Search This Blog

22.10.12

பிராமணாள் பெயரை எதிர்ப்பது ஏன்?

தினமலர்கள் தயார்தானா?

 


பார்ப்பனர்கள் எடுத்து வைக்கும் (வி) வாதம் எப்பொழுதும் அறிவுப் பூர்வமாக இருக்காது; அது திருவாளர் சோ இராமசாமியாக இருந்தாலும் சரி, திரு. குருமூர்த்தியாக இருந்தாலும் சரி ஏடு எழுதும் தினமலர் வகையறாவாக இருந்தாலும் சரி பிரச்சினையை திசை திருப்புவதாக இருக்குமே தவிர, எழுப்புகிற வினாவுக்கு நேரிடையான பதிலாக இருக்காது; பந்தை அடிக்க முடியாதவர்கள் காலை அடிக்க மாட்டார்களா? அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வெறும் ஏட்டுப் படிப்பு - பத்திரிகை தின்னும் இந்து மே(ல்)தாவிகள்.
சிறீரங்கத்தில் நீண்ட காலமாக உணவு விடுதி நடத்திக் கொண்டு வந்த பார்ப்பனர் ஒருவர் திடீரென்று பிராமணாள் என்ற பெயரைத் திணித்துள்ளார்.
இதுகுறித்து இப்பொழுது பிரச்சினை எழுந்துள்ளது. திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. முறைப்படி உணவு விடுதி உரிமையாளரிடம் எடுத்துக் கூறியுள்ளது. தவறான பேர் வழிகளின் தவறான வழிகாட்டுதலால் பிராமணாளை நீக்க முடியாது என்று கூறி விட்டார்.
சிறீரங்கம் என்பது முதல் அமைச்சர் தொகுதி என்பதாலும், முதல் அமைச்சர் தமது இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவரின் பெயரையும் இந்தப் பிரச்சினையில் பயன்படுத்திக் கொண்டு, ஆணவத்துடன் பார்ப்பனர்கள் செயல்படத் தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது.

இதுகுறித்து அறிக்கையின் வாயிலாக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலையில் முதல் அமைச்சருக்கு வேண்டுகோளும் வைத்துள்ளார் (19.10.2012).

இதுபோன்ற பிராமணாள் எதிர்ப்பு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல 1940-களில் இரயில்வே நிலையங்களில் பிராமணாள் - சூத்திராள் என்று பெயர்ப் பலகை பொறிக்கப்பட்டு இருந்த காலந் தொட்டு, இந்த இயக்கம் இந்தப் பிரச்சினையைச் சந்தித்து வெற்றி பெற்றும் வந்திருக்கிறது.

இப்பொழுது, திடீரென்று சிறீரங்கத்தில் மீண்டும் பிராமணாள் முளைத்து - பிரச்சினைப் புயலைக் கிளப்பி விட்டு இருக்கிறது.

இதுகுறித்து நேற்றைய தினமலரில் (21.10.2012) கிண்டல் - கேலி!
கோனார் பெரிய மெஸ் இருக்கு... தமிழகம் முழுக்க தேவர் பெயர்ல, பல வறுகடை நிலையங்களும், செட்டியார் பெயரில் பல துணிக்கடைகளும் இருக்கு.


இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காத நீங்க பிராமணாள் பெயரை மட்டும் எதிர்க்கிறது ஏன்? அரசியல் பண்ண... உங்களுக்கு இப்போதைக்கு வேற காரணம் எதுவும் இல்லையோன்னுதான் எனக்கு டவுட்! என்கிறது தினமலர்.
ஜாதி என்பது வேறு; வருணம் என்பது வேறு; இதே உணவு விடுதியில்  அய்யர் உணவகம் என்று போட்டு இருந்தால்கூட திராவிடர் கழகம் எதிர்ப்பு வந்திருக்காது. பிராமணாள் என்பது ஜாதியல்ல - வருணத்தின் பெயர்  - இந்து மத சாஸ்திரப்படி பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன்; சத்திரியன் பிர்மாவின் தோளில் பிறந்தவன்; வைசியன் பிர்மாவின் இடுப்பில் பிறந்தவன்; சூத்திரன் என்பவன் பிர்மாவின் காலில் பிறந்தவன்.

இப்பொழுது சத்திரிய, வைசிய என்பது சட்டப் படியே இல்லை என்று கூறியாகி விட்டது. இவர்கள் சாஸ்திரப்படி நடந்து கொள்ளாததாலும் பிராமணர்களை வழிபடாததாலும் சூத்திரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டனர் (மனுதர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 43).

பிராமணன், சூத்திரன் என்ற நிலைப்பாடு மட்டும் சாஸ்திரப்படியும், சட்டப்படியும் இருக்கிறது.

பிராமணன் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் மட்டுமல்ல; இந்த உலகத்தையே பிர்மா படைத்தது பிராமணர்களுக்காகதான்! சூத்திரர்கள் பிர்மாவின் காலில் பிறந்தவர்கள் மட்டுமல்லர்; பிராமணர்களுக்கு ஊழியம் செய்யப் பிறந்தவர்கள் என்பதுதான் மனு சாத்திரம் (அத்தியாயம் 1 சுலோகம் 9).

சூத்திரன் யார் என்றால் ஏழு. ஏழு வகைப்படுபவை என்று கூறும் மனுதர்மம் (அத்தியாயம் 8 சுலோ கம் 415) அதில் ஒன்று விபசாரி மகன் என்பதாகும்.
இந்த இடம்தான் முக்கியம் - நீ பிராமணன் என்றால் நான் யார்? என்ற கேள்வி எழுகிறதா - இல்லையா? என்னை சூத்திரன் என்று இழிவுபடுத் துகிறதா - இல்லையா? அதற்காகத்தான் பிராமணன் பெயர் எதிர்ப்பு - அழிப்புப் போராட்டம்.

செட்டியார் மெஸ் என்று வைத்திருந்தால் மற்ற ஜாதியினரை விபச்சாரி மகன் என்று சொல்லுவது ஆகாதே - இது அப்படி அல்லவே!

ஒருத்தி உன் தெருவில் தன் வீட்டில் இது பதிவிரதை வீடு என்ற போர்டு மாட்டிக் கொண்டால் மற்றவர் வீடு என்ன என்று அர்த்தம்?  எளிதிற் புரியும்படி தந்தை பெரியார் அவர்கள் இவ்வாறு சொன்னது இதற்காகத்தான்.

இதற்குமேலும் தினமலர்கள் பிராமணாளுக்கு வக்காலத்து வாங்கி எழுத ஆரம்பித்தால் வெளிப்படையாக வருண யுத்தத்துக்குத் தயாராகி விட்டார்கள் என்றே பொருள்படும்.

தயார்தானா?

குறிப்பு: இன்றைய Dr.நமது எம்.ஜி.ஆர். ஏட்டிலும் (அ.இ.அ.தி.மு.க.வின் அதிகார பூர்வ ஏடு) தினமலர் கக்கியதை நகல் எடுத்து எழுதியிருக்கிறது. இதே பதில்தான் அதற்கும்!


                 ------------------------"விடுதலை” தலையங்கம் 22-10-2012

16 comments:

தமிழ் ஓவியா said...


மூடனே!


கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்துகொண்டு, தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே!

-பெரியார்- (விடுதலை, 1.2.1969)

தமிழ் ஓவியா said...

மருத்துவ நுழைவுத் தேர்வு தேவையா?


எதிர்வரும் 2012ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பட்டப் படிப்பினை மேற்கொள்வ தற்கான மாணவர்கள் தேர்விற்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற பட்ட மேற்படிப்பினை மேற்கொள்வதற்கான மாணவர்கள் தேர்விற்கும், தேசிய அளவில் பொது வானதான நுழைவுத் தேர்விற்கும் (Common Entrance Test - CET) முறையே, டெல்லியிலமைந்த உயர்நிலைப் பள்ளி களுக்கான மத்திய அமைப்பு(Central Board of Secondary Education - CBSE) மற்றும் அகில இந்திய மருத்துவக் கழகத்தின் (All India Institute of Medical - Science - AIIMS) வழிகாட்டுதலோடு நடத்தும் என்கிற இந்திய மருத்துவக் குழாமின் (Medical Council of India - MCI) முடிவாக செய்தி வெளியாகி இருப்பது மக்கள் தொகையில் எண்பது சதவீதத் திற்கும் (80) மேலாக இருக்கும் கிராமப் புற மற்றும் வசதி, வாய்ப்புகளற்ற ஏழை - எளிய மாணவச் சமுதாயத்திற்கு பேரிடியாக அமைந்து சமுதாயச் சீரழி விற்கு வழிவகுக்கும்; அநீதியாகவும் அமையும்.

ஏழை மாணவர்களாலும் நுழைவுத் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது...

ஏனெனில், தேசிய அளவில், அதுவும், அய்.சி.எஸ்.சி., கல்வி, சி.பி.எஸ்.சி கல்விப் பாடத் திட்டத்தை மேற்கொள்ளும் மாணவர்களால் மட்டுமே தேசிய அளவிலான பொதுவான நுழைவுத் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும்; வசதி வாய்ப்புகளற்ற கிராமப்புற மாணவர்களாலும் நகர்ப்புற ஏழை மாணவர்களாலும் நுழைவுத் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது.

மருத்துவக் குழாமின் தன்னிச் சையான முடிவா அல்லது மத்திய அரசின் கொள்கை முடிவா?

இந்திய மருத்துவக் குழாமின் அறிவி ப்பாக செய்தி வெளியாகி இருப்பது, இந்திய மருத்துவக் குழாமின் தன்னிச் சையான முடிவா அல்லது மத்திய அரசின் கொள்கை முடிவா எனத் தெரியவில்லை.

ஏனெனில், இந்திய மருத்துவக் குழாமிற்கு தன்னிச்சையாக செயலாற்றக் கூடிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருந் தாலும், பொதுவான நுழைவுத் தேர்வினை நடத்தி எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்பிற்கும், எம்.டி.எம்.எஸ். போன்ற பட்ட மேற்படிப் பிற்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற அறிவிப்பு தான்தோன்றித் தனமானது மட்டுமின்றி ஏழை - எளிய மக்களுக்கு வாய்ப்புகள் கிட்டாமல் செய்வதற்கான சூழ்ச்சி வலைகளோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு பெரும் பாதகமாக அமையும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை போகிறதா அல்லது அலட்சியம் காட்டுகிறதா என்று தெரிய வில்லை.

தமிழ் ஓவியா said...

தாறுமாறானதும் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தக் கூடியதுமான அய்.சி.எஸ்.சி. கல்வி, சி.பி.எஸ்.இ. கல்வி ஆங்கிலோ இந்தியக் கல்வி, ஓரியண்டல் கல்வி, மாநில மெட்ரிக் முறை கல்வி என்று மாறுபட்ட, வேறுபட்ட கல்வி முறைகளைக் களைந்து சமச்சீர் அளவிலான உயர் கல்வியை நாடு முழுவதும் அளிக்க வேண்டுமென்றும்; கிராமப்புற மாணவர் களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் போக்கிக் கிராமப்புற மாணவர்கள் நலனைப் பாதுகாத்திட வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

பொதுவான நுழைவுத் தேர்வு என்கிற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது...

தேசிய அளவில், அனைத்துப் பள்ளிகளிலும், குறிப்பாக, அரசுப் பள்ளி களிலும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும். தனியார் கூட்டமைப்புப் பள்ளிகளிலும், கிராமப்புறப் பள்ளிகளிலும், நகர்ப்புறப் பள்ளிகளிலும் மாணவர்கள் பயிலக்கூடிய உயர்தரப் பள்ளி அமைப்புகள் செம்மையான ஆசிரியர்கள், பயிற்சிக் கூடங்கள், இன்னபிற வசதிகளை உருவாக்கி ஒரே சீரான கல்வி, அதுவும் தரமான சமச்சீர் கல்வியைத் தாய் மொழி அல்லது வட்டார மொழியிலும், ஆங்கிலத் திலும் ஒரே சீராக அளிக்கப்பட்டால்தான் நாட்டளவில் பொதுவான நுழைவுத் தேர்வு பற்றி சற்றே பரிசீலனை மேற்கொள்ளலாம். அந்த நாள்வரை தேசிய அளவில் பொதுவான நுழைவுத் தேர்வு என்கிற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது.

ஒன்று திரண்டு போராடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை...

அதற்குப் இந்தியப் பிரதமர் மாண்புமிகு டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற் கொண்டு, இந்திய மருத் துவக் குழாம் மேற்கொள்ளவிருக் கின்ற தேசிய அளவில் பொது வான நுழைவுத் தேர்வு என்கிற முடி வினை விலக்கி முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
இல்லையேல் நாடு தழுவிய அளவில் ஏழை - எளிய மக்களும், மாணவர் சமு தாயமும் பிற்படுத்தப்பட்ட மக்களும், ஒடுக்கப்பட்ட மக்களும், சிறுபான்மை யினரும் ஒன்று திரண்டு போராடுவதைத் தவிற வேறு வழி தெரியவில்லை.

அந்த அறப்போராட்டத்தை ஒத்த மனமும் செயல்பாடுகளும் கொண்ட அரசியல் கட்சிகள், சமுதாய அமைப் புகள், மருத்துவர்கள் - மருத்துவத் துறையினர், ஆசிரியர் அமைப்புகள் - ஆசிரியர் கூட்டமைப்புகள், மாணவச் சமுதாயம், பொது மக்கள் உள்ளிட் டோரை ஒன்று திரட்டி நாடு தழுவிய அளவில், தேசிய பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மை யினர் கூட்டமைப்பு நடத்தும்.

குறிப்பிட்டுள்ள அமைப்புகளும், தத்தமக்கே உரிய எழுச்சியோடும் வேகத் தோடும், முனைப்போடும் போராட்டங் களை ஒன்றுபட்டு நடத்தி, உரிமைக்குப் போராடி, சமூக நீதி காத்து, சமுதாய நலன் காப்போம்! - இவ்வாறு அவர் கூறினார்.22-10-2012

தமிழ் ஓவியா said...


கழக ஏடுகள், இதழ்கள்பற்றி...


நெடுநாள் வாசகர் நெடுமாறன்

மதிப்பிற்குரிய பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட், உண்மை, விடுதலை ஆசிரியர் குழுமம் மற்றும் பங்களிக்கும் அனைவருக்கும் வணக்கம். நீண்ட நாட்களாகவே நம் கழகத்தின்பால் ஈடுபாட்டுடன் இருப்பவன் என்ற முறையிலும், கழக வெளியீடுகளைத் தொடர்ந்து படித்து வருகின்றவன் என்ற முறையிலும் நம் வெளியீடுகளின் அறிக் கைகளைப் பாராட்டி எழுத வேண்டும் என்று எண்ணம் கொண்டி ருந்தேன். தாமதம் ஆகிவிட்டதற்கு மன்னிக்கவும்.

விடுதலையில் வரும் தமிழர் தலைவர் அவர்களின் பேச்சுக்கள், வாழ்வியல் சிந்தனைகள், ஞாயிறு மலரில் கேள்வி - பதில் போராட்ட அழைப்புகள் என்று என்றும் தலைவருடன் நேரில் பழகும் வாய்ப்பைப் போல அமைந்துள்ளது.

விடுதலையில் ஒவ்வொரு நாளும் நாட்டில் உலகில் நடக்கின்ற முக்கிய நிகழ்வுகள், இடஒதுக்கீடு சம்பந்தப்பட் டவை பார்ப்பனர் சூழ்ச்சி சம்பந்தப்பட்டவை, விளையாட்டு அரங்கம், வணிகச் செய்திகள், மருத்துவ தகவல்கள், இளைஞர் அரங்கம், அறிவியல் அரங்கம், பகுத்தறிவுக் களஞ்சியம், ஒற்றைப் பத்தி, கழக நிகழ்வுகள், மாநாட்டு அழைப்பு, தலைவர் சுற்றுப் பயணம் மற்றும் பல அறிவுபூர்வமான கட்டுரைகளுடன் என்று எட்டுப் பக்கங்களுடன் புது மெருகுடன் வருகிறது. எந்த ஒரு பத்திரிகையிலேயும் இவ்வளவு தகவல்கள் வருவதில்லை என்பதே உண்மை - பாராட்டுக்கள்.

பெரியார் பிஞ்சு பற்றிச் சொல்ல வேண்டுமானால் நாம் பிஞ்சாக இருந்து தெரிந்து கொள்ள முடியாமல் போனதை எல்லாம் இப்போது தெரிந்து கொள்ள வாய்ப்பாக உள்ளது. அறிஞர்களின் வாழ்க்கையாகட்டும், உலக நாடுகளைப்பற்றிய தகவல்களாகட்டும் பகுத்தறிவைப் புகட்டும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று பலப்பல அணுகுமுறைகளில் பிஞ்சுகளை அறிவுப் பிஞ்சுகளாக, பெரியார் பிஞ்சுகளாக ஆக்கும் பணி மிகச் சிறப்பு. மேலும் பிஞ்சுகள் கற்றுக் கொள்ள மகிழ வரைந்து பழகுவோம், சுடோகு, யோசிங்க யோசிங்க, கேள்வி பதில் போன்ற எண்ணற்ற தலைப்புகளில் பிஞ்சுகளை மெருகேற்றும் பணியும் அபாரம்!


தமிழ் ஓவியா said...

மாடர்ன் ரேசனலிஸ்ட் பற்றிச் சொல்ல வேண்டுமானால் கல்லூரிக் காலங்களில் ஆங்கில இதழ்களைப் படித்த ஆர்வம், தற்போது இன்றைய அரசியல் அவலங் களால் குறையத் தொடங்கியபோது மாடர்ன் ரேசனலிஸ்ட் மூலமாகத்தான் மறுபடியும் அந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. உலக நாட்டு சமகால மக்கள், தலைவர்கள், அன்பர்களின் கட்டுரைகள் படிக்க படிக்க உற்சாகம் ஏற்படுகிறது. தந்தை பெரியார் அவர்களின் உரைகள், கட்டுரைகள், ஆங்கிலத்தில் படிக்கும் போது புதியதாக படிப்பதுபோல் உள்ளது. நாத்திகக் கருத்துக்கள் உலகளவில் சென்றடைய மாடர்ன் ரேசனலிஸ்ட் ஓர் உலக மக்களுக்கான பாலம். வெல்க!

உண்மை இதழைப் பற்றிக் கூறுகையில், தமிழர்களைப் பற்றி எழுதும் பேரா சிரியர் ந. வெற்றியழகன் தந்தை பெரி யாரின் அரிய உரைகள், பேரறிஞர் அண்ணாவின் புகழ்மிக்க கட்டுரைகள், பெரியாரைப் போற்றும் கவிதைகள், ஆசிரியரின் கேள்வி பதில்கள், மடமை களை வெளிச்சம்போட்டுக் காட்டும் - மஞ்சை வசந்தன், அயல்நாட்டு நாத்திகர் களின் உண்மைவாதிகளின் வாழ்க்கைக் குறிப்புகள், தமிழ்ச்செல்வன் கட்டுரைகள் முகநூல் Facebook சாட்டையடிகள், பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் முரட்டு நாத்திக செயல்பாடுகள் - பெரி யாரின் முக்கிய போர்வாள், பேராசிரியர் மங்கள முருகேசன் அவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பல பேராசிரியர்கள், முனைவர்கள், அறிஞர்களின் கட்டுரை கள், கவிஞர் கலி. பூங்குன்றன் அவர் களின் கணக்கிலடங்கா எண்ண ஓட்டங் கள், வரலாற்றுப் பதிப்புகள் என உண்மை படிக்கும்போது உண்மையிலே உண்மை தெரிந்து கொள்ள உண்மைதான் படிக்க வேண்டும்.

இவ்வளவையும் பாராட்டி எழுது வதற்குத்தான் தாமதம் ஏற்பட்டது என்பதையும், இனி தாமதிக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது எதனால் தெரியுமா? உண்மை அக்டோபர் 1-15 இதழில் வெளி வந்துள்ள மதம் நீங்கிய மதவாழ்வு நார்வே நாட்டின் அமைதி வாழ்க்கை என்ற கட்டுரைதான்.
இனி வருவது பெரியார் திடலில் 05.08.2012 அன்று நார்வே நாட்டு மனிதநேய சங்கத்தின் தலைவர் ஈவன் கிரான் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழி வின் தொகுப்பும் - தமிழாக்கமும் என்று பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செய லாளர் வீ. குமரேசன் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரையைப்பற்றிய என் எண்ணங்கள்.

நான் பல மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரைகளைப் படித்துள்ளேன். ஆனால் இவ்வளவு சிறப்பாக, நேர்த்தியாக கோர்வையாக வடிக்கப்பட்ட கட்டுரை என் நினைவில் இல்லை. திரு. குமரேசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள், பாராட்டுகள் மட்டுமல்ல என் தலை தாழ்ந்த வணக்கங்கள்.

நார்வே நாட்டு மனிதநேய சங்கத்தின் தலைவர் ஈவன் கிரான் ஆற்றிய ஆங் கிலச் சொற்பொழிவினைத் தவற விட்ட தற்கு மனம் வெகுவாக வருத்தமடை கிறது. பெரியார் திடலில் நடக்கும் நிகழ்ச்சிகளை இனிவரும் காலங்களில் தவற விடக் கூடாது என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டது இக்கட்டுரை.

நார்வே நாட்டில் ஒரே மதம், ஒரே பிரிவு இருந்தும் அந்நாடு கடவுள் மறுப்புக் கொள்கையை மதக் கொள்கைகளை விட்டு விலகி மனிதநேயக் கொள்கை களுக்கு, கடவுள் பிடியில் இருந்து விடுபட எடுத்துக் கொண்ட காலம் இரண்டு, மூன்று நூற்றாண்டுகள் என்று அறியும் போது, நம் நாட்டை நினைத்தால் மலைப் பாகவும் களைப்பாகவும் இருக்கிறது.

பல மதம், பல இனம், பல மொழி, பல கடவுள்கள் என்று எண்ணும்போது இன்னும் எவ்வளவு காலம் உழைக்க வேண்டும். நார்வே நாட்டின் நன்மையை அடைவதற்கு? பெரியார் என்ற ஒருவர் இல்லையானால் நாம் அவரால் எடுத்து வைத்திருக்கிற ஒரு படியைக் கூட நாம் எட்டியிருக்க முடியாதே என்று உள்ளம் பதைக்கிறது. இன்னும் எவ்வளவு உழைக்க வேண்டும், கட்டுப்பாடாக இருக்க வேண் டும் என்பதை இக்கட்டுரை, இப்பேச்சு நமக்கு எடுத்துரைக்கிறது.

திரு. ஈவன் கிரான் அவர்களின் பேச்சில் நாம் பெரியாரால் பெருமைப்பட்டுக் கொள்ள ஒரு முக்கிய சேதி என்னவென் றால் நாத்திகத் தன்மையை பொறுத்துக் கொள்ள, சகித்துக் கொள்ள பெரியார் நம் நாட்டில் உள்ளவர்களை பழக்கி வைத்துள் ளார், அவர் தைரியத்தால் மக்களை அந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளார் என்றே நான் சொல்வேன். ஏனெனில் திரு ஈவன்கிரான் அவர்கள் தந்தை பெரியார் சிலைக்குக் கீழே எழுதி வைத்துள்ள வாசகங்கள் -

கடவுள் இல்லை

கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்

கடவுளைக் கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி

போன்றதொரு வாக்கியத்தை தங்கள் நாட்டில் எழுதி வைக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆரம் பித்துள்ள நம் தந்தை பெரியார்தான் உலகுக்கே வழிகாட்டப் போராடுவார் என்பதை உணர்த்துவதாக அவர் பேச்சு உள்ளது. அதுதான் உண்மை. அதுதான் நம் மக்களுக்கு விடுதலை என்று என் கடிதத்தை முடிக்கிறேன். நன்றி.

- வேல். சோ. நெடுமாறன்
பொறியாளர், சென்னை

தமிழ் ஓவியா said...

அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை; சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றிக்கோரி ஆர்ப்பாட்டம்!

ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து மிகப்பெரிய அளவிலே இப்போராட்டம் தொடரும்!

தமிழர் தலைவர் அறிவிப்பு

சென்னை, அக். 22- ஒத்த கருத் துள்ளவர்களை அழைத்து மிகப் பெரிய அளவிலே இப்போராட்டம் தொடரும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் முழக்கமிட்டார்.

அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை மற்றும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்தக் கோரி வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமையில் 22.10.2012 இன்று காலை 11 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

நண்பர்களே, இன்றைய ஆர்ப் பாட்டம் என்பது, சென்னையில் இங்கு நடைபெற்றாலும், தமிழ்நாட் டின் ஒவ்வொரு மாவட்டத் தலை நகரங்களிலும் நடைபெறக் கூடிய ஆர்ப்பாட்டமாகும்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள்

திராவிடர் கழகம் நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தினுடைய நோக்கம், தந்தை பெரியார் அவர்கள் மறைந்த போது, போராட்டக் களத்திலே நின்றார்கள். அவர்களுக்கு அரசு மரியாதையோடு சிறப்பு செய்த முதல்வர் கலைஞர் அரசு - பெரியார் நெஞ்சில் ஒரு முள்ளை வைத்துத்தான் புதைக்கவேண்டி இருந்தது என்று கூறினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஆகாததன் மூலமாக ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு திட் டத்தை வெற்றிகரமாக ஆக்க இயலாத ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டதே என்று வருந்தினார்கள்.

பிறகு, ஏற்கெனவே அவர்கள் கொண்டு வந்த அந்தத் திட்டத்தின் அடிப்படையிலே, சட்டத்தின் அடிப் படையிலே அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற அந்த சட்டம் - உச்சநீதிமன்ற தீர்ப்பில் சில குளறுபடி கள் காரணமாக செயல்படுத்தப்பட முடியாத நிலை! அதையும் தாண்டி ஆறு ஆண்டுகளுக்கு முன்னாலே, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - கலைஞர் தலைமையிலே அதை சட்டமாக ஆக்கியது. உயர்ஜாதிக்காரர்கள் பார்ப்பனர்கள் உள்பட அவர்களுக் குரிய விகிதாச்சாரத்தோடு 69 சதவிகித இட ஒதுக்கீட்டை தெளிவாகத் தந்து, சுமார் 207 பேர் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டார்கள். அந்த முறையிலே பயிற்சி பெற்றவர்தான் இங்கே தோழர் ரெங்கநாதன் இவர் அர்ச்சகராகப் பயிற்சி பெற்றவர்.

எனவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே, அவர்களுக்கெல்லாம் பயிற்சி தந்த பிற்பாடுகூட, உச்சநீதி மன்றத்திற்குச் சென்று அதை முடக்கி வைத்திருக்கிறார்கள்; தற்காலிகமாக அதற்கு ஒரு இடைக்காலத் தடை வாங்கியிருக்கிறார்கள். ஆறு ஆண்டு காலமாயிற்று, உச்சநீதிமன்றத்திலே அது நிலுவையிலே இருக்கிறது.

சேது சமுத்திரத் திட்டம்

அதுபோலத்தான், 2000 கோடி ரூபாய்க்குமேல் செலவழித்து, தமிழ்நாட்டின் தலைசிறந்த பொருளா தாரத் திட்டங்களிலே, வேலை வாய்ப்புத் திட்டங்களிலே ஒன்றான சேது சமுத்திரத் கால்வாய்த் திட்டம் மிகப்பெரிய அளவிலே அது நிறை வேற்றப்பட்டு, அத்திட்டம் முடிவடை யக்கூடிய நிலையிலே, அத்திட்டம் முடிவடைந்தால், அதனுடைய பெருமை அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கிடைத்து விடுமோ என்பதற்காகத்தான், அரசியல் ரீதியாக இன்றைக்கு நினைத்து, தமிழக ஆட்சியாளர்களே கூட தவறான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு, இந்தத் திட்டமே வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.

விசித்திரமான வேடிக்கை, கேலிக்கூத்து தமிழ்நாட்டில் மட்டும்தான் பார்க்க முடியும்

இந்தியாவினுடைய வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலேயே 2000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசு ஒரு திட்டம் தந்து, அந்தத் திட்டத்தினை ஒரு மாநில அரசு நிறுத்து என்று சொல்லக்கூடிய விசித்திரமான வேடிக்கை, கேலிக்கூத்து தமிழ்நாட்டில் மட்டும்தான் பார்க்க முடியும்.

தமிழ் ஓவியா said...

80 விழுக்காட்டிற்கு மேலே முடிந் திருக்கின்ற அந்தத் திட்டத்தை மேலும் தொடரவேண்டும். பச்சோரி கமிட்டி அளித்த அறிக்கையில் அதே வழித்தடத் தில்தான் அந்தத் திட்டத்தைத் தொடர முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

அண்ணா, எம்.ஜி.ஆர். விருப்பத்திற்கும் மாறானது

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயராலே ஏற்கெனவே கொடுத்த தேர்தல் அறிக்கையிலே மணல் திட்டுக்கள் என்று சொல்லி ஆதம்ஸ் பாலத்தைக் குறிப்பிட்ட, அதே கட்சியைச் சார்ந்த, இந்த ஆட்சியைச் சார்ந்த அம்மையார் இப்போது ராமர் பாலம் என்று கூறுவது, அண்ணாவுக்கும், எம்.ஜி.ஆர். விருப்பத்திற்கும் மாறானது மட்டுமல்ல, பெரியாருடைய கருத்து களுக்கும், தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக் கும், முன்னேற்றத்திற்கும் பாதகமான ஒன்றாகும்.

எனவேதான், தமிழ்நாட்டினுடைய வளத்திலே, முன்னேற்றத்திலே அக்கறை யுள்ள அத்துணைக் கட்சிக்காரர்களும், சில மதவாத கட்சிகளைத் தவிர, யாரும் தமிழக அரசினுடைய நிலைப்பாட்டை ஆதரிக்க வில்லை.

விழிப்புணர்வை உருவாக்குவதுதான்

தமிழ் ஓவியா said...

பெரும்பாலான மக்கள் வேலையில் லாத் திண்டாட்டத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது, தென்திசை யிலே மிகப்பெரிய ஒரு திட்டம் முடியும் தறுவாயில், இன்னும் சில நாள்களிலே கப்பல்கள் ஓட முடியும் என்று சொல்லக் கூடிய நிலையில், அந்தத் திட்டத்தை நிறுத்துவோம் என்று உச்சநீதிமன்றத்தில் சொல்வதை எதிர்த்து, மக்கள் குரல் கொடுக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்குவதுதான் இந்த ஆர்ப்பாட் டத்தின் நோக்கமாகும்.
அந்தத் திட்டத்தைத் தடுத்தால் இலங் கைக்கு லாபம்; அந்தத் திட்டத்தைத் தடுத்தால் இலங்கைவாழ் மக்கள், இலங்கை அரசுக்கு லாபம் என்பது போன்ற ஒரு நிலை இருக்கின்றது என்பதை யும் மறந்துவிடக்கூடாது. ஆகவேதான், இந்தப் போராட்டம் ஒவ்வொரு மாவட் டத் தலைநகரங்களிலும் நடைபெறுகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திலே நிலுவையிலே இருக்கிறது.

இரண்டு வழக்குகள்

ஒன்று, அனைத்து சாதியினரும் அர்ச் சகர் ஆகவேண்டும் என்று சொல்லக்கூடிய அந்த வழக்கும் விரைவுபடுத்தப்பட வேண்டும். இரண்டு, தமிழர்களின் வாழ் வாதாரமாகிய சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கு. அதுபோலவே, வழக்கை எதிர்த்து பலரும் முன்வந்து நிச்சயமாக தமிழக அரசினுடைய நிலைப்பாடு - ஏற்கெனவே அவர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு முரணான புதிய நிலைப்பாடு - முற்றிலும் மக்கள் விரோத நிலைப்பாடு என்பதை எடுத்துக்காட்ட நாம் கடமைப்பட் டிருக்கிறோம். ஆகவே, மக்கள் கருத்தை திரட்டுவதற்காகத்தான் இந்தப் போராட் டம்.
இந்த ஆர்ப்பாட்டம் என்பது ஒரு முதற்கட்டம். இது பல்வேறு வகையிலே தொடரும். அனைத்து சாதியினரும் பயிற்சி பெற்றவர்கள்; முறையாக, ஆகம விதிகளிலேயே பயிற்சி பெற்றவர்கள். வைஷ்ண சம்பிரதாயங்களிலே வைஷ்ண கோவில்கள், சிவ ஆகமங்களை படித்துத் தேர்வு பெற்றவர்கள் சிவன் கோவில்கள் என்று அந்த அரசியல் சட்டம் என்ன விதிக்கிறதோ, அந்த அரசியல் சட்டத்திற்கு விரோதமில்லாமல் இவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
வெளிநாடுகளிலுள்ள கோவில்களிலே கூட அவர்கள் சென்று பணியாற்றுகிறார் கள். அப்படி இருக்கும்பொழுது, ஏன் தமிழ்நாட்டுக் கோவில்களிலேயே அவர்களுக்கு நியமனம் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதுதான் இந்தப் கோரிக்கையின் அடிப்படை. மீண்டும் பல்வேறு கட்டங்களிலே ஒத்தக் கருத்துள்ளவர்களை எல்லாம் அழைத்து மிகப்பெரிய அளவிலே இப்போராட்டத்தினைத் தொடருவோம், தொடருவோம் என்று கூறி முடிக்கிறேன்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி உரை யாற்றினார்.

தமிழ் ஓவியா said...


டில்லி எய்ம்ஸில் பார்ப்பன தர்பார்!


ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி 54 எம்.பி.கள் புகார்

புதுடில்லி, அக்.22- டில்லியிலிலுள்ள, அகில இந்திய மருத்துவ விஞ் ஞானக் கழகத்தில், தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியின மாண வர்களுக்கு எதிராக வேறுபாடு காட்டப்படு கிறது' என, 54 எம்.பி.கள் கோரிக்கை விடுத்துள் ளனர். டில்லி யில் அகில இந்திய மருத்துவ விஞ் ஞானக் கழகம்(எய்ம்ஸ்) உள்ளது. இங்கு மருத்து வர்கள் மற்றும் இதர மருத்துவ ஊழியர்கள் நியமனத்தில், இட ஒதுக் கீடு கொள்கை கடைப் பிடிக்கப்படுவ தில்லை. குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கான இடங்கள், நீண்ட நாட்களாக காலி யாக உள்ளதாக புகார் கள் எழுந்தன. குறிப்பாக, எய்ம்ஸ்' மருத்துவ மனையில், தாழ்த்தப் பட்ட மற்றும் பழங் குடியின வகுப்பு, இதர பிற்படுத்தப்படுத்தப் பட்ட வகுப்பு மாணவர் களுக்கு எதிராக வேறு பாடு காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது.

தேசிய அளவில், பல்கலைக்கழகங் கள், கல்வி நிலையங்களில், எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக வேறுபாடு காட் டப்படுகிறது: ஜாதிப் பாகுபாடு உள்ளது: இதைத் தடுக்க வேண் டும் என, பல எம்.பி.,கள் புகார் தெரிவித்து வந் தனர். இத்தகைய வேறு பாடு, எய்ம்ஸ்' மருத்துவ மனை நிர்வாகத்தில் அதிக முள்ளது என, பல்வேறு கட்சிகளை சேர்ந்த, எம்.பி.,கள் ஒன் றிணைந்து பிரத மருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து, லோக் சபா எம்.பி., மாங்கனி லால் மண்டல் செய்தி யாளர்களிடம் கூறிய தாவது:

இட ஒதுக்கீடு: எய்ம்ஸ்' மருத்துவ மனை நிர்வாகத்தில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு எதி ராக வேறுபாடு காட் டப்படுவது தீவிரமாக உள்ளது.

இங்கு மருத்துவர் களை நியமிக் கும்போது, இட ஒதுக்கீட்டு கொள்கை பின்பற்றுவது இல்லை. இது தொடர் பாக, அரசு நியமித்த குழுக்கள் அளித்த பரிந் துரைகளை யும் கடைப் பிடிப்பது இல்லை. இது தொடர்பாக, பிரதமருக்கு நாங்கள் எழுதியுள்ள கடிதத்தில், எய்ம்ஸ் நிர்வாகத்திடம் இருந்து, முழுமையான அறிக்கை கேட்க வலி யுறுத்தியுள்ளோம். இந்த விஷயத்தில், பிரதமர் தலையிட்டு நடவ டிக்கை எடுக்க வேண் டும். எய்ம்ஸ் துறையில் தொடர்ந்து தாழ்த்தப் பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்து வரு கின்றனர். பழங்குடி யின மாணவர் ஒருவர், தனக்கு ஏற்பட்ட தொடர் ஏமாற் றத்தை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
எய்ம்ஸ் நிர்வாகத்தில் ஜாதி பாகுபாடு காட்டப் படுகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தாழ்த் தப்பட் டோருக்கான தேசிய கமிஷன் நியமித்த கமிட்டி, தன் அறிக்கை யில் பரிந்துரை செய்து இருந்தது என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


வழிகாட்டுகிறார் காவல்துறை ஆணையர்


சென்னை, அக்.22- இந்தாண்டு காவல் நிலையங்களில் ஆயுத பூஜையை கொண்டாடக் கூடாது என்ற சுற்றறிக் கையை சென்னை காவல் துறை ஆணையர் எஸ். ஜார்ஜ் அனுப்பியுள்ளார். அரசு அலுவலகங்களில் மதச் சார்பின்மையை நிலைநிறுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு தினங் களுக்கு முன்பு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அரசுத் துறையினரே அரசிலயமைப்புச் சட்டத்தை மீறலாமா? என்று தலைப்பிட்டு அரசு அலுவலகங்களில், வளாகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனத் தெரிவித்து அரசுத் துறை செயலாளர்கள், இயக்குநர்கள், ஆட்சியாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


உள்நோக்கம் புரிகிறதா?


கேள்வி :- ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரே, அந்த மாநில மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக் கூடிய சேது சமுத்திரத் திட்டம் போன்ற ஒன்றை தேவையில்லை என்று சொல்வதன் உள்நோக்கம் தான் என்ன?

கலைஞர் :- ஜெயலலிதாவின் அந்த முடிவினை தமிழக மக்களின் நல் வாழ்விலே அக்கறை உள்ள கட்சிகள் எல்லாம் கண்டிக்கும் நிலையில், இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் அவர்களும், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் ஆலோசகர் எஸ்.வேதாந்தம் அவர் களும்; ஜெயலலிதாவின் இந்த முடிவுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்களே; அதுதான் உள் நோக்கம் என்று புரியவில்லையா? - தி.மு.க. தலைவர் கலைஞர்

(முரசொலி 22.10.2012)

தமிழ் ஓவியா said...


மத்திய நுழைவுத் தேர்வு! ஆந்திராவைப் பார்க்கட்டும் தமிழ்நாடு


ஆந்திராவைப் பார்க்கட்டும் தமிழ்நாடு

கேள்வி :- மத்திய அரசு நடத்தப் போவதாக அறிவித்துள்ள மருத்துவ பொது நுழைவுத் தேர்வினை ஆந்திராவில் நடத்துவதற்கு ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதே?

கலைஞர் :- தமிழகத்தில் நுழைவுத் தேர்வு என்பதை ஒழித்த பிறகும், மருத்துவக் கல்வியில் மத்திய அரசு அளவில் நுழைவுத் தேர்வினைத் திணிக்க இருப்பதைப் பற்றி? என்ற கேள்விக்கு சில நாட்களுக்கு முன்பு நான் பதிலளித்தபோது, தமிழகத்தில் நுழைவுத் தேர்வு முறையை ஒழித்தது கழக ஆட்சிதான் என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் மருத்துவக் கல்வியில் மத் திய அரசு அளவில் நுழைவுத் தேர்வினை நடத்தப் போவதாக செய்திகள் வருகின்றன. அதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, நுழைவுத்தேர்வு முறையை அறவே ஒழிப்பதற்கு அனைத்து முயற்சி களையும் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் நமது கருத்து. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 15 சதவிகித இடங்களை மத்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்று, அந்த இடங்களை நிரப்ப அகில இந்திய அடிப்படையில் நுழைவுத் தேர்வு நடத்து கிறார்கள். அதுபோலவே மருத்துவக் கல்லூரி களில் முதுநிலைப் பிரிவில், அதாவது எம்.டி., எம்.எஸ்., போன்ற வகுப்புகளில் சேருவதற்கும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு வைக்கப்படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் இடங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கு தனி ஒதுக்கீடும் அறவே இல்லை. இந்தப் பிரச்சினை பற்றிஅய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடனடியாக தலையிட்டு, இதிலே நுழைவுத் தேர்வு முறையை ஒழித்தும், இதர பிற்படுத்தப்பட்டோருக்குரிய இட ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்தும் நல்லதோர் முடிவு காண வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று கூறியிருந்தேன். தமிழக அரசின் சார்பிலும் மத்திய அரசுக்கு இதைப்பற்றி எதிர்ப்பு தெரிவித்து எழுதியிருந்தார்கள். மத்திய அரசிடம் இருந்து இந்தக் கோரிக்கைக்கு பதில் வருவதற்கு முன்பு ஆந்திர மாநில அரசு, கெட்டிக்காரத்தனமாக, விவேகத்துடன் அந்த மாநில உயர் நீதி மன்றத்தில் மத்திய அரசு நடத்தும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு தடை கோரி வழக்கு தொடுத்து - அந்த வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்பு 2013-2014ஆம் கல்வியாண்டில் ஆந்திர மாநிலத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்த தடை விதித்து உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறார்கள். தமிழக அரசு பழி வாங்கும் நடவடிக்கைகளிலேயும், அவதூறு வழக்குத் தொடுப்பதிலேயும் சிந்தனையைச் செலுத்தாமல், இந்த வழியில் ஆக்கபூர்வமாக இனியாவது முயற்சி எடுத்து தமிழக மாணவர் களைக் காப்பாற்றிட முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

- தி.மு.க. தலைவர் கலைஞர் (முரசொலி 22.10.2012)

தமிழ் ஓவியா said...


கழிப்பறை இல்லாத வீட்டில் திருமணம் செய்யாதீர்! பெண்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் அறிவுரை




கோட்டா (ராஜஸ்தான்), அக். 22-கழிப்பறை இல் லாத வீட்டை சேர்ந்த ஆணுக்கு கழுத்தை நீட் டாதீர்கள் என்று பெண் களுக்கு மத்திய அமைச் சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவுரை கூறினார்.

வீடுதோறும் கழிப் பறை திட்ட விழிப் புணர்வு யாத்திரை ராஜஸ் தான் மாநிலம் கோட்டா நகரில் நேற்று நடந்தது. யாத்திரையை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தொடங்கி வைத் தார். அப்போது அவர் பேசியதாவது:

பெண்களுக்கு மாப் பிள்ளை பார்க்கும் போது ஜோதிடர்களி டம் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள். ஆனால், இதைவிட சுத்தம், சுகா தாரம் முக்கியம். எனவே, புகுந்த வீட்டில் கழிப் பறை இருக்கிறதா என் பதைத்தான் எல்லா பெண் களும் பார்க்க வேண்டும். கழிப்பறை இல்லாத வீட்டைச் சேர்ந்த ஆணுக்கு கழுத்தை நீட்ட மாட்டேன் என்று பெண்கள் உறுதி ஏற்க வேண்டும். கழிப்பறை இல்லாவிட்டால், பெண் இல்லை என்ற புதிய முழக்கம் நாடெங்கும் ஒலிக்க வேண்டும்.

கழிப்பறைகள் அமைப் பதில் ராஜஸ்தான் பின் தங்கிள்ளது. இங்குள்ள 9,177 கிராம பஞ்சாயத்து களில் 321இல் திறந்த வெளியை கழிப்பிட மாக பயன்படுத்துவது அடியோடு ஒழிக்கப் பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் திறந்த வெளியை கழிப்பிட மாக பயன்படுத்துவதை மாநிலம் முழுவதும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வாறு ஜெய்ராம் ரமேஷ் பேசினார்.22-10-2012

தமிழ் ஓவியா said...

பார்ப்பன எதிர்ப்பு ஏன்?


பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரி டத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது.

மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந் தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர் கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.

நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?

என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

எனக்கு

தமிழ் ஓவியா said...

, "நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்" என்கிற நம் பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை. இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?

நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.

இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.

நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்தி ருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன். -பெரியார்

Nalliah said...

வானம் எனக்கொரு போதி மரம்

சாதியின் மதிப்பு அவரவர் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மாறாக ஒருவரின பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவர் அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக உயர்வு தாழ்வை மட்டுமே அறிவிப்பதும் விளம்பரப்படுத்துவதும் கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.

சாதியைச் வெறும் அடையாளத்துக்காக மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றது எனக் கருதிவிட முடியாது. பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம். ஏன் என்றால் பிரபாகரன் என பெயர் வைத்துக்கொண்டாலும் பிரபாகரன் அம்பட்டன் என்றோ பிரபாகரன் நளவன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.

தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விரும்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விளம்பரப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் காரணம் . ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.

பெயருக்கு முன்னாலோ பின்னாலோ படிப்பை அடைமொழியாக இட்டுக் கொள்வதைக் கூட தன்னை பிறரிடமிருந்து தனிமை படுத்திவிடும் என்ற நோக்கிலும், தனது உலகறியாமையை பறைசாற்றி நான் ஒரு ’முட்டாள்’ என்று சொல்லாமல் அறிவித்துக் கொண்டிருக்கக் கூடுமென்ற புரிதலில், முயன்று உழைத்து பெற்ற பட்டயங்களைக் கூட சில நற்சிந்தனையாளர்கள் போட்டுக் கொள்ள சிந்திக்கும் வேளையில், இந்த நூற்றாண்டிலும் ஒரு வடி கட்டிய முட்டாள்தனமாக பெயருக்குப் பின்னால் ஒரு அடைமொழியாக சில்பா செட்டி, முகேஸ் சர்மா, ரேணுகா ஐயர் போன்ற காலாவதியாகிப் போன பிறப்பின் வழி பெற்ற வடிகட்டிய வெளுத்துப் போன இந்த சாதி சார்ந்த ”அடைமொழி” முட்டாள்தனத்தை இட்டுக் கொள்வதின் மூலம் எதனை அது போன்ற நபர்கள் நிறுவ முயல்கிறார்கள் என்று எண்ணுவதுண்டு.

இது போன்ற துருத்தல் அடைமொழி ஒரு வீடு சென்னையிலோ அல்லது மதுரையிலோ வாடகைக்கு எடுக்க எத்தனிக்கும் பொழுது சொல்லாமலே புரிந்துக் கொள்ளக் கூடிய ஒரு குறியீடாக இருக்க வேண்டுமானால் உதவலாம், அது போன்ற மற்றொரு கேடு கெட்டவர் எதிர்பார்த்திருக்கும் பொழுது. ஆனால், ஒரு அலுவலகத்தில் அன்றைக்கே புதிதாக சந்திக்க நேரிடும் ஒருவரிடத்தில் தான் நரேஷ் ஐயர் என்றோ, மீரா சர்மா என்று அறிமுகப் படுத்திக் கொண்டு கை நீட்டும் பொழுது கை குலுக்க நேரிடும் ஒருவர் எது போன்ற மன ஓட்டத்தில் அந்த கையினை உணர்ந்து கொண்டிருப்பார்?

அறிந்தே செய்கிறோமென்றால், அது போன்ற அடைமொழி யாரை நோக்கி முன் வைத்து, எதனை கடத்திச் சென்று சேர்க்க துருத்தி வைக்கப்படுகிறது? அறியாமையின் பொருட்டு செய்கிறோம் என்றால், எப்பொழுதுதான், ’தான்’ என்ன செய்து கொண்டிருக்கிறோம் இதன் மூலமாக தன்னுடன் பழகும், அல்லது தன் புள்ளியில் கடந்து போக நேரிடும் துரதிருஷ்ட வாதிகளின் மன நிலையில் எது போன்ற பிம்பத்தை இது போன்ற அடைமொழி எழுப்ப நேரலாம் என்று எப்பொழுது தானாகவே அறிந்து கொள்வது அல்லது யார் தைரியமாக முன் சென்று அந்த விழிப்புணர்வை வழங்குவது?

நல்லையா தயாபரன்