Search This Blog

1.5.10

எது நாஸ்திகமல்லாதது?



ருஷ்யா தேசத்தில் கொஞ்ச நாளைக்கு முன்பிருந்தே கடவுளைப் பற்றி பிரசங்கங்களோ உபதேசங்களோ, வணக்கங்களோ அவசியமில்லை என்பதாக ஒரு சங்கம் ஏற்பட்டு அது தாராளமாய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த வருஷத்திய கிறிஸ்து பிறந்த நாளை உற்சவமாகக் கொண்டாடக் கூடாதென்று வெகுபலமான பிரச்சாரம் செய்யப்பட்டு வந்ததில் முழுதும் வெற்றியடையாமல் போனதால் அடுத்துவரும் ஈஸ்டர் உற்சவத்தை அதாவது கிறிஸ்து மறுபடியும் உயிர் பெற்றெழுந்தநாள் உற்சவத்தை யாரும் கொண்டாடாமல் இருக்கும்படி இப்பொழுதிருந்தே வேண்டிய பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றதாம். இதற்கு அங்குள்ள சர்க்காரும் இந்த இயக்கக்காரர்களை அனுசரித்து உத்திரவு போட்டு சர்க்கார் மூலமாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றதாம். இதற்காக அநேக பிரபுக்கள் லட்சக்கணக்காக ரூபாய்கள் கொடுத்து உதவியிருக்கின்றார்களாம்.

எனவே, கடவுள் பிறந்த நாளையும் மறுபடியும் உயிர்த்து எழுந்த நாளையும் கொண்டாடக் கூடாது என்று சொல்லுவதும் சர்க்கார் மூலமாகவே அவற்றைப் பிரச்சாரம் செய்வதும் அங்கு நாஸ்திகம் என்று கருதப் படுவதில்லை.

நமது நாட்டிலே, சாமி தாசி வீட்டுக்குப் போகும் உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! சமணரைக் கழுவேற்றும் உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! குடம் குடமாய் நெய்யையும் வெண்ணையையும் கொண்டுபோய் நெருப்பில் போட்டு வீணாக்கும் கார்த்திகை தீப உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! வெடி மருந்துக்கும் அடுப்புக்கரிக்கும் காசைப் பாழாக்கும் தீபாவளி உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! இளங்குழந்தைகளைப் பாலில்லாமல் கஷ்டப்பட வைத்துவிட்டு குடம் குடமாய் பால் கொண்டு போய் கல்லின் மீது கொட்டும் பாலாபிஷேக உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! அரசனிடம் குதிரை வாங்க என்று பணம் பெற்று தன்னிஷ்டப்படி செலவழித்து விட்டு அரசன் குதிரை எங்கே என்று கேட்டால் நரியைக் கொண்டு வந்து குதிரை என்று காட்டி அந்நரி அரசனுடைய பழைய குதிரைகளையும் கடித்து கொன்றுவிட்டதுடன் அரசனும் அடிபட்ட உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம் வேறு ஒரு மதக்காரர் (பவுத்தர்) கோவிலை இடித்து விக்கிரத்தைத் திருடிக் கொண்டு வந்து உடைத்த உற்சவத்தை நடத்த வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்!

எனவே, நமது நாட்டுக்கு எந்த காரியம்தான் நாஸ்திகம் அல்லாததோ நமக்கு விளங்கவில்லை.

-------------- தந்தைபெரியார் - ”குடிஅரசு”, துணைத்தலையங்கம், 13.01.1929

0 comments: