Search This Blog

3.10.12

ஒரு கோடி ரூபாய் பணம் கொடு - கழுதையை மகானாக்கிக் காட்டுகிறேன் -பெரியார்


இலக்கியச் சிந்தனை - கலை ஆர்வலர்களுக்கு...

பகுத்தறிவுப் பிரச்சாரம் வெறும் மேடைப் பேச்சுகளாக அமையாமல் கலை வடிவத்தில் அளிக்கப்பட்டால் அதன் வீச்சு அடித்தட்டு அடிப்படை மக்கள் வரை பேராறாகப் போய்ப் பாய்ந்திடும் என்பது உளவியல் ரீதியான உயர்ந்த கணிப்பாகும்.

எல்லாம் வல்லவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு, சாமி ஊர்வலம், தேர்த் திருவிழா, இசைக் கச்சேரி (இப்பொழுது டப்பாங்குத்து, சினிமா பாடல்கள் வரை) என்றுதான் பரப்ப வேண்டியுள்ளது. பரப்பாவிட்டால் பக்தி படுத்துவிடும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.


ஒரு கோடி ரூபாய் பணம் கொடு - கழுதையை மகானாக்கிக் காட்டுகிறேன் என்றார் தந்தை பெரியார்.

உலகம் பிரச்சாரத்திற்கு அடிமை தானே! ஆன்மீகவாதிகளோ மக்களை மடையர்களாக்கி இத்தகு பிரச்சாரம் எனும் தூண்டிலைப் போட்டு சுரண்டல் தொழிலை நடத்துகின்றனர்.


மதங்களுக்குச் சீவநாடியாக இருந்து வருவது பணமும், பிரச்சார மும் அல்லாமல் அவற்றின் உயர்ந்த கொள்கைகளோ, தத்துவங்களோ என்று எந்த மதத்தையும் யாரும் சொல்லிவிட முடியாது என்றார் தந்தை பெரியார்.

(தென்னிந்திய சீர்திருத்தக்காரர் கள் மாநாட்டில், 26, 27.11.1928)


நாமோ அந்தச் சுரண்டலின் சூளினை அறுக்க, மூடநம்பிக்கைப் படுகுழியில் தலைகுப்புற வீழ்ந்து கிடக்கும் மக்களைக் கரையேற்ற, பகுத் தறிவைப் பலி கொடுத்து நடைமுறை வாழ்வைத் தொலைத்துக் கொண்டு இருக்கும் பரிதாப நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க, தன்னம் பிக்கை ஊன்றுகோலைக் கொடுக்க, கரியாகும் காலத்தைத் தடுக்க.

தந்தை பெரியார் கருத்துகளை நெஞ்சில் தாங்கி, மக்கள் மத்தியில் பகுத்தறிவு ஒளியைக் கொண்டு செல்ல கலை வடிவம் தேவைப்படுகிறது; இலக்கிய மறுமலர்ச்சியும் அவசியமாகிறது.


இதனை மனதில் கொண்டுதான் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வரும் 6.10.2012 சனி காலை 10 மணிக்கு சென்னை - பெரியார் திடலில் மாநில அளவிலான தந்தை பெரியார் பகுத்தறிவு - கலை இலக்கிய அணி ஒன்றினை உருவாக்கும் வகை யில் இவற்றில் ஆர்வம் உள்ள, திறமை யுள்ள, இன உணர்வுள்ள, பகுத்தறிவா ளர்களின், கலைஞர்களின் கலந்துரையாடல் கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளார்.

நமது கழகப் பொறுப்பாளர்கள் தத்தம் பகுதிகளில் உள்ளவர்களை அடையாளம் கண்டு, குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் கலந்துகொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

பத்திரிகை ஊடகங்கள் ஒரு பக்கம்; தொ(ல்)லைக் காட்சி ஊடகங்களோ விடியற்காலம் முதல் நள்ளிரவு வரை போட்டிப் போட்டுக் கொண்டு மூடத் தனக் குப்பைகளை ஒளிபரப்பிக் கொண்டு மக்களை மடமைக் குழியில் தள்ளும் மூர்க்கமான மோசடி வேலை களில் இறங்கிவிட்டன.

விஞ்ஞானக் கருவிகளின் மூலம் அஞ்ஞான ஊசிப் போன சரக்குகளை விற்பனை செய்யும் முதலாளிகள் இவர்கள். இதில் அறிவு நாணயம் கிஞ் சிற்றும் உண்டா?

ஏடுகளும், ஆன்மிக இதழ்களை வாரந்தோறும் நோய்க் கிருமிகளாக வெளியிட்டு வருகின்றன. இந்தக் கேடு கெட்டதுகளால் பழி வாங்கப்படும் இந்த மக்களை - பகுத்தறிவு துணை கொண்டு கரையேற்ற வேண்டாமா?

பகுத்தறிவோடும்; மனித நேயத் தோடும் இந்தப் பணியை மேற்கொள்ள நம்மைவிட்டால் வேறு நாதி ஏது?

மதம் - மதத்தைச் சேர்ந்தவர்களி டம்தான் தொடர்பு கொண்டிருக்கிறது. பகுத்தறிவு மனித சமுதாயத்தைச் சேர்ந்த எவரிடமும் தொடர்பு கொண் டிருக்கிறது என்றார் பகுத்தறிவுப் பகலவனாம் பெரியார். (விடுதலை, 14.10.1971)

இனவுணர்வு - பகுத்தறிவு இரண்டையும் விழிகள் என நினைக்கும் எழுத்தாளர்களே, கலைஞர்களே, காலத்தாற் கழகம் மேற்கொள்ள விருக்கும் இந்த முயற்சிக்கு ஆதரவுக் கரங்களை நீட்டுவீர்!
பயன் பெறுவீர்! பயன் படுவீர்!!

தமிழர் தலைவர் வழி காட்ட இருக்கிறார் - வாருங்கள்! வாருங்கள்!!

------------------ கலி.பூங்குன்றன் துணைத் தலைவர்  திராவிடர் கழகம்  சென்னை --"விடுதலை”  3.10.2012

4 comments:

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட அய்.நா. தலையிட இந்திய அரசு வலியுறுத்தவேண்டும்


சென்னை, அக். 3- ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை யைப் பாதுகாத்திட அய்.நா. மன்றத்தின் தலை யீட்டை கோரும் தீர்மானத்தை இந்திய அரசு வலி யுறுத்த முன்வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் இன்று (3.10.2012) நடைபெற்றது. தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமை தாங்கினார். டெசோ அமைப்பின் உறுப்பினர்களான தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் மற்றும் மு.க.ஸ்டாலின், எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வழக்குரைஞர் இராதாகிருட்டிணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் 10.30 மணி யளவில் தொடங்கியது. கூட்டத்தில் ஆகஸ்டு 12 ஆம் தேதி நடந்த டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர் மான நகல்களை அய்.நா சபை மற்றும் ஜெனிவா வில் உள்ள மனித உரிமை ஆணையரிடம் சமர்ப் பிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்: 1

கடந்த 12.8.2012 அன்று தலைவர் கலைஞர் தலை மையில் டெசோ அமைப் பின் சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரி மைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இணைத்து இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்துக்கு பதிலெழுதி யுள்ள பிரதமர், இலங்கைத் தமிழர்களின் நலனுக் கும், நல்வாழ்வுக்கும் தேவையான பணிகளில் இந்திய அரசு அக்கறை காட்டி வருகிறது என்றும், ஈழத் தமிழர்களின் மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கு இந்திய அரசு மிகுந்த முன்னுரிமை வழங்கிச் செயல்படுகிறது என்றும், தெரிவித்திருக்கிறார். மேலும் அதிகாரப் பகிர்வு குறித்து ஈழத் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தன் அவசியத்தையும் இலங்கை அரசுக்குத் தெரிவித் திருக்கிறோம். எதிர்காலத்தில் ஈழத் தமிழர்கள் சமஉரிமை, கவுரவம், சமநீதி மற்றும் சுயமரி யாதையுடன் வாழக்கூடிய நிலையை உருவாக்கிட இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர் முயற்சி களை மேற்கொள்ளும் என்றும் எழுதியுள்ளார்.
இந்தியப் பிரதமர் அவர்களின் இக்கடிதம் தமிழக மக்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. பிரதமரின் இக்கடிதத்துக்கு டெசோ அமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரத்தில் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட அய்.நா. மன்றத்தின் தலையீட்டைக் கோரும் தீர்மானத்தை இந்திய அரசு முன்மொழி வதன் மூலம் இலங்கையில் தற்போதுள்ள நிலைமைக்கு விரைந்து முற்றுப்புள்ளி வைத்து, ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும், தங்களுடைய உரிமைகளை விவாதித்து தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும் இயலும் என இக் கூட்டம் முழுமையாக நம்புகிறது. எனவே இந்தியப் பேரரசு இதற்கான முயற்சி களை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 2

டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தலை மையில் கடந்த 12.8.2012 அன்று சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெற்றிகரமாக நடைபெற்றது. அந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த தலைவர் கலைஞர் அவர்களைப் பாராட்டி இந்தக் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களையும், டெசோ உறுப்பினர்களான தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி, விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல்.திருமாவள வன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரிடம் விவாதித்து, ஈழத்தமிழர்கள் அரசியல் உரிமைகளையும், வாழ்வுரிமைகளையும் குறித்த தலைவர் கலைஞர் அவர்களின் கோரிக்கை மனுக்களை நியூயார்க்கில் உள்ள அய்.நா. பொதுச்செயலாளர் அவர்களிடமும் - ஜெனிவாவிலுள்ள அய்.நா. மனித உரிமை ஆணையத்திடமும் வழங்க திட்டமிடப்பட்டது. இக்கோரிக்கை மனுக்களை தலைவர் கலைஞர் அவர்களின் சார்பிலும், டெசோ அமைப்பின் சார்பிலும், கழகப் பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் - தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரை அய்.நா. மன்றத்திற்கும், அய்.நா. மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பி வைத்து நேரில் வழங்கிடும் முடிவினை இன்றைய டெசோ கூட்டம் ஏற்றுக் கொள்கிறது.3-10-2012

தமிழ் ஓவியா said...

அமைதிப்படையை வரவேற்க நான் மறுத்ததை வசதியாக மறந்துவிடாதீர்கள்!

செய்தியாளர்களிடம் கலைஞர்

சென்னை, அக். 3- இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப் படையை நான் வரவேற்க மறுத்ததை வசதியாக மறந்து விடாதீர்கள் என்றார் டெசோ தலைவர் கலைஞர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் முடிந்ததும் தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ஏற்கனவே அறிவித்தவாறு தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு, இருவரும் செல்வது குறித்து எடுத்துச் சொல்லி அதன் தொடர்பான விளக் கங்களை எல்லாம் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவாதித்தனர். கூட்டத்தில் இது தொடர்பாக ஒப்புதல் வழங்கப் பட்டது. ஜெனிவாவில் மனித உரிமை செயலாளரை பார்ப்பதற்கும், நியூயார்க்கில் அய்.நா. பொதுச் செயலாளரை பார்ப்பதற்கும் தேதி கிடைத்தவுடன் இருவரும் டெசோ தீர்மான நகல்களுடன் செல்ல இருக்கிறார்கள். அங்கிருந்து உறுதியான தேதி இதுவரை வரவில்லை. இதுதொடர்பாக அவர்களிடம் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம்.

உறுதியான தேதி கிடைத்தபிறகு உங்களுக்கு தெரிவிக்கப் படும். இலங்கை தமிழர்கள் நிலை இலங்கையில் இந்திய அரசு மூலம் நிறைவேற்றப்படும் பணிகள் திருப்தியாக இல்லை. அந்த தகவல்களும் இந்த நகல்களுடன் இணைத்து அதுபற்றி தெளிவாக எடுத்துச் சொல்ல இருவரும் இந்த பயணத்தை மேற்கொள் கிறார்கள். இலங்கையில் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும். இதற்கான தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. நிம்மதி உண்டா?

போர் முடிந்தும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் நிம்மதி இல்லை; கொடுமைகள் நடந்துகொண்டுதானிருக்கின்றன. இலங்கையில் தமிழர்களுக்கு அமைதியான வாழ்வு கிடைக்குமா என்ற கேள்விக்குப் பதில் சொன்ன கலைஞர் அவர்கள், நம்பவில்லை. தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளவேண்டும் என்ற முடிவை செல்வா காலத்திலிருந்து அமைதிவழியாகவும், அடுத்து ஆயுதம் தாங்கியும் அம்மக்கள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட கலைஞர் அவர்கள்,

தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறதே என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், இன்னொரு நாட்டு ஆட்சித் தலைவர்களை வரவேற்பது, விருந்தளிப்பது என்பது எங்கும் நடக்கக் கூடியதுதான்; மரபுகளை மீறும் துணிவு வேண்டும்; இலங்கைக்குச் சென்ற இந்தியாவின் அமைதிப்படையை தமிழக அரசு சார்பில் வரவேற்கவேண்டும் என்று ஆளுநர் மூலம் எனக்கு வலியுறுத்தப்பட்டும், எங்கள் தமிழர்களைக் கொன்று குவித்த இந்தியப் படையினரை நான் வரவேற்க முடியாது என்று அப்பொழுது நான் சொன்னதை வசதியாக மறந்துவிடாதீர்கள் என்றும் கலைஞர் குறிப்பிட்டார். 3-10-2012

தமிழ் ஓவியா said...

பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு!

பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்ற குழுவிடம் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில், பதவி உயர்விலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீட்டின் அவசியம்பற்றிய தாகும்.

இட ஒதுக்கீட்டை அடிப்படையில் எதிர்த்தவர்கள், அதனை ஓரளவுக்கு ஒப்புக்கொண்டாலும், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு நியாயமா என்ற வினாவை எழுப்புவதுண்டு. இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் (விடுதலை 5.9.2012) ஒன்றை சட்ட ரீதியாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின் 16(4) பிரிவு Ade Quately என்ற சொல்லுக்கு மற்றவர்களோடு சமமாக வரும்வரை போதிய பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று எழுதப்பட்டுள்ளதே - அதனைச் சரியாக செயல்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் கடமையல்லவா! என்று குறிப்பிட்டுள்ளார்.

77 ஆவது சட்டத் திருத்தத்தின்படி தாழ்த்தப்பட்ட வர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடுக்கு வழி செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் செல்வி மாயாவதி ஆட்சியின்போது நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று நீதிமன்றம் சொன்னதால், மீண்டும் புது சட்டத் திருத்தம் கொண்டுவரும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் பி.ஜே.பி. ரகளையில் ஈடுபட்டதால் அந்தச் சட்டம் நிறைவேற்றப் பட முடியாத ஒரு நிலை ஏற்பட்டது. தாழ்த்தப்பட்டவர் களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத்தோடு இணைத்துப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் வகை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்றுக்கொள்ளாதது - கண்டனத்துக்குரியது.
தி.மு.க. சார்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு.டி.ஆர். பாலு அவர்கள் வலியுறுத்தியும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

உண்மை என்னவென்றால், மிகவும் காலதாமத மாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசுத் துறைகளில் இட ஒதுக்கீட்டுக்கு வழி செய்யப்பட்டதே - மண்டல் குழுப் பரிந்துரையைச் செயல்படுத்தும் வகையில் மாண்புமிகு பிரதமர் வி.பி. சிங் காலத்தில்தான் (7.8.1990).

அய்.ஏ.எஸ்., குருப்-1 போன்ற பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது.

நேரடியாக நியமனம் செய்யப்பட்ட 3251 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 13.9 விழுக்காடு தாழ்த்தப் பட்டவர்களும், 7.3 விழுக்காடு பழங்குடியினரும் உள்ளனர். 27 விழுக்காடுக்கு உரிமையுள்ள பிற் படுத்தப்பட்டவர்களுக்கோ கிடைத்துள்ள இடங்கள் வெறும் 12.9 விழுக்காடே! மக்களவையில் மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு வி. நாராயணசாமி அவர்கள் அதிகாரபூர்வமாக அளித்த புள்ளி விவரம் இது.

தாழ்த்தப்பட்டவர்களும் சரி, பிற்படுத்தப்பட்ட வர்களும் சரி அவரவர்களுக்குச் சட்டப்படியாகக் கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீடு இடங்களுக்குப் பதிலாக குறைந்த அளவே கிடைத்துள்ளன என்பது இவற்றின்மூலம் வெளிப்படையாக தெரியவில்லையா?

அதுமட்டுமல்லாமல், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ள சட்டப்படியான நிலைப்பாடு ஒன்று இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

Appointment Includes Promotion Also என்று தீர்ப்புரையில் கூறப்பட்டுள்ளதால், பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு என்பது சட்ட ரீதியாகவும், நியாயப்படி யும் முற்றிலும் சரியானதாகும்.
நாடாளுமன்ற குழுவிடம் திராவிடர் கழகம் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள இந்தப் பகுதி எல்லா வகைகளிலும் சரியானதே!

தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடுக்கு வழி செய்யும் 77 ஆவது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தபோது - அன்றைய மத்திய சமூக நலத்துறை அமைச்சர் சீதாராம் கேசரி என்ன சொன்னார்? பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இத்தகு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தாரே!

11 ஆண்டுகள் ஓடிவிட்டனவே! இனியும் காலம் கடத்தாமல் உடனடியாக சட்டத் திருத்தம் கொண்டு வர வலியுறுத்துகிறோம்.
3-10-2102

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு விவசாயப் பணிகளில் உதவி செய்யும் பெரியார் ஆப்பிரிக்க அமைப்பு


அக்கரா, அக். 3- கிராமப்புற விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கம் கொண்ட அரசு அல்லாத தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று பெரியார் ஆப்பிரிக்க அமைப்பு என்ற பெயரில் அக்காராவில் தொடங்கப்பட்டது.

இந்தியாவைத் தலைமயிடமாகக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு, விவசாயப் பணிகளில் ஈடுபட்டி ருக்கும் பெண்களுக்கு நிதிஉதவி செய்வதையும், இதற்காக முதலீடு செய்வதன் மூலம் அவர்களது வறு மையைக் குறைப்பதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டதாகும்.

இந்த அமைப்பின் இறுதி நோக்கம் பெண்களின் மேம்பாடும், பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளை ஒழிப் பதும், பொருளாதார அளவில் தங் களைச் சார்ந்தவர்களாக பெண் களை ஆக்குவதும், சொத்துரி மையைப் பெற்றுத் தருவதும் ஆகும்.

விவசாய உற்பத்தியைப் பெருக் கும் மிகச் சிறந்த விவசாய நடை முறைகளின் பயனைப் பற்றி பயன் தாரர்களுக்கு இந்த அமைப்பு கற்பிக்கும்.

அதிக மகசூல் அளிக்கும் விதை கள், தங்களின் கிராமப்புற விவசாயத் துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நிலமும் பயன்தாரர்களுக்கு வழங்கு வதுடன், அவர்களது விளைபொருள் களை அதிக தேவை உள்ள நாடு களில் விற்பனை செய்வதற்கு சந்தைப்படுத்தும் இணைப்புகளை ஏற்படுத்தும்.

கானாவில் இந்த அமைப்பை அதிகார பூர்வமாக தொடங்கி வைத்துப் பேசியபோது, அதன் செயலாளர் சாலை மாணிக்கம் அம்மையார், இந்தியாவில் லட்சக் கணக்கான கிராமப்புற ஏழை மக்களை வறுமையில் இருந்து இந்த முயற்சி முன்னேற்றம் அடையச் செய்துள்ளது. கானா நாட்டின் சமூகத்திலும் பயன் நிறைந்த, ஆக்க பூர்வமான பாதிப்பை இது ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

இந்த அமைப்பின் தொடக்க விழா அதன் தோற்றுநர் பெரியார் ராமசாமி அவர்களின் 134 பிறந்த நாள் விழாவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. சமூக அளவில் பின்தங்கியிருந்த வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கும், இதர மக் களுக்கும் இடையே இருந்த அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்று வதை இலக்காகக் கொண்ட சமூக சீர்திருத்தத்தைத் தூண்டும் கருத்துகளை வெளியிட்ட முன்னோடி பெரியார் ராமசாமி அவர்கள்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கானா நாடு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, இந்நாட்டில் நிலவும் சாதகமான வணிக சூழலும், கிராமப்புற வணிகத்துக்கு உள்ள நல்ல எதிர்காலமுமே காரணம் என்று கூறிய அவர், பின்னர் இதர ஆப்பிரிக்க நாடுகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தப் படும் என்று கூறினார்.

நாட்டு முன்னேற்றத்தின் மய்யமாக விளங்குபவர்கள் பெண்களே என்பதால், இந்த அமைப்பின் முக்கிய இலக்காக விளங்குபவர்கள் பெண்களே என்று அவர் கூறினார். பெண்களை இலக்காகக் கொண்டு இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்ட சுயஉதவித் திட்டங்கள் சமூகத்தின் மற்ற அனைத்துப் பிரிவு மக்களுக்கும் உதவியாக அமைந்தன என்பதுடன் அவர்களின் வறுமையையும் பெரும் அளவில் குறைக்க உதவி யுள்ளன என்று கூறினார்.

இந்த மாதிரி விவசாய உதவித் திட்டத்திற்குத் தேவையான பெரும் பரப்பு கொண்ட நிலங்களை ஆஷாந்தி பகுதியில் இந்த அமைப்பு வாங்கியுள்ளது.

இந்த தொடக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கானாவுக்கான இந்திய தூதர் ராஜேந்தர் பகத் இந்த அமைப்பின் லோகோவையும், பெரியார் அவர்களின் படத்தையும் திறந்து வைத்தார். பெரும் அளவு முதலீடு செய்வதன் மூலம் கானாவில் வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவிசெய்ய இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்த அமைப்பின் செயல்பாடுகள் விளங்கும் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

பெரியார் அவர்களின் ஓய்விலா, சோர்விலா முயற்சிகளின் மூலம் திரட்டப் பட்ட நிதி இந்த அமைப்புக்கான செலவுகளுக்கு உதவி அளிக்கும் என்று இந்த அமைப்பின் தலைவர் எழிலரசன் கூறினார்.

இந்த அமைப்பு மேற்கொள்ளவிருக் கும் செயல் பாடுகளின் ஒரு பகுதிக்கு, மான்யத்துடன் கூடிய விலையில் விற்பனை செய்வதில் இருந்து, ஒன்றுக்கொன்று மான்ய உதவி செய்து கொள்வது என்ற கோட்பாட்டின்படி நிதி உதவி அளிக்கப் படும் என்று அவர் கூறினார்.

பொது நிதி நிறுவனங்களில் இருந்து பெரும் அளவு கடன் வாங்குவது இத்திட்டத்திற்கு நிதி அளிக்கும் வழிகளில் ஒன்றாகும். கடந்த காலத்தில் பெறப்பட்ட கடன்களை உரிய காலத்தில் திரும்பிச் செலுத்திய காரணத்தால், இந்த அமைப்பின் பெரிய மற்றும் சிறிய திட்டங்களுக்கு தேவையான நிதி அளித்து உதவ இந்த நிறுவனங்கள் விருப்பம் கொண்டவையாக உள்ளன. இவ்வாறு கிடைக்கும் கடன் தொகைகள் முறையாகப் பயன்நிறைந்த வகையில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறதா என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்கின்றனர் என்று அவர் கூறினார்.

(நன்றி: டெய்லி கிராபிக், 25 செப்டம்பர், 2012 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)