Search This Blog

27.10.12

ராம்லீலா விழாவில் எரிக்கப்பட வேண்டியவன் ராமன் அல்லவா!


ஆண்டுதோறும் இந்தியாவின் தலைநகரமான டில்லியில் ராம்லீலா மைதானத்தில் நவராத்திரி -எனும் இந்துப் பண்டிகையின் கடைசி நாளாகிய விஜயதசமியன்று - இராவணன் - இந்திரஜித் - கும்பகர்ணன் உருவங்களைச் செய்து தீ மூட்டிக் குதூகலிக்கும் நிகழ்ச்சி - விழா என்ற பெயரில் கொண் டாடப்பட்டு வருகிறது.

இதில் இந்தியாவின் குடியரசு தலைவர், பிரதமர் உட்பட குடும்பத்தினருடன் உட்கார்ந்து குதூகலிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நேற்று நடைபெற்ற ராம்லீலாவில் கூட இந்தியாவின் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, அவரின் மகன் ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.

இது சட்டப்படியும் தவறு; நியாயப்படியும் குற்றமாகும். இந்தியா மதச் சார்பற்ற நாடு - அப்படி இருக்கும் பொழுது ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள் ராமன் எனப்படும் இந்து மதக் கடவுளின் அவதாரத்தை முன்னிறுத்திக் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வில்  கலந்து கொள்வது - குறிப்பிட்ட மதத்தின்மீது ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியதாக இல்லையா?

இந்த உருவங்களை எரிப்பதற்கு என்ன காரணம் சொல்லப்படுகிறது? தீயவை அகன்று நல்லவை மலரப் போகிறதாம்.

எது தீயது? எது நல்லது? என்பதுதான் இதில் உள்ள பிரச்சினையே! ராமன் அவதாரம் எடுத்ததற்குச் சொல்லப்படும் காரணம் என்ன?

திருமால் பிருகு முனிவருடைய மனைவியைக் கொன்று விட்டார். அதனால் அம்முனிவர் திருமாலை நோக்கி மனிதனாகப் பிறந்து மனைவியை இழந்து வருந்தும்படி சபித்து விட்டார் என்பது உட்பட பல காரணங்கள் ராமன் அவதாரத்துக்குக் கூறப்பட்டுள்ள நிலையில், ராமனை எப்படி யோக்கிய தாம்சம் உள்ள ஒருவனாகப் பாவிக்க முடியும்?

ஏதோ ஒரு காட்டில் தவம் இருந்த சம்புகனை - சூத்திரன் என்று கூறி, பட்டப் பகலில் படுகொலை செய்த கொலைகாரன் ராமன் அல்லவா?

வாலியை மரத்தில் மறைந்திருந்து கொலை செய்த ராமன் எப்படி வீரன்  ஆவான்? நிறை மாதக் கர்ப்பிணியான சீதையை காட்டில் கொண்டு போய் விடச் செய்தவன் எப்படி காருண்யமூர்த்தி ஆவான்?

நியாயமாக ராம்லீலா விழாவில் எரிக்கப்பட வேண்டியவன் ராமன் அல்லவா!

மேலும் இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடப் போராட்டத்தை சித்திரிக்கும் கதை என்று நேரு அவர்களே எழுதிடவில்லையா? உண்மை இவ்வாறு இருக்க, நேரு குடும் பத்தைச் சேர்ந்த சோனியாவும், அவரின் மகனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எப்படி சரியாகும்?

அப்படியானால் திராவிடர் மீதான ஆரியர் மேற்கொண்ட யுத்தத்தை நியாயப்படுத்து கிறார்களா? இந்தப் பிரச்சினையை இந்தக் கோணத்தில் திராவிடர்கள் உணர்ந்து கிளர்ந்து எழுந்தால் நிலைமை என்ன ஆகும்?
மீண்டும் ஆரியர் - திராவிடர் யுத்தத்தைத் தொடங்குவதற்கும் மிகப் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் தூபம் போடலாமா?

இராவணன் பொம்மை கொளுத்தப்பட் டுள்ளதே இராவணனை தங்கள் குல தெய்வ மாக வழிபடுபவர்கள் வட மாநிலங்களில் இருக்கிறார்களே, அவர்களின் உணர்வை மட்டும் புண்படுத்தலாமா?

இந்த உண்மைகளை எல்லாம் எடுத்துக் கூறி, அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்கு திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் கடிதம் எழுதியதுண்டே! நியாயமான முறையில் அவர் பதில் எழுதாத காரணத்தால், தந்தை பெரியார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி (25.12.1974) இராவண லீலா நடத்தி, ராமன், சீதை, இலக்குவன் உருவங்களைக் கொளுத்த வில்லையா?

அப்படிக் கொளுத்தியது தவறல்ல என்று நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளதே - மீண்டும் இராவண லீலாவை நடத்த வேண் டுமா?

பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டாமா?

                        ------------------------"விடுதலை” தலையங்கம் 26-10-12

7 comments:

தமிழ் ஓவியா said...


ராமலீலா கொண்டாடுவோர் பார்வைக்கு?

இராமாயணத்தைப் பொறுத்தவரை இராவணன் வில்லன். ஆனால் இராவ ணனைத் தெய்வமாக வணங்கும் கிராமமும் நம் நாட்டில் இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ராமாபாய் நகர் மாவட்டத்தில் உள்ள புக்ராயன் கிராமத்தில்தான் ராவணனை வணங்குகிறார்கள்.

சமீபத்தில் இங்கு நடைபெற்ற ராவணமேளாவின்போது, கதே கிளேஷ், ஜெய் லங்கேஷ் என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. நமது துயரங்களைப் போக்கும் இலங்கை அரசர் வாழ்க என்பது இதன் அர்த்தம். வட இந்தியாவில் தசரா நடைபெறும் வேளையில் புக்ராயன் கிராமத்தில் ராவண விழா களை கட்டுகிறது.

கடந்த 18 ஆண்டுகளாக இக் கிராமத்தில் ராவண மேளாவை முன் னெடுத்து நடத்தி வருகிறது பாரதீய தலித் பேந்தர் கமிட்டி இக்கிராமத் தினர், ராவணன் புத்த மதத்தைப் பின்பற்றியவன், வேத நிபுணன் என்று கூறுகிறார்கள். அவன் ஒரு சிறந்த சிவபக்தன் என்றும் சொல்கிறார்கள்.

பத்துத் தலைகள் காரணமாக ராவணனுக்கு தசனன் என்ற பெயரும் உண்டு. பத்துத் தலைகளும் அவரின் ஞானத்தையே குறிக்கின்றனவே தவிர, அரக்கத்தனத்தை அல்ல என்பது அவர்களின் கருத்து.

தசராவின்போது நாடெங்கும் பிரமாண்ட ராவண உருவங்கள் எரிக்கப் படுகையில், புக்ராயன் கிராமத்தினர் அதை எதிர்க்கின்றனர். ராவண மேளா வில் பவுத்த தீட்சை நிகழ்வும் நடைபெறு கிறது. இவ்வேளையில், சுற்று வட்டார கிராமங்களில் இருந்து புக்ராயன் கிராமத் தில் குழுமும் தலித் மற்றும் பிற்படுத்தப் பட்ட இன மக்கள், புத்த துறவிகள் முன் னிலையில் புத்த மதத்தைத் தழுவுகின் றனர்.

தீட்சை நிகழ்வுக்கு முன்னால் ரத ஊர்வலம் நடைபெறுகிறது. கிராமத் தெருக்களில் சுற்றிச் சுற்றி வரும் அந்த ரதத்தில் இடம் பெற்றிருப்பவர் வேறு யார், ராவணன் தான்! ரதம் நகர நகர அதன் மீது மக்கள் பூக்களையும், வண்ணப் பொடிகளையும் தூவுகிறார்கள்.

யாரும் தவறியும் ராவணனை அவமதித்துவிடக் கூடாது என்பதில் விழாக் குழுவினர் கண்டிப்பாகவும், கவனமாகவும் இருக்கிறார்கள். ராவண னின் தம்பி கும்பகர்ணன், மகன் மேக நாதனின் உருவங்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

உண்மையில் ராவணனைப் போற்றி வணங்குவது புக்ராயன் கிராமத்தில் மட்டும் உள்ள வழக்கமல்ல, அருகில் உள்ள ஷிவாலா பகுதியிலும் இவ்விழா தடபுடலாக நடக்கிறது. இங்குள்ள சின் மஸ்திகா கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி ராவணனை வணங்கு கிறார்கள்.

இங்கு தசனன் கோவில் என்ற பெயரில் ராவணனுக்கு தனிக் கோவில் இருக்கிறது. தசராவின் போது மட்டும் 12 மணி நேரம் திறந்திருக்கும் இக்கோவி லில், தீவிர சிவபக்தனாக ராவணன் வணங்கப்படுகிறான்.

115 ஆண்டுப் பழைமையான தசனன் கோவிலில் 5 அடி உயர ராவணன் சிலை இருக்கிறது. சின்மஸ்திகா தேவியின் காவலனாக இப்பகுதி புராணக் கதைகள் ராவணனை குறிப்பிடுகின்றன.

ஆண்டுக்கு ஒருமுறை விஜயதசமி யின்போது அதிகாலையில் இக் கோவில் கதவுகள் திறக்கப்படும். சிறந்த சிவபக்தரான ராவணன், சின்மஸ்திகா தேவியின் காவலராக இருக்கும் வரத்தைக் கோரிப் பெற்றார். அதனால்தான் சின்மஸ்திகா கோவி லுக்கு வெளியே ராவணனின் சிலை நிறுவப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகியான கே.கே. திவாரி கூறு கிறார். தசராவின்போது இக்கோவி லில் பெருங்கூட்டம் திரள்கிறது. ராவணனைப் பக்தி சிரத்தையோடு வணங்குகிறது. ஆனால் மாலையில் நாட்டின் பிற பகுதிகளில் ராவண உருவங்கள் எரிக்கப்படும்போது இங்கு கதவு அடைக்கப்படுகிறது.

ராவணன் மிகச் சிறந்த வீரர், உண்மையானவர், ராவணனின் நல்ல அம்சங்கள் காரணமாகவே நாங்கள் அவரை வணங்குகிறோம் என்பது திவாரி போன்ற ராவண பக்தர்களின் கருத்து. தினத்தந்தி 6.11.2011 பக்.3

தமிழ் ஓவியா said...


என்று தொலையும் இந்தச் சாதி?


ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின...


-திருமூலர்.

சாதி குலப் பிறப் பென்னும்
சுழிபட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லல்
அறுத் தாட் கொண்டு

- மாணிக்கவாசகர்

சாதியாவ தேதடா சலம் திரண்ட நீரலோ
பூதவாசல் ஒன்றலோ பூதமைந்தும் ஒன்றலோ
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்றலோ
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே!
பறைச்சி யாவதேதடா பனத் தியாவ தேதடா
இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ!


- சிவவாக்கியர்

சாதி இரண்டொழிய வேறில்லை - சாற்றுங்கால்
நீதி வழுவா நெறி முறையின் - மேதினியில்


- அவ்வையார்

இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப் புன்செயி லெருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிவெட்டி மண்மூடிப் போட்டு மதித்த சமய மத வழக்கெலாம் சாய்ந்தது
வருணாச் சிரம மெனும் மயக்கமும் சாய்ந்தது
சாதி சமய சழக்கை விட்டேன்
அருட்சோதியைக் கண்டேனடி!
சாதி சமயச் சழககெலா மற்றது
சன்மார்க்க ஞான சபை நிலை பெற்றது


- ராமலிங்க அடிகள்

குலம் ஒன்றாய் நீ படைத்த
குறியை அறியாமல் நான்
மலபாண்டத் துள்ளிருந்து
மயங்கினேன் பூரணமே!


- பட்டினத்தார்

சாதி பேதமில்லை - அகப்பேய்
தானாக நின்றவர்க்கே
ஓதி உணர்ந்தாலும் - அகப் பேய்
ஒன்றுந்தான் இல்லையடி!


- அகப்பேய் சித்தர்

ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதி வகை இல்லாமல் சஞ்சரிப்ப தெக் காலம்?
- பத்திரகிரியார்
சாதி குலம் பிறப்பிறப்புப்
பந்தமுத்தி அருவுருவத் தன்மை நாம்
மேதுமின்றி...
தர்க்கமிட்டுப் பாழாஞ்
சமயக் குதர்க்கம் விட்டு
நிற்குமவர் கண்ட வழி
நேர் பெறுவதெந் நாளோ!


- தாயுமான சுவாமிகள்

நான்றும் நீயென்றும் சாதியென்றும்
நாட்டினோர் உலகத் தோர் பிழைக்கத்தானே!


- அகத்தியச் சித்தர்

சாதியைப் பிறப்பினாலே
சாற்றிடும் புராணக் காதை
ஆதியில் இல்லை அந்த அவதியின் தோற்றம் பின்னே
நீதியை அழித்து நல்ல
நெறியினைக் குலைக்கு தம்மா!


- திரு.வி.க


சாதி பேதந்தனைக் குறித்துத்
தயங்கி மயங்கித் தளராதே!
சாதியாவ தெவர் அறிவர்
சருவ உடலும் ஒன்றாச்சே!


- சிவானந்த போதம்

தொகுப்பு: திருமங்கலம் மணிமாறன்

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை அரிச்சுவடி!


1. அடுத்த ஜென்மம் என்பது - முடிச்சு மாறிகள் பேச்சு
2. ஆரியர் சூழ்ச்சி - அறிவு வீழ்ச்சி
3. இதிகாசம் என்பது - மதிமோச விளக்கம்
4. உண்மையைச் சொல்ல - ஒரு போதும் தயங்காதே.
5. ஊழ்வினை என்பது - ஊக்கத்தை கெடுப்பது.
6. கருமாந்திரம் என்பது - காசு பறிக்கும் தந்திரம்
7. கல்லை தெய்வமென்று - கற்பிக்க வேண்டாம்
8. கோத்திரமென்பது - குலத்தைப் பிரிப்பது
9. சனாதன தர்மம் என்பது - சண்டாள அதர்மம்
10. சாமி சாமி என்பது - காமிகளின் உளறல்
11. சூத்திரன் என்றால் - ஆத்திரங் கொண்டடி
12. திதி கொடுப்பது - நிதியைக் கெடுப்பது
13. தெய்வ வழிபாடு - தேச மக்களுக்கு கேடு
14. பல தெய்வ வணக்கம் - பட்டு வீழ்க
15. பார்ப்பனர்கள் என்பவர்கள் - பகற் கொள்ளைக்காரர்கள்
16. புராணங்கள் - பொய் களஞ்சியங்கள்
17. பேதமென்பது - வேதியருக் கணிகலம்
18. மகாபாரதம் - பஞ்சமா பாதகம்
19. மடத் தலைவர்கள் - மடைத் தலைவர்கள்
20. மதக்குறி என்பது - மடையர்க்கறிகுறி
21. முத்தி முத்தி என்று - புத்தியைக் கெடுக்காதே
22. விதி விதி என்பது - மதியைக் கெடுப்பது
23. வேதம் என்பது - சூதாய்ச் சொன்னது
24. ஜாதி வேறுபாடு - ஜன சமூகத்திற்குக் கேடு
25. க்ஷேத்திரமென்பது - சாத்திரப் புரட்டு


- குடிஅரசு 23.2.1930

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


கோயில்

செய்தி: மடிப்பாக்கம் கோவில் இடத்தில் ஆக் கிரமித்திருந்த குடிசைகள் அகற்றப்பட்டன.

சிந்தனை: சரி; இருக் கட்டும்; அரசு இடத்தில் ஆக்கிரமித்துள்ள கோயில் களை மட்டும் அகற்ற மாட் டார்களோ அதிகாரிகள்?

தமிழ் ஓவியா said...

சூர சம்ஹாரம்!

தூத்துக்குடி மாவட்டக் குலசேக ரன் பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில் சூரசம் ஹாரம் நடந்தது.

அது என்ன சூரன்? அது என்ன சம்ஹாரம்? புராணங்களில் சூரன், அசுரன், ராட்சதன், அரக்கன் என்று கூறப்படுபவர்கள் எல்லாம் யார்? வரலாற்று ஆசிரியர்கள் (பார்ப்பனர் கள் உட்பட) என்ன சொல்லு கிறார்கள்?

ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் எதிரிகளான திராவிடர்களைத் தான் இவ்வாறு அழைத்தார்கள், எழுதினார்கள் என்று எழுதியுள்ளார் களே - நரகாசூரன், இரண்யாட் சதன் சூரபத்மன், கோமுகாசுரன் என்பதெல்லாம் இந்த அடிப்படையில் தானே?

மகாவிஷ்ணு அவதாரம் எடுத்து இந்த அசுரர்களை அழித்ததாக அல்லவா எழுதி வைத்துள்ளனர் -

இந்த நிலையில் ஆரியப் பார்ப் பனர்கள் திராவிடர்களாகிய அசுரர் களை அழித்ததைத் தமிழ்நாட்டில் விழாவாகக் கொண்டாடலாமா? சிந்தித்துப் பாரீர்!

இரணியன் - யாகம் நடத்தும் பார்ப்பனர்களை அந்தத் தீயில் போட்டே பொசுக்குங்கள் என்று கூறியதாகப் பாகவதம் கூறுகிறதே - அப்படியானால் அந்த இரணி யனுக்காக நாம் விழா எடுக்கலாமா? எடுக்க வேண்டுமா என்பது இன மான தன்மான கேள்வியல்லவா!

தமிழ் ஓவியா said...

50 சதவிகிதம் தேவையா?

எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத் துவப் படிப்புகளில் ஒவ்வொரு தேர் விலும் 50 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்தால்தான் தேர்ச்சியாம்.

பெரும்பாலும் முதல் தலை முறையாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த - தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட - கிராமப்புறங்களைச் சேர்ந் தவர்கள்தான் இதில் பாதிக்கப்படு வார்கள்.

பரீட்சையில் வாங்கும் மார்க் தான் தகுதியை நிர்ணயிக்கக் கூடியதா? இல்லை என்று கல்வி நிபுணர்களே கூறியதுண்டு. கணித மேதை என்ற சொல்லுகிறார்களே அந்த ராமானுஜம் ஆங்கிலத் தேர்வில் பல முறை தோல்வி காணவில்லையா? அதற்காக அவரின் கணித அறிவைக் குறைத்து மதிப்பிட முடியுமா?

மருத்துவக் கல்லூரியில் தங்கப் பதக்கம் வாங்கியவர்கள், தேர்வுக் கும் பிறகு தொழிலில் முதன்மை யானவராக ஜொலிக்கிறார் என்ப தற்குப் புள்ளி விவரம் உண்டா? இந்தக் கேள்வியை தந்தை பெரியார் எழுப்பியதுண்டே!

எட்டாம் வகுப்பில் பல முறை தோல்வி கண்டவர் கள்கூட பிற்காலத் தில் துணைவேந்தர் ஆகிடவில்லையா?

சென்ற ஆண்டே இந்தப் பிரச்சினை வந்த போது மருத் துவக் கல்லூரி மாண வர்கள் போராட்டத் தில் குதித்தனர். மீண்டும் மாணவர் கள் அந்த நிலைக் குத் தள்ளப்பட்டால் அதற்குப் பொறுப்பு 50 விழுக்காடு என்ற நிபந்தனையை ஏற்படுத்தியவர்களே!

டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்களாக இருக்கக் கூடிய பார்ப்பனர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் என்றால் வேறுபாடாக நடத்துகிறார்கள் என்று 54 எம்.பி.களே பிரதமரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இத்தகைய ஜாதிய மனப்பான்மை படித்த பார்ப்பனர்களிடத்திலேயே இருக்கும் பொழுது - அங்கு படிக்கும் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களின் கதி என்னாவது?

சமூக நீதிக் கண்ணோட்டத்தில் இது எதிர்க்கப்பட்டே தீர வேண்டும்.

போராடி போராடிப் பெற்ற சமூகநீதி உரிமைகளை இப்படி கொல்லைப்புறம் மற்றும் தந்திர ரீதியாக தட்டிப் பறிக்கும் பார்ப்பனர் சூழ்ச்சியை முறியடிக்க முயலுவோம்!

தமிழ் ஓவியா said...

கோயில் இடிப்பு

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அத்துமீறிக் கட்டப்பட்ட கோயிலை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டதன் பேரில் அதிகாரிகள் கோயிலை இடிக்கச் சென்றபோது இருவர் தீக்குளிக்க முயன்றதால் இடிப்பு கைவிடப்பட்டதாம்.

இதில் வெட்கக்கேடு என்ன வென்றால், அத்துமீறி அரசு இடத் தில் கோயிலை எழுப்பியவர்களே காவல்துறையினர்தாம் ஆம், வேலியே பயிரை மேய்கிறது.

அந்தக் கோயிலை இடிக்கா விட்டால் அது நீதிமன்ற அவமதிப்பே! சட்டத்தின்முன் எல்லாம் சமம் என்றால் கோயிலுக்குமட்டும் விதி விலக்கா?