பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகம் செல்வாக்கோடு இருக்குமா என்ற கேள்விக்கு
சிறப்பாக இருக்கும் என்ற விடைதான் இளவல் வீரமணி! பெரியாரின் தாக்கம் எல்லா இடங்களிலும் ஏற்பட்டாகவேண்டும் தி.க. - தி.மு.க. இரட்டைக் குழல் துப்பாக்கிகள்தான்!
பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு கோயிலுக்குப் போகாதீர்கள்
தி.மு.க. தோழர்களுக்கு நான் இடுகின்ற கட்டளையாகும்!
இதோ குருதட்சணையாக ரூபாய் 5 லட்சம்!
டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவில் முதலமைச்சர் கலைஞரின் இலட்சிய சங்கநாதம்
தந்தை பெரியார் அவர்களின் தாக்கம் எல்லா இடங்களிலும் ஏற்பட்டாகவேண்டும். தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்தான் - பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு என்னுடைய கழகத் தோழர்கள் கோயிலுக்குப் போகக்கூடாது. இது என்னுடைய வேண்டுகோள் அல்ல, கட்டளையாகும் என்றார் முதலமைச்சர் கலைஞர்.
புதுடில்லியில் நடைபெற்ற பெரியார் மய்யம் திறப்பு விழாவில் (2.5.2010) முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
புதுடில்லியில் பெரியார்- மய்யம் கொண்டிருக்கிறார் என்று தம்பி திருமாவளவன் இங்கே உரைத்தார். நான் அதை வழிமொழிகிறேன்.
ஏனென்றால், வழிமொழிகிறேன் என்று சொல்லுவதற்குக் காரணம்; நான் நினைத்ததை அவர் உரைத்தார். எனவே நான் அதை வழிமொழிகிறேன்.
பெரியார் அவர்கள் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டமாட்டார். தாண்டினாலும் ஆந்திரப்பிரதேசம், கருநாடகம், கேரளா என்கின்ற அளவோடு நின்றுவிடுவார் என்று எதிர்பார்த்திருந்த பழைமைவாதிகளுக்குமதவாதிகளுக்கு வியப்பூட்டும் வகையிலே நம்முடைய ஆருயிர் இளவல் தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அயராத முயற்சியினாலும், தொடர்ந்த தொண்டாலும், அறவழிப் பணியினாலும் டில்லிப் பட்டணத்திலே பெரியார் மய்யம் கொண்டு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஏன், அய்ந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது என்றும் சொல்லலாம். மய்யம் கொண்டு புயல் வீசினால், அதனால் புயல் வீசிய பிறகு ஏற்படுகின்ற சேதாரங்கள் சில இருந்தாலும் கூட, விளைவு; அதன் பிறகு உன்னதமான வளர்ச்சி, மேம்பாடு என்ற நிலையில் அமையும் என்பதை அனைவரும் அறிவோம்.
அந்த நிலையிலேதான் டில்லிப் பட்டணத்திலே தந்தை பெரியார் அவர்களுடைய பெயரால் மய்யம் கண்டு அதனுடைய திறப்பு விழாவை நடத்தி, திறந்து வைக்கப்பட்ட கட்டடம், இடையில் சட்டப் பிரச்-சினைகள், விதிகள் இவைகள் காரணமாகக் காட்டப்-பட்டு -இடிக்கப்பட்டு, அதன் பின்னர் அருமைத் தலை-வர் வி.பி. சிங் போன்றவர்களுடைய முயற்சியினாலும், நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் அயராத் தொண்டினாலும் இன்றைக்கு புதுடில்லியிலே இந்த மய்யத்தை திறந்து வைக்கப்படுகின்ற வைபவம் இவ்வளவு சீரும், சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
தேசிய அளவில் என் பணி!
நம்முடைய பெரும் மதிப்பிற்குரிய பரூக் அப்துல்லா அவர்கள் பேசும் போது, நான் தேசிய அளவிற்கு பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அவருடைய தந்தை ஷேக் அப்துல்லா அவர்களே என்னிடத்தில் இதை பலமுறை சொல்லியிருக்கிறார்.
அவருடைய தந்தையார் காலத்திலிருந்து நான் காஷ்மீரத்து அரசியல் செய்திகளை அறிவேன். அவர் தந்தையார் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டுப் பகுதிக்கு நான் பலமுறை சென்று என்னுடைய அன்பை அவருக்குச் செலுத்தியிருக்கின்றேன். அவர் அங்கிருந்து விடுதலையான பிறகு கூட, அவர் மறைந்த நிலையில், அவர் சிறை வைக்கப்பட்டிருந்த அந்தப் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு ஷேக் அப்துல்லா மாளிகை என்று பெயர் வைக்க வேண்டு-மென்று கோரிக்கை வைத்து, அதை நான் நிறைவேற்றியுமிருக்கின்றேன்.
எனவே நான் அகில இந்திய அளவிலே வந்து-தான், அகில இந்தியாவுக்குத் தேவையான காரியங்களைச் செய்ய வேண்டும் என்று இல்லை. இருந்த இடத்திலேயிருந்தே அவைகளைச் செய்யமுடியும் என்பதற்கு அது ஓர் எடுத்துக்காட்டு (கைதட்டல்).
பெரியாரின் தாக்கம் எங்கும் தேவை!
காஷ்மீரத்திலே மாநில சுயாட்சி கருத்தரங்கம் ஒன்றை நம்முடைய பரூக் அப்துல்லா அவர்-கள் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து கல்கத்தாவிலே மறைந்த முதலமைச்சர் - கம்யூனிஸ்ட் கட்சியினுடைய முதலமைச்சர் ஜோதிபாசு அவர்கள் நடத்தினார்கள். சென்னையிலும் நடத்தியிருக்கிறோம். அந்த மாநாடுகளுக்கெல்லாம் நம்முடைய பரூக் அப்துல்லா அவர்களும் வந்திருக்கிறார்கள். அதைப்போலவே வங்கத்திலே உள்ள தலைவர்கள்அஜாய்நு முகர்ஜி போன்றவர்கள், கருநாடகத்திலே உள்ள தலைவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் அந்த மாநாட்டு அளவிலே சிறப்பித்துச் சென்றார்களே அல்-லாமல், அங்கே எடுத்துச் சொன்ன கொள்கைகளைப் பரப்பிடவேண்டும் என்ற அந்த முயற்சியிலே ஈடுபடவுமில்லை, ஈடுபடுவதற்கான நிலைமைகளும் உருவாகவில்லை. அதனால்தான் டெல்லியிலே மய்யம் கொண்ட பெரியார் மற்ற இடங்களில் எல்லாம் அந்தத் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. எல்லா இடங்களிலும் பெரியாருடைய தாக்கம், இந்த அலைகள், இந்த வேகம், இந்த செயல் செல்ல வேண்டும். அப்படிச் செல்லு-கின்ற காரணத்தால் இளைய தலைமுறை, இனி-வரும்காலம், இந்தியா என்றால் என்ன? இந்தியாவிலே நாம் யார்? இந்தியாவிலே இருக்கின்ற மாநிலங்களிலே வாழ்கின்றவர்கள், ஒரு மாநிலத்திலே உள்ளவர்களுக்கு இன்னொரு மாநிலத்திலே உள்ளவர்கள் முரண்-பட்டவர்களா? மாறுபட்டவர்களா? என்ற இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் தரக்கூடிய சூழ்நிலை ஏற்படும். நான் என்னுடைய கவலையை இங்கே சொல்லுகின்றேன்.
தண்ணீரும், பக்கத்து மாநிலங்களின் மனோபாவங்களும்!
தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக நான் இருக்கின்றேன். ஆனால் தமிழ்நாட்டிற்கு எல்லா வளமும் உண்டு. இன்று நேற்றல்ல. அந்தக் காலத்-திலேயே தமிழ்நாட்டிலே எழுதப்படுகின்ற கதை-களிலெல்லாம் முகப்புரையில், நீர்வளம் நிலவளம் சூழ்ந்த தஞ்சைத் தரணியில் -என்றுதான் தொடங்-குவார்கள். அப்படித் தொடங்குவது - அதுவும் ஒரு கற்பனைதான். ஏன் அதை கற்பனை என்று சொல்லுகிறேன் என்றால், தமிழ்நாட்டில் எல்லா வளமும் உண்டு, ஆனால் நீர் வளம் குறைவு.
பக்கத்திலே இருக்கின்ற கேரளம், ஆந்திரம், கரு-நாடகம், இந்த மாநிலங்கள் நீர்வளம் நிரம்பியவை. பக்கத்திலே இருக்கின்ற அந்த நீர் வளத்தைத்தான் பெற்று தமிழ்நாடு வாழ வேண்டியிருக்கிறது. ஆனால், தங்களுடைய தேவைக்கு அதிகமாக இருக்கின்ற தண்ணீரை தமிழகத்துக்கு தரக்கூடிய மனோபாவம் - என்ன காரணத்தாலோ பக்கத்து மாநிலங்களிலே உள்ள சிலருக்கு ஏற்படுவதில்லை.
ஒருமைப்பாடு ஒரு வழிப்பாதையா?
நான் இந்திய நாட்டினுடைய தலைநகரத்திலே இருந்து சொல்லுகின்றேன்; ஒருமைப்பாடு ஒரு-வழிப்பாதையாக ஆகக்கூடாது! ஒருமைப்பாட்டில் எல்லா மாநிலங்களும் சகோதர மாநிலங்களாக ஒன்றுக்கொன்று உதவுகின்ற மாநிலங்களாக இருந்-தால்தான் அந்த ஒருமைப்பாடு சீரானதாக, சிறப்-பானதாக கருதப்படமுடியும்! பக்கத்திலே இருக்கின்ற தமிழ்நாட்டு மக்களை பட்டினி போட்டுவிட்டு, இன்னொரு மாநிலம் தண்ணீரை வைத்துக் கொண்டு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தால், அது வேடிக்கை காட்டுவதைவிட_ அப்படி வேடிக்கை காட்டுவதையும் அதனால் வேதனைப்படுகின்ற தமிழ்நாட்டையும் பார்த்துக் கொண்டு, அந்த வேடிக்கையை ரசித்துக் கொண்டிருப்பது இன்னும் தவறு.
நான் தலைநகரத்திலே இருந்து மீண்டும் சொல்லுகின்றேன்; இந்தியப் பேரரசு இனியாவது இந்த மாநிலங்களில் ஏற்படுகின்ற தகராறுகளை உன்னிப்பாகக் கவனித்து அவர்கள் அடித்துக்-கொண்டு அவர்களாக வரட்டும் என்று இல்லாமல் நமக்கும் பொறுப்பு உண்டு என்ற முறையிலே மத்திய அரசு அதிலே தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என்று இந்த மய்யத்தின் திறப்பு விழாவிலே நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
பெரியாருக்குப் பிறகு இளவல் வீரமணி
இந்த மய்யம் எல்லா வகையிலும் ஓங்கி வளர்ந்து, உயர்ந்த கொள்கைகளை இந்த வட்டாரத்திலே பரப்பும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஏனென்-றால் தந்தை பெரியாருடைய மறைவுக்குப் பின்பு திராவிடர் கழகத்தை, சுயமரியாதை இயக்கத்தைக் கட்டிக்காத்து அதை மக்களிடத்திலே நிரந்தர செல்வாக்குள்ள நிலையை உருவாக்குவதற்கு முடியுமா? என்ற அந்தக் கேள்விக்கு விடையாக வந்தவர்தான் இங்கே அமர்ந்திருக்கின்ற அருமை இளவல் வீரமணி ஆவார்கள் (கைதட்டல்).
அவருடைய கையிலே, அவருடைய பொறுப்பிலே இன்றைக்கு திராவிடர் கழகத்தினுடைய பல பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன.
இங்கே இந்த விழாவில் இரண்டு சிறுவர்கள், சிறுமிகள் ஒரு லட்ச ரூபாய் என்றும் இன்னும் குறைவாகவும், அதிகமாகவும் நன்கொடைகளைத் தந்தார்கள் என்றால் என்ன காரணம்? இந்த மய்யம் மேலும் பலமாக விளங்க வேண்டும் என்பதற்காகத்-தான்! நானும் கடமைப்பட்டிருக்கிறேன். குரு தட்சணை வழங்குவதற்கு. (பலத்த கைதட்டல்).
பெரியாருக்குக் காணிக்கை ஆக்கப்பட்ட ஆட்சி!
ஈரோடு என்னுடைய குருகுலம். நம்முடைய வீரமணி அவர்கள் மாணவராக இருந்து பயின்ற அதே குருகுலத்தில் பயின்றவன் நான் (கைதட்டல்). கொஞ்சம் மூத்தவன் நான். ஆனால் பயின்ற போதே சமுதாயச் சீர்திருத்தங்கள் மாத்திரம் போதாது. கடவுள் மறுப்பு, மதபேத மறுப்பு, ஜாதி பேத மறுப்பு போன்ற இந்தக் கொள்கைகளோடே அரசியல் கருத்துக்களிலும், முற்போக்கான திட்டங்களைத் தீட்டி, பெரியாருடைய எண்ணங்களையெல்லாம் செயல்படுத்த வேண்டுமேயானால், அரசு கையிலே இருக்க வேண்டும். அதிகாரம் செலுத்துகின்ற அந்தப் பொறுப்பு கையிலே இருக்க வேண்டுமென்பதற்-காகத்தான், அதையும் கையிலே எடுப்பதற்குத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை எங்கள் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கினார்கள். உருவாக்கிய அண்ணா சொன்னார்கள், திராவிட முன்னேற்றக்கழக அரசு பெரியாருக்கு தரப்படுகின்ற காணிக்கை என்று சொன்னார்கள். அதுமாத்திரமல்ல, திராவிடர் கழகமும், திராவிடர் முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொன்னார்கள். அதைத்தான் என்னுடைய அருமை நண்பர் பரூக் அப்துல்லா அவர்களும் மற்றவர்களும் பேசும்பொழுது சுட்டிக்காட்டினார்கள் - என்னையும், வீரமணி அவர்களையும் இந்த இயக்கத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொன்னார்கள். இரட்டைக் குழல் துப்பாக்கி என வெறுமனே பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. காரியங்களைச் சாதிக்க வேண்டும். அந்தக் காரியங்கள் சில நேரங்களில் கடுமையாகத் தோன்றினாலும், பல நேரங்களிலே மிகக் கனிந்துவிட்டாலும், மக்களிடத்திலே அய்யப்பாடுகள் எழும், அந்த அய்யப்பாடுகளைப் போக்குகின்ற அளவிற்கு இந்த இயக்கம் தொடர்ந்து அரசியலிலும், சமுதாயத்திலும், தொண்டாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. தொண்டாற்றும் என்பதை தஞ்சையிலே அல்ல, திருச்சியிலே அல்ல, சென்னை-யிலே அல்ல - இந்திய நாட்டின் தலைநகரமாம் டில்லி-யிலே நான் அறிவிக்கின்றேன். இரு இயக்கங்களும் இணைந்து தொண்டாற்றி - எங்களுடைய அரசியல் கூறுபாடுகளால் ஏற்படுகின்ற நன்மை என்ன? சமுதாயப் பணிகளால் ஏற்படுகின்ற நன்மை என்ன? என்பதை இருசாராரும் இணைந்து தந்தாலும், அதை ஒருசாரார் சொல்வதைப்போல ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தை இந்திய நாட்டு மக்கள் அனைவரும் அடையவேண்டும் என்பதுதான் இந்த நாளில் நான் எதிர்பார்க்கின்ற சூளுரையாகும்.
பெரியார் பணிகளை நினைத்தால் மயக்கமே வருகிறது!
தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கையில், நினைத்தால், திரும்பப் படித்தால், நமக்கே மயக்கம் வருகின்ற அளவிற்கு அவர் பணியாற்றியிருக்கின்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 34 ஆயிரத்து 433. அந்த 34 ஆயிரத்து 433 நாட்களில் பெரியார் சுற்றுப்பயணம் செய்த நாட்கள் 8 ஆயிரத்து 600 நாட்கள். பயணம் செய்த தூரம் 13 லட்சத்து 13 ஆயிரம் கிலோ மீட்டர். இன்றைக்கு நான் தங்கியிருக்கின்ற டில்லிப் பட்டணத்திலே இருந்து இங்கே வருவதற்கு நேரம் ஆக ஆக என்னை இங்கே அழைத்து வந்த நம்முடைய நண்பர்களிடத்திலும், கார் ஓட்டியினிடத்திலும் இன்னும் எத்தனை கிலோ மீட்டரப்பா என்று கேட்டுக்-கொண்டிருந்தேன். காரணம் இந்த தொலைவே எனக்கு சற்று தொல்லையாகத் தெரிந்தது.
ஆனால், பெரியார் 13 லட்சத்து 13 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் செய்திருக்கின்றார். பேசிய நேரம் 21 ஆயிரத்து 400 மணி. பேச்சுக்கள் அனைத்தையும் ஒலிபரப்பினாலும் ஒரு யூகம், அவர்களுடைய பேச்சுக்கள் அனைத்தையும் ஒலிபரப்பினாலும் அந்த ஒலிபரப்புத் தொடங்கி முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் அய்ந்து மாதம் பதினொரு நாட்கள் ஆகும் (பலத்த கைதட்டல்).
இதே போன்ற கருத்துக்களை எடுத்துச் சொன்ன சாக்ரடீஸ் போன்றோர் ஏன் வெற்றி பெறவில்லை என்றால், அவர்களெல்லாம் மதம் என்கின்ற சில பிடிப்புகளிலே சிக்கிக் கொண்ட காரணத்தால், அது எடுபடவில்லை.
பெரியார் கொள்கைகள் வாழ்ந்து கொண்டிருப்பது ஏன்?
பெரியாரோ எல்லா கட்டுக்களையும் அறுத்துவிட்டு சுயமரியாதை என்ற அந்த உணர்வோடு கட்டுக்களற்ற ஒரு கட்டிளங்காளையாக அந்த இயக்கத்தை வளர்த்து, இன்னும் சொல்லப்போனால் ஒரு பிரச்சாரகன், ஒரு குரு நாதர் சொல்லுகின்ற உபதேசமாக அல்லாமல், அந்தக் கொள்கைகளை எல்லாம் இதயத்திலே பதியவைத்துக் கொண்டு பணியாற்றுகின்ற இளைஞர்களை, வாலிபர்களை, வயோதிகர்களை, ஆடவர்களை, பெண்களைக் கொண்ட ஒரு இயக்கமாக இதை மாற்றினார்.
அப்படிப்பட்ட இயக்கமாக மாறிய காரணத்தினால் தான், இன்றைக்கும் பெரியாருடைய கொள்கைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, வாழ வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பெரியாருடைய திரைப்படத்தை நம்முடைய இளவல் வீரமணி அவர்களுடைய பெரும் முயற்சிகளால் வெளியிட்ட போது, நான் அந்தப் படத்தைப் பார்த்தேன். அதை வெளியிடுவதற்கு இன்னும் சில ஏற்பாடுகள் தேவையானதாக இருந்தது. அதனால் வீரமணி அவர்களிடத்திலே நானே_ என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டேன். உங்களால் ஆன உதவியைச் செய்யலாம் என்று சொன்னார். நானே வலியச் சென்று, அந்தப் படத்தை மேலும் சிறப்புடன் ஆக்குவதற்கும் வெளியிடுவதற்கும் 95 லட்சரூபாயை நான் அந்தப் படத்திற்காக அரசின் சார்பாகத் தந்தேன் (கைதட்டல்). சிலபேர் கேட்டார்கள், எப்படி பெரியார் படத்திற்காக 95 லட்ச ரூபாயை அரசாங்கப் பணத்தைத் தரலாம்? என்று கேட்டார்கள். இப்படி தலைவர்களுடைய படத்தை வெளியிடுவதற்கு அரசாங்கத்தினுடைய பணம் செலவழிக்கப்பட்ட வரலாறு எல்லாம் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டினேன். படம் வெளிவந்தது, பெரும் வெற்றியினைப் பெற்றது என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். படம் வெற்றி பெற்றால் மாத்திரம் போதாது, படத்தினுடைய கதாநாயகன் பெரியார் சொன்ன கருத்துக்கள் வெற்றி பெற்றதா என்பது தான் முக்கியம்.
குருதட்சணை!
95 லட்ச ரூபாய் பெரியார் திரைப்படத்திற்கு அன்றைக்குக் கொடுத்தேன், காணிக்கை! இந்த மய்யத்திற்கு மேலும் 5 லட்சம் கொடுத்து இந்தக் காணிக்கையை ஒரு கோடி ரூபாயாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று வீரமணி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அய்ந்து லட்ச ரூபாயை எங்கேயிருந்து கொடுப்பது -அரசாங்கத்திலே இருந்து கொடுக்கிறேனா அல்லது எங்கள் கட்சியிலிருந்து கொடுக்கிறேனா அல்லது நானே தனிப்பட்ட முறையிலே கொடுக்கிறேனா என்பதையெல்லாம் நான் சென்னைக்கு சென்ற பிறகு அறிவிப்பேன் என்று கூறி,- இந்த மய்யத்திலே உரையாற்றிய நம்முடைய மூப்பனார் அவர்களுடைய அருமை மகன் தம்பி ஜி.கே.வாசன் அவர்களுக்கும், தம்பி திருமாவளவன் அவர்களுக்கும், என்னுடைய அருமை நண்பர் காஷ்மீரத்துச் சிங்கத்தின் சிங்கக் குட்டியாக உலவி என்றும் என்னுடைய நண்பராக இருந்த நம்முடைய ஷேக் அப்துல்லா அவர்களுடைய மகன் பரூக் அப்துல்லா அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து இந்த பெரியாருடைய கொள்கைகளை எடுத்து உலகமெங்கும் பரப்புகின்ற பணியை வீரமணி அவர்கள் தொடர்ந்து செய்யட்டும், செய்ய நாம் துணை நிற்போம், நிற்க வேண்டும் என்று கேட்டுக்-கொள்கிறேன். _இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
வேண்டுகோள் அல்ல - கட்டளை!
பெரியார் பெயரை மாத்திரம் சொல்லிக்கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்யும் நன்றி ஆகாது. பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு வாஸ்து பார்த்துக் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்கின்ற நன்றி ஆகாது. பெரியாருடைய கொள்கையை உண்மையிலே மனதிலே பதியவைத்துக் கொண்டிருந்தால், அவன் நாத்திகவாதியாக இருந்தாலும், அவன் பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் இரட்டை மனி-தனாக இருக்கக் கூடாது. இதுதான் இந்த பெரியார் மய்ய திறப்பு விழாவிலே கண்டிப்பாக அரசியல் துறையிலே இருக்கின்ற என்னுடைய கழக தோழர்களுக்கும் நான் சொல்லுகின்ற வேண்டு-கோளாகும். இன்னும் சொல்லப்போனால் கட்டளையாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் (கைதட்டல்).
டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவில்
முதலமைச்சர் கலைஞர் (2.5.2010)
*************************************************************************************
பெரியாருக்குப் பின் இளவல் வீரமணியின் பணி
பெரியாருடைய நினைவுகள், அவருடைய எண்ணங்கள், அவருடைய கருத்துக்கள், அவருடைய பிரச்சாரங்கள்இவைகளையெல்லாம் ஒன்று திரட்டி அவருடைய எழுத்துக்களை ஒன்று திரட்டி ஆண்டுதோறும் அல்ல, அடிக்கடி - பெரும் புதையல்களாக, பகுத்தறிவுப் பேழைகளாக தமிழ்நாட்டு மக்களுக்கு, இளைய தலைமுறைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற அரும்பணியை நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் ஆற்றிக் கொண்டு வருகின்றார். அந்தப் பணிகளிலே ஒரு கட்டமாகத்தான் தொடர் கட்டமாகத்தான் டெல்லிப் பட்டணத்திலே அந்தப் பணி பரவி நான் எதிர்பார்க்கவில்லை, இப்படியொரு கூட்டம் இந்த நிகழ்ச்சிக்கு வருமா என்று! அந்த அளவுக்கு வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியையும், அவர் நடத்திக் கொண்டிருக்கிறார் என்றால், இது பெரியாருக்கு ஏற்பட்டிருக்கின்ற அவர் மறைந்தும் மறையாத மாணிக்கமாக விளங்குகிறார் என்பதற்கு அடையாளமாகத் திகழுகின்ற ஒரு சான்றாகும்.
பெரியாருடைய பெயரால் எத்தனையோ மன்றங்கள், படிப்பகங்கள், வாசக சாலைகள், இல்லங்கள் - இத்தனையும் தமிழகத்திலே இருக்-கின்றன. ஆனால் வியப்புக்குரிய செய்தி; டில்லியிலும் இப்படிப்பட்ட ஒரு மய்யத்தை உருவாக்கி பெரியாருடைய கொள்கைகளை விரித்து உரைப்பதுதான் வியப்புக்குரியது என்றால் அது மிகையாகாது. அந்த மாபெரும் பணியை ஆற்றியிருக்கின்ற திராவிடர் கழகத்தினுடைய தலைவரை, அருமை இளவலை, தமிழர் தலைவர் வீரமணியை நான் பாராட்டுகின்றேன், வாழ்த்துகின்றேன் (கைதட்டல்)
- டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழாவில்
முதலமைச்சர் கலைஞர் (2.5.2010)
-------------------"விடுதலை” 3-5-2010
2 comments:
பெருமதிப்பிற்குரிய தமிழ் ஓவியா அவர்களுக்கு,
மாலை வணக்கங்கள்!
பத்துக்கும் அதிகமான நாட்களுக்கு பிறகு தங்கள் தளத்தை சிக்கலின்றி திறக்க முடிந்ததில் பெரு மகிழ்ச்சி...
தில்லி மைய திறப்பு விழாவிற்கு சென்றிருந்த என் கல்லூரி தோழர்கள் நமது அன்புராஜ் அவர்கள் முழுமூச்சாக அனைத்து பணிகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செயலாற்றியதை புகழ்ந்துரைத்தனர்...
ஆசிரியரே இளவலாகத்தான் இன்னும் இருக்கிறார் ... இளவலின் இளவல் பற்றி சொல்லத்தான் வேண்டுமா !
---------
எனது தளத்தில் தாங்கள் வரவேற்று பின்னூட்டமிட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி ...
தொடர்ந்து வழி காட்டுங்கள் தோழரே !
சில சமயங்களில் நன்றி என்ற சொல் போதுமானதாக இருப்பதில்லை !
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து எழுதுங்கள்
மாற்றம் வரும்
Post a Comment