Search This Blog

16.10.12

சரஸ்வதி பூஜை கொண்டாடுவோர் சிந்தனைக்கு..

நவராத்திரி கொண்டாடும் சூத்திர, பஞ்சம மக்களே!
இந்துமதம் என்ற அமைப்பு - அதன் அடிப் படையை அறிவுப் பூர்வமாக ஆய்வு செய்பவர்களுக்குச் சில உண்மைகள் அப்பட்டமாகவே புரியும்.

வருணாசிரமம் கூடாது; ஜாதி கூடாது என்பவன் ஓர் இந்துவாக இருக்க முடியாது. இவற்றை மறுத்தால் இந்து மதத்தின் கடவுளையே மறுப்பதாகும். காரணம் இந்து மதத்தின் படைத்தல் கடவுளாகக் கூறப்படும்  பிர்மா தன் நெற்றியிலிருந்து பிராமணனையும், தோளிலிருந்து சத்திரியனையும், இடுப்பிலிருந்து வைசியனையும், பாதங்களிலிருந்து சூத்திரனையும் படைத்ததாகக் கூறப்படுகிறது.

இப்படி பிர்மா படைத்ததோடு  நிற்கவில்லையாம்; இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோக மான கருமங்களைத் தனித்தனியே படைத்தார் என்கிறது மனுதர்ம சாஸ்திரம் (அத்தியாயம் 1 சுலோகம் 87).

இதன் சுருக்கம் என்னவென்றால் பிராமணர், சத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற பேதங்களை பிறப்பிலேயே உண்டாக்கினான் இந்து மதத்தின் படைப்புக் கடவுள் என்பதாகும்.

உலகம் பூராவுக்கும் ஒரு கடவுள் என்றால் இத்தகைய பிறவிப் பேதங்கள்  உலகம் முழுவதும் இருக்க வேண்டுமே, ஏன் இல்லை?

அவ்வாறு இல்லை என்பதிலிருந்தே ஒவ்வொரு ஊரிலும், நாட்டில் வலுத்தவன் தன் வசதிக்கும், ஆதிக்கத்திற்கும் ஏற்ப உருவாக்கிக் கொண்ட சூழ்ச்சிப் படலங்கள்தான் இவை!

அதிலும் இம்மைக்கும், மறுமைக்கும் உரிய கருமங்களைப் படைத்து விட்டாராம். இந்தப் பிறவியில்  மட்டுமல்ல - மறுபிறவிக்கும் சேர்த்து கருமங்களைப் படைத்தாராம்.

அது எப்படிப்பட்ட ஏற்பாடு? பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிர்மாவின் உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்ததினாலும், இந்த உலகத்தில் உண்டாகி இருக்கிற சகல வருணத் தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபு வாகிறான்.
(மனுதர்மம் அத்தியாயம் - 1 சுலோகம் 100)

எவ்வளவுப் பெரிய தந்திரம்! பார்ப்பான் உழைக்க வேண்டியதில்லை; தானம் வாங்கி பிரபு ஆகக் கூடிய ஒன்றைக் கடவுள் பெயரால் உருவாக்கி வைத்திருப்பதைக் காணத் தவறக் கூடாது.

இந்த நிலையில் பிறவி அடிமைத்தன்மையில் உள்ள சூத்திரன் தன் வளர்ச்சிக்கு, முன்னேற்றத் திற்கு விடுதலைக்கு மேற்கொள்ளும் எந்த முயற்சி யும் இந்து மதத்தின் கடவுள் மறுப்பாகி விடுகிறது.
தந்தை பெரியார் அவர்களின் கடவுள் மறுப்பை இந்த அடிப்படையில் நோக்கினால் அதன் அருமையும், சிறப்பும், முற்போக்கும் விளங்காமற் போகாது.

கல்விக்கு ஒரு கடவுள் உண்டு என்று வைத்து விட்டு, சூத்திரனுக்கு அந்தக் கல்வி கிடையாது என்பது எவ்வளவுப் பெரிய சூழ்ச்சி!

சரஸ்வதி பூஜை கொண்டாடும் சூத்திர மக்கள் இதனைப் புரிந்து கொள்ளாமல், அன்று ஏடுகளையும், புத்தகங்களையும் பூசைக்கு வைப்பது பொருத்தமானதாக எப்படி இருக்க முடியும்?

அப்படியே சூத்திரன் படிக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த சரஸ்வதியை எச்சில் தொட்டி யில் தூக்கி எறிய வேண்டாமா? இதனை ஒப்புக் கொள்ளும் பக்குவம் இல்லை என்றாலும், கல்வி கற்கும் ஒவ்வொரு சூத்திரனும் சரஸ்வதியை எச்சில் தொட்டியில் தூக்கி எறிந்ததாகவே பொருள்!

செல்வத்துக்கு ஒரு கடவுள் லட்சுமி என்று சொல்லப்படுகிறது. சூத்திரன் பொருளைப் பார்ப்பான் கொள்ளை அடிக்கலாம் என்கிறது மனுதர்மம் (அத்தியாயம் 11 சுலோகம் 13).

இந்த நிலையில் பொருளீட்ட வேண்டும்; அது தனக்காக இருக்க வேண்டும் என்று நினைக்கிற சூத்திரன் லட்சுமிக்குப் பூஜை நடத்த முடியுமா? நடத்தலாமா?

இந்து மத அடிப்படைக் கட்டமைப்பை உடைப்பதன் மூலம்தான் பார்ப்பனர் அல்லாத சூத்திர மக்களும், பஞ்சம மக்களும் கல்வி பெறவும், பொருளீட்டவும், சுயமரியாதை பெறவும், ஏன் மனிதனாகவும் முடியும் என்பது கல்லின்மேல் எழுத்தாகும் என்பதுதான் தந்தை பெரியார் அவர்களின் மகத்தான தத்துவமும், சாரமும் ஆகும்.


நவராத்திரி கொண்டாடும் நம் மக்கள் கொஞ்சம் சிந்தனைக் கண்களை விரித்துப் பார்ப்பார்களாக!
            -----------------------”விடுதலை”ட்தலையங்கம் 15-10-2012

5 comments:

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தராத கருநாடகத்துக்கு

நெய்வேலி மின்சாரத்தை வழங்காதே! வழங்காதே!!

தமிழர் தலைவர் தலைமையில் நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம்!

75 பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

43ஆம் முறையாக தமிழர் தலைவர் கைது!

நெய்வேலி, அக்.15- தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட தர மாட்டோம் என்று அடம் பிடிக்கும் கருநாடகத்தைக் கண்டித்தும், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தராத கருநாடக மாநிலத்துக்கு நெய்வேலியில் (என்.எல்.சி.யில்) உற்பத்தியாகும் மின்சாரத்தைத் தரக் கூடாது என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இன்று காலை நடைபெற்ற என்.எல்.சி. முற்றுகைப் போராட்டத்தில் 75 பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அத்தனைப் பேர்களையும் காவல்துறை கைது செய்தது.
கடந்த 8ஆம் தேதி மேட்டூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் தர மறுக்கும் கருநாடகத்துக்கு, நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தைத் தரக் கூடாது; அதனை வலியுறுத்தும் வண்ணம் வரும் 15ஆம் தேதி நெய்வேலி நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

மாபெரும் பொதுக்கூட்டம்


நேற்று மாலை நெய்வேலியில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் ஏன் என்பது குறித்து ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுச்சி உரையாற்றினார்.

விளக்கக் கூட்டங்கள்

இந்த முற்றுகை போராட்டத்தை விளக்கி நெய்வேலி சுற்று வட்டாரத்தில் இரண்டு நாட்களாகத் தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கழகம் மேற்கொண்ட இந்த முயற்சிக்குப் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

முற்றுகை - கைது!

இன்று காலை மறியல் போராட்டம் என்ற நிலையில் நெய்வேலி நகரியம் முழுவதும் மிகவும் பரபரப்பாக இருந்தது; கருஞ்சட்டை தோழர்கள் குடும்பம் குடும்பமாக முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க வந்த வண்ண மாகவே இருந்தனர். பேருந்து நிலையம் முழுவதும் கருங்கடலாகக் காட்சியளித்தது. உணவு விடுதிகள், சாலைகள் எங்குப் பார்த்தாலும் கருஞ்சட்டைத் தோழர் களின் நடமாட்டம் - சங்கமம்! வாகனங்கள் மூலமாகவும் சுற்று வட்டார மாவட்டங்களிலிருந்து கழகத் தோழர்கள் வந்து குவிந்தனர்.

காலை 10 மணிக்கு தந்தை பெரியார் சதுக்கத்தில் போராட்டம் குறித்து தலைமை கழக பேச்சாளர்கள் யாழ் திலீபன், அதிரடி அன்பழகன் ஆகியோர் பேசினர். அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு ஆகியோர் உரையாற்றினர். அதனையடுத்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி எழுச்சியுரை ஆற்றினார். (உரை விவரம் நாளை)

பின்னர், அங்கிருந்து கழகத் தோழர்கள் ஆயிரக் கணக்கானோர் பேரணியாகப் புறப்பட்டு என்.எல்.சி. தலைமை அலுவலகம் நோக்கி முழக்கமிட்டவாறு சென்றனர். கருநாடக அரசின் அடாவடித்தனத்தைக் கண்டித்து உணர்ச்சிகரமாக முழக்கங்கள் எழுப்பியவாறு கழகத்தின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள், இளைஞ ரணியினர், மாணவரணியினர், மகளிர் அணியினர் மற்றும் தொழிலாளர் அணியினர் ஆகியோர் முன்னேறிச் சென்றனர். தலைமை அலுவலகத்துக்கு சில மீட்டருக்கு முன்பு தோழர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து என்.எல்.சி. 27ஆவது வட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

எழுப்பப்பட்ட முழக்கங்கள்!

மத்திய அரசே மத்திய அரசே

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும்

கருநாடகத்துக்கு கருநாடகத்துக்கு

நெய்வேலி மின்சாரத்தை கொடுக்காதே கொடுக்காதே

நெய்வேலி மின்சாரத்தை அனுப்பாதே அனுப்பாதே

கருநாடகத்துக்கு அனுப்பாதே

நமது உரிமை நமது உரிமை

காவிரி நீர் நமது உரிமை

காவிரி நீரை தடுக்க நினைக்கும் எவரானாலும்

தமிழ் ஓவியா said...

அனுமதியோம், அனுமதியோம்,

தனித்தனி நாடுகளில் தண்ணீர் பிரச்சினை தீருது

ஒரே நாடு இந்தியாவில் தீருமா? தீராதா?

மத்திய அரசே மத்திய அரசே

பயன்படுத்து பயன்படுத்து

கருநாடகா மீது 365அய் பயன்படுத்து

365அய் பயன்படுத்து!

கருநாடகத்தின் அடாவடித்தனத்தை தடுத்து நிறுத்து

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

உரிமை இயக்கம் உரிமை இயக்கம்

தமிழர்களின் உரிமை இயக்கம்

நெய்வேலி நிலக்கரிக்கு ராயல்டி பெற்றுக் கொடுத்த

திராவிடர் கழக தலைவரான

தமிழர் தலைவர் தலைமையிலே!

போராடுவோம் போராடுவோம்!

வெற்றி பெறுவோம் வெற்றி பெறுவோம்!

தேசியம் பேசும் அண்ணாச்சி

காவிரி நீர் என்னாச்சு

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்

கருநாடக அரசை கண்டிக்கிறோம்!

நீதிமன்ற உத்தரவை மதிக்காத

காவிரி ஆணையத்தின் உத்தரவை மதிக்காத

கருநாடக அரசை கண்டிக்கிறோம்

தமிழா தமிழா ஒன்றுபடு

தருணம் இதுதான் ஒன்றுபடு!

என்று முழக்கமிட்டனர். பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்தாலும் கட்டுப்பாட்டுடன் பொது அமைதிக்குக் குந்தகம் இல்லாமலும் முற்றுகைப் போராட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்தது கண்டு காவல்துறையினர் உட்பட பொது மக்களும் பெரிதும் பாராட்டினர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட பொறுப்பாளர்கள்

தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் வி.அருணகிரி, பட்டுக் கோட்டை மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், செயலாளர் பெ.வீரய்யன், கும்ப கோணம் மாவட்ட தலைவர் வை.இளங்கோவன், செயலாளர் க.குருசாமி, திருவாரூர் மாவட்ட தலைவர் இரா.கோபால், செயலாளர் சௌ.சுரேஷ், அறந்தாங்கி மாவட்ட தலைவர் இராவணன், செயலாளர் மாரிமுத்து, சென்னை மண்டல தலைவர் இரத்தினசாமி, செயலாளர் வெ.ஞான சேகரன், தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், மாநில ப.க அமைப்புச் செயலாளர் பூ.சி.இளங் கோவன், மாநில ப.க பொதுச்செயலாளர் வடசேரி இளங்கோவன், ஈரோடு மாவட்டத் தலைவர் பிரகலாதன், மண்டல செயலாளர் ஈரோடு சண்முகம், விழுப்புரம் மாவட்ட தலைவர் க.மு.தாஸ், கரூர் மாவட்ட தலைவர் மு.க.ராஜ சேகரன், திருத்துறைபூண்டி மாவட்ட தலைவர் சி.சீனிவாசன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ஜெகதீசன், செயலாளர் கி.தளபதிராஜ், கல்லக்குறிச்சி மாவட்ட தலைவர் கூத்தன், கடலூர் மண்டல தலைவர் வ.சு.சம்பந்தம், செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், ஆத்தூர் மாவட்ட தலைவர் ஆத்தூர் சந்திரன், கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி, செயலாளர் கோ.புத்தன், திருச்சி மாவட்ட தலைவர் மு.சேகர், செயலாளர் ச.கணேசன், திருச்சி மண்டல தலைவர் ஆரோக்கியராஜ், செயலாளர் சி.காமராஜ், அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், செயலாளர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் மாவட்ட தலைவர் அருள்ராஜ், செயலாளர் கண்ணன், விருத்தாசலம் மாவட்ட தலைவர் அ.இளங்கோவன், செயலாளர் சி.கிருட்டினமூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராஜகிரி கோ.தங்கராசு, அமைப்புச் செயலாளர் இரா.குண சேகரன், மாநில இளைஞரணி செயலாளர் இல.திருப்பதி, மாணவரணி செயலாளர் த.சீ.இளந் திரையன், மாநில விவசாய அணி செயலாளர் குடவாசல்கணபதி, செயலவைத் தலைவர் சு.அறிவுக் கரசு, பொதுச் செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, மகளிரணி அ.கலைச்செல்வி, கல்லக்குறிச்சி மாவட்ட செயலாளர் கமலசேகரன், கல்லக்குறிச்சி மாவட்ட செயலாளர் கமலசேகரன், தென்சென்னை மாவட்ட தலைவர் வில்வநாதன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் நவா.ஏழுமலை, லால்குடி மாவட்ட செயலாளர் ஆல்பர்ட், நாகை மாவட்ட தலைவர் சிபிக.நாத்திகன், புதுச்சேரி தலைவர் சிவ.வீரமணி, செயலாளர் அறிவழகன், திருவாரூர் மண்டலத் தலைவர் குடவாசல் கல்யாணி, பேச்சாளர்கள் முனைவர் அதிரடி க.அன்பழகன், இராம.அன்பழகன், யாழ்.திலீபன், முத்து.கதிரவன், நெய்வேலி நகர தலைவர் அதியமான் நெடுமான் அஞ்சி, செயலாளர் கண்ணன், கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் இணையர் வீ.மோகனா ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் மேற்கண்ட கழகப் பொறுப் பாளர்களும், நூற்றுக்கணக்கான கழகத் தோழர் களும் கலந்து கொண்டு கைதானார்கள்.

தமிழ் ஓவியா said...

தொல். திருமாவளவன் பேசும் போது: திராவிடர் கழ கத்தை உருவாக்கிய அறி வுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கழ கத்தையும், கட்டுக் கோப்பான தோழர்க ளையும் உருவாக்கி மாபெரும் எழுச்சியை உண்டாக் கினார். தந்தை பெரி யாருக்குப் பின்னர் திராவிடர் கழகத்தை நடத்த முடி யாது என்று எண்ணிய தீய சக்திகள், பெரியா ருக்குப்பின் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்,கட்டுக் கோப்பாகநடத்தி வருகிறார். இருமடங் காக இருந்த கழகச் சொத்து களை 10 மடங்காக ஆக்கிய பெருமைகி.வீரம ணியையே சாரும். அதே போல் வி.சி.தோழர்கள் எந்தவன்முறைக்கும் இடம் கொடுக்காமல், தந்தை பெரியார் வழியில், அண்ணல் அம்பேத்கர் வழங்கிய அறிவரைகளை ஏற்று ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.15-10-2012

தமிழ் ஓவியா said...

தமிழர் இனம் முன்னேற ஜாதி முறை ஒழிய வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த திருமண விழாவில் திமுக பொதுச் செய லாளர் அன்பழகன் பேசியதாவது: சமுதாய முன்னேற் றத்துக்கும், ஜாதி சமய வேறுபாடு ஒழிய வேண்டும் என்பதற்காகவும் கடந்த திமுக ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. வழக்கை விரைந்து முடித்து இந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர யாரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. இதற்காக ஒரு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் மொழிதான் அனைத்து மொழிகளிலும் முதன் மையானது. தமிழ் எழுத்து, இலக்கியம் உருவாக்கப்பட்ட காலத்தில் மற்ற மொழிகள் உருவாக்கப்படவில்லை. தமிழை ஒதுக்கி வைத்து விட்டு இன்று திருமணங்கள் நடைபெறுகின்றன. நமது வீட்டு திருமணங்கள் தமிழில் தான் நடைபெற வேண்டும். தமிழர்கள் தமிழன் என கூற முடியாத அளவில் சாதிய வேற்றுமையில் உள்ளனர்.

ஜாதி வேற்றுமையை மறக்கும் போது தான் வெற்றி பெற முடியும். தமிழர் இனம் முன்னேற நம்மிடையே உள்ள ஜாதி ஒழிய வேண்டும். முயற்சியும், எண்ணமும் தெளி வாக இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். - இவ்வாறு அன்பழகன் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பெரிய கருப்பன், தென்னவன், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் முரளி, நகர செயலாளர் துரைகணேசன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் நாராயணன், நகர்மன்ற உறுப்பினர் ஜான்பீட்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தண்டபாணி அனைவருக்கும் நன்றி கூறினார்.
15-10-2012

Selva said...

சாதி குறைந்தவர்களை கோவிலின் உள்ளே வரவே விடக்கூடாது என்று கடவுளே மிகவும் தீவிரமாய் இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்ட, முன்புறம் நின்ற பக்தனை மறைத்து நின்ற நந்தியைத் தள்ளி இருக்கச் செய்தும், பக்கத்து வீதியில் நின்ற பக்தனுக்குத் தன முகம் தெரியத் தன் முகத்தினை அந்தப்பக்கம் திருப்ப் உட்கார்ந்தும் பக்தர்களுக்குப் பெரும் கருணை கூர்ந்திருக்கிறார் என்பதுபோலப் பல கதைகள் உள்ளன. உள்ளே விடவேண்டும் என்ற ஒரு சின்ன எண்ணம்கூடி அந்தக் கடவுள்களுக்கு வரவில்லை.