Search This Blog

7.5.10

தி.மு.க. தொண்டர்களுக்கு கலைஞரின் கட்டளை


கலைஞரின் கட்டளை

டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழா பல வகைகளிலும் சிறப்புக்குரியதாகிவிட்டது. விழாவில் தேசிய பெருமக்கள் அனைவரும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைச் செறிவையும், சமுதாயத்திற்கு அவை தேவைப்படும் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

பெரியார் தேசம் ஆகவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் முத்தாய்ப்பாகத் தம் கருத்தைப் பதிவு செய்தார். அது ஒன்றும் சொல்லழகுப் பூமாலைத் தொடுப்பல்ல. நாடு செழிக்க, சமதர்மமும், சமத்துவமும் தழைக்க அந்த நிலை உருவானால்தான் மீட்சிக்கு இடம் உண்டு.

பெரியார் திடலில் மாணவர் பருவத்தை ஒப்படைத்த அந்தப் பாங்கும், செறிவும் அந்தச் சொற்களின் வாயிலாகத் தெறித்தன என்று கருதவேண்டும்.

ரூபாய் 5 லட்சம் குரு காணிக்கை என்று மானமிகு மாண்புமிகு சுயமரியாதைக்காரரான முதலமைச்சர் கலைஞர் அறிவித்தது பணம் என்ற அளவில் பார்க்கத்தக்கதல்ல இந்தத் தன்மான, பகுத்தறிவுக் கொள்கை நிறுவனத்தில் தனக்குரிய ஈடுபாட்டின் கனத்தைச் செதுக்கும் செயல்பாடு அது.

அந்தக் கொள்கை உரத்தின் அடிப்படையில்தான் தி.மு.க. தொண்டர்களுக்கு முக்கிய கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார்!

எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த விழாவில் அந்தக் கட்டளையைப் பிறப்பிக்கவேண்டுமோ, அந்த நேரத்தையும், இடத்தையும் தேர்ந்தெடுத்து மிகச் சரியாக அறிவித்தது கலைஞர் அவர்களுக்கே உரித்தான தனித்தன்மையாகும்.

பெரியார் பெயரை மாத்திரம் சொல்லிக்கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்யும் நன்றி ஆகாது. பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு வாஸ்து பார்த்துக் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்கின்ற நன்றி ஆகாது. பெரியாருடைய கொள்கையை உண் மையிலே மனதிலே பதியவைத்துக் கொண்டிருந்தால், அவன் நாத்திகவாதியாக இருந்தாலும், அவன் பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், யாராக இருந் தாலும் இரட்டை மனிதனாக இருக்கக் கூடாது. இதுதான் இந்த பெரியார் மய்ய திறப்பு விழாவிலே கண்டிப்பாக அரசியல் துறையிலே இருக்கின்ற என் னுடைய கழக தோழர்களுக்கும் நான் சொல்லுகின்ற வேண்டுகோளாகும். இன்னும் சொல்லப்போனால் கட்டளையாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்று மானமிகு கலைஞர் அவர்கள் மிகவும் கண்டிப்பான தொனியில் கூறியுள்ளார்.

முதல்வர் கலைஞர் அவர்கள் தமது கழகத் தோழர்களுக்கு நேரிடையாக இத்தகு கட்டளையைப் பிறப்பித்தாலும்கூட இதற்கு முன்பும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது உள்ளக் கிடக்கையை இந்த வகையில் வெளிப்படுத்தித்தான் வந்திருக்கிறார்.

தி.மு.க. என்பது வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல சமுதாயக் கொள்கை உடைய அரசியல் கட்சி என்று பரப்புரை செய்ததுண்டு.

பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்புவதில் தி.க.வுக்கு அடுத்தபடியாக உள்ளது. தி.மு.க.தான் என்றும் உரிமை கொண்டாடியதுண்டு. பகுத்தறிவுப் பாசறை என்ற ஒரு அமைப்பைக்கூட அறிவித்ததுண்டு!

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. திருப்புமுனை மாநாட்டிலும் நாம் வந்த பாதையை மறந்துவிட்டு வேறு திசையில் செல்லக்கூடாது என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார்.

ஒருவனே தேவன் என்பது தேர்தலில் ஈடுபடும் ஓர் அரசியல் கட்சியின் ஒட்ட ஒழுகல் வகையைச் சார்ந்ததாக இருக்கக்கூடும். நடைமுறையில் அறிஞர் அண்ணாவோ, கலைஞர் அவர்களோ, பேராசிரியர் அவர்களோ, நாவலர் அவர்களோ எந்த ஒரு தேவன்மீதும் நம்பிக்கை வைத்து முழங்கால் தண்டனிட்டுக் கும்பிடுத் தண்டம் போட்டவர்கள் அல்லர்.

இதனைத் தொண்டர்கள் புரிந்துகொள்ளவேண்டும் இன்னும் சொல்லப்போனால், தன்மான இயக்கத்தின் அடிப்படைப் பகுத்தறிவுக் கொள்கைகளைக் கழகத்தின் புதிய தலைமுறையினருக்குக் கற்பிக்கும் முகாம்களை நடத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கட்சியின் தலைவர் கட்டளையிடத்தான் முடியும். மற்ற மற்ற பொறுப்பாளர்கள் அதனை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு ஒல்லும் வகைகளில் திட்டமிட்டு செயல் தளத்தில் கால் பதிக்கவேண்டும்.

தலைவர் முன்மொழிந்ததை செயல்பாடுகள்மூலம் வழிமொழிவது அவசியமாகும். ஒருமுறை கரிகாலன் பதிலில் கலைஞர் அவர்கள் திராவிடர் கழகம் நடத்துவதுபோல தி.மு.க.விலும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படவேண்டும் என்று கூறியதுண்டு.

அடிப்படைக் கொள்கைகளில் பலமாக இருக்கும்பொழுதுதான் எந்த ஊசலாட்டத்திற்கும் இடம் இல்லாத உறுதியான ஒரு நிலை ஒரு கட்சிக்கு ஏற்பட முடியும்!

அண்மைக் காலமாக மானமிகு கலைஞர் அவர்கள் இந்தத் திசையில் தொடர்ந்து கருத்துகளை வலியுறுத்திக் கூறிக்கொண்டே வருகிறார்.

இதனைத் தி.மு.க. தோழர்கள் புரிந்துகொண்டு செயல்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.

சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம், பெண்களுக்குச் சொத்துரிமை, தைமுதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை தமிழுக்குச் செம்மொழித் தகுதி சிதம்பரம் கோயில் தீட்சதர் ஆதிக்கத்திலிருந்து விடுபடச் செய்தது என்பதெல்லாம் தி.மு.க.வைத் தவிர வேறு எந்த ஆட்சியில் செயல்பட்டு இருக்க முடியும்? இதற்கான அடிப்படை என்ன என்பதைப் புரிந்துகொண்டால், டில்லியில் கலைஞர் பிறப்பித்த கட்டளையின் அருமை புரியும்.

--------------------"விடுதலை” தலையங்கம் 4-5-2010

8 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கருணாநிதி நடத்துகிற நாடகம், நகைச்சுவையின் நெடி விடுதலையில் தலையங்கம் எழுதுகிறவருக்கு எப்படித் தெரியுதாம்!

இவர்களெல்லாம் பகுத்தறிவு, பகுத்தறிவுன்னு கூவுதல் ஏனோ?

இந்து சமய அற நிலையத்துறை, முதல்வர் மற்றும் ஒரு தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சரின் (தொண்டரின்) பொறுப்பில் இருக்கிறது. தமிழ் நாடு முழுவதும் தி.மு.க வைச் சேர்ந்தவர்கள் அறங்காவல் குழு்த்தலைவர்களாக,உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

அவர்களது தலையாய பணி கோவில்(லில்) திருப்பணி செய்தல்!

அவர்களை கோவிலுக்கு போகாம திருப்பணி செய்யச் சொல்றாரா?

அல்லது

கோவிலுக்குச் செல்லும் மாற்றுக் கட்சியினர் அல்லது பொது மக்களுக்கு இந்தப் பதவிகளைக் கொடுப்பாரா?

அல்லது

கோவிலுக்கு போக தேவையில்லாதவர்களுக்கு எதுக்கு கோவில் பதவி?

இந்த கட்டுரையை எழுதுகிறவருக்கு பொது புத்தி வேண்டும். உண்மையான பெரியார் கொள்கைகளை மதிப்பவராக இருந்தால், பகுத்தறிவு இருந்தால் இந்த கருத்தை எதிர்த்து கட்டுரை எழுதி இருக்க வேண்டும்.

நல்லா ஊரை ஏமாத்துறாங்க. அதை வேற பொதுவுல வெளியீடு பண்றீங்க!

கேப்பையில் நெய் வடியுதுன்னா...
கேப்பாருக்கு...!

தமிழ் ஓவியா said...

//இந்து சமய அற நிலையத்துறை, முதல்வர் மற்றும் ஒரு தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சரின் (தொண்டரின்) பொறுப்பில் இருக்கிறது //

நாவலர் அவர்கள் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சராக இருந்த போது ஒரு கோயிலில் பூரண கும்ப மரியாதை கொடுத்த போது அதை ஏற்க மறுத்து விட்டு கோயிலின் கணக்கு வழக்குகளைப் பார்க்கத்தான் வந்துள்ளேன். கடவுளை வணங்குவதற்கு அல்ல என்று கூறினார். அதை செய்தித் தாளில் படித்து விட்டு “சாபாஸ் நெடுஞ்செழியன்” என்று பாராட்டி அறிக்கை விட்டுள்ளார் பெரியார்.

இப்போது திமுக வினரை கொள்கையுடன் இருக்க வலியுறுத்துகிறார் கலைஞர். இதில் என்ன தவறு அத்திவெட்டி ஜோதிபாரதி .

//கோவிலுக்கு போக தேவையில்லாதவர்களுக்கு எதுக்கு கோவில் பதவி?//

கொயிலுக்கு போகாத தி.க.வினர் தான் அனைத்துச் ஜாதியும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று வலியுறுத்தி சட்டமும் வந்து விட்டது . (இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.)

கோயிலுக்கு போகாதவர்கள் ஏன் இந்த கோரிக்கையை வைக்கிறார்கள் என்று எம்.ஜி ஆர் உட்பட பலர் கேட்டனர். இது மனித உரிமைப்பிரச்சினை என்று விரிவாக பதில் அளிக்கப்பட்டது எல்லாம் அத்திவெட்டி ஜோதிபாரதிக்கு மறந்து விட்டதா?



//கோவிலுக்குச் செல்லும் மாற்றுக் கட்சியினர் அல்லது பொது மக்களுக்கு இந்தப் பதவிகளைக் கொடுப்பாரா? //

நாத்திகரான பெரியார் தான் கோயிலின் தர்மகர்த்தாவாக இருந்து கணக்கு வழக்குகளை சரியாக பராமரித்து வந்தார் என்பது வரலாறு.


கொள்கையோடு இருப்பது என்பது வேறு அரசின் நடைமுறை என்பது வேறு. இதைப் புரிந்து கொண்டால் குழப்பம் வராது அத்திவெட்டி ஜோதிபாரதி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல். ( குறள் எண் : 517 )

அப்படின்னு 2000
ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு பகுத்தறிவாளன் சொல்லி வச்சுட்டு போயிட்டான். அவனுக்குத் தெரிந்தது அரசியல்,அரசாங்கம்,பொருளாதாரம்,பகுத்தறிவு. இப்ப இருக்கிறவர்கள் போலி என்பதை அவர்களே காட்டிகொடுத்துவிடுகிறார்கள்.

அந்த பொய்யாமொழிப் புலவனில் படத்தை தமிழ் நாட்டின் இலச்சினையில் போடும் எண்ணம் வரும்போது பொறி தட்டி இருக்கவேண்டும்.

உரை எழுதியவர்கள்(கலைஞர், நாவலர்) குறையை தன்பால் வைத்துக்கொண்டால் எப்படி!?

நாவலரைப் பற்றி சொன்ன செய்தி எல்லாம் சரிதான்!
ஆனால் நாவலர் அவர்கள், அவருக்கு இட்ட பணியை சரிவர செய்யவில்லை அல்லது அவரது துறையில் உள்ள அரசியல் பிரமுகர்கள் மற்றும் அலுவலர்களை வேலை வாங்கத் தகுதியற்றவர் என்று நான் கருதுகிறேன் வள்ளுவத்தின் படி. நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பணி இடத்துக்கு செல்ல இயலாதவனுக்கு எதற்கு அந்தப் பணி?

முரண்பாடுகளின் மொத்த உருவமாத்தான் இருக்கு கலைஞர் சொல்வது அதற்கு நீங்கள் சப்பைக்கட்டு கட்டுவதும்.

பஞ்சையும், நெருப்பையும் பக்கத்துல வச்சா பத்திக்கும் என்பது இயற்கை, அறிவியல். அது கூட பகுத்தறிவு வாதிகளுக்குத் தெரியாவிட்டால், அந்த பேரு மட்டும் எதுக்கு.

அந்த அனைத்து சாதி அர்ச்சகர் எல்லாம் சரிதான்!

பெரியார் தர்மகர்த்தாவாக இருந்ததனால் எல்லா நாத்திகனும் தர்மகர்த்தாவாக இருக்கனுமா என்ன?

சாமி கும்பிடாம சாமிக்கு பணிவிடை செய் அப்படித்தானே உங்கள் வாதம்!

அதைத் தவிர அதற்கு என்ன பேராம்?

அடிப்படையில் தவற்றை வைத்துக்கொண்டு அதைக் கொள்கை என்று பரப்புரை செய்வதில் என்ன லாபம் உங்களுக்கு.

குறைந்தபட்சம் தங்கள் வீட்டில் இதை அமுல் படுத்த முடியாதவர்கள் தொண்டர்களுக்கு கட்டளையிடுவதில் தவறில்லை என்பது உங்கள் பகுத்தறிவா? அல்லது வெட்டிக்கிட்டு வான்னா கட்டிகிட்டு வருகிற தொண்டனின் சுயமரியாதையா?

இதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்!

தமிழ் ஓவியா said...

//நாவலரைப் பற்றி சொன்ன செய்தி எல்லாம் சரிதான்!
ஆனால் நாவலர் அவர்கள், அவருக்கு இட்ட பணியை சரிவர செய்யவில்லை அல்லது அவரது துறையில் உள்ள அரசியல் பிரமுகர்கள் மற்றும் அலுவலர்களை வேலை வாங்கத் தகுதியற்றவர் என்று நான் கருதுகிறேன் வள்ளுவத்தின் படி. நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?//


நான் பார்த்த வரையில் இறுதி வரை நாத்திகராக வாழ்ந்து மறைந்தவர்.

அஹோரி said...

உங்கள் இம்சை முடியும் நாள் எப்போ ? பெரியார் பொறக்காமலே இருந்து இருக்கலாம்.
கருணாநிதி ஒரு ரெண்டாம் தர அரசியல் வாதி. பெரிய சிரோன்மணி மாதி நடிக்க மட்டுமே தெரிந்த ஒரு மனிதர்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தமிழ் ஓவியா ஐயா,

கீழ்க்கண்ட செய்தி படத்துடன் நக்கீரன் இணைய பக்கத்தில் படத்துடன் வந்துள்ளது.

இதற்கு என்ன சொல்கிறீர்கள்.
கலைஞர் செய்யும் ஊருக்கு உபதேசங்களை உங்கள் வலைதளத்தில் பொதுபார்வைக்கு வைத்தால் நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். உங்களுக்கு பதில் சொல்ல தயக்கமாக இருந்தால் கலைஞர் அதைப் பேசினார் இதைப் பேசினார் என்று போடுவதை தவிர்க்கலாம்!

உங்களை சங்கடப் படுத்தியதாக எண்ணவேண்டாம்!

நன்றி!

**********************************


கலைஞர் பேத்தி கட்டிய அன்னதான கூடம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


முண்டக கண்ணி அம்மன் கோவிலில் முதல்வர் கருணாநிதியின் பேத்தி குடும்பத்தார் கட்டிய அன்னதான கூடத்தின் கல்வெட்டை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மைலாப்பூர் முண்டககண்ணி அம்மன் கோவிலில் தினசரி அன்னதானம் நடைபெறுகிறது. கோவில் பிரகாரத்திலேயே அன்னதானம் நடைபெறுவதால் அந்த இடம் அசுத்தமானது.

இதையடுத்து பிரமாண்டமான அன்னதான கூடம் கட்ட முதல்வர் கருணாநிதியின் பேத்தி எழிலரசி (செல்வியின் மகள்) குடும்பத்தினர் முன் வந்தனர்.

கரந்தை கப்பல் முருகேசன் செட்டியார் ஜானகி அம்மாள் நினைவாக எழிலரசி டாக்டர் ஜோதிமணி தம்பதியினர் ரூ.13 லட்சம் செலவில் பிரமாண்டமான அன்னதான கூடம் கட்டி உள்ளனர்.

அன்னதான கூடத்தின் திறப்பு விழா இன்று காலையில் நடந்தது. முதல் அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ரிப்பன் வெட்டி அன்னதான கூடத்தை திறந்தார். துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வெட்டை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், துர்கா ஸ்டாலின், செல்வி, கயல்விழி, காவேரி கலாநிதிமாறன், பிரியா தயாநிதிமாறன், அறநிலையத்துறை கமிஷனர் சம்பத், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன், அறங் காவலர் குழு தலைவர் உதயகுமார், இணை ஆணையர் காவேரி, கோவில் நிர்வாக அதிகாரி மோகன சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது,

தமிழ்நாடு முழுவதும் 360 கோவில்களில் தினசரி அன்னதானம் நடக்கிறது. முண்டக கண்ணி அம்மன் கோவிலில் அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ள இந்த இடம் சமீபத்தில் வழக்கில் இருந்து மீட்கப்பட்டது.




எழிலரசி ஜோதிமணி குடும்பத்தினர் ரூ.13 லட்சம் செலவில் இந்த அன்னதான கூடத்தை கட்டி கொடுத்துள்ளனர்.

தமிழக கோவில்களில் கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகளுக்காக மத்திய நிதிக்குழு ரூ.100 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த தொகை கோவில் திருப்பணிக்களுக்காக செலவிடப்படுகிறது. பக்தர்கள் நன் கொடைகள் மேலும் வழங்கினால் இன்னும் சிறப்பாக திருப்பணிகள் மேற்கொள்ள முடியும் என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=33717

தமிழ் ஓவியா said...

//கலைஞர் செய்யும் ஊருக்கு உபதேசங்களை உங்கள் வலைதளத்தில் பொதுபார்வைக்கு வைத்தால் நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும். உங்களுக்கு பதில் சொல்ல தயக்கமாக இருந்தால் கலைஞர் அதைப் பேசினார் இதைப் பேசினார் என்று போடுவதை தவிர்க்கலாம்!


உங்களை சங்கடப் படுத்தியதாக எண்ணவேண்டாம்!

நன்றி!//

அய்யா இதில் சங்கடப்படுவதற்கு என்ன இருக்கிறது.

கலைஞர் நல்லது சொல்கிறார். அதைக் கேட்காமல் மூடநம்பிக்கைப் படிதான் செயல் படுவேன் என்று சொல்பவர்களை என்ன செய்வது?

அவர்கள் கேட்கவில்லை என்பதற்காக கலைஞர் இக்கருத்தை வலியுறுத்தக் கூடாது என்று சொல்லுவதும் சரியல்ல.

கலைஞரின் பேச்சை கேட்டு ஒருவர் திருந்தினாலும் நல்லது தானே தோழர்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அய்யா இதில் சங்கடப்படுவதற்கு என்ன இருக்கிறது.

கலைஞர் நல்லது சொல்கிறார். அதைக் கேட்காமல் மூடநம்பிக்கைப் படிதான் செயல் படுவேன் என்று சொல்பவர்களை என்ன செய்வது?

அவர்கள் கேட்கவில்லை என்பதற்காக கலைஞர் இக்கருத்தை வலியுறுத்தக் கூடாது என்று சொல்லுவதும் சரியல்ல.

கலைஞரின் பேச்சை கேட்டு ஒருவர் திருந்தினாலும் நல்லது தானே தோழர்
//

அப்படியென்றால் அடுத்த முதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டிருக்கும் துணைமுதல்வர் ஸ்டாலின் திருந்த வேண்டும் என்கிறீர்களா? அவரது குடும்பத்தார் திருந்த வேண்டும் என்கிறீர்களா?
அல்லது
தொண்டர்களுக்கு மட்டும் கட்டளையிட்டு அவர்களை மட்டும் கலைஞர் திருத்த வேண்டுமா? அது மட்டும் போதுமானது என்கிறீர்களா?