Search This Blog

15.10.12

அம்பத்கார் கூறுகிறபடி இந்துமதத்தை விட்டு விடவேண்டியது நியாயமே!-பெரியார்

திருச்செங்காடு தாலூகா
ஆதிதிராவிடர் 5 வது மகாநாடு

தோழர்களே!

இந்த உங்கள் மகாநாட்டில் உங்களுக்கு உள்ள உற்சாகத்தைப் பார்த்து மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது உடல் அசௌக்கியத்தால் நான் வருவதற்குப் பயந்தேன். நான் புறப்படுமுன் பல தோழர்கள் இந்நிலையில் போகக்கூடாது என்று சொன்னார்கள். நீங்கள் ஏமாற்றமடைந்து விடுவீர்கள் என்று சமாதானம் சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டேன்.

இப்போது இங்கு வந்தபின் உங்கள் உற்சாகத்தைப் பார்த்ததில் இங்கு நான் வராதிருந்தால் நான்தான் ஏமாற்றமடைய வேண்டியவனாவேன்.

இவ்வளவு தூரம் இந்த கிராமங்களில் போதிய தண்ணீர் வசதியும் வழி நடைபாதை வசதியும் இல்லாத நடுக்காடுகளில் இப்படிப்பட்ட மகாநாடு கூட்டுவதும், உற்சவம் போல ஆண் பெண்கள் கூடுவதுமான காரியம் உங்கள் விடுதலை விஷயத்தில் உங்களுக்கு உள்ள ஆர்வமே காரணம் என்பதும், உங்கள் பூரண விடுதலைக்கு நீங்கள் உரியவர்களாகி விட்டீர்கள் என்பதும் எனது அபிப்பிராயம்.

இப்படிப்பட்ட உணர்ச்சியும் முயற்சியும் உங்களுக்கு ஏற்படும் படியாகச் செய்தது இந்த பிரிட்டிஷ் அரசாங்கமும் பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சியுமே என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.

உங்களில் சில பார்ப்பனக் கூலிகள் பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும், பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சி உங்களுக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை என்றும் கூறி, பார்ப்பனர் களிடம் கூலி பெற்று வாழுவார்கள். அந்தக் கூட்டம் உங்களில் மாத்திரமல்ல எங்களிலும் இருக்கிறார்கள். ஆதலால் ஒரு அளவுக்கு அப்படிப் பட்டவர்கள் வாழ்க்கைக்கு இடம் கொடுத்துத் தான் ஆகவேண்டும்.

பிரிட்டிஷ் ஆட்சி இந்த நாட்டிற்கு வந்து 200 வருஷங்கள் ஆகியும் இந்த 15, 20 வருஷத்தில் உங்கள் சமூகத்துக்கு ஏற்பட்ட முற்போக்கானது முந்தின 50 100 வருஷ காலத்தில் கூட ஏற்படவில்லை என்று சொல்லலாம். ஏனெனில் இந்த 15, 20 வருஷகாலம் வரை பார்ப்பனரும் அரசாங்கமும் கூட்டு வியாபாரம் போல் ஆக்ஷி நடத்தினார்கள். பிரிட்டிஷ் ஆட்சியே பார்ப்பனரிடம் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின் மீதே இந்த நாட்டில் பலம் பெற ஆரம்பித்தது என்று சொல்லலாம். எப்படியெனில் இந்தியாவில் பார்ப்பனர்கள் மதத்தின் பேரால் செய்துவரும் அட்டூழியங்களும் ஆபாசங்களும் இழிவான காரியங்களும் அனேகருடைய ஆராய்ச்சி மூலமும், சரித்திர மூலமும் பிரிட்டிஷாருக்குத் தெரிந்திருந்தும் அவர்கள் மத விஷயத்தில் பிரவேசிப்பதில்லை என்று பார்ப்பனர்களுடன் ஒப்பந்தம் செய்தும், அதற்கு பதிலாக பார்ப்பனர்கள் நாங்கள் எந்தக் காலத்துக்கு ராஜ விஸ்வாசமற்றவர்களாக இருப்பதில்லை என்று வாக்குக் கொடுத்தும் ஆகிய இரண்டு காரியங்களே இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் யாதொரு நல்ல பயனும் ஏற்படுவதற்கில்லாமல் பார்ப்பனர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் பயன் முழுதுமே அடையும்படியாகவும் ஏற்பட்டு வந்தது.

உங்களுடைய நற்காலத்துக்கே இந்த நாட்டில் பார்ப்பனர் பார்ப்பன ரல்லாதார் என்கின்ற உணர்ச்சி ஏற்படவும், அதில் சர்க்கார் பார்ப்பனர்களுக்கு முன்போல அனுகூலமாயில்லாமல் அவர்கள் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகிய இரு சமூகத்தையும் ஆதரிக்க ஆரம்பித்ததும், அதன் பயனாக பார்ப்பனர்கள் தங்கள் பழைய முறைப்படி அரசாங்கத்தின் மீது விஷமப் பிரசாரம் செய்யத்தொடங்கினதும் இதற்குத் தாக்குப்பிடிப்பதற்காக அரசாங்கத்தாரும் பார்ப்பனரல்லாதாரும் உங்கள் உங்கள் உதவியை நாடவும் இதில் பார்ப்பனர்களும் போட்டி போடவும் இத்தியாதி காரணங்களால் உங்களுடைய நிலை உங்களது முயற்சி இல்லாமலே உயர்ந்து வருகிறது. ஆகவே இன்றைய பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் சண்டையும், சர்க்கார் பார்ப்பனர் சண்டையும் உங்களுக்கு நல்ல பலனைக் கொடுத்து வருகிறது.

இந்தச் சண்டை இல்லாவிட்டால் உங்கள் நிலை மிகவும் மோசமாகவே இருந்திருக்கும். பார்ப்பனர்களின் பேராசையினுடையவும் சூழ்ச்சியினுடையவும் பலன் தான் இன்று இந்த நாட்டுக்கு பல நன்மைகள் ஏற்பட்டு வருகிறது.

என்றையதினம் பார்ப்பனர்களின் யோக்கியதை பொதுமக்கள் உணரும்படியாக ஆயிற்றோ அன்றே அவர்களது மத சம்மந்தமான சூழ்ச்சியும், கடவுள் பேரால் அவர்கள் மக்களை ஏமாற்றி வந்த பித்தலாட்டமும் மக்களுக்கு தாராளமாய் விளங்கும்படியாக ஆகி விட்டது.

இந்த இரண்டு சூழ்ச்சிகளும் இனிப் பலிக்காது என்று அவர்கள் உணர்ந்து கொண்ட பின்பேதான் இப்போது சுயராஜ்ஜியம் என்றும் அரசியல் புரட்டுகளை ஆரம்பித்து அதன் மூலம் அவர்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சித்து தங்களுடைய முழு பலத்தையும் காட்டி வருகிறார்கள். இது தான் அவர்களுக்கு கடைசி ஆயுதம். இந்த ஆயுதமும் சீக்கிரத்தில் பயனற்றுப் போகும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

ஆனால் அவர்களது இப்படிப்பட்ட புரட்டுகளுக்கு நீங்கள் சம்மந்தப் படக் கூடாது என்பதுதான் எனது ஆசை.

உங்களுக்கு ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தைப் பார்ப்பனர்கள் பாழாக்கிவிட்டார்கள். உங்கள் நலத்துக்கு வேண்டிய காரியங்களை அரசியல் ஸ்தாபனத்தின் மூலம் நீங்களே செய்துகொள்ளும்படியான ஒரு அருமையான சந்தர்ப்பம் உங்களுக்கு அரசாங்கத்தாரால் அளிக்கப்பட்டது. அது என்னவென்றால் சட்டசபைகளிலும் மற்ற சபைகளிலும் உங்களுக்கு உங்கள் சமூகத்தாராலேயே தெரிந்தெடுத்துக்கொள்ளும்படியான பிரதிநிதித்துவ உரிமையாகும்.

இந்த உரிமை கிடைத்ததற்குக் காரணம் சுயமரியாதை இயக்கத்தின் கிளர்ச்சியேயாகும். எப்படி எனில் உங்களுடைய குறைகள் இங்கிலாந்து பார்லிமெண்டுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகவே பார்ப்பனர்கள் சைமன் கமிஷனை பஹிஷ்கரிக்க சூழ்ச்சி செய்தார்கள். அது சுயமரியாதைக் காரர்கள் இடம் பலிக்கவில்லை. அவர்கள் உங்கள் சமூகத்தை கிளப்பிவிட்டு உங்கள் குறைகளை தெரியும்படி செய்ததுடன் உங்களுக்கு தனித்தொகுதி கொடுத்தால் போதும் மற்ற சுயராஜ்ஜியத்தை பற்றிக் கவலை இல்லை என்று சொன்னார்கள்.

ஏனென்றால் சுயராஜ்யம் என்று பார்ப்பனர்கள் கூச்சல் போடுவது தாழ்த்தப்பட்ட சமூகத்தார் தலையிலும் பார்ப்பனர் அல்லாதார் தலையிலும் கையை வைத்து அவர்களை அடக்கி ஒடுக்கி தாங்கள் ஆளவேண்டும் என்பது தான். இனி அதற்கு இடமில்லாமல் போகும் காலம் வந்துவிட்டது. நீங்கள் மாத்திரம் எந்தக் காரணம் கொண்டும் அரசாங்கத்தாரோடு பிணக்குதல் வைத்துக்கொள்ளாதீர்கள். அரசாங்க தயவு இருந்தால் ஒழிய உங்களுக்கு ஒரு காரியமும் நடக்காது. காங்கிரஸ்காரர்கள் உங்கள் பெயர்களைச் சொல்லி ஊர் ஜனங்களிடம் கொள்ளையடித்து ஏதோ ஒரு நாளைக்கு கருமாதிக்கு எண்ணெய் சீயக்காய் கொடுப்பதுபோல் ஒரு ஸ்பூன் எண்ணெயும், ஒரு சிட்டிகை சீயக்காய் தூளும் கொடுத்துவிட்டு பாக்கியெல்லாம் ஹரிஜன சேவை என்னும் பேரால் பார்ப்பனர்கள் வயிற்றில் கொட்டிக் கொள்ளுகிறார்கள்.

இதனால் உங்களுக்கு என்ன பலன் ஏற்பட்டது? உங்களை ஏமாற்றுவ தல்லாமல் இதில் வேறு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை.

முன்னமேயே பெருத்த ஏமாற்றம் ஒன்று நடந்தாய் விட்டது. அதுதான் முன் சொன்ன உங்களுக்கு கிடைத்த தனித்தொகுதியை ஏமாற்றின காரியமாகும். காந்தியார் நீலித்தனம் செய்து பட்டினிப் புரட்டால் தலையில் கல்லைப் போட்டுவிட்டார். எவ்வளவோ தைரியமும் உறுதியும் உள்ள உங்கள் தலைவர் அம்பத்கார் அது விஷயத்தில் ஏமாந்துவிட்டார். அரசாங்கத்தின் மீது பழி சொல்ல இனி உங்களுக்கு யோக்கியதை கிடையாது. உங்கள் கஷ்டத்துக்கு ஆக யார் மீதாவது குற்றம் கூறவேண்டுமானால் அது காந்தியார் புரட்டின் மீதும், அம்பத்காரின் ஏமாந்ததனத்தின் மீதும்தான் குறை கூறவேண்டும். ஆனபோதிலும் ஒன்றும் முழுகிப்போய் விடவில்லை என்று தைரியம் செய்துகொண்டு இனியாவது விழித்திருந்தால் நலமடையலாம்.

ஜஸ்டிஸ் கக்ஷி தலைவர் பொப்பிலி ராஜா அவர்கள் உங்களுக்கு தனித் தொகுதிக்கு வழிகாட்டி விட்டார். அதாவது சென்னை நகர முனிசிபல் சட்டத்தில் உங்களுக்கு தனித் தொகுதி ஏற்படுத்தி விட்டார். இது ஒரு பெரிய காரியம் என்றுதான் சொல்லவேண்டும். டாக்டர் சுப்பராயன் அவர்கள் ஸ்தல ஸ்தாபனங்களில் உங்களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கி வைத்தார். தோழர் முத்தய்ய முதலியார் அவர்கள் உங்களுக்கு சர்க்கார் உத்தியோகத்தில் ஸ்தானம் ஒதுக்கி வைத்தார். பொப்பிலி ராஜா அவர்கள் உங்களுக்கு தனித் தொகுதி உண்டாக்கி வைத்தார். ஆனால் மற்ற ஸ்தாபனங்களிலும் தனித் தொகுதி ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இவற்றின் பயனாக உங்கள் சமூகம் அடைந்து வரும் நன்மையை எந்த மூடனும் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியாது. இவையெல்லாம் ஏற்பட சுயமரியாதைக்காரர்கள் எவ்வளவு தூரம் உழைத்தார்கள் என்பதும், அவர்களது ஆதரவு இல்லாமலிருந்தால் காங்கிரசுக்காரர்கள் எவ்வளவு சூழ்ச்சிகளும் முட்டுக்கட்டையும் போட்டு வெற்றிபெற்று இருப்பார்கள் என்பதும் நீங்களே யோசித்துப் பார்த்தால் விளங்கிவிடும்.

இப்போதும் உங்களை ஏமாற்ற பார்ப்பனர்கள் மறுபடியும் சூழ்ச்சி செய்து தான் வருகிறார்கள். அதாவது உங்கள் தலைவர்கள் என்று வியாபாரம் செய்து கொண்டிருக்கும் சில சுயநலமிகளைப் பிடித்து அவர்களுக்கு 1000, 2000 கொடுத்து உங்கள் நலத்துக்கு விரோதமாய் அதாவது தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி வேண்டாம் என்று சொல்லும்படி செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட தலைவர்கள், பக்கத்தில் படுத்திருப்பவனை கழுத்தறுக்க பயப்படமாட்டார்கள். தனித்தொகுதியோ, தனியே ஸ்தானம் ஒதுக்குவதோ இல்லாமல் இருந்தால் இந்தமாதிரியான சமூகத் துரோகிகளுக்கு இன்று எந்த ஸ்தாபனத்திலாவது இடம் கிடைத்து இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள். சர்க்காரிடமும் ஜஸ்டிஸ் கட்சியாரிடமும் பணம் பெற்று நாமினேஷன் பெற்று பிச்சை வாங்கிக் கொண்டு இவ்வளவும் அனுபவித்தவர்கள் அதை மறந்து பார்ப்பனர்களிடம் கூலிவாங்கிக்கொண்டு குலைப்பதென்றால் இப்படிப்பட்டவர்களை தலைவர்களாகக் கொண்ட சமூகம் முன்னேறுமா என்பதை யோசித்துப்பாருங்கள்.

உங்களுடைய கடமையெல்லாம் போலிகளையும் கூலிகளையும் சுயநலக்காரர்களையும் கண்டுபிடித்து அவர்கள் வண்டவாளங்களை வெளியாக்குங்கள். அது செய்தாலே போதுமான காரியம் என்று கருதுகிறேன்.

உங்களுக்கு ஆக நாங்கள் செய்யும் காரியங்களை பார்ப்பனர்களைவிட உங்கள் சமூக துரோகிகளே அதிகமாய் கெடுத்து வருகிறார்கள்.

நீங்கள் மற்றொரு விஷயத்தில் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். உங்களை நீங்கள் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் வரையில் உங்கள் ஜாதி இழிவு என்பதும் பறப்பட்டமும் தீண்டக்கூடாது என்கின்ற தன்மையும் நீங்கவே நீங்காது. ஏனெனில் நீங்கள் இந்துக்களாய் இருப்பதினால் தான் தீண்டாதவர்களாகவும் பறையர் சக்கிலிகளாகவும் இருக்கிறீர்களே ஒழிய மற்றபடி உங்களைத் தொட்டால் நாற்றமடிக்குமென்றோ நெருப்புப் பிடிக்கு மென்றோ விஷமேறும் என்றோ நீங்கள் தீண்டாதவர்களாக ஆக்கப்படவில்லை.

உங்களை ஏய்ப்பதற்கு ஆக ஏற்பாடு செய்த பொய்க்கதையாகிய நந்தனும் எவ்வளவு விபூதி பூசியும், எவ்வளவு உத்திராட்சக் கொட்டை கட்டியும் எவ்வளவு "தெய்வீக" காரியம் அதாவது கழனி எல்லாம் ஒரு இரவில் உழுது விதைத்து நாற்று நட்டும் பறையன் பறையனாகவே இருந்து நெருப்பில் பொசுக்கப்பட்டான் என்று தான் முடித்தார்களே ஒழிய வேறு என்ன?

இன்று உங்களில் யார்தான் மனிதனாகக் கருதப்படுகிறார்கள்? எந்த கோவிலில் விடப்பட்டார்கள்? சர்க்கார் உத்திரவும் சட்டமும் இல்லாமல் எந்த குளத்தில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டார்கள்?

ஆதலால் நீங்கள் இந்துக்களாக இருப்பதைவிட உங்களுக்கு சுயமரியாதை அற்ற தன்மை வேறு ஒன்று இல்லை என்றே சொல்லுவேன். 20003000 வருஷக் கிளர்ச்சியில் ஆகாத காரியங்கள் இந்து மதத்தை விட்டு விலகிவிட்டால் நொடிப்பொழுதில் ஆகிவிடுகின்றதை நான் பிரத்தியக்ஷத்தில் பார்க்கிறேன். ஆனால் கிறிஸ்தவர்களாக ஆகி விடுவதில் தீண்டாமை ஒழிவதில்லை. ஏனெனில் கிறிஸ்தவ மதம் அரசியல் லக்ஷியத்தில் நமது நாட்டில் இருக்கிறது. அதற்கு சுயமரியாதையில் லக்ஷியமில்லை. இந்த நாட்டுக் கிறிஸ்தவர்களில் 100க்கு 50 பேருக்கு மேலாகவே கிறிஸ்தவப் பறையர்களாகவே இருக்கிறார்கள். இதை விட வேறு இழிவும் கெட்டபேரும் அந்த மதத்துக்கு வேண்டியதில்லை.

பார்ப்பன மதம் எப்படி ஜனங்களை ஏமாற்றுவதற்கு ஆகவே இருக்கிறதோ, அதே போல் நமது நாட்டில் கிறிஸ்தவ மதம் ஜனங்களை ஏமாற்றவே இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் அநேகம் பேர் ஆண் பெண் கிறிஸ்தவ ஆதி திராவிடர்களாக இருப்பதாக தெரிகிறது.

நீங்கள் மதம் மாறி என்ன பயன்? இந்த இரண்டு மூன்று மாதமாய் ஈரோட்டில் கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களை அவர்கள் கிறிஸ்தவ மேல்ஜாதிக் காரர்கள் தொழும் இடத்தில் வந்து தொழுததற்காக மேல் ஜாதிக்காரர் செருப்பாலடித்து விட்டதாகவும், கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மேல்ஜாதிக்காரர் களை செருப்பாலடித்து விட்டதாகவும் கோர்ட்டில் பிராது நடக்கின்றது. இது எவ்வளவு மானக்கேடு பாருங்கள். சாமியார்கள் மேல்ஜாதிக்காரர்களுக்கு சலுகைகாட்டுகின்றார்கள் என்றும், அவர்களே மேல் ஜாதிக்காரர்கள் பிராது செலவுக்கு பணம் கொடுத்தார்கள் என்றும் கோர்ட்டிலேயே புகார் சொல்லப் பட்டது. இந்த மாதிரி மதத்துக்கு போவதால் என்ன பயன்? ஏதாவது ஒரு மதம் வேண்டுமென்றால் எந்த மதக்காரர்களுடைய சலுகையாவது பெற்று இந்துக்களின் கொடுமையில் இருந்து தப்ப வேண்டுமானால் உங்களுக்கு இஸ்லாம் மதமே மேல் என்று சொல்லுவேன். கிறிஸ்தவமதம் என்பது ஆள்சேர்த்து கணக்கு காட்டி கிறிஸ்தவ ஆட்சிக்கு பலம் தேடுவதற்குத்தான் பயன்படுகிறதாய் இருக்கிறது. இஸ்லாம் மதமானது ஒரு இஸ்லாமியனை மற்றொருவன் "இவன் தீண்டாதவன்" "இஸ்லாம் பறையன்" என்று சொல்லுவதை ஒரு வினாடிகூட பொறுத்துக்கொண்டு இருக்காது. ஒரு இஸ்லாமியனைப் பார்த்து ஒரு இந்து இவன் பற முஸ்லீம் என்று சொல்லிவிட்டால் உடனே அவன் சொல்லி வாய் மூடுமுன் பல்லைக் கழட்டி கையில் கொடுத்து விடுவான்.

ஆனால் கிறிஸ்தவனோ தானே தன்னை கிறிஸ்தவப் பறையன் என்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடன் என்றும் சொல்லிக் கொள்ளுகிறான். இதைவிட வேறு சுயமரியாதை அற்ற தன்மை இருக்கிறதா என்று கேட்கின்றேன்.

இந்துமதத்துக்கும் சுயமரியாதை இல்லை என்று சொல்வேன். ஒவ்வொரு இந்துவும் ஜாதி முறை கொண்டாடுகிறான். பார்ப்பானை மேல் ஜாதி என்று ஒப்புக்கொள்கிறான். மற்றவனுக்கு தான் மேல் ஜாதிக்காரர் என்று கருதிக் கொள்கிறான். ஆகையால் சமூக சமத்துவத்தில் மக்களை இஸ்லாம் மதம் சமமாக பாவிக்கிறது.

ஆதலால் நீங்கள் அம்பத்கார் கூறுகிறபடி இந்துமதத்தை விட்டு விடவேண்டியது நியாயமே ஆகும். உங்கள் பொட்டும் பூச்சும் வேஷத்துக்கு பயன்படுகிறதே தவிர சுயமரியாதைக்குப் பயன்படுகிறதா? நீங்கள் எவ்வளவு பக்தியுடையவராக வேஷம் போட்டாலும் உங்களை பறைச்சாமியார் என்றுதான் சொல்லுகிறார்கள். வெட்கமில்லாமல் உங்களுக்கு என்று வேறு கோயில் கட்டிக்கொள்கிறீர்கள். இதனால் நீங்கள் கீழ்ஜாதி என்பதை ஒப்புக் கொண்டவர்களா இல்லையா? அந்த சாமி உள்ளவரை அதாவது அந்த "பறையர் கோவில்" உள்ளவரை உங்கள் பறைத் தன்மையை நிலை நிறுத்தினவர்களாகிறீர்களா இல்லையா? இதற்கு ஆகவே மேல்ஜாதிகாரர்கள் உங்களுக்கு பணம் கொடுத்து உங்கள் பறைத்தன்மையை நிலை நிறுத்த கோவில் கட்டச் செய்கிறார்கள்.

உங்களில் பலர் முட்டாள் தனத்தாலும், அதிலிருந்து சிறிது பொருள் கொள்ளை கொள்ளலாம் என்றும் அந்த வேலையை ஜீவனோபாயமாகக் கொள்கிறார்கள்.

இதற்கெல்லாம் நீங்கள் ஏமாறக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறேன்.

பார்ப்பனரல்லாதார் ஆட்சியில் இன்னமும் உங்களுக்கு அநேக நன்மை ஏற்படப்போகின்றது. உங்கள் சமூகத்துக்கு கட்டாயக் கல்வியும் பிள்ளைகளுக்குச் சாப்பாடும் ஏற்பாடு செய்யப் போகிறார்கள். கூடிய சீக்கிரம் அமுலுக்கு வரலாம். உங்கள் விஷயமாய் சுயமரியாதைக்காரர்கள் போட்ட தீர்மானங்கள் எல்லாம் அமுலுக்கு வரும் காலம் வந்து விட்டது. ஆனால் நீங்கள் மாத்திரம் பார்ப்பனர்களுடன் சேர்ந்து விடாதீர்கள். உங்களில் பார்ப்பனக் கூலிகளை நம்பி ஆதரித்து விடாதீர்கள்.

சர்க்காருக்கு விரோதமான கக்ஷிகளிலோ கொள்கைகளிலோ கலந்து கொள்ளாதீர்கள். மற்றவர்களைப் போல் நீங்கள் முன்னுக்கு வருகிற வரை சர்க்கார் ஆதரவு உங்களுக்கு அவசியமானது. ஏனெனில் இன்று உங்களை ஒவ்வொருவரும் அரசியல் காரியங்களுக்கு உபயோகித்துக் கொள்ளத் தான் உங்களை நாடுகிறார்களே ஒழிய உண்மையான உங்கள் குறைகளை நீக்க அல்ல. முக்கியமாக பார்ப்பனர்கள் உங்களை மோசம் செய்யவே உங்களை ஏய்க்கவே உங்களை நாடுவார்கள். அவர்களை நம்பாதீர்கள். அரசாங்கத்துக்கும் எனக்கும் எவ்வளவு மாறுபாடான அபிப்பிராயம் இருந்தாலும், அதனிடம் எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் நீங்கள் அரசாங்கத்துடன் பிணக்குச் செய்யாமல் அதை எதிர்க்காமல் இருந்து உங்கள் சமூக நன்மையை பெறவேண்டும் என்று கூறுவேன்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஒழித்து பூரண சுயராஜ்யம் பெறுகிறதாகச் சொல்லி மக்களை ஏமாற்றி கோடிகோடியாக வசூலித்து மோசம் செய்த காங்கிரஸ் பார்ப்பனர்களும், ஜெயில்களை இடித்து நிரவி விடுவதாக சொன்ன பார்ப்பனர்களும், காந்தியாரும் இன்று புத்திவந்துவிட்டது என்று சொல்லி அரசாங்கப் பதவிக்கும் உத்தியோகத்துக்கும் மண்டி போட்டு சலாம் செய்வதற்கும் முந்தும்போது உங்களுக்கு இதனால் ஒன்றும் முழுகிப் போகாது என்று சொல்லுவேன்.

கடைசியாக உங்கள் மகாநாட்டுக்கு வந்ததற்கு ஆகவும் இங்கு தலைமை வகித்ததற்கு ஆகவும் நான் மகிழ்ச்சியடைவதோடு உங்களுக்கு மனமார நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன்,

---------------------- 07.03.1936 ஆம் நாள் திருச்செங்கோடு தாலூகா சமுத்திரத்தில் நடைபெற்ற திருச்செங்கோடு தாலூக்கா 5வது ஆதிதிராவிடர் மாநாட்டில் தலைமை வகித்து தந்தைபெரியார் ஆற்றிய முகவுரை."குடி அரசு' சொற்பொழிவு 15.03.1936

4 comments:

தமிழ் ஓவியா said...

பார்ப்பன எதிர்ப்பு ஏன்?

பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரி டத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது.

மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந் தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர் கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.

நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?

என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

தமிழ் ஓவியா said...

எனக்கு, "நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்" என்கிற நம் பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை. இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?

நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.

இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.

நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்தி ருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன். -பெரியார்