பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்களை தமிழ்நாடு அரசு குறைத்தது வரவேற்கத்தகுந்தது; இதன்மூலம் கிராமப் பகுதிகளில் உள்ளவர்கள், முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் கூடப் பொறியாளர் ஆகும் வாய்ப்பு ஏற்படும் என்பது சமூகநீதியாளர்களின் கண்ணோட்டமாகும்.
நீண்ட ஆயிரம் ஆண்டுகாலமாக பிறப்பின் அடிப்படையில் எல்லா வாய்ப்புகளையும் தின்று உப்பியது ஒரு கூட்டம்; பெரும்பாலான இந்த மண்ணுக்குரிய மக்களோ, மதத்தின் பெயரால், ஆதிக்கக் கூட்டத்தால், மிதிக்கப்பட்டுக் கிடந்தனர்.
இந்தக் கண்ணோட்டத்தில் சமுதாயத்தைப் பார்ப்பவர்களுக்கு, மிதிபட்ட மக்கள் மேன்மை நிலையை அடைகிறார்கள் என்ற மனமகிழ்ச்சி _ நிறைவு ஏற்படும்.
ஆனால், பார்ப்பனர்களின் மனப்பான்மை என்ன? இவ்வார துக்ளக் இதழில் (2.6.2010) பார்ப்பனர்கள் தங்களுக்கே உரித்தான துவேஷ உணர்வை தகுதி திறமை என்ற வார்த்தைகளால் வெளிப்படுத்தி விட்டனர்.
நுழைவுத் தேர்வை நீக்கியதைக்கூட கடுமையான சொற்களால் வெட்டிச் சாய்த்து விட்டனர் என்று ஆத்திரம் கொப்பளிக்க எழுதப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வை இருந்த இடம் தெரியாமல் வேரோடு வெட்டிச் சாய்த்து, கல்வித் தரத்தை அதலபாதாளத்துக்குக் கொண்டு வந்தவர்களுக்கு, கேவலம் இந்த கட் ஆஃப் மார்க்கை ஒழித்துக் கட்டவா வழி கிடைக்காது? என்று தனது மனப் புழுக்கத்தை எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது துக்ளக்.
பச்சைத் தமிழர் காமராசர் கேட்ட கேள்விதான் நினைவிற்கு வருகிறது! பறையனைப் படிக்க வைத்தோம், டாக்டர் ஆனான்; அவன் ஊசிப் போட்டதால் எந்தக் குழந்தை செத்தது? பறையனைப் படிக்க வைத்தோம், என்ஜினீயர் ஆனான்; அவன் கட்டியதால் எந்தப் பாலம் இடிந்தது? என்று தந்தை பெரியார் பேசியதுபோல் பேசினாரே அதுதான் இந்தக் கூட்டத்துக்கு இப்போதும் பதில்.
காமராசரை மதிப்பதுபோல துக்ளக் சோ ராமசாமி எழுதுவதுண்டு. அந்தக் காமராசர்தான் இப்படி வினாக்களையும் தொடுத்தார் என்பதை வசதியாக மறந்துவிடுகிறது மனுதர்மக் கூட்டம்.
தகுதி மதிப்பெண் குறைக்கப்படுவதன் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் படிக்கக் கஷ்டப்படுவார்களாம்; இதனால் தேர்வுகளில் தில்லு முல்லுகளில் இறங்க மாணவர்கள் முயற்சிப்பார்களாம்.
எவ்வளவு திமிர் எடுத்த விவாதம்? பார்ப்பன மேல்தட்டு மக்கள் மட்டும்தான் படித்துக் கொண்டு இருக்கவேண்டும்; கீழ்த்தட்டு மக்கள் படிக்க ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தால் அவர்களின் ஒழுக்கத்தையே கொச்சைப்படுத்தும் கொழுப்பினைத் தமிழர்கள் கவனிக்கத் தவறக்கூடாது.
பார்ப்பனர்கள் கூறும் மார்க் தகுதி திறமை என்பது அவர்களுக்கு வசதியானது. பொட்டை நெட்டுருப் போட்டு மார்க் வாங்கும் அந்தத் திறமை என்பது அவர்களுக்குப் பரம்பரைப் பரம்பரையாக வந்த ஒன்று. சமஸ்கிருதங்களை அர்த்தம் புரியாமல் மனப்பாடம் பண்ணிய, மரபு வழி வந்த தகுதி, திறமை அது.
அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, ஒரு சம்பவம் நடந்தது. அப்பொழுது நேர்முகத் தேர்வு உண்டு. ஒரு உயர்ஜாதி மாணவன் தனக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று கூறி நீதிமன்றம் சென்றார்.
நேர்முகத் தேர்வின் குழுத் தலைவராக இருந்த ஜஸ்டிஸ் சோமசுந்தரம் அந்த வழக்கில் ஒரு பிரமாணப் பத்திரம் (அஃபிடவிட்) அளித்தார்.
சம்பந்தப்பட்ட மாணவன் எழுத்துத் தேர்வில் பதில் எழுதி மதிப்பெண் பெற்ற அதே கேள்வியை நேர்முகத் தேர்வில் கேட்ட பொழுது பதில் சொல்லவில்லை என்ற குட்டை உடைத்தார். ஆச்சாரியார்கூட நம் நாட்டுக் கல்வியின் நிலை அப்படித்தான் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டாரே!
இதிலிருந்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் தகுதி திறமை என்னவென்று தெரியவில்லையா? நேர்முகத் தேர்வில்தான் மாணவனின் உண்மையான தகுதி திறமையைக் கண்டறிய முடியும். ஆனால், நேர்முகத் தேர்வு கூடாது என்பதிலே பார்ப்பனர்கள் எப்பொழுதும் ஒத்தக் கருத்திலேயே இருப்பார்கள்.
பொறியியல் கல்லூரியில் சேரத் தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதால், அது தி.மு.க.வுக்கு அரசியல் லாபமாம் பயன் அடைந்தவர்கள் தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டு விடுவார்களாம்; பயன் அடைந்தவர்கள் ஓட்டுப்போடத்தான் செய்வார்கள்? அதில் என்ன தவறு இருக்கிறது? தி.மு.க.வுக்கு இது சாதகமாகிவிட்டதே என்கிற ஆத்திரமும் இந்த அக்கிரகாரக் கூட்டத்துக்கு இருக்கிறது என்பதும் இதன்மூலம் அறிய முடிகிறது அல்லவா!
பார்ப்பனர்களுக்கு இருக்கும் இந்த உணர்வை பார்ப்பனர் அல்லாதார் புரிந்துகொண்டால் சரி!
------------------ "விடுதலை” தலையங்கம் 28-5-2010
2 comments:
Hello Tamiloviya,
Will you and your family members go to a Doctor who has just passed plus two with 45% marks.? If not , please stop crying wolf...
எங்கள் குடும்பே டாக்டர் குடும்பம்தான். அதனால் தான் உங்களைப் போன்ற மனநோயாளிகளுக்கு சிகிச்சை செய்கிறோம் Tamil
Post a Comment