Search This Blog

26.5.10

கவிஞர் வாலியும் கந்தபுராணமும்


புதுக்கவிதையில் கந்த புராணமாம்!

கந்தபுராணத்தை மிஞ்சிய புளுகு வேறு எந்த புராணத்திலும் கிடையாது என்ற பழமொழியே உண்டு. அந்த அளவுக்குப் புளுகு மூட்டை மட்டுமல்ல, ஆபாசக் குட்டையுமாகும்.

அந்தக் கந்தபுராணத்தை புதுக்கவிதை நடையில் நூலாக ஆக்கித் தந்திருக்கிறார் சினிமா கவிஞர் வாலி. இதற்கு முன் இராமாயணத்தையும் புதுக்கவிதையில் ஆனந்தவிகடனில் தொடராக எழுதி பிறகு நூலாகவும் வெளிவந்தது.

என்னதான் திராவிட இயக்கத் தலைவர்களிடம் நெருக்கமாக இருந்தாலும் பார்ப்பனர்கள் அவர்களின் கலாச்சாரத்திலும், நம்பிக்கையிலும், அனுஷ்டானத்திலும், அவற்றைக் கட்டிக்காப்பதிலும் மிகத் தெளிவாகவும், உறுதியாகவும்தான் இருக்கிறார்கள்.

இராமாயணத்தில் ஆரியர் - திரவிடர் போராட்டம் என்பது மய்யப் புள்ளியாகும். கந்த புராணமும் அதே அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்.

கந்தபுராணமும் - இராமாயணமும் ஒன்றே என்று அன்னை மணியம்மையார் அவர்கள் நிரூபித்து எழுதியுள்ளார்கள் தக்க எடுத்துக்காட்டுகளுடன்.

இரண்டு கதைகளுக்கும்மூலம் சமஸ்கிருமாகும். இரண்டு கதைகளும் தேவர்கள் என்பவர்களுக்கும், அசுரர்கள் என்பவர்களுக்கும் நடந்த போராட்டங்கள் என்ற பாவனை வைத்துக் கற்பிக்கப்பட்டவையே!

இரு கதைகள் உற்பத்திக்குக் காட்டப்பட்ட காரணங்கள் அசுரர்களின் தொல்லைகள் பொறுக்கமாட்டாமல் தேவர்கள் பிர்மா, விஷ்ணு, சிவன் என்னும் கடவுள்களைப் பிரார்த்தித்துத் தங்கள் துன்பங்களைத் தீர்க்கும்படி வேண்டிக்கொண்டதாகும்.

இராமாயணத்துக்கு விஷ்ணு இராமனாக அவதரித்து கதாநாயகனாகவும், கந்த புராணத்திற்கு சிவன் கந்தனாக (சுப்பிரமணியனாக)ப் பிறந்து கதாநாயகனாகவும் இருக்கிறார்கள்.

இராமாயணத்தில் இராவணன் அரக்கன் என்றால், கந்தபுராணத்தில் அரக்கன் சூரபத்மன் ஆவார்.

இராவணனுக்கு விரோதமாக அவன் தம்பி விபீஷணன் இருந்தான். சூரபத்மனுக்கு விரோதமாக அவன் தம்பி சிங்கமுகன் என்பவன் எதிரிக்குக் கையாளாக இருந்தான்.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் சுரர்_அசுரர் போராட்டம் என்பதெல்லாம் ஆரிய - திராவிடப் போராட்டமே என்று வரலாற்று ஆசிரியர்களே அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.

உண்மை இவ்வாறெல்லாம் இருக்க, இந்த 2010 இல் ரெங்கராஜ அய்யங்கார் (கவிஞர் வாலி) கந்தபுராணத்தை புதுக் கவிதையில் எழுதி நூலாக வெளியிடுகிறார் என்றால் இதன் பார்ப்பனீயப் பின்னணியை தமிழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

வால்மீகி இராமாயணத்தில் இராமன் பிறப்பு என்பது மிகவும் ஆபாசமானதாகும். வெட்டுண்ட குதிரையோடு தசரதனின் பத்தினிமார்கள் இரவு முழுவதும் கட்டிப் புரண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. யாகப் புரோகிதர்களிடம் பட்டத்து ராணிகள் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலம் சூலாக்கப்பட்டு, அதன்பின் தசரதனிடம் அளவற்ற திரவியத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களைத் தசரதனிடத்தில் கொடுத்து விட்டார்கள் புரோகிதர்கள் (பாலகாண்டம் சர்க்கம் 14, பக்கம் 46, 47 நரசிம்மாச்சாரியார் மொழி பெயர்ப்பு).

கந்தபுராணம் குறித்து தந்தை பெரியார் கூறுகிறார்:

ஸ்கந்தனுக்கு அந்தப் பெயர் வந்ததற்குக் காரணம் என்னவெனில், ஸ்கந்தம் - கந்தம் என்றால் இந்திரியம் என்ற பொருளும் காணலாம். கந்தன் பிறப்பு, சிவனுடைய ஒழுகிப்போன இந்திரியத்தில் இருந்து உற்பத்தியானவன் என்பதாகப் புராண ஆதாரம் இருப்பதால், அவனுக்குக் கந்தன் என்று பெயரிட வேண்டியதாயிற்று எனலாம்.

கதைக்கு மூலகாரணம் தேவர்களை அசுரர்கள் கொடுமைப்படுத்தியதாகக் காரணம் வைத்து, அசுரர்களை ஒழிக்கச் சிவனின் உதவியைத் தேவர்கள் கோரியதாகவும், சிவன் தான் ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொடுப்பதாகவும், அந்தப் பிள்ளை அசுரர்களை அழிக்கக்கூடியவனாவான் என்றும் கூறி ஒரு பிள்ளையைப் பெறுவதற்காகத் தனது மனைவி பார்வதியிடம் கூடிக் கலவி துவக்கியதாகவும்; அக் கலவி தேவ வருஷத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு (நமக்கு ஒரு ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள், இந்த நாள் 360 கொண்டது தேவர்களுக்கு ஓராண்டு; இந்தப்படியாக ஆயிரம் ஆண்டு என்றால் 3,60,000 (மூன்று லட்சத்து அறுபதினாயிரம் நாட்கள்) நடந்ததாகவும், அதுவரையில்கூட பார்வதிக்குச் சினை (கர்ப்பம்) ஏற்படவில்லை என்றும்; பிறகு தேவர்கள் வேண்டுகோளால் கலவியை நிறுத்தி இந்திரியத்தைப் பூமியில் விட நேரிட்டதாகவும்; அது ஆறாய் ஓடிக் கங்கையில் விழுந்து 6 பிரிவுகளாய் கங்கையில் மிதந்ததாகவும்; அதை ஆறு பெண்கள் எடுக்க, அது ஆறு குழந்தைகளாக ஆகி, ஆறு பெண்களிடமும் முலைப் பால் அருந்தியதாகவும்; பிறகு அவற்றை ஒன்றுபடுத்தியதில் ஆறு உடல்கள் ஓருடலாகித் தலை மாத்திரம் ஆறு தலைகளாக இருந்து அந்த ஓருடலில் ஒட்டிக்கொண்டதால் அது ஆறு தலைக் குழுந்தையாகி ஆறுமுகனானான் எனவும் கதை கட்டிக்கொண்டார்கள். இதன்படியும், இன்னும் கதையில் வரும் மற்ற சம்பவங்களின்படியும் பார்த்தால், இந்தக் கதை கற்பனை செய்துகொண்ட காலத்தில் ஆரியர்களுக்கிருந்து வந்த புத்தி, காட்டுமிராண்டித்தனமான புத்தி, அறிவு என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்படிப்பட்ட காட்டுமிராண்டிக் கருத்துக் கொண்ட கந்தபுராணத்தை, வெகுகாலத்திற்குப் பிறகு வைணவர்கள் தங்கள் சமயமரபாக ஆக்கிக் கொள்ள விரும்பி, கந்த புராணக் கதைப் போக்கையே மூலமாகக் கொண்டு, பெயர்களையும், சம்பவங்களையும் மாற்றி, அதற்குக் கதா புருஷன் இராமன் என்றும், இராமன்_ விஷ்ணுவின் அவதாரம் என்றும் காட்டி, அந்நூலுக்கு இராமாயணம் என்றும் பெயர் வைத்துக் கற்பித்துவிட்டார்கள் என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.

இந்த ஆபாசத்தை புதுக் கவிதையில் மொண்டு கொடுக்க முனைந்துள்ளார் சிறீரங்கத்து அய்யங்கார். தமிழர்களை பார்ப்பனர்கள் வீழ்த்தத் தயாராக வைத்திருக்கும் போர்வாள் இந்தப் பக்திதான். எச்சரிக்கை!


-----------------------"விடுதலை” தலையங்கம் 25-5-2010

9 comments:

smart said...

ஒருவனுக்கு ஒருத்தியென வாழ்ந்தப் பெரியார் வந்து சொன்னால்தான் இதை இந்த இந்துக்கள் நம்புவார்கள் போல

smart said...

திராவிடர்கள் திராவிடர்கள் என்பதெல்லாம் உட்டாலங்ககடி. இதை எந்த மலையாளியும் தெலுங்கரும் கன்னடரும் பெரிதாக மதிப்பதில்லைஎன்பதே பெரியாரிஸ்டுகளுக்கு கிடைத்த மிக்கப் பெரிய மிதி

smart said...

ஹலோ! எந்த கமெண்ட் போட்டாலும் அதற்கு பதில் சொல்ல பெரியார்தான் வரவேண்டுமா?

சிவகுமார் said...

ராமாயணம் , மகாபாரதம் போன்றவை வரலாற்றில் நடக்கவே இல்லை என்னும் பொழுது .தேவை இல்லாமல் திராவிடர்களை வில்லன்களை போல நாம் ஏன் காட்டிக்கொள்ளவேண்டும்

சிவகுமார் said...

ராமாயணம் , மகாபாரதம் போன்றவை வரலாற்றில் நடக்கவே இல்லை என்னும் பொழுது .தேவை இல்லாமல் திராவிடர்களை வில்லன்களை போல நாம் ஏன் காட்டிக்கொள்ளவேண்டும்

சதீஷ் said...

தயவு செய்து இனி திராவிடன் என்ற சொல்லை உபயோகிக்க வேண்டாம். அவ்வாறு சொல்லி தி.க. வேண்டுமானால் பணம் பண்ணலாம். அதனால் தமிழனுக்கு எந்த உபயோகமும் இல்லை. இனி தமிழனாக மட்டுமே இருப்போம்.

தமிழ் ஓவியா said...

ஆரோக்கியமான எந்த விமர்சனத்திற்கும் பதில் கிடைக்கும் வெட்டிதனமான மொக்கையான விமர்சனத்திற்கு பதில் எழுதி காலத்தை வீணடிப்பதில் எனக்கு உடன் பாடில்லை smart

தமிழ் ஓவியா said...

//ராமாயணம் , மகாபாரதம் போன்றவை வரலாற்றில் நடக்கவே இல்லை என்னும் பொழுது .தேவை இல்லாமல் திராவிடர்களை வில்லன்களை போல நாம் ஏன் காட்டிக்கொள்ளவேண்டும்//

நீங்கள் குறிப்பிடுவது போல் அல்ல.
நம் மீது அபாண்டமாக சுமத்தப் பட்ட குற்றச் சாட்டுக்களை இழிவை அம்பலப்படுத்துகிறோம் sivakumar

நம்பி said...

//smart said...

ஹலோ! எந்த கமெண்ட் போட்டாலும் அதற்கு பதில் சொல்ல பெரியார்தான் வரவேண்டுமா?

May 26, 2010 6:53 AM//

ஹி ஹி கமென்டா? அது எங்கே இருக்கு.?..பார்ப்பன காண்டு தான் அங்கே இருக்கு...

உப்பு சப்பில்லாததுக்கு கூடவா பெரியார் வருவாரு...? அய்யோ பார்ப்பு பார்ப்பு....