மக்கள் தொகையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற பிரச்சினை இப்பொழுது இந்தியத் துணைக் கண்டத்தில் மிக முக்கியப் பிரச்சினையாக வடிவெடுத்துள்ளது.
ஜாதி ஒழிப்புக் கொள்கையில் அக்கறை உள்ளவர்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்று வலியுறுத்துகின்றனர். ஜாதியை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்போர், அதில் அழுத்தமான நம்பிக்கை உடையோர், ஆண்டுக்கு ஒருமுறை ஆவணி அவிட்டம் என்ற பெயரால் ஜாதியின் ஆணவச் சின்னமான பூணூலைப் புதுப்பித்துக் கொள்வோர் ஜாதிவாரி கணக்கெடுப்பு கூடாது என்று கூக்குரல் கொடுக்கின்றனர்.
இதிலிருந்தே இதில் மிக முக்கியமான சூட்சமங்கள் இருக்கின்றன என்பதை எளிதில் புரிந்துகொண்டு விடலாம்.
நேற்றைய இந்து ஏட்டில் டில்லி பொருளாதாரப் பள்ளியில் சமூகவியல் பேராசிரியராக இருக்கக்கூடிய நந்தினி சுந்தர் என்பவர் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு சமத்துவமின்மையைக் குறைத்துவிடுமா? என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள ஜாதி வாரியான மக்கள் தொகைப் புள்ளி விவரங்களை அளக்கும் மிகப்பெரிய பலனை இத்தகு ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அளிக்கும். மற்ற விவரங்கள்பற்றிய ஆய்வுகளை ஆய்வாளர்கள் மேற்கொள்ள இப்புள்ளி விவரங்கள் உதவி செய்யும். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட ஜாதியிலிருந்து அரசின் நிருவாகப் பணிகளில் எத்தனைப் பேர் இருக்கின்றனர் என்பதை மதிப்பிடலாம்.
ஒரு ஜாதியைச் சேர்ந்த மக்கள் எந்த அளவிற்குப் பின்தங்கி இருக்கின்றனர் என்பதை அளவிடும் நோக்கத்திலும் இம்மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒரு தொடக்கமேயன்றி, அதுவே முடிவானதல்ல என்று இந்து வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை தெரிவிக்கிறது.
ஜாதி வாரி புள்ளி விவரம் சமத்துவமின்மையைக் குறைக்காது என்று எழுத வந்த கட்டுரையாளர் அவரை அறியாமலேயே மேற்கண்ட கருத்துகளையும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகிறபடியே பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்த அளவு பின்தங்கி இருக்கின்றனர் என்பதை அளவிடுவதற்கு ஒரு தொடக்கமாகவே இருக்கட்டும். அந்தத் தொடக்கம் அவசியம் தேவைப்படும் ஒன்றுதானே!
எதற்கும் ஒரு தொடக்கம் தேவை என்பதில் மாறுபட என்ன இருக்கிறது?
ஜாதிவாரியாக இந்தக் கணக்கெடுப்பில் இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினைகளை இவர்கள் பின்னிப் பின்னி எழுதுவதிலிருந்தே அதன் தன்மையை நாம் புரிந்துகொள்ள முடிகிறதே.
ஜாதிவாரிப் புள்ளி விவரங்கள் அளிக்கப்படுவதால், சமூகப் பதற்றங்களை அதிகப்படுத்தும் என்று கசிந்துருகிக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.
பதற்றங்களை உருவாக்கும் அடிப்படையான ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று நாம் சொன்னால், வேதங்களையும், உபநிஷத்துகளையும், முன்னோர் கூற்றுகளையும் ஆதாரங்களாகக் காட்டி, அதனைக் காப்பாற்றத் துடிக்கும் இந்து வகையறாக்கள் ஜாதிபற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்டால், பதற்றங்களை அதிகப்படுத்தும் என்று கூறுவது எவ்வளவு பெரிய முரண்பாடு!
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி பாதுகாக்கப்படுகிறதே! தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தவேண்டும் என்று எவ்வளவு காலமாக தந்தை பெரியார் குரல் கொடுத்தார் திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்தும் வருகிறது.
ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டத்தில் 10 ஆயிரம் திராவிடர் கழகத் தோழர்கள் ஈடுபட்டு சிறைப்பட்டனரே!
அதற்காக நான்கு வரி ஆதரித்து எழுத முன்வராத இந்துக்கள் சமூகநீதி கண்ணோட்டத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்கிறபோது, ஜாதி ஒழிப்பு வீரர்கள்போல் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் என்பது பார்ப்பனர்களுக்கே உரித்தான தகடுதத்த வேலைதானே!
சரி, அந்தந்த மக்களுக்கு வகுப்புவாரி அடிப்படையில் இட ஒதுக்கீடு மறுக்கப்படும்பொழுதுதான் பதற்றம் உருவாகும் என்பதை அறியாமலா எழுதுகிறார்கள்? நன்கு அறிவார்கள். எதையாவது சொல்லி ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்பாலானவர்கள், அவர்கள் கையில் ஆட்சி அதிகாரம், நிருவாகம் வருவது தடுக்கப்படவேண்டும் என்பதுதான் இந்து வகையறாக்களின் அந்தரங்கம் என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் உணர்வார்களாக!
----------------------- "விடுதலை” தலையங்கம் 12-5-2010
2 comments:
Nandini Sundar had written about Bastar tribals.She went to court and questioned Salwa Judum.Her credentials as an anthropologist and an academic concerned with human rights are beyond doubt.
Her concern for the really downtrodden like tribals is well known.Did Viduthalai ever write a single word against Salwa Judum or in favor of the rights of the tribals.She is an academic who has the guts to question the mighty state.Veeramani bows and prostrates before the powers that be.
"பதற்றங்களை உருவாக்கும் அடிப்படையான ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று நாம் சொன்னால், வேதங்களையும், உபநிஷத்துகளையும், முன்னோர் கூற்றுகளையும் ஆதாரங்களாகக் காட்டி, அதனைக் காப்பாற்றத் துடிக்கும் இந்து வகையறாக்கள் ஜாதிபற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்டால், பதற்றங்களை அதிகப்படுத்தும் என்று கூறுவது எவ்வளவு பெரிய முரண்பாடு!"
ஜாதி ஒழிப்பு வீரர் 'ராம்' வாழ்க வாழ்க ......
Post a Comment