Search This Blog

6.10.12

அம்பேத்கரைப் போற்றும் பித்தலாட்டத்திற்குப் பெயர்தான் பார்ப்பனத்தனம்!

மூன்று பிரச்னைகள் மீதான விமர்சனம்


விஜய பாரதம்

விஜயபாரதம் என்ற ஆர்.எஸ்.எஸ். வார இதழ் அம்பேத்கரைப் புகழ்கிறது என்றால் அதிகம் எச்சரிக்கை தேவைதான்.

ஒப்பற்ற தேசியத் தலைவர்! எனும் தலைப்பில் விஜயபாரதம் (9-.12.-2011) புகழ்கிறது.

ஒரு முறை ஒரு பெரிய கார் விபத்திலிருந்து அம்பேத்கர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். அது பற்றித் தன் மகனிடம் சிறு குழந்தை போல விம்மி, விம்மி அழுதுகொண்டே அவர் கூறினார். இன்று என்னைக் காப்பாற்றியது இறைவன்தான் என்று கூறினாராம்.

எப்பொழுது அந்த விபத்து நடந்தது என்பதைப் பற்றிய குறிப்பு எல்லாம் ஒன்றும் கிடையாது.

இப்படித்தான் அம்பேத்கர் வந்தார் - ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பைப் பார்த்துப் பாராட்டினார் என்று சொல்லுவார்கள்.

இவ்வளவுக்கும் இந்து மதத்தின் ஆணிவேரை - பக்க வேரை - சல்லி வேரைக் கன கச்சிதமாக அறுத்த கருத்தாளர் அவர்.

நான் இந்துவாகப் பிறந்தேன். ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என்று சொன்னபடி நடந்து கொண்டவர்.

ஆனால் இதுபற்றி விஜயபாரதம் என்ன எழுதுகிறது?

தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டாதவன் என்றெல்லாம்  சொல்லி அவர்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள் கணக்கற்றவை. எனினும் அவர் தீண்டாமைப் பிரச்சினையைத் தேசியக் கண்ணோட்டத்தில் அணுகினார். புத்த மதத்தில் அவர் இணைவதற்கு அவர் கூறிய காரணங்கள் இதைத் தெளிவாக்குகின்றன.

என்று விஜயபாரதம் எனும் ஆர்.எஸ்.எஸ். ஏடு எழுதுகிறதே - இதில் உள்ள பூடகத்தைப் பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தால் அதன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும்.

அது என்ன தீண்டாமையைத் தேசியக் கண்ணோட்டத்தில் பார்த்தார் என்பது?

எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் தீண்டாமை என்பது இந்து மதம் எனும் வருணாசிரமக் கட்டு விரியனின் கன்னத்தில் அடக்கி வைத்திருக்கும் நச்சுப் பையின் உபயம்தானே? மறுக்க முடியுமா? இந்த உண்மையை எத்தனை முறை எடுத்துக் கூறி இருப்பார் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்.

இன்னும் விஷமத்தைப் பாருங்கள். புத்த மதத்தில் இணைவதற்கு அம்பேத்கர் கூறிய காரணங்கள் இதைத் தெளிவாக்குகின்றன என்கிறது விஜயபாரதம்.
எதைத் தெளிவாக்குகிறது? எடுத்துக்காட்ட வேண்டியதுதானே?


அவர்கள் எடுத்துக்காட்டாவிட்டால் என்ன? நாமே எடுத்துக் காட்டுவோம். போதிசத்வர் அம்பேட்கர் பவுத்த சங்கம் பவுத்தம் ஏற்பு விழா

உலகமே  வியந்து நோக்கு மளவிற்கு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் (14-10-1956) அன்று நான்பூர் நகரில் அய்ந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களோடு பாபாசாகேப் அம்பேட்கர் அவர்கள் பவுத்தம் தழுவிய போது எடுத்துக் கொண்ட 22 உறுதி மொழிகள்:

22 உறுதி மொழிகள்

1. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி நான் வணங்கமாட்டேன்.

2. இராமன், கிருஷ்ணன் இரண்டும் அவதாரமென எண்ணி நான் வணங்கமாட்டேன்.

3. கணபதி, லட்சுமி மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று நான் வணங்கமாட்டேன்.

4. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்து வந்ததாகவோ நான் நம்பமாட்டேன்.

5. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை எதிர்த்து நான் முறியடிப்பேன்.

6. பிறப்பு, இறப்பு நிகழ்ச்சிகளில் இந்து மதச் சடங்குகளை நான் செய்ய மாட்டேன்.

7. மகாபுத்தரின் போதனைகளையும், நெறிகளையும் மீறி நான் நடக்க மாட்டேன்.

8. பார்ப்பனர்கள் செய்யும் எந்த ஒரு ஆச்சாரச் செயலையும் நான் அனுமதிக்க மாட்டேன்.

9. மானுட சமத்துவத்தில் நான் மிகுந்த நம்பிக்கை வைப்பேன்.

10. சமத்துவத்தை நிலை நிறுத்த நான் முழு மூச்சாய் பாடுபடுவேன்.

11. மகாபுத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு நான் பின்பற்றுவேன்.

12. மகாபுத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று நான் செயல்படுவேன்.

13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி அவைகளை பாதுகாத்து நான் வாழ வைப்பேன்.

14. நான் பொய் பேச மாட்டேன்.

15. நான் களவு செய்ய மாட்டேன்.

16. நான் காமவெறி கொள்ள மாட்டேன்.

17. நான் மது அருந்த மாட்டேன்.

18. மகாபுத்தர் போதித்த அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறி களின் அடிப்படையில் என் வாழ்க் கையை நான் உருவாக்க முயற்சி செய்வேன்.

19. மானுட நேயத்திற்கு முரணான தும், சமத்துவம் இல்லாததுமான இந்து மதத்தை விட்டொழித்து இன்று முதல் மேன்மைமிகு பவுத்தத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

20. புத்தரும் அவர் தம்மமும் உண்மையான மார்க்கமென நான் உறுதியாக ஏற்கிறேன்.

21. இன்று பௌத்தனானதால் மறுவாழ்வு பெற்றதாய் நான் மனதார நம்புகிறேன்.

22. மகாபுத்தரின் கொள்கைக் கோட்பாட்டிற்கேற்ப புத்த தம்மத்திற் கிணங்க இன்று முதல் செயல்படு வேன்.

பிறவி இழிவினைத் தரும் இந்து மதத்திலிருந்து  மக்களோடு நாக்பூரில் (14.-10.-1956) புத்த மார்க்கம் தழுவியபோது அண்ணல் அம்பேத் கரும் 5 லட்சம் மக்களும் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகள்தான் இவை.

இவற்றை எப்படி விஜயபாரதம் வெளியிடும்?

இவற்றை மறைத்து விட்டு அம் பேத்கரைப் போற்றும் பித்தலாட்டத் திற்குப் பெயர்தான் பார்ப்பனத் தனம்
என்பது.

காம்ரேட் பாராட்டுகிறார்!

சுவாமிஜியே இந்தியா; இந்தியாவே சுவாமிஜி. ஒரு நரேந்திரன் ராமகிருஷ்ணரால் விவேகானந்தராய்ப் பரிணமித்த பின் அவர் சிந்தையில், சொல்லில், செயலில் உருப்பெற்றது உயிர் பெற்றது வலுப்பெற்றதுதான் இந்தியா. . . இப்படிப் பேசி இருப்பவர் சங் பரிவாரத்தைச் சேர்ந்தவரல்லர். அனுமன் சேனை உறுப்பினருமல்லர்.



மாறாக இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலக் குழு மற்றும் தேசியக் குழு உறுப்பினர் தோழர் ஸ்டாலின் குணசேகரன்தான் இவ்வாறு பேசி இருக்கிறார்.

ஈரோட்டில் விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழா ஒன்றில் (7-.7.-2012) தான் இவ்வாறு பேசியிருக்கிறார். இது செப்டம்பர் (2012) ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழில் (பக்கம் 19) வெளியாகியுள்ளது.

எந்த மதத் தொடர்பான விழாவாக இருந்தாலும் உண்மையான கம்யூனிஸ் டாக இருப்பவர் எவரானாலும் கலந்து கொண்டு, அதன் குணாம்சங்களைக் கர்ச்சித்தாலும் அது ஒரு வழுக்கல் தான்.

அதிலும் இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பிய ஒருவரைப் பற்றிப் பேசும்போது கொள்கை ரீதியான உன்னிப்பான கவனம் வேண்டாமா?
இந்தியாவே விவேகானந்தராமே! எந்தப் பொருளில் இப்படிக் கர்ச்சித்தாரோ?

பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் வருண தர்மத்தையே தன் வேராகக் கொண்டு விஷ மூச்சை விட்டுக் கொண்டு இருக்கும் ஒரு மதத்தின் ஒலிக் குழாயாகக் கருதப் படுபவர், ஒரு பொதுவுடைமை வாதியின் வாயால் புகழப்படுவது பொதுவுடைமைத் தத்துவத்திற்கு களங்கம் ஏற்படுத்தக்கூடியதாகும். பார்ப்பான், பசு இவர்களைப் புரக்கும் பொருட்டு கூலி பெறாமலேயே உயிரைத் தியாகம் செய்வதே சூத்திரர்கள் சொர்க்கத்திற்குச் செல்லும் மார்க்கமாகும்   என்று இந்து  மதத்தின் அடிப்படையை எடுத்துக் காட்டி எள்ளி நகையாடுகிறார் கார்ல் மார்க்ஸ் (சிகிறிமிஜிகிலி- க்ஷிஷீறீ.மிமி - றிணீரீமீ 241)

விவேகானந்தர் அமெரிக்காவரை இந்து மதத்தை ஏற்றுமதி செய்தார் என்பதுதான் அவருக்குரிய புகழே!

வருண பேதத்தையோ, வர்க்கப் பேதத்தையோ வெறுப்போர், எதிர்ப்போர் தோழர் ஸ்டாலின் குண சேகரன் அவர்களின் கூற்றைக் கடுமையாகவே விமர்சனம் செய்வர் என்பதில் அய்யமில்லை.

இதையும் தாண்டி வேகமாக இன்னொரு உயரத் தாண்டுதலைச் செய்துள்ளார் தோழர் குணசேகரன் அவர்கள்.

அவர் பேசிய விழா அரசு பள்ளிகளுக்கு ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற இதழை விநியோகிக்கும் விழாவாகும்.

அந்த இதழைப் பற்றி தோழர் குணசேகரனின் கணிப்பு இதோ: இந்த இதழ் வாசிப்பவர்களை எல்லாம் நேர்மறையாய் யோசிக்க வைக்கும். எந்த விதமான சமூக, பொழுது போக்குக்கும் சமரசங் களுக்கும் இடம் கொடாமல் லட்சோப லட்ச இதயங்களில் கொலு வீற்றிருக்கிறதெனில், தரமே இதன் நிரந்தர ரகசியம் என்றும் பேசி இருக்கிறார்.

ஜனசக்தி பற்றியோ, தாமரை இதழைப் பற்றியோ இப்படி அவர் பேசவில்லை. இந்து மத இதழைப் பற்றித்தான் இப்படி இமயம் அளவுக்குப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இவர் பேச்சு வெளிவந்த அதே இதழில் என்னென்னவெல்லாம் இடம் பெற்றிருக்கிறது?

என்றும் நம்மைக் காக்கும் குருதேவர் பூர்ணர், கணபதியின் பிரபாவம், அத்யந்த மூர்த்தி ஸ்ரீஜெயதேவர் (படக்கதை), மழை வேண்டி ஒரு வேண்டுதல் (ஒரு பாடல் வெளியாகியுள்ளது. அதைப் பாடினால் மழை கொட்டுமாம்!) விநாயக ஸ்துதி, பூர்ண கும்பமேளா - 2013, ஒரு வேண்டுகோள், அட்டைப் படமோ பல தோற்றங்களில் பிள்ளை யார். இந்த இதழில் மட்டுமல்ல;  ஒவ்வொரு ராமகிருஷ்ண விஜயத்திலும் இது போன்றவைதான்.

இவைதான் நேர்மறையாய் யோசிக்க வைக்கக் கூடியவையாம். சொல்லுகிறவர் காம்ரேடாயிற்றே. நம்பத்தான் வேண்டும். அப்படித் தானே!

லெனின் சொன்ன ஒன்றை நினைவூட்டுவோம்.

கம்யூனிஸ்டாக இருப்பவன் (அவன் மார்க்சிய வாதியாக இருக்கும் பட்சத்தில்) மூடப் பழக்க வழக்கங்கள், மதம் நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் வளர்ச்சி அடையாத மக்கள் மனதில் அறிவுப் பூர்வமான வாதத்தை மத விஷயங்களில் தூண்டி விஞ்ஞானப் பூர்வமாக விமர்சனம் செய்து, மதத்தின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கப் பாடுபடவேண்டும். இல்லை யெனில், மார்க்சியவாதி என்ற பெயரில் மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்துபவனாகத்தான் ஒரு கம்யூனிஸ் இருக்க முடியும் - என்கிறாரே தோழர் லெனின்.


அருண் ஜேட்லியின் குற்றச்சாற்று



ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்குப் பதவிகள் கொடுக்கப்படுவது குறித்து பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரான அருண் ஜேட்லி குறை கூறியுள்ளார்.

என்ன திடீர் ஞானோதயம்? இவர்களின் கட்சி இதற்கு முன் எப்படி யெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுது பைசராபாத்தில் மாவட்டக் காவல் துறை அதிகாரியாக இருந்தவர் டி.பி.ராய் பிற்காலத்தில் பா.ஜ.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கப்படவில்லையா?

குஜராத்தில் வதோரா எனும் இடத்தில் இருந்த பெஸ்ட் பேக்கரி எரிப்பில் (முசுலீமுக்குச் சொந்தமானது) 14 பேர் கொல்லப்பட்ட வழக்கில் கடும் எதிர்ப்பு காரணமாக 21 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. இந்த 21 பேர்களையும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்த நீதிபதி எச்.யூ.மகிதாவுக்கு குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி அளித்த வெகுமதி என்ன தெரியுமா?

குஜராத் மாநில மின்வாரியத்தின் ஆலோசகர் பதவி தரப்பட வில்லையா? மாதச் சம்பளம் ரூ 30 ஆயிரம். அது மட்டுமா? பங்களா, கார், தொலைப்பேசி, உதவியாளர் என்று பரிசு மழைதான்!

பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்திற்கே இராணுவத் தலைமை அதிகாரிகளை அழைக்கவில்லையா?

இராணுவத்தில் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். காரர்கள்  நியமிக்கப் பட்டனர் என்று அப்போதைய கடற்படை தளபதி விஷ்ணுபகவத் பகிரங்கமாகக் குற்றம் சாட்ட வில்லையா?

பி.ஜே.பி. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மீது குற்றம் சுமத்தும் யோக்கியதை உடையது அல்ல!


---------------- மின்சாரம் அவர்கள் 6-10-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

தமிழ் ஓவியா said...

குத்து மதிப்பு

குத்து மதிப்பாகச் சொல்லுவது எனும் சொலவடை உண்டு. ஏடுகளும், இதழ்களும் இந்தக் கணக்கில்தான் பெரும்பாலும் வருகின் றன.

குமுதம் (10.10.2012) இதழில் ஒரு கேள்வி பதில்:

கேள்வி: நம் மாண வர்கள் ஹிந்தி படிக்க முடியாதபடி பார்த்துக் கொண்டன திராவிடக் கட்சிகள். அது நமக்குச் செய்த துரோகம்தானே?

பதில்: அவர்கள் வீட் டுப் பிள்ளைகள் மட்டும் ஹிந்தி படிக்கும்படி பார்த் துக் கொண்டார்களே, அதுதான் துரோகம்.

என்று குமுதம் அரசு பதில் சொல்லியுள்ளார்.

இதற்குப் பெயர்தான் குத்து மதிப்பு - பொத்தாம் பொது - என்பது. அடிப் படையைப் புரிந்து கொள் ளாமல் அரை வேக்காட் டுத்தனம் என்பதும் இது தான்.
இந்தியை யாருமே படிக்கக்கூடாது என்று திராவிட இயக்கம் சொன் னதா? எங்கே சொன் னது? எப்பொழுது சொன் னது? நாணயமான முறை யில் விடையளிக்க முன் வருவாரா திருவாளர் அரசு?

விரும்பிப் படிப்பது என்பது வேறு. கட்டாய மாகப் படித்தே தீர வேண்டும் என்பது வேறு. இரண்டுக்கும் இடையே உள்ள பொருள் புரியாத வர்கள் எல்லாம் பதில் சொல்ல முயற்சிப்பது தான் பரிதாபம்.

இந்தியை யாருமே படிக்கக்கூடாது என்பது தான் திராவிட இயக்கத் தின் கருத்து என்றால், சென்னை தியாகராய நகரில் இந்திப் பிரச்சார சபை இருக்க முடியுமா? (கோபாக்கினி அந்தப் பக்கம் திரும்பி இருக் காதா?)

இந்தி மட்டுமல்ல, இன்னும் எத்தனை மொழி களை வேண்டுமானாலும் தன் விருப்பத்தில் படித் துப் பன்மொழிப் புலவர் களாக தமிழர்கள் ஆனால் மகிழ்ச்சிதான்.
1937 இல் இந்தி யினைத் திணித்த ஆச் சாரியார் (ராஜாஜி) சமஸ் கிருதத்தைப் படிப்படி யாகப் புகுத்தவே இந்தியை இப்பொது கொண்டு வரு கிறேன் என்று சென்னை லயோலா கல்லூரியில் பேசிய சூட்சுமமெல்லாம் அரசுகளுக்குத் தெரி யுமா?

திராவிட இயக்கத் தைக் கொச்சைப்படுத்து வது என்பது ஒரு நாகரி கமாகப் போய்விட்டது. எந்தெந்த திராவிட இயக்கத் தலைவர்களின் பிள்ளைகள் இந்தி படிக் கின்றனர் என்று கூறத் தம் கைவசம் பட்டியல் இல்லை என்றால் எல் லோர்மீதும் சந்தேகப் புழுதியை வாரி வீசுவது நாலாந்தரமான மனப் போக்காகும்.

- மயிலாடன் 6-10-2012


தமிழ் ஓவியா said...

காப்பீட்டுத் துறையிலும், ஓய்வூதியத் துறையிலும்கூட அந்நிய முதலீட்டுக்கு அழைப்புக் கொடுப்பதா? திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம்


பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், மத்தியில் உள்ள மன்மோகன்சிங் அரசு, பல்வேறு மக்கள் நலவிரோதத் திட்டங்களை தனது கொள்கை முடிவுகளாக அறிவித்து வருகிறது.

கேளாக்காதாக மத்திய அரசு

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலாளிகளை கைலாகு கொடுத்து வரவேற்கும் முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அந்நிய மூலதன முதலீடு (FDI) என்பது பன்னாட்டுத் தொழில் துறை திமிங்கிலங்களின் பச்சாதாபப்படாத சுரண்டல்களுக்குக் கதவு திறந்து விடுவது என்று கூட்டணியில் உள்ள கட்சிகளே சுட்டிக் காட்டியும் அதுபற்றி மத்திய அரசு கேளாக் காதுடன் செயல்படுகிறது.

ஓய்வுத் துறையிலுமா?

இப்போது ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போன்று, அதற்கு மேலும் அடுத்த கட்டமாக, இன்ஷூரன்ஸ் - காப்பீட்டுத்துறை, ஓய்வூதியத்துறை - இவை இரண்டிலும் அந்நிய முதலாளிகளை வரவழைக்க ஆயத்தமாவோம் என்று அறிவித்துள்ளது!

இன்ஷூரன்ஸ் துறையில் 26 சதவிகிதமான வெளிநாட்டு முதலீடுகள் பங்கு இனி 49 சதவிகிதமாக உயரும் என முடிவு செய்து பச்சைக் கொடி காட்டுகிறது.

அதைவிடக் கொடுமை - ஓய்வூதியத் துறையிலும் வெளிநாட்டு மூலதனக் கம்பெனிகளுக்குக் கதவு திறக்கப்பட்டுள்ளதாகும்.

உள்நாட்டிலேயே முதலீட்டைத் திரட்ட முடியுமே!

நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு முற்றிலும் மாறானது இது. உள்நாட்டிலேயே தேவையான முதலீட்டைத் திரட்டாலாம் என்பதே அதன் யோசனை.

சில புள்ளி விவரங்கள் மத்திய ஆட்சியின் முடிவை நியாயப்படுத்துவதாக இல்லை.



தமிழ் ஓவியா said...

எடுத்துக்காட்டாக,

கடந்த 10 ஆண்டுகளில் 6300 கோடி ரூபாய்கள் வெளிநாட்டு அந்நிய முதலீடாக வந்துள்ளது; ஆனால் எல்.அய்.சி. மட்டும் ரூ.7000 கோடி ஈவுத் தொகை வழங்கியுள்ளது.

தனியார்த்துறைக்குத் தாவும் பொதுத்துறைகள்

11ஆவது அய்ந்தாண்டு திட்டத்திற்கு 7 லட்சத்து 415 கோடி ரூபாய் வழங்கியுள்ளது!

பொதுத்துறை நிறுவனத்தை முற்றாக தனியார் மயமாக்குவதற்குரிய முதற்கட்ட முயற்சியே இது!

1.83 கோடி பாலிசிதாரர்களைக் கொண்ட எல்.அய்.சி. 99 விழுக்காடு பாலிசிதாரர்களுக்கு முறையாக பணத்தை வழங்கியுள்ளது. ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், தங்கள் பாலிசிதாரர்களில் 60 முதல் 80 விழுக்காடு மட்டுமே வழங்கி வருகின்றன.

இது எதைக் காட்டுகிறது? பொதுத்துறை நிறுவனம், தனியார் துறையைவிட சிறப்பாக திறமையாகச் செயல்படுகிறது என்பதைத்தானே!

நமது அரசியல் சட்டத்தில் உள்ள சோசஷலிசம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?

ஓய்வூதியக்காரர்களின் எதிர்காலம்?

ஓய்வூதியத்திலும் இந்த ஒட்டகத்தை நுழைய விடுவது மிகப் பெரிய மக்கள் விரோதம். ஓய்வூதியதாரர்களின் எதிர்காலம் இருண்டுவிடக் கூடிய ஆபத்து அறவே இல்லை என்று மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?

தற்போதுள்ள அமைப்பில் - ஓய்வூதியத் திட்டம் 1995இல் ஒரு ஊழியர் இறந்தால் - அது ஆயுள் முழுமைக்கானது என்ற காரணத்தால், அவரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் அல்லது 100 மாதங்களுக்கான மொத்த ஓய்வூதியம் கொடுக்கப்படும் ஏற்பாடு நடைமுறையில் உள்ளது.

இதே போன்று தனியார் நிறுவனங்கள் செயல்படுத்துமா? இடையில் மூடப்பட்டால் (என்ரான் போன்ற நிறுவனங்கள் முன்மாதிரி) இன்சால்வென்ட் ஆனால் யாரைப் போய் கேட்க முடியும்? அரசு உரிமையாளர் என்றால் நிலை அப்படி அல்லவே!

செயல்படாத கணக்குகளால் லாபம்

இன்னொரு திடுக்கிடும் புள்ளி விவரம் இந்த முடிவை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது!

தற்போது இந்திய தொழிலாளர் வைப்பு நிதி செயல்படாத கணக்குகள் உள்ள தொகை ரூ.22,636 கோடி. (சந்தா செலுத்தாமை, மூடப்பட்ட நிறுவனங்கள் போன்றவைகளால்)

அதுபோல கேட்பாரில்லாத நிதி ரூ.4000 கோடி (நாலாயிரம் கோடி).

இந்நிலையில் எதற்கு அந்நிய முதலீடுகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும்?

அந்நிய துணி பகிஷ்காரம் செய்தது மறந்து போயிற்றா?

பிரிட்டிஷ்காரனின் சுரண்டல் ஒழிக என்று கூறியவர்கள் ஆளும் காங்கிரசார்!

அந்நிய துணிகள் பகிஷ்காரம் என்றுகூறி பதவிக்கு வந்தவர்கள்!

“Be Indian, Buy Indian”,

இந்தியனாக இரு; இந்திய சாமான்களையே வாங்கு என்றெல்லாம் நெருக்கடி காலத்தில் தத்துவ முழக்கம் இட்டவர்கள் இப்படி தாறுமாறாக பன்னாட்டு முதலாளிகள் சுரண்டலுக்கு பகிரங்க அனுமதியும் அழைப்பும் தரலாமா?

மதவெறி ஆட்சிக்கு வரவேற்பா?

இவை எல்லாவற்றைவிட, இன்னும் இரண்டே ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஆளும் கூட்டணி - (இடையில் கவிழ வாய்ப்பில்லை என்பதை ஒப்புக் கொண்டே) வாக்கு வங்கி பற்றியும், ஏழை, எளிய, பாமர, விவசாய, வியாபாரிகள் கண்ணோட்டம் ஆதரவு பற்றியும் சிந்திக்க வேண்டாமா?

மதவெறி ஆட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர இப்படிப்பட்ட முடிவுகள் மூலம், தங்களை அறியாமலேயே வழிவகுக்கலாமா?

மான்டேக்சிங் அலுவாலியாக்களும், ரங்கராஜ அய்யங்கார்களும், கெல்கர்களும் இதர ஜோல்னாப்பை அறிவு ஜீவிகளுமா வந்து வாக்கு கேட்கப் போகிறார்கள்? சோனியா காந்தியும், மன்மோகன்சிங்கும்தான் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அரசியல் சாதுர்யம் கூட இல்லையே!
வேதனை! வேதனை!!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம் 6-10-2012