Search This Blog

24.10.12

காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாடுவது சட்டப்படி சரியானதுதானா?

மதச் சார்பின்மை 

சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படக் கூடாது என்று சொன்னதாக நேற்று பல ஏடுகளிலும் செய்தி வெளி வந்தது. விடுதலையிலும் முதல் பக்கத்தில் அவரின் படத்தோடு வெளியிட்டோம். வழிகாட்டுகிறார் ஆணையர் - என்றுகூட தலைப்புக் கொடுத்திருந்தோம்.

அது தவறு - நான் அவ்வாறு சொல்லவில்லை; நானே ஆயுத பூஜை நடக்கும் சில காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று கலந்து கொள்வேன் என்று இப்பொழுது குறிப்பிட்டுள்ளார். ஏனிந்த நிலை என்று தெரியவில்லை. நான் அவ்வாறு சுற்றறிக்கை வெளியிடவில்லை என்று ஒரு வரியில் மறுத்திருக்கலாம் - காவல்துறை ஆணையர்; அதனைக் கூடப் புரிந்து கொள்ள முடியும்.

காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாடலாம்; நானும் கலந்து கொள்வேன் என்று ஒரு அய்.பி.எஸ். அதிகாரி கூறலாமா? சட்டப்படி இது சரியானதுதானா? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ள மதச்சார்பற்ற தன்மையை மீறலாம் என்று ஒரு அதிகாரி கூறுவதாக ஆகி விடாதா?  அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்  எல்லாம் குளறுபடிகள்தானா?

சட்டப்படி, ஆணைப்படி நடக்க வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு இல்லை என்ற ஒரு நிலையை ஏற்படுத்தினால், அது எங்கே கொண்டு போய்விடும்?

ஆயுத பூஜை கொண்டாடலாம் என்றால், நாட்டில் பல மதங்களுக்கு உரிய எண்ணற்ற பண்டிகைகள் உள்ளனவே - அவற்றை எல்லாம் அரசு அலுவலகங்களில் கொண்டாடலாமா? ஆயுத பூஜை மட்டும்தான் கொண்டாட வேண்டும் என்று தனி ஆணை ஏதாவது இருக்கிறதா?  இப்படி ஒவ்வொரு மதக்காரரும் பூஜை நடத்தலாம் என்று ஆரம்பித்தால் அலுவலகங்களில் வேலையா நடக்கும்? - பூஜை மடங்களாகத்தான் மாறும் - இந்த நிலை நல்லது தானா?


அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்த நிலையில் வெளியிட்ட சுற்றறிக்கையில் அரசு அலுவலகங்கள் மதச் சார்பற்ற தன்மையோடு செயல்பட வேண்டும். எந்த மத சம்பந்தமான கடவுள் கடவுளச்சிகள் படங்களும் அரசு அலுவலகங்களில் இடம் பெறக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவித்தாரே!

அதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது கூட முதல் அமைச்சர் அண்ணா அவர்கள், எந்த அரசு அலுவலரும் இது கூடாது என்று சொல்லவில்லையே - பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு என்ன அப்படி ஓர் அக்கறை என்று எதிர் கேள்விப் போட்டு  மடக்கியதை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.

ஆனாலும் அண்ணா பெயரில் கட்சியை வைத்துக் கொண்டுள்ள ஒரு முதல் அமைச்சர் நவராத்திரிக்கு ஆயுத பூஜைக்கு, சரஸ்வதி பூஜைக்கு வாழ்த்துச் சொல்லும் அளவுக்குச் சென்றுள்ளார் என்பது பரிதாபமே!

அரசியலில் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்து அந்த அஸ்திவாரத்தின்மீது நின்று கொண்டு ஆலாபணம் செய்யலாம் என்பது அவலச் சுவையே!


இதுபற்றி அண்ணாவின் கருத்து என்ன? இதோ படியுங்கள்:

மேனாட்டான் கண்டுபிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த இரயிலில் ஏறிக் கொண்டு உன் பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறோயே!

அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாட வைத்து மகிழ்கிறாயே!

எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா, யோசித்துப் பார்.

சரசுவதி பூஜை - விமரிசையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அது நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது இராயட்டர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில்லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை. சிபி, சினிமா பார்த்ததில்லை! தருமராசன், தந்திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம், அவர்கள்

சரஸ்வதி பூஜை; ஆயுத பூஜை

செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே இராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்ரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கிறோம். இது முறைதானா?

பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த சரசுவதி பூஜை; ஆயுத பூஜை நமக்குப் பலன் தரவில்லையே. அந்தப் பூஜைகள் செய்தறியாதவர்,  நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங் களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக்கும். அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.


யோசித்துப் பார் - அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

                           ------------------------ திராவிட நாடு 26.10.1947
- என்கிறார் அறிஞர் அண்ணா.

இதனைச் சுட்டிக் காட்டினால் அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ ஏடான Dr. நமது எம்.ஜி.ஆர். ஏட்டுக்கு மூக்கின்மேல் கோபம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது. அண்ணாவை வெறும் முத்திரையாகப் பொறித்துக் கொண்டவர்களுக்குக் கோபம்தானே வரும்.

அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? முடிந்தால் அய்யாவையும், அண்ணாவையும் மறுத்து வெளியில் வரச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

எல்லாவற்றையும் விட அறிவு நாணயம் என்பதுதான் மிகவும் முக்கியமானது.

                        ----------------------------”விடுதலை” தலையங்கம் 23-10-2012

0 comments: