Search This Blog

24.5.10

பெரியாரும் கடவுள் மறுப்பும்

கடவுள் மறுப்பு

1967 ஆம் ஆண்டில் இதே தேதியில்தான் (மே 24) கடவுள் மறுப்பு வாசகங்கள் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களால் உலகுக்குப் பிரகடனப்படுத்தப்பட்டதாகும்.

அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் (இப்பொழுது திருவாரூர் மாவட்டம்) திருமதிக் குன்னம் விடயபுரம் என்னும் குக்கிராமத்தில் உயர்திரு வி.அப்புசாமி (நாயுடு) அவர்களுக்குச் சொந்தமான பூங்குடில் பூங்காவில் சுயமரியாதை பகுத்தறிவுப் பிரச்சாரப் பள்ளி தொடக்க விழா நடைபெற்றது (24.5.1967).

திரு.வி. அப்புசாமி (நாயுடு) அவர்கள் வைதிகர். ஆனாலும், தந்தை பெரியார் அவர்களின்மீதும் ‘பக்தி’ கொண்டவர். தமது தோட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் தங்குவதற்கென்றே பூங்குடில் பூங்கா (ஆசிரமம்போல்) அமைக்கப்பட்டு இருந்தது. கோடை வெயிலின் தாக்குதலில் தந்தை பெரியார் சிரமப்படக்கூடாது என்கிற அளவுக்கு அந்த நிலழக்கிழாரின் நெஞ்சம் தந்தை பெரியார்மீது பற்றும், மதிப்பும் கொண்டது.

முகாம் நடந்த அத்தனை நாள்களும் (மே 24 முதல் 31 வரை) தந்தை பெரியார் தங்கி இருந்து பயிற்சிப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தினார்.

கடவுள் மறுப்பு, மத மறுப்பு, ஆத்மா மறுப்பு என்பதெல்லாம் தந்தை பெரியார் அவர்களின் நெடுங்காலமாகவே கொள்கையைச் சார்ந்தே இருந்து வந்தன என்றாலும், அந்தப் பயிற்சிப் பள்ளியில்தான் (24.5.1967) கடவுள் மறுப்பு வாசகங்களை முறைப்படுத்தி உலகுக்கே அறிவித்தார். அந்த வகையில் விடயபுரமும், இந்த நாளும் வரலாற்றுக் கல்வெட்டுகளாகும்.

இதுகுறித்து ‘விடுதலை’யில் (7.6.1967) தந்தை பெரியார் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

“கடவுள் மறுப்பு, என்பதை நமது இயக்க, கழக சம்பந்தமான எந்தக் கூட்ட நிகழ்ச்சிகளிலும்,

முதல் நிகழ்ச்சியாக “கடவுள் மறுப்பு’’ என்ற சொல்லைக் குறிப்பிட்டு, பிறகு மற்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவேண்டும்.

பகுத்தறிவற்ற மூட நம்பிக்கை மக்கள் தங்கள் நிகழ்ச்சிகளில் முதலாவது நிகழ்ச்சியாக எப்படி “கடவுள் வணக்கம்’’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, அதை ஒரு நிகழ்ச்சியாக நடத்துகிறார்களோ, அதேபோல், நாம் கூட்டம் தொடங்கப்பட்டவுடன், முதல் நிகழ்ச்சியாக “கடவுள் மறுப்பு’’ என்று தலைவர் கூறவேண்டும்.

“கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை’’ என்று கூறவேண்டும். கூட்டத்தில் உள்ள மக்கள் உட்கார்ந்தபடியே அதுபோலவே பின் ஒலி கொடுத்துக் கூறவேண்டும்’’ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார். அதனைக் கழகம் பின்பற்றி வருகிறது.

இது ஒரு முக்கியமான வரலாற்றுக் குறிப்பாகும்.

-------------------- மயிலாடன் அவர்கள் 24-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: