக, தமிழகத்தில் அல்ல; இந்தியாவில் அல்ல; அகில உலகிலும் உள்ளனர் என்பதை நான் பல மேற்கத்திய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா, பிரேசில் போன்ற நாடுகளிலும் பயணம் செய்தபோது பார்த்திருக்கிறேன். எனவே, அப்படிப்பட்ட பெரியார் தொண்டர்கள் தைரியமாக வெளியே வந்து, அவர்களால் முடிந்த உதவிகளை இப்படிப்பட்ட பகுத்தறிவு நிகழ்ச்சிகளை நடத்தும் தோழர்களுக்குச் செய்து துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திராவிடர் கழகத் தோழர்கள் உங்களிடம் உண்டியல் ஏந்தி வந்தாலும், வருவார்களே தவிர, ஓட்டுக் கேட்டு வர மாட்டார்கள். அப்படியே நீங்கள் அவர்கள் ஏந்தி வரும் உண்டியல் நிறையப் பணத்தையும், சில்லரையையும் அள்ளிப் போட்டு விட்டீர்கள் என்றாலும், அந்தத் தொகையைக் கொண்டு அவர்கள் நீங்கள் வணங்குகிற கடவுளை, அதை உங்களிடம் புகுத்திய மதங்களை, அம்மதங்களினிமித்தம் செய்யப்படுகின்ற யாகங்கள், கிரியைகள், சடங்குகள் ஆகியவற்றையும், அவற்றுக்குப்பின் மறைந்துள்ள மடமையையும், அஞ்ஞானத்தையும், அசிங்கங்களையும், அதற்குக் காரண கர்த்தாவாக இருந்த, இன்னமும் இருந்து வருகின்ற வட்டமிடும் கழுகுகளான, வாய்திறந்து நிற்கும் ஓநாய்களான, நம் இனத்தைச் சுற்றி வளைத்துவிட்ட மலைப்பாம்புகளாக உள்ள பார்ப்பனர்களையும் உங்களுக்கு அடையாளம் காட்டி, அந்த நாசத்தின் நர்த்தனங்களிடமிருந்து, நயவஞ்சகப் பிசாசுகளிடமிருந்து, சிரித்து மயக்கிச் சல்லாபம் செய்து நம் இனத்தைச் சின்னாபின்னமாக்கும் சிறு நரிக் கூட்டத்தினிடமிருந்து மீட்கவே, கடமையுடன், இன்னொரு இடத்தில் பிரச்சாரம் செய்ய நீங்கள் கொடுத்த அந்த நன்கொடையை உபயோகிப்பார்கள். எனவே, அவர்களின் சுயநலமற்ற, பகுத்தறிவுக் கொள்கைப் பிரச்சாரம் பட்டித் தொட்டிகளில் எல்லாம் பரவ, உங்களால் ஆன நன்கொடை-களை வழங்கி, உங்கள் மேலான ஆதரவைத் தர வேண்டும் என்றும் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். எதிலும் புகுந்து சதி செய்து மதி மயக்கிய அந்த பூணூல் கூட்டம், இங்கும் தன் வேலையைக் காட்டி, மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம்மைத் திசை திருப்பியது. குரு என்றால் யார்? அன்றைக்கு, நமக்குக் குரு அந்தப் பஞ்சாங்கப் பார்ப்பனன் தானே? அந்தக் குரு நமக்கு என்ன சொல்லித் தெய்வத்தை அடையாளம் காட்டினார்?

நம்முடன் தன்னையும் சேர்த்துக் கொண்டு, நான்கு வருணங்கள் என்று பிரித்து அதில், தான் பிரம்மாவுக்குத் தலையில் பிறந்தவன் என்றும், சத்திரியன் அதாவது அரசன் பிரம்மாவின் மார்பிலே பிறந்தவன் என்றும், வைசியன் அதாவது வாணிகம் செய்பவன்பிரம்மாவின் தொடையிலே பிறந்தவன் என்றும், கடைசியாக நாலாவதாக உள்ள நாம் அனைவரும், அதாவது, உடல் உழைப்-பில் வாழும் நாம், பிரம்மாவின் காலில் பிறந்த சூத்திரர்கள் அதாவது மேற்சொன்ன மூன்று மேல் ஜாதிப் பிரிவினருக்கும் பிறந்த வேசி மக்கள் என்று தாழ்த்தி வைத்ததோடு விட்டார்களா? சூத்திரர்கள் வேதத்தை, வித்தைகளைப் படிக்க கூடாது என்றனர். பின் அந்த அயோக்கியக் குருவிடம் எந்தத் தெய்வத்தை நாம் தெரிந்து கொள்வது? அதையும் மீறி, வேதத்தைப் படித்தால், அவன் நாக்கை அறுக்க வேண்டும். கேட்டால், அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்கின்றவன் எப்படி நமக்குக் குருவாக இருக்க முடியும்?

நம்மை, நம்மோடு பிறந்த நம் இனத்தவரை, நாமே வேசி மக்கள் என்று அழைக்க, அழைக்க மட்டுமா, இன்றளவும் வெறுக்கவும் பழகினோம். நமக்குச் சொல்லப்பட்ட கடவுளை வணங்க, நாமே நமது சொந்த உழைப்பில், ஊதியத்தில், பணத்தில், கட்டிய அதே கோயிலில் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டோம். நம்மைத் தாழ்ந்த ஜாதி என்று பாகுபாடு செய்தும், வெட்கம் மானமின்றி, அந்தக் குரு சொல்லிய எல்லாப் பூஜைகளையும், புனஸ்காரங்களையும், கிரியைகளையும் மறுப்புச் சொல்லாமல் தலைமேல் தாங்கிச் செய்து, அவருக்குத் தட்சணை என்ற பெயரில் நம் உடைமைகளையெல்லாம் வாரி வழங்கினோம். அரசர்களும், ஆளவந்தார்களும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை மனையை அளந்து தானம் செய்தனர். ஆயினும் என்ன பலன்? கண்ட லாபம் என்ன?

எனவே தான், அண்ணா சொன்னார்:

நாலு தலைச் சாமிகள், மூன்றுகண் சாமிகள், மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறு தலைச் சாமி, ஆளிவாய்ச்சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், காக்கை மீது பறக்கும் கடவுள், தலை மீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் ரசம் அனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் நாலு, ஆறு, நாற்பத்தெட்டுக் கண்படைத்த கடவுள்கள் நமக்கு வேண்டாம்.

நமக்கு ஊன் வேண்டாத சாமி, ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி, ஆடல் பாடல் அலங்காராதிகள், அப்பம், பாயசம், அக்காரவடிசல் கேட்காத சாமி, அங்கே இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி, அர்ச்சனை, உண்டியல் என்று கூறி அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும். நம்மிடமிருந்து தியானத்தைப் பெறட்டும். அருளைத் தரட்டும். நம்மிடமிருந்து தட்சணை பெற்றுத் தர்ப்பாசூரர்களுக்குத் தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தவே, நாம் நம்மை இந்து அல்லவென்று கூறுகிறோம்.

நமக்கு ஆள் நடமாட ஓர் உலகம். ஆவி உலவ மற்றோர் உலகம். இந்திரன் இருக்க ஓர் உலகம். நாகன் தங்க ஓர் உலகம். மேலே ஏழு, கீழே ஏழு எனப்பதினான்கு உலகங்களாம்.அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதாளம் என ஏழாம். பூலோக, புவலோக, சுவலோக, சுனலோக, தபலோக, மகலோக, சந்திரலோகம் என மேல் உலகம் ஏழாம். இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டு ஏட்டிலே. நமக்கு இவை வேண்டாம். நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும். நன்செயும், புன்-செயும், சாலையும், சோலையும், வாவியும், நதியும் மக்களுக்குச் சுபீட்சமும் இருக்-கட்டும். காமதேனும், கற்பக விருட்சமும், ரம்பையும், ஊர்வசியும் இருக்கின்ற உலகத்திலே அந்த உந்திவிருத்திகள் உலா வரட்டும் என்று.

நம் பெண்களுக்கு, தாய்மார்களுக்கு, உலகில் எத்தனை கண்டங்கள் என்று தெரியாது. எத்தனை கடல்கள் என்று கேட்டால் தெரியாது. தினம் தினம் அனுபவிக்கின்றார்களே அந்த மின்சாரத்தை யார் கண்டுபிடித்தார்கள் என்று கேட்டால் தெரியாது.

பள்ளிகொண்ட கோலத்திலே விளங்கும் ஸ்ரீரங்கநாதன் எப்போதும் படுத்துக் கொண்டுதான் இருப்பார். அவர் போட்டுக்கொண்டுள்ள நகைகளை எழுந்து பார்க்கக்கூட அவருக்குத் தோன்றாது. அவர் மீதுள்ள நகைகளைக் கணக்கிடவே முடியாது. வைரத்திலே வெள்ளை நாமம் என்-றால், கெம்புக்கல்லினால் ஆக்கப்பட்டது சிவப்பு நாமம். மூலஸ்தானம் முதற்-கொண்டு மடைப்பள்ளிவரைக் கையாளப்-படும் சாமான்கள் அத்தனையும் வெள்ளி. வெள்ளி அண்டாக்கள், வெள்ளியாலான குத்துவிளக்குகள் எண்ணில.

உயிருள்ள பாம்பின் மேல் படுத்துக் கொண்டு கடலிலே அறிதுயில் செய்யும் மகாவிஷ்ணுவுக்கு வாகனமேன்? சிவனார், புலித்தோல் தவிர எனக்கு வேறு ஒன்றும் தேவையில்லை என்கிறார். அப்படியிருக்கச் சிவனாருக்கு வாகனமேன்? தங்க யானை ஏன்? வெள்ளி ரிஷபமேன்?

அமெரிக்கா செல்வபுரியல்லவா? அமெரிக்காவில் ஏசுநாதருக்குத் தங்கத்-தேர் செய்ய முடியாதா? இத்தாலியிலே முடியாதா? இதுவரை நம்மை ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நினைத்தால், ஏசுநாதருக்கு வைரக் கருடவாகனம் செய்ய முடியாதா? செல்வமில்லையா அவர்கள் நாட்டில்! நம் நாட்டில் தானே தங்கத்திலே கருட வாகனங்கள், தங்க யானைகள், வெள்ளி ரிஷபங்கள் எல்லாம் பல கோயில்களில் வைரமாக, முத்தாக, பச்சையாக, நவரத்தினங்களாக நகைகள் இழைத்து வைத்திருக்கிறார்கள்.

பொருள் அழியக்கூடியது; பொருள் மீதுள்ள பற்றை அகற்றுங்கள்; பொருள் தேவையில்லை. பற்றறுப்பதே ஆண்டவனை அடையும் வழி என்று பேசிவிட்டு அதே ஆண்டவனிருக்கும் கோயில்களில் எவ்வளவு பொருள்? இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாயமுறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை அலசிப்பார்த்த பிறகு யாருக்குத் தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக் கொள்ள மனம் இடந்-தரும்? பாம்பை எடுத்துப்படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக்குப்பையை வீட்டுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதை விட்டு, மாள வழி தேடிக்கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும்-போது குழியில் வீழ்வாரா? நாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்க்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத்திராவிடர் என்று ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார். அதன் இடுக்கில் போய்ச் சேரார். இழிவைத் தேடார் என்று அறிஞர் அண்ணா சொன்னதையே மீண்டும் உங்கள் அனைவருக்கும் ஞாபகப்படுத்துகிறேன்.


---------------டி.ஏ.சாமி சேலம் அவர்கள் எழுதிய கட்டுரை - நன்றி:- “விடுதலை” 29-5-2010

0 comments: