
பிள்ளைப்பேறு கிடைத்தல் இலாத அலிகளும் (நபும்சகர்கள்) மலடர்களும் கூட ஒரு முறை இராமாயண பாராயணம் செய்தால் கேட்டால், பிள்ளைப்பேறு பெறுவர் என்பது நமது நாட்டில் வேரூன்றிய நம்பிக்கை.
பயனைக் கோரி நம் நாட்டிற்கு பலவிடங்களிலும் நாளும் நாளும் இராமாயண பாராயணம் செய்வது எல்லோர்க்கும் நன்றாகத் தெரிந்தது. அதிலும் கூடப் பயன் கருதிக் கம்பன் இராமாயணத்தைப் பெரும்பாலும் பாராயணம் செய்வதில்லை; பயன் தவறாமல் கை கூடுமென்று வால்மீகி இராமாயணத்தைத் தான் பெரும்பாலும் பாராயணம் செய்வது. கம்ப இராமாயணம் ஓதினாலும் கவி நயம் கருதித்தான் சிற்சில பிராஹ்மணரல்லாதார் ஓதுவது.
பிராஹ்மணரோ தங்கள் தாய் மொழி தமிழேயாயினும் அவர்களுள் பலர், பிழைப்புத் தொழிற்கும் தமிழ்க் கல்வியையே கடைப்பிடித்துள்ளாராயினும், கம்ப ராமாயணத்தைப் பாராயண முறையில் பாராட்டுவது கிடையாது.
ஏன் பாராயண முறையில் பாராட்டுவதில்லை என்று கருதின், எனக்குத் தோன்றுவது, அவர்கள் கம்பன் பெரும் புளுகை நன்குணர்ந்தவர்கள் என்பதுதான். புனைந்த பொய்க்கதையோதில் நற்பயன் தராதென்று கண்டும், பயன் தரினும் மாறுபட்ட தீப்பயன் தருமென்று அஞ்சியும், வாய்மை பேசும் வால்மீகி இராமாயணத்தையே அவர்கள் பாராயணம் செய்கின்றனர்.... வால்மீகி இராமாயணத்தைப் பாராயணம் செய்தால் கிடைக்கும் பயன் பல்வேறு வகைகளென்று முன் இயம்பினவற்றுள் மலடர்களுக்குப் பிள்ளைப் பேறு கிடைக்கும் என்பது ஒன்றன்றோ? அந்தப் பலனைக் கம்ப ராமாயணப் பாராயணம் கொடுக்கும் வன்மை உடையதல்லவென்று சொல்ல இடமிருக்கிறது. ஏனெனில், அதைத் திருப்பித் திருப்பிப் படித்தாலும் ஆணிற்குப் பெண் மீது நினைப்பை ஊக்கவும், பெண்ணிற்கு ஆண் மீது நினைப்பை ஊக்கவும் ஆன செய்யுட்கள் தென்படுவதில்லை.
வான்மீகி ராமாயணமோ அவ்வாறன்று. அதில் ஆங்காங்கு மிகவும் எளிய அழகிய நடையிற் செய்த ஸ்லோகங்களில் கண்கூடுபடுத்தப்பட்டிருக்கிற லதாக் கிரகங்களும், அவைகளில் இருபாலர்கள் இருக்கும் கோலங்களும், செய்யும் கிரியைகளும், தேவபாடையில் மாத்திரம் சொல்லக் கூடியவைகளாய், இப்போதைய அரசாங்க சட்டப்படி, தமிழிற் சொன்னாலோ, தலைபோய் விடச் செய்யக்கூடியவைகள். அத்தகையவைகளைப் படிக்கும், கேட்கும், நபும்சகரைப் பும்சகராக்கக் கூடியவனவும், மலடனைக் கருவிடும் வன்மையனும், மலடியைக் கருவேற்கும் தன்மையோளுமாக ஆக்கக் கூடியவைகளுமான, திரண்ட நீண்டபரந்த விரிந்த விவரங்கள் பிள்ளைப் பேற்றுப் பயனைக் கொடுக்குமென்று வால்மீகி ராமாயணம் படியாத பலருக்கும் உறுதியாகச் சொல்வேன்....
-------------------- பா.வே. மாணிக்க நாயக்கர் - நூல்:-கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் (பக்கம் 49_52)
3 comments:
ராமாயணத்தை தூக்கி எறிந்தாயிற்று. வால்மீகி காட்டிலும், கம்பன் நாட்டரசன் கோட்டையிலும் புதைக்கப்பட்டாயிற்று.
நாமிப்போது தமிழர்களை எவ்வாறு முன்னேற்றமுடியும் என சிந்திப்போம்; உழைப்போம்.
நன்றே செய்வோம்; அதையும் இன்றே செய்வோம்.
சில நாட்களுக்கு முன்னால் பதவி ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பால கிருஷ்ணன் அவர்கள் இணையத்தில் இருக்கும் பாலியல் தளங்களின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறித்தினார்... பாலியல் புத்தகங்களின் மீதும் சிடி க்களின் மீதும் நடவடிக்கை எடுக்கும் அரசு வான்மீகி ராமாயணத்தின் மீதும் நடவடிக்கை எடுக்குமா ?
ராமாயணம் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் காமாயணத்தை அம்பலப்படுத்திய ஓவியாவிற்கு நன்றிகள் பற்பல ....
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
vignaani
&
நியோ
Post a Comment