Search This Blog

17.10.12

தீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளை வெறுக்க வேண்டும்!

பண்டிகைகள் புகுத்தப்பட்டதின் சூழ்ச்சி

தந்தை பெரியார்
தோழர்களே, தாய்மார்களே!
இன்று உங்கள் மத்தியில்  இருக்க நேர்ந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடை கிறேன். சில தாய்மார்கள்  என்னைப்பற்றி அதிகமாகப் புகழ்ந்து பேசினார்கள். அதற்கு நன்றி செலுத்துகிறேன். பெண் களுக்காக இதுவரை நான் ஒன்றும் அதிக மாகச் செய்துவிட்டதாக நான் ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் பெண்கள் விஷயத்தில் அநேக சீர்திருத்தக் காரியங்கள் செய்ய வேண்டுமென்ற ஆசை வெகு பேரைப் பார்க்கிலும் எனக்கு அதிக மிருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் பல நாடகங்களுக்குத் தலைமை வகிக்கும் பெருமையைப் பெற்றிருக்கிறேன்.  என்றாலும் அவை அநேகமாக சீர்திருத்த நாடகங்களாகவே இருந்தன.
சென்னையில் மூடநம்பிக்கை அதிகம்
புராண நாடகங்களுக்கு என்னை அழைப்பதில்லை என்பது மாத்திரமல்லாமல் நானும் அதிகமாகப் போவதில்லை. ஆனால் இந்த நாடகத்திற்கு அழைத்த வர்கள் என்னிடம் இக்கூட்டத்திற்கு இன்று வெகு பெண்கள் இங்கு வரு வார்கள் என்றும், இந்த சமயத்தில் பகுத்தறிவு, சீர்திருத்த விஷயங்கள்பற்றிப் பேசலாம் என்றும் சொல்லி என்னை அழைத்தார்கள். அதனாலேயே நான் மிக ஆசையோடு ஒப்புக் கொண்டேன். சென்னை போன்ற நகரங்களில் பெண்மக்களிடம் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசுவதென்றால் மிகவும் பயப்படவேண்டியிருக்கிறது. மற்ற ஊர்களைவிடவும் சில கிராமங்களை விடவும்கூட சென்னையில் மூடநம் பிக்கை அதிகமாய் இருக்கிறதைக் காண்கிறேன்.
சாதாரணமாக ஒரு கிழவி, அதுவும் வாலிப காலத்தில் மிக்க ஒழுக்க ஈனமாக நடந்து நைந்து போன ஒருத்தி, கழுத்தில் மஞ்சள் நூலை கத்தையாகக் கட்டி மாலைபோல் போட்டுக்கொண்டு, தலையை விரித்துப்போட்டு, நெற்றியில் ரூபாய் அகலம் மஞ்சளையும் குங்கு மத்தையும் அப்பிக்கொண்டு, கையில் ஒரு நெருப்புச் சட்டியை வைத்துக்கொண்டு ஆ... ஊ.... மாரியாயி காளியாயி என்று கத்தினால் எலக்ஷனில் மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போட்டவர்கள்போல் அநேக பெண்கள் ஓடி வந்து அவள் காலில் தண்ணீரை ஊற்றி, அரிசி பருப்பு காய்கறி முறத்தில் வைத்து தேங்காய் பழம் உடைத்து, கற்பூரம் பற்ற வைத்து, விழுந்து கும்பிட்டு வாக்கு கேட்பதையும் ஆசி கூறக் கெஞ்சுவதையும் பார்க்கிறேன். இந்தக் காரியங்கள் மந்திரிகள் வீட்டுப் பெண்கள் கூட செய்கிறார்கள் இந்த மாதிரி மக்களிடம் என்ன சீர்திருத்தம் பேச நான் துணிவு கொள்ள முடியும்?

இன்று நம்முடைய சமுதாயத்திற்கு இருக்கும் குறைகளுக்கும் அவமானத்திற் கும் நம்மூடநம்பிக்கைகளே பெரிதும் காரணமாகும். அதுவும் நம் தாய்மார்களி டம் இவ்வளவு இருக்குமானால் பிறகு அவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளின் நிலை என்னவாகும்? எந்தச் சீர்திருத்த மும் பெண்களிடம் இருந்து வந்தால் அதற்குப் பலம் அதிகம்.
இன்று இங்கு நடித்த சகுந்தலை நாடகம் ஒரு மூடநம்பிக்கைக் கதை அல் லாமல் பெண் அடிமைக் கதை அல்லாமல் அதில் படிப்பினையோ, பகுத்தறிவோ என்ன இருக்கிறது? கொஞ்ச நாளைக்கு முன் இப்படித்தான் எங்கள் ஊரில் ஒரு பள்ளிக்கூடப் பெண்கள், மாணவர்கள் சாவித்திரி சத்தியவான் நாடகம் நடித் தார்கள். அக்கதையில் மூடநம்பிக்கை, பகுத்தறிவுக்கு முரண்பாடு ஏராளமாய் இருந்ததோடு, உலகில் உள்ள விதவைகள் என்பவர்களை எல்லாம் கற்பில்லாதவர் களாக ஆக்கிவிட்டது. இப்படி புராணக் கதைகள் அவ்வளவும் ஒரு படிப்பினையும் இல்லாமல் ஒழுக்க ஈனத்தையும் கற்பித்து விட்டு நம்மை இழிவுபடுத்தியும் விடுகின்றன.
கதை விவரம்
சகுந்தலை கதை ஒரு புராணக் கதை என்பது மாத்திரமல்லாமல் ஆரியர் தன்மையை விளக்கிக் காட்டக் கூடிய ஒழுக்கமற்ற வஞ்சகத்தில் இருந்து புறப்படுகிறது. அதாவது ஆரியர்கள் தேவனான இந்திரன் தன் பதவிக்குப் போட்டி போடும் ஆரியரல்லாத ஒருவனை ஏமாற்ற ஒரு ஆரியப் பெண்ணை அனுப்பி, அவள் மூலம் அவனுக்கு காம உணர்ச்சி யுண்டாக்கி வஞ்சிக்கிறான். அந்த ஆரியனல்லாதவன் அந்தப் பெண்ணால் ஏமாந்து போகிறான். இந்த ஏமாற்றத்தில் பிறந்த குழந்தைதான் சகுந்தலை. இந்தச் சகுந்தலை ஒரு ஆரியனல்லாதவன் ஏமாந்து போனதற்கு அறிகுறியாய் இருக்கிறாள். இந்த லட்சணத்தில் அந்த ஆணும் பெண்ணும் சேர்க்கையான உடனே ஒரு குழந்தை பிறந்து விடுகிறது. அது காட்டில் எறியப்பட்டு ஒரு பட்சியால் வளர்க்கப்படுகிறது. பிறகு ஒரு ரிஷியால் வளர்க்கப்படுகிறது. இதுவரை பார்த்தோ மானால் இதில் அறிவோ, ஒழுக்கமோ, படிப்பினையோ ஏதாவது இருக்கிறதா? ஏதாவது இருக்குமானால் ஆரியர்கள் ஒழுக்கம் எப்படிப்பட்டது என்பதையும், அவர்கள் ஒருவனை ஏமாற்றவோ ஒரு காரியத்தைச் சாதிக்கவோ என்ன என்ன முறைகள் கையாளுவார்கள் என்பதையும் அறிந்து கொள்ள இதில் ஒரு படிப்பினை இருக்கலாம். அதைத் தெரிந்து கொள்வ தற்கும் எத்தனை மூடநம்பிக்கைக்கு ஆளாக வேண்டி இருக்கிறது பாருங்கள்.
இனி சகுந்தலை கலியாணத்தைக் கவனியுங்கள். ராசகுமாரன் என்கிற காரணத்தால் கண்டதும் காதல் - உடனே கர்ப்பம் - பிறகு வலிய அவனிடம் போய் கெஞ்சுதல், பிறகு என்ன என்னமோ மூடநம்பிக்கை கற்பனைகள்.
இந்த நாடகத்தில் ஆண் பெண் காதலாடின சில வேடிக்கை தவிர வேறு என்ன லாபம்? அதுவும் வெகு சிறு பச்சிளங் குழந்தைகளை காதலாடச் செய்தோம்.
குற்றம் சொல்லவில்லை
இதை நான் குற்றம் சொல்வதாக யாரும் கருதக் கூடாது. இதன் ஆசிரியர் கள் மிகக் கஷ்டப்பட்டு இச்சிறு குழந் தைகளை இவ்வளவு அருமையாய் நடத்தும்படி கற்பித்த திறத்தை நான் பாராட்டுகிறேன். ஆனால் பயனில்லாத காரியம் என்றுதான் சொல்லுகிறேன். நமது நாடகக் கதைகள் 100-க்கு 90 இப்படியே இருக்கின்றன. வயிற்றுப் பிழைப்புக்கு நடிப்பவர்கள் எதையோ நடித்து வயிறு வளர்க்கட்டும். இந்த முறை நாடகத்தில் மாத்திரமல்ல; வேறு அனேக காரியங்களில் அரசியல், சமுதாய இயல், பகுத்தறிவு இயல், சுயமரியாதை இயல் என்பவற்றிலும்கூட வயிற்றுச் சோற்றுக் காகவும் சுயநலத்துக்காகவும் எந்த வேஷமும் போடுகின்ற மக்கள் இருக் கிறார்கள். ஆதலால் இன்றைய உலக சராசரி ஒழுக்கத்தில் இதை கெட்டதென்று சொல்ல வரவில்லை. ஆனால் யாதொரு சுயநல உணர்ச்சி இல்லாமல் உற்சாகத் திற்காகவும், கலை உணர்ச்சிக்காகவும் செய்யப்படுகிற காரியத்தில் இக்கேடு களைப் புகுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நம் எதிரிகளாகிய ஆரியர்கள் ஆதியில் தாங்கள் நம்மீது வெற்றி பெற்று நம்மை அடிமை கொண் டவுடன் மறுபடியும் அதிலிருந்து மீளா திருக்கவும், மீளுவதற்கு நினைக்காமல் இருக்கவும் செய்து கொண்ட சூழ்ச்சி பிரசாரங்களில் இக்காரியமும் அதாவது புராணக் கதைகள் நடிப்பதும் ஒன்றாகும்.
இன்று மக்கள் பெயர்கள் எல்லாம் திராவிட எதிரிகளான ஆரிய தெய்வங்கள், ஆரிய முனிகள், ஆரிய ரிஷிகள், ஆரிய அரசர்கள் ஆகியவைகளின் பெயர்களா கவே ஆகிவிட்டன.
எல்லாம் ஆரிய மயம்
சங்கீதம் என்னும் இசையும் வெறும் ஆரியக் கடவுள்கள் பிரார்த்தனைகள் பாட்டாக வந்துவிட்டது. மிக்க ஆபாச மாகவும் விகாரமாகவும் பாடப்படும் பாட் டுகள்கூட ஆரியக் கடவுள்கள் செய்ததாக வும் அவர்கள்மீது பாடினதாகவும் கற்பிக்கப்பட்டு விட்டன. வீட்டில் அழகுக் காக தொங்கவிடும் சித்திரப் படங்கள் முழுமையும் ஆரியக் கடவுள்களாக ஆகி விட்டன. வீட்டில் புழங்கும் துடைப்பக் கட்டை முதல் ஆரியக் கடவுள்களின் பிரதிரூபமாக ஆக்கப்பட்டு விட்டன. பரதம் என்கின்ற நாட்டியக் கலையும் ஆரியக் கடவுள், அக்கடவுள் செய்கை ஆகியவை களையே கொண்டவைகளாகி விட்டன. பண்டிகைகளும், உற்சவங்களும், உல்லா சங்களும் எல்லாம் ஆரிய பிரசாரமாகவே ஆகிவிட்டன - நமது கலைகள் முழு வதும் ஆரியக் கலப்பாகிவிட்டதுடன் இலக்கியங்கள், இலக்கணங்கள்கூட ஆரியக் கலப்பாகவே ஆகிவிட்டன. தொல்காப்பியம், குறள் முதலியவை களில்கூட ஆரிய செல்வாக்கும் கலப்பும் ஏற்பட்டு விட்டது என்பது சில ஆராய்ச்சி நிபுணர்களின் கூற்றாக ஆகிவிட்டது. சில நடவடிக்கைகளுக்கு தமிழில் பெயர் சொல்ல வார்த்தைகளே கிடைப்பது கஷ்டமாகி விட்டது. சிலவற்றைத் தமிழில் சொன்னால் கெட்ட வார்த்தைகள், உச்சரிக்கக் கூடாதவைகள் ஆகிவிடுகின்றன. அவற்றையே வட மொழியில் சொன்னால் மதிக்கப்பட்ட வார்த்தைகளாக ஆகிவிடுகின்றன. இப்படியாக தமிழர்களுக்கு இன்று எதுவும் சொந்தம் இல்லாமல், ஆதாரம் இல்லாமல் ஆரியத்தையே கொண்டு வாழும் படியான நிலைமை ஏற்படுத் தப்பட்டு அதிலிருந்து வேறுபடுவது என்றால் மிக்க வேதனைப்படும்படி ஆகிவிட்டது.
நமது இலக்கியம் அழிந்த விதம்
ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தபுராணம், பெரிய புராணம், திரு விளையாடல் புராணம் இவை தமிழில் செய்யப்பட்டிருக்கின்றன என்பதல்லாமல் இவற்றுள் ஒழுக்கமோ, தமிழர் உணர்ச்சியோ ஏதாவது இருக்கிறதாக சொல்ல முடியுமா? நமது சமயம் பண்டிகை உற்சவம், கடவுள், வாழ்வு நாள், கோள் எல்லாம் இவைகளில் அடங்கியவை அல்லாமல் வேறு ஏதாவது ஆதாரம் வைத்திருக் கிறோமா? ஒரு நண்பர் சொன்னார் இந்த நவராத்திரி பண்டிகையும், ஆடிப்பெருக்கு பண்டிகையும் பழைய இலக்கண இலக் கியங்களையும் கலைகளையும் ஒழிப்ப தற்கும் பயன்பட்டு வந்திருக்கின்றன என்று, நம் வீட்டில் உள்ள பழைய ஆதாரங்கள் எல்லாம் ஆடிப்பெருக்கில் வெள்ளத்தில் கிணற்றில் கொண்டு போய் போடுவதையும், நவராத்திரியில் வீடு சுத்தம் செய்வது என்னும் பேரால் பழைய வைகளை குப்பையில் எறிந்து விடு வதையும் ஒரு காரியமாகக் கையாண்டு வந்திருக்கிறோம்.
புத்தகங்கள், அச்சுகள் இல்லாத பழங்காலத்தில் நம் கலைகளுக்கு, இலக் கியங்களுக்கு ஏதோ சிலரிடம்தான் ஏட்டு ஓலை ரூபமாக சில ஆதாரங்கள் இருந் திருக்கும். அவை அவர்கள் பிள்ளை களுக்கு முக்கியமானவைகளாக இருந் திருக்காது இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். அல்லது கேட்கும் வேறு ஒருவனுக்கு சுலபமாய் எடுத்துக் கொடுத்து விடுவான். அல்லது கரையான், பூச்சி, புழு அரித்துவிடும். கடைசியாக ஆடிப்பெருக்கத்தின்போது வெள்ளத் திற்கும், நவராத்திரியின்போது குப்பை மேட்டுக்கும் போய் சேர்ந்துவிடும். இப்படியேதான் நம் இலக்கியங்கள் ஒழிந்து போய்விட்டன. இன்று நாம் காண நம் கண்ணெதிரிலேயே ஒன்று நடந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏட்டுப் பிரதியில் உள்ள தமிழ் இலக்கியங்கள் அவ்வளவும் அச்சுப் போடுவ தாக தோழர் உ.வே. சாமிநாதய்யர் அரித்து எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அச்சாகி வெளி வந்தவைகள் அவ்வளவும் அய்யர் இஷ்டப்படியாயும் அய்யர் இஷ்டப்பட்டதுமாகத்தான் வெளியாயிருக்குமே ஒழிய இயற்கை ரூபத்தில் வெளியாயிருக்க முடிந்திருக்குமா என்று பாருங்கள். இதுபோலவே நம் பழைய சமய, ஒழுக்க, வழக்க ஆதா ரங்கள் ஒழிந்தே போய் விட்டன. பண்டிதர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் எழுதியுள்ள ஒரு ஆராய்ச்சிப் புத்தகத்தில் ஆரியர்கள் வந்தவுடன் திராவிடர்களை வெற்றி பெற்று அடக்கி திராவிட ஆதாரங்களையெல்லாம் கைப்பற்றி, தங்களுக்கு ஏற்றபடி ஆரியத்தில் மொழி பெயர்த்து தங்களுடையது போல் வெளியிட்டார்கள். தங்கள் சமயங்களை யும், கடவுள்களையும், பழக்க வழக்கங் களையும், தங்கள் உயர்வுக்கு ஏற்றபடி கற்பித்துக் கொண்ட கற்பனைகளையும் புகுத்தினார்கள். இவற்றை அறிஞர்கள் சிலர் மறுத்தாரென்றாலும் பாமர மக் களுக்குள் புகுத்தப்பட்டுவிட்டன என்று பொருள்பட துணிவுடன் எழுதி இருக்கிறார்.
மற்றும், இன்றைய பலஆராய்ச்சியாள ரும், இன்று தமிழரிடையுள்ள சமயம் இலக்கியம் இதிகாசம் என்பவை ஆரியர் களுடையன என்றும், ஆரியர்களால் புகுத்தப்பட்டவை என்றும் விளக்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க நாம் இவை தெரிந்த பின்பும் சமுதாயத்தில் இழிவாக்கப்பட்டு தீண்டாத மக்களாய் கருதப்பட்ட பின்பும் அவைகளைக் கொண்டாடலாமா என்று கேட்கிறேன்.
பண்டிகைகள்
தோழர்களே! நாம் கொண்டாடும் பண்டிகைகள் எல்லாம்கூட ஆரிய பிரசாரத்திற்காகவே ஏற்பட்டவைகளாகும். அதுவும் பல நமது இழிவுக்காகவே பயன்படுவதாகவும் இருக்கின்றன. ஆரிய மதத்தையும் ஆரியக் கொள்கைகளையும் பின்பற்றும்படியும் வலியுறுத்துகின்றன.
நாம் ஆரிய வர்க்கம் அல்ல என்றும், ஆரிய சமயம் ஆரிய வர்ணாசிரமக் கொள்கை, ஆரியப் பழக்க வழக்கம் முதலியவைகளுக்கு நாம் கட்டுப் பட்டவர்கள் அல்ல என்றும், நாம் திராவி டர்கள், தமிழர்கள் என்றும், நமக்கும் ஆரியர்களுக்கும் சமுதாயத் துறையில் ஒரு ஆட்சியின்கீழ் இருக்கும் குடிகள் என்பதைத் தவிர வேறு சம்பந்தம் ஒன்றும் இல்லையென்றும், நமது லட்சியம் வேறு அவர்களது லட்சியம் வேறு என்றும் கருதி முடிவு பெற்றால்தான் நமக்கு இந்த நாட்டில் சமுதாயத் தொண்டுக்கும் அரசியல் தொண்டுக்கும் தனிப்பட்ட வேலை இருக் கின்றதே ஒழிய மற்றபடி நாம் ஆரியத் திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்றால் நமக்கு எவ்வித பொறுப்பும் வேலையும் முயற்சியும் இல்லை என்பதுதான் எனது தாழ்மையான அபிப்பிராயம். இதில் நமது நிலை மிகத் தெளிவாய் இருக்க வேண்டும். வழவழ கொழ கொழா வெண்டைக்காய்த் தன்மை கண்டிப்பாய் உதவவே உதவாது. ஒரு தெளிவான முடிவுக்கு திராவிடர்கள் வராததாலேயே இந்த இருபதாவது நூற்றாண்டில் அய்ரோப்பியர் ஆட்சியில் கூட திராவிடன் ஆரியருக்கு இழி பிறப்பாக இருக்கிறான்.

யாரோ இரண்டொருவர் அடி களாகவும், சுவாமிகளாகவும், பண்டார சந்நதிகளாகவும்,பெரியாராகவும், ராஜாவாகவும், மந்திரியாகவும், சர் ஆகவும் ஆக்கப்பட்டு விடுவதில் திராவிட சமுதாயமோ அல்லது இப்படி அழைக்கப்பட்ட ஆட்களோ உயர்ந்த பிறவி ஆகிவிட்டதாகக் கருதுவது முட் டாள்தனமேயாகும். எப்படி ஒரு ஒழுக் கங்கெட்ட அயோக்கியப் பார்ப்பானும் உயர்ந்த பிறவியாக மதிக்கப்படுகிறானோ அப்படியே எவ்வளவு உயர்ந்த பட்டம் பதவி பெற்ற ஒழுக்கமான திராவிடனும் கீழ் பிறவியாகத்தான் மதித்து நடத்தப்படு கிறான்.
ஆதலால், நாம் ஒரு சரிசமமான மனிதப்பிறவி என்கின்ற உரிமை பாராட்டிக் கொள்ள வேண்டுமானாலும் ஆரிய சர்வத்திலிருந்தும் விடுபட வேண்டும் ஏன் நான் இப்படிச் சொல் லுகிறேன் என்றால் சில விஷயங்களில் மாத்திரம் தங்களை திராவிடர்கள் என்றும், திராவிடம் வேறு என்றும் சொல்லிக்கொண்டு வேறு அநேக விஷயங்களில் ஆரியத்திற்கு அடிமையாக நடந்து கொண்டால் இரண்டுங்கெட்ட இழி நிலையைத்தான் அடைகிறோமே ஒழிய வேறில்லை. ஆதலால்தான் ஆரியப் பண்டிகைகளைப்பற்றியும், ஆரியக் கடவுள் தத்துவங்களைப்பற்றியும், அவை கள் சம்மந்தப்பட்ட ஆதாரங்கள்பற்றியும் பேச வேண்டியதாயிருக்கிறது.
தீபாவளி
உதாரணமாக சமீபத்தில் வரப் போகும் தீபாவளிப் பண்டிகையை எடுத்துக் கொள்ளுங்கள். சுமார் 15 வருஷ காலமாகவே திராவிடர்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவதானது தங்களை ஆரிய அடிமை என்று முத்திரை போட்டுக் கொள்வதாக ஆகுமென்று எழுதியும் சொல்லியும் வருகிறேன். ஆனால் திராவிடர் பெரும்பாலோர் எனது வார்த்தையை மதித்ததாகவோ, நடந்த தாகவோ பெருமை பாராட்டிக் கொள்ள முடியாதவனாக இருக்கிறேன். யாரோ சிலர் நடந்திருக்கலாம். சரியென்று மதித்திருக்கலாம்; அது ஒன்றும் போதாது. தமிழ் மக்கள் அடியோடு தீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளை வெறுக்க வேண்டும். தீபாவளிப் பண்டிகை என்பது ஆரிய புராணக் கதையைச் சேர்ந்ததே ஒழிய மற்றபடி வேறு எந்த ஆதாரத்தையும் பொறுத்ததல்ல. புராண காலம் எது என்று முடிவுக்கு வந்தோமானால் தீபாவளி எப்பொழுது ஏற்பட்டது, எது முதல் கொண் டாடி வரப்படுகிறது என்பது பச்சையாகத் தெரிந்துவிடும்.
மற்றும், அப்பண்டிகையின் ஆதாரத்தில் சம்பந்தப்பட்ட தேவர்கள் யார், அசு ரர்கள் யார் என்பதை சிறிது உணர்ந்தாலும் இப்பண்டிகை திராவிடனுக்கு இழிவைத் தருவதா, மேன்மையைத் தருவதா என்பது விளங்கிவிடும். இந்த ஒரு காரியத்தை நிறுத்தவே நாம் 15 வருட மாகப் பாடுபட்டும் முடியவில்லையென் றால் மற்ற எத்தனையோ காரியங்கள் எப்படி முடிவு பெறப் போகிறது என்று பயப்பட வேண்டியவனாக இருக்கிறேன்.
விக்கிரக ஆராதனை, கோவில்
திராவிடனுக்கு விக்கிரக ஆராதனை என்னும் உருவ வழிபாடும் ஆலயங்கள் என்னும் கோவில்களும் உண்டா என்று யோசித்துப் பாருங்கள். உலகத்திலேயே இன்று ஆரியர்களைத் தவிர வேறு யாருக் கும் எந்த சமயத்துக்கும் மதத்துக்கும் சேர்ந்த கடவுள்களுக்கு எனக்குத் தெரிந்தவரை உருவம், பெண்டு பிள்ளை கள், பந்துமித்திரர்கள், உற்சவங்கள் கிடையவே கிடையாது. அதிலும் திராவிட னுக்கு இருந்ததாக சொல்லவே முடியாது. திராவிடர்களுக்குக் கோவில்களே கிடையாது என்று பந்தயங்கட்டிக் கூறுவேன். ஆரிய செல்வாக்குப் பெற்ற தொல்காப்பியத்தில்கூட இந்தக் கோவில் கள் இல்லை என்றால் வேறு எதில் இருந்திருக்க முடியும்?
ஆலயம்
ஆலயம் என்பதற்குத் தமிழில் வார்த்தையே இல்லை. கோவில் என்றால் அரண்மனையே ஒழிய ஆலயம் அல்ல. மலையாளத்தில் கோயில் என்பது அரண்மனைக்குத்தான் சொல்லப்படு கிறது. அங்கு அம்பலம் என்று சொல்லப் பட்டாலும், அம்பலம் என்பதற்கு வெளியிடம் என்றுதான் பொருளே ஒழிய உள் இடம் அல்ல. வடமொழியில் உள்ள ஆலயம் என்பதுகூட கடவுள் வசிக்குமிடம் என்றோ, கடவுள் இருக்குமிடம் என்றோ பொருள் கொண்டது அல்ல. ஆலயம் என்பது கடவுள் இருக்குமிடமானால் தேவாலயம் என்று சொல்ல வேண்டிய தில்லை. வடமொழியில் தேவஸ்தானம் என்று சொல்லப்படும் வார்த்தையும் இரட்டை வார்த்தையே ஒழிய ஒற்றை வார்த்தையல்ல. ஆகவே நமக்கு, கோவில்கள் கிடையவே கிடையாது என்பதோடு, கடவுள் இருக்கும் வீடு என்பதற்கு வார்த்தையும் கிடையாது.


அன்பும் ஒழுக்கமும் தொண்டும் கடவுள் தன்மை என்று சொல்லப்படுமானால் கல் - உலோகம் - மரம் - சித்திரம் ரூபமாக கடவுள் இருக்க முடியுமா? இப்படி உள்ள கடவுள் தன்மையில் மேற் கண்ட உயரிய குணங்கள் இருக்குமா? உண்டாகுமா? என்று பாருங்கள். இந்தக் கோவில்கள், இந்த உருவங்கள் ஆகிய வைகளில் திராவிடனுக்கு லாபமா?
ஆரியனுக்கு லாபமா இவற்றால் திராவிடன் செலவு செய்துவிட்டு இழிவையையும் அடைகிறான். ஆரியன் லாபமும் பெற்று விட்டு மேன்மையையும் அடைகிறான்.
பண்டிதர்கள்
இதைச் சொன்னால் நமது பண்டிதர்கள் கடவுள் போச்சு, கோவில் போச்சு, கலைகள் போச்சு என்று மாய்மால அழுகை அழுகிறார்கள். இந்தப் பண்டிதர்களைவிட ஆரியர்கள் ஆயிரம் பங்கு மேல் என்று சொல்லலாம். நமது கோவில்கள் என்பவைகள் எல்லாம் திராவிடத்தில் ஆரிய ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு ஏற்பட்டவைகளே தவிர, அதற்கு முன் ஏற்பட்டவைகள் அல்ல.
இன்றுள்ள திராவிடர் செல்வவான்கள், திராவிட அறிஞர்கள், திராவிட பட்டம், பதவி வேட்டைகாரர்கள் பலர் எப்படி தன்மான மற்று ஆரியர்களுக்கு உதவியாகவும் உளவாளிகளாகவும் இருந்து வருகிறார் களோ, எப்படி ஆரியர்களுக்கு கோவிலும் சத்திரமும் வேதபாடசாலையும் தர்மப் பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்களோ அதுபோல் தான் திராவிட மன்னர்கள், திராவிட செல்வவான்கள் ஆரியர்களுக்கு அடிமையாகி அவர்கள் உயர்வுக்கும் சோம்பேறிப் பிழைப்புக்கும் ஆதாரமான அனேக காரியங்களைச் செய்தார்கள்.
இன்றுள்ள பண்டிதர்களில் சிலர் எப்படி ஆரியர்களுக்குக் கூலியாளாக இருந்துகொண்டு கொஞ்சம் நஞ்சம் பாக்கியுள்ள இலக்கண இலக்கியங் களைக்கூட ஆரியமயமாக்க உடந்தை யாக இருக்கிறார்களோ, சர்க்காராரும் அப்படிப்பட்டவர்களையே திராவிட இலக் கியம் அமைக்க ஏற்படுத்துகிறார்களோ அது போலவேதான் அந்தக் காலத்திலும் பல பண்டிதர்கள் ஆரியர்களுக்கு அடிமையாகி அனேக இலக்கியங்களை ஆரிய சமயத்துக்கு ஆதாரமாக இயற்றி விட்டுப் போய் விட்டார்கள்.
இவற்றை அடியோடு அழித்துத்தான் புதுப்பிக்க வேண்டியிருக்கிறதே ஒழிய பழுது பார்த்துச் சரி செய்யக் கூடியதாக ஏதும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. உருவ வணக்கம் முதலில் ஒழிக்கப்பட்டாக வேண்டும். கோவில் உற்சவம் முதலியவை களுக்கு உள்ள ஆதிக்கங்கள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.
சைவமும் வைணவமும்
அறிவுள்ள திராவிட மக்களையும் ஆரியத்திற்கு நிரந்தர அடிமைப்படுத்தினது சைவமும் வைணவமும் தானே ஒழிய வேறல்ல. ஏனெனில், திராவிடர்கள் வேதத்தையும் மனுதர்மசாஸ்திரத்தையும் ஒழிக்கச் சம்மதித்தாலும் சைவ, வைணவ புராண சமயத்தையும் புராண மரியாதையையும் ஒழிக்கச் சம்மதிக்கவே மாட்டார்கள் போல் காணப்படுகிறது.
இராமாயணம், பாரதம், பாகவதம், பக்த விஜயம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் முதலாகி யவைகளை நீக்கி விட்டால் திராவிடர் களுக்கு இப்படிப்பட்ட உருவக் கடவுள்கள் இருக்குமா என்று பாருங்கள். அப்புறம் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அவர்கள் அல்லாத திராவிட மக்களுக் கும் பேதம் இருக்காது; பல வேற்றுமை உணர்ச்சிகளும் இருக்காது.
திராவிட நாட்டில் 100-க்கு 3 பேர்களாயுள்ள ஆரியர்களுடன் சேர்ந்துகொண்டு அவர் களும் நாமும் ஒன்று என்று எண்ணிக் கொண்டிருக்கிற உணர்ச்சியின் பயனாய் நமது வர்க்கத்தையே சேர்ந்த கிறிஸ்தவர், முஸ்லிம், ஆதிதிராவிடர் ஆகியவர்களை வேறாகவும் வேறுபட்ட வகுப்பார்களாகவும் கருதி விலக்கி வைத்திருக்கிறோம். அவர் களுடைய வெறுப்புக்கும் விரோதத்திற்கும் ஆளாக இருக்கிறோம். அதனாலேயே நாம் பலம் குன்றிவிட்டோம்.
உற்சவம்

இந்த மாதத்தில் பல ஆயிரக்கணக்கான பேர்கள் ஆண் பெண் இணையாய் திருப்பதிக்குப் போய் தாங்கள் சம்பாதித்த அரும் பொருளையும் கொட்டிக் கொடுத்து, தலையையும் மொட்டை அடித்துக் கொண்டு வருகிறார்கள். அழகான புதுக் கல்யாணப் பெண்ணும் மாப்பிள்ளையும் கூட மொட்டை அடித்துக்கொண்டு வந்து விடுகிறார்கள். ரயிலில் நிற்பதற்கும்கூட இடமில்லாமல் கூட்டம் போகிறது.
இவற்றால் என்ன பயன்? எந்த ஆரியனாவது இப்படி பணம்  கொட்டிக் கொடுத்து ஜோடி ஜோடியாய் தலை மொட்டையடித்துக் கொண்டு வருகிறானா? இனி அடுத்த மாதத்திற்கு திருவண்ணாமலைக்குக் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அங்கு மக்கள் சாப்பிடத்தகுந்த அருமையான வெண்ணெயையும், நெய்யையும் டப்பா டப்பாவாய், குடம் குடமாய் நெருப்பில் கொட்டப் போகிறார்கள்.
இதற்கு ஏதாவது அறிவான சமாதானம் உண்டா? நெய் சாப்பிடக் கிடைக்காத மக்கள் எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள்? இவர்களை வஞ்சித்து நெய்யை நெருப்பில் கொட்டு வதில் என்ன பயன்? ஆரியர்களுடைய தர்ம சாஸ்திரங்களில் சூத்திரன் நெய், பால் சாப்பிடக் கூடாது என்று இருக் கிறது. அதனால்தான் ஆரியர் உண்டு மீந்த நெய்யை நெருப்பில் கொட்டுவ தற்காக ஹோமமும், கிருத்திகையும் ஏற்படுத்தினார்களோ என்னமோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.
வேறு ஆதாரம் என்ன வேண்டும்?
இல்லாவிட்டால் எந்த மனிதனாவது வெண்ணெயையும் நெய்யையும் நெருப்பில் கொட்டுவானா? நமது முட்டாள்தனத்திற்கு இதைவிட வேறு என்னதான் ஆதாரம் வேண்டும்? கொஞ்சம்கூட மனம் பதறாமல் அள்ளி அள்ளி நெருப்பில் நெய்யைக் கொட்டு வதும், அதை பல ஆயிரக்கணக்கான மக்கள் கண் குளிரப் பார்ப்பதும் ஒரு உற்சவமாயிருந்தால் ஒரு யோக்கியமான அரசாட்சி இருக்குமானால் இந்தக் கொடுமையை அரை நாழிகை சகித்துக் கொண்டு இருக்குமா என்று கேட்கிறேன்.
இப்படியே அடுத்து அடுத்து எத்தனை பண்டிகைகளும் உற்சவங்களும் வரப் போகிறது என்று சிந்தித்துப் பாருங்கள். இவைகளால் நமது புத்தி பாழாவது எவ்வளவு? பொருள் பாழாவது எவ்வளவு? நேரம் பாழாவது எவ்வளவு?  பணம் பாழாவது எவ்வளவு? இவ்வளவு முட்டாள் தனமான காரியங்களும் கெட்ட பலன் களும் திராவிடர்களுக்கு அல்லாமல் உலகில் வேறு யாருக்காவது இருந்து வருகிறதா?
நமது பண்டிதர்கள் இதற்காக என்னவாவது செய்கிறார்களா? ஸ்தல புராணங்கள் விற்கவும், புராண இதி காசங்களுக்குப் புதிய தத்துவார்த்தம் எழுதி அவைகளை நிலைக்க வைக்கவும், அவைகளைக்கொண்டு புண்ணிய காலட் சேபம் பண்ணவும் இவைகளை உபயோ கித்துக் கொள்கிறார்களே தவிர, கண்டித் துப் பேசி மக்களுக்கு அறிவூட்டுகிறார் களா? இப்படியே இருந்தால் என்று திராவிடனின் விடுதலை நாள் வரக் கூடும்?
------------------------------------13.10.1940 ஞாயிற்றுகிழமை மாலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை சென்னை கோவிந்தப்ப நாயக்கன் தெரு சவுந்தர்ய மஹாலில் சகோதரிகள் சங்கீத கழகத்தின் விழாவில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய உரை-"குடிஅரசு" - சொற்பொழிவு - 27.10.1940

1 comments:

தமிழ் ஓவியா said...

ஆலயங்களில் என்ன இருக்கிறது? அது ஆரியக்கோட்டை! கள்ளர் குகை! சனாதனச் சேரி! வைதீக வளை! எல்லாம் வல்ல இறைவனுக்குக் கோயில் ஏன்? குளம் ஏன்? குடும்பம் ஏன்? கூத்திகள் ஏன்? காணி ஏன்? பூமி ஏன்? மதம் ஏன்? சாஸ்திர, சம்பிரதாய, சடங்குகள் ஏன்? என்றுதான் கேட்கிறேன். இவைகளால் எவ்வளவு பணம் பாழ்! பகுத்தறிவு பாழ்! கருத்துப் பாழ்! உங்கள் வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் சிந்தியுங்கள்! இந்தக்கோயில், மதம், சாஸ்திரம், சம்பிர தாயம், இவற்றின் பேரால் நாட்டுமக்கள் செய்யும் செலவு எவ்வளவு என்று! கோயில்களின் பேரால் எத்தனைக்கோடிப் பணம் முடங்கிக் கிடக்கிறது என்று! அதனைக்கொண்டு எத்தனை எத்தனை திட்டங்கள் நிறைவேற்றலாம் என்று சிந்தியுங்கள் ! "
== அறிஞர் அண்ணா .