Search This Blog

15.9.10

அறிஞர் அண்ணாவின் சிந்தனைகள்

அறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் - 15
அவர்கள் வாழ்கிறார்கள்; நாம் ஏதோ இருக்கிறோம்

அறிஞர் அண்ணா

சட்டையில்லாத சங்கரன், வேட்டியில்லாத வேலன், புடவையில்லாத பொம்மி, சோப் கிடைக்காத சொக்கி, செருப்பு வாங்க முடியாத சிங்காரம் நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். இந்த நாட்டில் நல்ல தங்காள் என்ற பெண் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவள் பச்சை மட்டையை வைத்து நெருப்பு எரித்தாள் என்றும் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட பத்தினிதான், தனது நாட்டில் பன்னிரண்டு வருட வரையில் மழையில்லாததால் பட்டினியாகத் தனது குழந்தைகளைக் கிணற்றில் போட்டுத் தானும் மாண்டதாகச் சொல்லப்படுகிறது.

பச்சை மட்டையில் நெருப்பு எரித்த பத்தினி, இந்த நாட்டின் மழையில்லாமையையும் போக்கி இருக்கலாமே! அப்பொழுதெல்லாம் நாஸ்திகம் பரவவில்லையே. ஏன் அந்தப் பத்தினியார் மழையைப் பொழியும்படி செய்யவில்லை? நான்கு வேதங்களும் நேரம் தவறாமல் ஓதப்பட்ட காலத்தில்தானே இந்த நாட்டை அன்னியர்கள் பிடித்தனர். ஆயிரமாயிரம் கடவுள்கள் இங்குத்தானே தோன்றியிருக்கின்றனர். மிருதங்கம் கொட்ட நந்தியும், நடனமாட ஊர்வசியும் ஆக, இப்படிக் கடவுள்கள் இருந்த காலத்தில் தானே ஆங்கிலேயன் இந்த நாட்டைப் பிடித்தான்.

ஒன்று இந்தக் கடவுள்கள் திறமையற்றவர்களாக இருக்க வேண்டும். அல்லது ஆங்கிலேயனிடம் ஏதாவது லஞ்சம் பெற்றுக்கொண்டு சும்மா இருந்திருக்கவேண்டும். கண் இருந்தும் குழியில் விழ வேகமாகச் செல்பவனைக் கண்டால், கைகொட்டிச் சிரிக்கமாட்டோமா? கனியிருக்க காயைத் தேடித் திரிபனைக் கண்டு கேலி பேசாதிருப்போமோ? வெண்ணெயை ஒருவன் பறித்துக்கொண்டு இடத்திலே நின்று கெஞ்சுபவனைக் கண்டால் சிரிப்பு வராமலிருக்குமா? விழுப்புரம் ஜங்ஷனிலிருந்துகொண்டு பாண்டிக்குப் போகிறவன் வழி பார்பபது போலவும், திருச்சி ஜங்ஷனிலுள்ளவன், மதராசுக்குப் போவதற்கு வழி பார்ப்பதுபோலவும், மக்கள் பிறந்தவுடனேயே அண்ணாந்து மேலே பார்த்துக்கொண்டு அப்பா! இதை விட்டு எப்போது அந்த லோகத்திற்கு வருவேன் என்று இந்த லோகத்தை ஒரு ஜங்ஷனாக்கிவிட்டார்கள்.

மாயம் எந்த அளவுக்கு மயக்கத்தை மக்களிடையே உண்டாக்கிற்று என்றால், நாற்பது வயது ஆளைப் பார்த்து, என்ன சௌக்கியமாயிருக்கிறீர்களா? என்றால், சௌக்கியமாயிருக்கிறேன் என்று சொல்லமாட்டான். ஏதோ இருக்கிறேன் என்று மேல் ஸ்தாபி இறங்கிக் கீழ் ஸ்தாயியிலே சொல்லுவான் சொல்லுவதிலே. சுரங்குறைந்திருக்குமென்பதோடு மட்டுமல்ல; பேச்சுடன் பெருமூச்சும் கலந்து வரும்.

அந்தக் கலப்பு கேட்டவனுக்கே பயத்தையும் கவலையையும் உண்டாக்கிவிடும்! நன்றாயிருக்கிறேன் என்று சொன்னால் என்ன? மேல் நாடுகளிலே ஆங்கிலத்திலே டூயூடூ என்றால் உடனே ஓ.கே. நன்றாயிருக்கிறேன் என்ற சொல்லுவார்கள் அதனால்தான் அவர்கள் வாழ்கிறார்கள்; நாம் ஏதோ இருக்கிறோம். தமிழர்களுக்கு ஒரு வீசை இருப்பு; ஓர் சிறிய உலைக்கூடம். கொஞ்சம் மூளை இவை இருந்தால் போதும் வாள் வடிக்க. வாள் வடித்துவிட்டார்களானால், அவர்களுக்கு முன்னமேயே இருக்கின்ற அஞ்சா நெஞ்சமும்,, அருமைக் கையும் போதும். பர்ணசாலைகள் அமைக்க வேண்டியதில்லை, ஐயனின் அருளைப் பெற; எப்பொழுது அம்மையும் அப்பனும் சண்டை சச்சரவுகளில்லாமலிருக்கிறார்கள் என்று நேரத்தை எதிர் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை!

சந்திர மண்டலத்திலே ஏற்படும் ஒலியைக் கண்டறிந்து. இங்கு ஒலிக்கும்படி செய்யும் விஞ்ஞானக் கருவியில் வெற்றியால், சென்ற கிழமை அரைமணி நேரம் சந்திரமண்டலத்தின் ஒலி எதிரொலித்து ஆராய்ச்சி நடைபெற்றது. தீபாவளிப் பண்டிகைகளுக்காகப் பட்டாசுக் கட்டுகள் வெடித்த ஒலி. இங்கு புராணங்களின் துணையால், சென்ற கிழமை, பழமை விரும்பிகளின் மனம் குளிருமளவுக்குக் கேட்டது.

நரகாசுரவதை பற்றிய புராணம் படிக்கப்பட்டது. பட்டினத்தடிகள் காலத்திலிருந்துதான் மாயா வாழ்வைப்பற்றி மக்கள் அதிகம் நினைக்க ஆரம்பித்தனர். காதற்ற ஊசியும் கடைவழிக்கு வாராது காண் என்ற மாயா வாழ்க்கைத் தத்துவம், இன்றும் உலவுகிறது. நாடகங்களிலே இதை நீங்கள் எதிர்பார்க்கலாம். அங்கிருந்து அரசன் வருவான். அரசனைப் பார்த்து ஒருவன் கேட்பான்; இந்த அரண்மனை யாருக்குச் சொந்தம்? இந்த நந்தவனம் யாருக்குச் சொந்தம்? இரும்புப் பெட்டி யாருக்குச் சொந்தம்? இரும்புப் பெட்டியிலுள்ள இருபது லட்சம் யாருக்குச் சொந்தம் எனவும். அரசன், யாருக்கும் சொந்தமல்ல? என்று சொல்வான்.

உண்மையிலேயே அவன் இறந்த பிறகு அதை அவன் மகள் அனுபவிப்பான்; மகன் இல்லாவிட்டால், அவனது வாரிசுகளில் ஒருவன் அனுபவிப்பான். வாரிசுமில்லாவிட்டால், தர்ம கர்த்தாக்கள் அனுபவிப்பார்கள். இதை மக்கள் உணருவதில்லை. உணர அவர்கள் மனம் இடம் கொடுக்காது. ஓர் தலைமகன் காட்டுக்கு வேட்டையாடச் செல்கிறான். தன் வேல் தைத்த யானை எப்பக்கம் ஓடிவிட்டது என்று தேடிக்கொண்டு வந்தவன் முன், ஓர் ஆரணங்கு எதிர்ப்படுகிறாள். நல்ல அழகி; பக்கத்திலே பளிங்கு நீரோடை; கட்டழகன் அந்த மங்கையை மணந்துகொள்ள இச்சைப்படுகிறான்.

மணந்துகொள்வதென்றால், இந்தக் காலத்தைப் போலப் பொருத்தம் பார்க்க ஐயரைத் தேடுவது மேவையில்லாதிருந்த காலம் அது. காதலரிவரும் கண்களாற் பேசினார்கள். வாய் அச்சுப் பதுமை போலிருந்தபோதிலும், அருகே சென்றான். வஞ்சி அஞ்சினாள். அஞ்சாதே; அஞ்சுகமே என்றான். ஆனால் சற்று நேரத்தில் ஓர் அலறல் கேட்டது. அது என்னவென்று கேட்கிறாள், அந்த ஏந்திழையாள். அது என் வேல் வலிக்குத் தாங்க முடியாமல் பிளிறும் யானையின் குரல் என்கிறான்.

பாவைக்கு யானை என்றால் பயம் போலிருக்கிறது! ஐயோ, யானையா! அச்சமாயிருக்கிறதென்றாள், அச்சமானால் அருகே வா! என்றான். வந்தாள்; அணைத்துக் கொண்டான்! திருமணம் முற்றிற்று!! இந்த ஒரு சம்பவத்தைப் பிற்காலத்தில் வள்ளி கதையாக்கி, அந்த வீரனை வேலனாக்கி, கிழவனாக்கி, தேனும் தினைமாவும் கேட்டான் என்று சொல்லி வளையற்காரனாக்கி-விட்டார்கள்.

கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்துவிட்டுக் காலண்டரைப் பார்த்துச் சம்பளம் வாங்கும் படித்தவர்களுக்குக் கூட, இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. மிகக் கஷ்டப்பட்டு நாலு நாள் லீவு பெற்றாலும், குழந்தைக்கு மொட்டை அடிக்கத் திருப்பதிக்கோ, அம்மா சிரார்த்தத்துக்கு காவிரிக்கோ போய் வருவார்களேயொழிய, களிப்புக்காக, இயற்கை தீட்டிக் காட்டும் இனிய ஓவியங்களை காணச்செல்பவர் இரார். இருவருக்கும் சந்தேகம் சார்! ஒரு சந்தேகம். என்னடா? சரஸ்வதி எங்கே இருக்கிறாள்? வெண்டாமரையில்.

அவள் இருக்கும் அப்பூ எங்கே இருக்கிறது சார்? பிரம்மாவின் நாவில். பிரம்மா எங்கே இருக்கிறார் சார்? மஹாவிஷ்ணுவின் உந்தியில் (அதாவது தொப்புளில்). மஹாவிஷ்ணு எங்கே இருக்கிறார்? ஆதிசேஷள் என்ற பாம்பின்மேல். அப்பாம்பு எங்கே இருக்கிறது சார்? அதுவா திருப்பாற்கடலில். திருப்பாற் கடல் எங்கே இருக்கிறது சார்? (உபாத்தியார் பெரிய சந்தேகத்துடன்) உனது பூகோளப் படத்தை எடு.

அதில் இருக்கிறதா என்று பார்ப்போம். எதை எழுதுவது? ஒன்று ஓர் நாள் நம் கவிஞருக்குச் (பாரதிதாசனுக்கு) சந்தேகம் பிறந்தது. தாமரை தன் அழகைக் காட்டி, எழுதச் சொல்லிற்றாம்; காடும் கழனியும் கார்முகிலும் கலாப மயிலும், மயிலனைய மாதரும், செவ்வானமும், அன்னமும், வீரமும், பிறவும், என்னைப்பற்றி எழுது என்று எழிலைப்பற்றித் தீட்டு என்று கூறினவாம்.

தொகுப்பு: டாக்டர் அண்ணா பரிமளம்

1 comments:

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்