அட்சய திருதியையா?
கொஞ்ச காலமாக அட்சய திருதியை அட்சய திருதியை என்ற சொல்லாடல் அதிகம் ஒலிக்கிறது.
இது மதம் சார்ந்த மசால் பொடிதான் என்றாலும் கடந்த சில ஆண்டுகளாகத் தான் இதற்கு மவுசு அதிகரித்துள்ளது.
வரும் 16ஆம் தேதி அட்சய திருதியையாம். அட்சய என்றால் அள்ள அள்ளக் குறையாதது வளரக் கூடியது என்று பொருளாம்.
மணிமேகலைக் காப்பியத்தில் அட்சய பாத்திரம் என்ற ஒன்று வருவதைப் படித்திருக்கலாம்.
இந்த நாள் பற்றி புராணங்கள் அள்ளிக் கொட்டுகின்றன. இந்த நாளில்தான் முதல் யுகமான கிருதாயுகம் தோன்றியதாம்.
இந்த யுகத்துக்கு ஆண்டுகள் 17 லட்சத்து 28 ஆயிரமாம்! இதுதான் முதல் யுகமாம்.
கிருதாயுகத்தின் சிறப்பு என்னவாம்? இந்த யுகத்தில் வாழ்பவருக்கு ஆயுள் எவ்வளவாம்? ஒரு லட்சம் வருடங்களாம்.
ஒரு லட்சம் வருடம் வாழும் இவர்களுக்குப் பால பருவம் பதினாயிரம் ஆண்டுகளாம்; காளைப் பருவம் 1032 வருடங்களாம்.
அந்த யுகத்தில் வாழ்ந்த மனிதர்களின் உயரம் எவ்வளவு தெரியுமா? அய்ந்து பனைமரம் அளவாம்!
இந்த யுகத்தில் வாழ்பவர்கள் மேன்மையாக வாழ்வார்களாம், துன்பம் என்பது என்னவென்றே தெரியாதாம். கல்விமான்களாகவும், குற்றமில்லாத குணம் உடையவர்களாகவும் இருப்பார்களாம். வேதியர் வேத வேள்வியைச் செய்யத் தவறார். வணிகர் மனுநீதிப்படி பொருளைத் தேடி நல்வழியில் பயன்படுத்துவர். சூத்திரர் வேதியருக்குச் செங்கடன் பூண்டு, பூமியை உழுது பயிரிட்டு, அதிதிகளை ஓம்பி, அறம்புரிந்து வாழ்வர் (அபிதான சிந்தாமணி பக்கம் 1360)
இவ்வளவு சிறப்புகளையும் உடைய இந்த யுகம் பிறந்தது இந்த அட்சய திருதியையிலாம்.
ஒன்றை உயர்த்த வேண்டும் என்றால் இந்தப் பார்ப்பனர்கள் எப்படி எப்படி-யெல்லாம் கதை கட்டுவார்கள் என்பதற்கு இவை போதுமான தகவல்களே!
உயிர்கள் எப்பொழுது தோன்றின - மனிதன் எப்படி பரிணாமம் பெற்றான் என்ற விஞ்ஞான வினாக்களுக்கு எல்லாம் இங்கு இடமே கிடையாது.
முள்ளு முனையிலே முந்நூறு குளம் வெட்டினேன் என்பதைவிட மோசமான அண்டப் புளுகு இது.
மத விவகாரங்களில் அண்டப்புளுகு என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. எல்லாமே புளுகுகள் என்று ஆகிவிட்ட பிறகு, அதில் உசத்தி, மட்டம் என்பது எங்கேயிருந்தது குதித்தது?
குசேலன் அன்புடன் தந்த அவலை சுவைத்த கண்ணன், அட்சய எனக் கூறி அவனை வாழ்த்தினானாம். அதனால் குசேலன் குபேரனானது அட்சய திருதியை நாளில் தானாம்.
குசேலன் பற்றி தந்தை பெரியார் கூறிய கருத்து, எழுப்பிய கேள்வி கவனிக்கத் தகுந்தது. குலேசனுக்கு 27 குழந்தைகள் இருந்தும் அவன் குடும்பம் பசி பட்டினியாம்.
20 வருசத்திற்கு மேற்பட்ட ஏழு பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குலேசருக்கு வெட்கமிருந்திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது என்ன, பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளைத் தடிப் பயல்களாட்டமாக வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக் கூடிய புத்தி வந்திருக்காதா? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விக்கு புராண அதிகப் பிரசங்கிகள் இதுநாள் வரை பதில் சொன்னதுதான் உண்டா?
இந்த அட்சய திருதியை நாளில் கிருஷ்ணன் அட்சய என்று சொன்னானாம் குசேலன் குபேரன் ஆனானாம்.
ஒரு வகையில் பார்க்கப் போனால் சோம்பேறித் தடிப் பயல்களை வளர்த்து வருவது தான் இந்த அட்சய திருதியை என்று பொருளாகாதா?
வாட்ட சாட்டமான ஆள் பிச்சை எடுக்க வந்தால் நமது வீட்டுத் தாய்மார்கள் சொல்லும் வார்த்தை தடிப் பயலாக இருந்து கொண்டு பிச்சை எடுக்கிறாயே! என்று கேட்பதுண்டே!
படிக்காத பாமரத் தாய்மாருக்கு இருக்கும் பொது அறிவுகூட, புத்திகூட பகவான் கிருஷ்ணனுக்கு இல்லையென்றால், இவனெல்லாம் ஒரு கடவுளா என்ற கேள்வி தானே எழ வேண்டும்?
அதுசரி, பக்தி என்று வந்து விட்டால் புத்திக்கு அங்கே நுழைவு சீட்டு எது?
பாஞ்சாலியின் மானம் காக்க பரந்தாமன் ஆடை வழங்கியதும் இந்த அட்சய திருதியை நாளில் தானாம்.
இன்றைக்கு அந்த பரந்தாமன் இருக்கின்றானா இல்லையா? எத்தனைப் பாஞ்சாலிகள் ஒவ்வொரு நாளும் துகில் உரியப் படுகிறார்கள்? அவர்களுக்கெல்லாம் அந்தப் பரந்தாமன் சேலைகளை வழங்க வருவதில்லையே ஏன்?
திருமகளின் எட்டு அவதாரங்களுள் அய்ஸ்வரிய லட்சுமி தான்ய லட்சுமி தோன்றிய நாளும் இதே நாளில்தானாம்.
இந்த நாளில் குன்றிமணி அளவு பவுன் வாங்கினால் அது ஆண்டு பூராவும் பெருகிக் கொண்டே இருக்குமாம்.
இந்தியாவில் கிராமப்புறங்களில் 26.5 விழுக்காடு குடும்பங்களும், நகர்ப்புறங்-களில் 17.-8 விழுக்காடு மக்களும் கடனாளிகளாக இருக்கிறார்கள்.
இந்திய விவசாயிகள் ஒவ்வொருவர் தலையிலும் விழுந்திருக்கும் கடன் தொகை ரூ.25985.
இந்தியாவில் 77 விழுக்காடு மக்களின் ஒரு நாளைய வருவாய் ரூ.20.
இப்படி வறுமை நோய் ஆயிரங் கால்களோடு நடமாடிக் கொண்டு இருக்கும் இந்த நாட்டில் அட்சய திருதியை என்று ஒருநாளாம்.
இந்நாளில் பொருள்கள் வாங்கினால் கொழியே கொழியோயென்று கொழிக்குமாம்.
இன்றைக்கு ஒரு சவரன் பவுன் விலை ரூ.13512 நாள் ஒன்றுக்கு ரூ.20 சம்பாதிக்கும் ஒரு ஏழை இந்த அட்சய திருதியையில் ஒரு கிராம் தங்கம் வாங்கும் நிலையில் இருக்கிறானா?
அய்ஸ்வர்ய லட்சுமி கடவுளாக உள்ள நாட்டில் இந்த வறுமைக்கோடுகள் இருப்பது ஏன்? விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாள்வது ஏன்?
ஒரு கணம், ஒரே ஒரு கணம் சிந்தித்தால் குடி மூழ்கியா போய் விடும்!
அண்மைக் காலத்தில் நகை வியாபாரிகள் விரித்த பிரச்சார வலையில், மூடநம்பிக்கையில் மூழ்கிப் போன மக்கள் விழுந்து விடுகிறார்கள். இந்த நாளில் பவுன் வாங்கினால், அதிர்ஷ்ட தேவதை கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவாளாமே ஆண்டுக்கு ஒரு நாள் - அதனை நழுவ விட்டு விடலாமா என்ற ஏக்கத்தைப் பாமர மக்கள் மத்தியில்கூட ஏற்படுத்துவதுதான் இந்த அட்சய திருதியை பற்றிய மலிவான விளம்பரங்கள்.
கடந்த ஆண்டு இந்த நாளில் நகை வாங்கியவர்கள்வீட்டில் ஓராண்டுக்குள் எத்தனை சவரன் குட்டி போட்டது? ஆதாரப் பூர்வமாக அறிவிக்கத் தயாரா?
அம்பானி வீட்டிலும், முகேஷ் வீட்டிலும் குட்டி போட்டு இருக்கலாம். நாம் கேட்பது பாமர மக்கள் வீட்டில் எத்தனை பவுன் எகிறிக் குதித்தது என்பதுதான்.
நியாயமாக தங்கத்தை வாங்குவதை ஊக்கப்படுத்தவே கூடாது. தங்கம் அரசாங்கத்தின் கஜானாவில் இருக்க வேண்டிய பொருள். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இது தேவை என்பது அடிப்படைப் பொருளாதாரம் தெரிந்தவர்களுக்கு இது தெரியுமே!
சந்திரன் சாப விமோசனம் பெற்றதும் இந்த நாளில்தானாம். அது என்ன சந்திரனைப் பீடித்த சாபம்?
தேவகுருவான வியாழ பகவானின் தர்மபத்தினியை குருவின் சீடானான சந்திரன் கற்பழித்தானாம். அதன் காரணமாக சந்திரனைப் பார்த்து வியாழ பகவானான குரு, உமது கலை நாளுக்கொன்றாய் குறைந்து போகக் கடவது என்று சாபம் விட்டானாம்.
அந்த சாபம் நீங்கிய நாள்தான் அட்சய திருதியையாம்.
என்ன யோக்கியதை குரு பத்தினியைக் கற்பழித்தவன் இந்த நாட்டில் கடவுள் அதற்குச் சாபமாம் சாபம் நீங்கிட ஒரு நாளாம்.
முட்டாள்தனமும், முற்றிப்போன ஒழுக்கக்கேடும் ஒன்றை இன்னொன்று விஞ்சியது என்று சொல்லும் அளவுக்கு காட்டுவிலங்காண்டித்தனமாய் எந்தக் காலத்திலோ, எந்த ஒரு கிறுக்கனோ கிறுக்கி வைத்த பைத்தியக்கார உளறல்கள் எல்லாம் மதக்கருத்தாகவும், சடங்குகளாகவும் உருவெடுத்தன என்பதுதானே உண்மை.
ஏதோ அன்று உளறினான்; அதை உதறிவிட்டு முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடுவதுதானே அறிவுக்கு அழகு?
அந்தக் காட்டுவிலங்காண்டித்தனத்தை இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கட்டிக் கொண்டு அழுவது என்றால் இதைவிட வெட்கக் கேடு வேறு உண்டா?
பச்சை வண்ண சேலை கடைகளில் தேங்கி விட்டால் வியாபாரிகள் ஒரு கதையைக் கட்டி விடுவார்கள். இந்த வருஷம் பொறந்தது சரியானதல்ல! வீட்டில் மூத்த சகோதரர்களுக்கு வில்லங்கங்கள். உடனே சகோதரிகளுக்குப் பச்சைக்கலர் புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஒரு கதையைக் கட்டி விடுவார்கள். அவ்வளவுதான தேங்கிக் கிடந்த பச்சைப் புடவைகள் எல்லாம் ஒரே நாளில் தீர்ந்து போய்விடும்.
சிகப்புக் கலர் சேலைகள் தேங்கி கிடந்தால் அதற்கொரு அய்திகத்தை அவிழ்த்துவிடுவார்கள். உடனே ஆடு மாடுகள் போல பக்தர்கள் ஜவுளி கடைகளுக்குப் படையெடுப்பார்கள்.
அந்த வகையைச் சேர்ந்ததுதான் இந்த அட்சய திருதியை என்பதும்.
நகை வியாபாரி வைத்த நெருப்பு பற்றிக் கொண்டு எரிகிறது. அந்த ஒரு நாளில் மட்டும் தேங்கிக் கிடக்கும் நகைகள் எல்லாம் காலியாகிவிடும்.
அவனுக்குக் கல்லாப் பெட்டி நிரம்பும். கடன் வாங்கி பவுன் வாங்கிய பாமர மக்களுக்கோ வட்டிதான் வளரும். அடகு வைத்த பொருள்தான் மூழ்கும்.
பக்தி வியாபாரம் ஆகிவிட்டது என்பதற்கு வேறு எடுத்துக்காட்டும் தேவையோ!
2 comments:
சரியான நேரத்தில் வந்திருக்கும் மிக அவசியமான கட்டுரை ....
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் link அனுப்பி வைத்தேன் ....
// நியாயமாக தங்கத்தை வாங்குவதை ஊக்கப்படுத்தவே கூடாது. தங்கம் அரசாங்கத்தின் கஜானாவில் இருக்க வேண்டிய பொருள். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இது தேவை என்பது அடிப்படைப் பொருளாதாரம் தெரிந்தவர்களுக்கு இது தெரியுமே! //
சிந்திப்பார்களா சம்பந்த்தப்பட்டவர்கள் ... இன்னமும் மிச்சமிருக்கிறது காலம் ....
ஓவியா அவர்களுக்கு நன்றிகள் பல ...
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment