குடிஅரசு
மே 2 தமிழர்கள் வரலாற்றில் திராவிடர் இயக்க வரலாற்றில் பசுமையான தோரணம் தொங்கும் புகழ்மிக்க பொன்னாள்!
ஆம், இந்நாளில்தான் (1925) திராவிடர் தந்தை தமிழர்களின் தன்மான பகுத்தறிவு உணர்வுக்குக் கூர் தீட்டிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், புரட்சி இதழான குடிஅரசைத் தொடங்கினார்.
தந்தை பெரியாரின் போர்வாள் குடிஅரசு. களத்தில் அதனால் வீழ்த்தப்பட்ட ஆரியம், வருணாசிரமம், மூடத்தனங்கள், பெண்ணடிமை, மானுட அடிமைத்தனம், முதலாளித்துவம் இன்ன பிற பிற்போக்குச் சக்திகள் கொஞ்ச நஞ்சமல்ல!
இந்தியத் துணைக் கண்டத்தில் இதற்கு முன்பும், சரி, பின்பும் சரி இந்தக் கொள்கைகளுக்காகப் பாடுபட்ட ஒரே தலைவர் தந்தை பெரியார்.
85 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஓர் இதழைத் தொடங்க வேண்டும் என்று எண்ணியதே பெரும் வியப்புக்குரியதாகும்.
குடிஅரசு, விடுதலை புரட்சி பகுத்தறிவு, உண்மை என்பது தந்தை பெரியார் அவர்கள் தம்மால் தொடங்கப்பட்ட இதழ்களுக்குச் சூட்டிய பெயர்கள் ஆகும்.
தமிழின் தனித் தன்மையோடு இந்தப் பெயர்கள் ஒளிவிடுவது மட்டுமல்ல; கொள்கைக் கோட்பாட்டையும் தன் உச்சியில் வைத்துக் கொண்டு இருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மற்ற பத்திரிகையைப் போல் இல்லாமல், மனதில் பட்டதைத் தைரியமாய் பொது ஜனங்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டும் என்பது எனது அபிப்ராயம்!
ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும். அதை அறவே விடுத்து வெறும் தேசம் தேசம் என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று
மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்
உயர்வு தாழ்வு என்னும் உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து, அனைத்துயிர் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும் என்று குடிஅரசு இதழின் நோக்கம், செயல்முறைகள்பற்றி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் தந்தை பெரியார்.
இவற்றைவிட சிறந்த நோக்கங்கள், மனிதகுலத்தின்மீது அளப்பரிய அன்பு மணம் வீசும் சகோதரத்துவப் பார்வையை வேறு எங்கு படித்திருக்கிறோம் கேள்வி தான்பட்டிருக்கிறோம்.
இந்த வரலாற்றுப் பொன்னாளில், அதன் தொடர்புடையதாக இந்தியத் துணைக் கண்டத்தின் தலைநகராகிய டில்லியில் பெரியார் மய்யம் திறக்கப்படுவதுதான் பொருத்தம்! என்ன பொருத்தம்!
---------------- மயிலாடன் அவர்கள் 2-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
2 comments:
ARUMAI
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment