Search This Blog

12.9.10

நாம் எந்த விதத்தில் தேச துரோகிகள்? யார் வகுப்புவாதி?


அரசியல் நிலைமை



தோழர்களே!

இங்கு நாங்கள் இன்று பிரசங்கத்துக்காக வரவில்லை. தமிழ்நாடு பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரச்சாரக்கமிட்டி வேலையாக வந்தோம். வந்த இடத்தில் எங்களைக் கேட்காமலே நோட்டீசு போடப்பட்டிருந்தது. இந்தத் தோழர்களுக்குப் பயந்து பேசுவதற்கு ஒப்புக் கொள்ள வேண்டி வந்தது.

பிரச்சாரம்

தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் கட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இயக்கப் பிரச்சாரம் சிறிதும் கூட நடை பெறவில்லை. பதவிகளில் இருக்கும் தலைவர்களுக்குப் பிரச்சாரத்தைப் பற்றி கவலை இல்லை பிரச்சாரத்தில் அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை. சமய சஞ்சீவிகளுக்குப் பிரச்சாரம் தேவையில்லை என்று ஒரு பழமொழி உண்டு.

அவர்களுக்கு எந்தக்கட்சி வலுக்கின்றதோ அந்தக் கட்சியில் சேர்ந்து தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் சக்தியும் குணமும் உண்டு.

ஆனால், பார்ப்பனரல்லாதார் சமுக நலனுக்கு நாம் அதிகமான பிரச்சாரம் செய்ய வேண்டியிருக்கிறது. நம் சமுக நலத்துக்கு, நம் சமுகத்தவரே சிலர் எதிரி களாகவும், எதிரிகளின் ஆயுதங்களாகவும் இருந்து நமக்கு எதிர்ப்பிரச்சாரம் செய்வதால் நமது பாமரமக்கள் ஏமாந்து போக நேரிடுகிறது. எதிர் விவகாரம் செய்யாவிட்டால் எவ்வளவு பொய்யும் அக்கிரமுமான வியாஜியமாயிருந்தாலும் ஜெயித்து விடுமல்லவா? அதுபோல் நம் எதிரிகளில் சூழ்ச்சிகளும், விஷமங்களும், வெற்றி பெறுவதற்குக் காரணம் என்ன? நமது பிரச்சாரக் குறைவேயாகும்.

அதனாலேயே நாங்கள் பல அசவுகரியங்களுக் கிடையில் இவ்வேலையில் பிரவேசித்திருக்கிறோம். கட்சியினால் பட்டம், பதவி, பணம், செல்வாக்கு முதலியவை சம்பாதித்து வரும் மக்கள் கவனியாதிருப்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் எங்களை அலட்சிய மாயும், கேவலமாயும் கருதுவதும் எங்களுக்குத் தெரியும். இருந்த போதிலும் நாங்கள் அவர்களைப் பற்றிக் கவனிக்க வேண்டியோ எதிர்பார்க்க வேண்டியோ உள்ள அவசியத்தில் இல்லை. பொதுமக்கள் நலத்தை கவனிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். ஆதலால் நாங்கள் பல கஷ்டங்களுடன் இந்தச் சுற்றுப்பிரயாணம் செய்கிறோம்.

தோழர் பாண்டியன் குழந்தை அஜாக்கிரதையால் ஏரியில் முழுகி இறந்து இன்றைக்கு 10, 15 நாள்தான் ஆகிறது. அதைக்கூட லட்சியம் செய்யாமல் அவர் வந்து இருக்கிறார். 3 ஆவது வகுப்பிலும் மாட்டு வண்டியிலும் இரவு தூக்கம், பகல் ஓய்வு இல்லாமல் பிரயாணம் செய்கிறார். தோழர் வி.வி. ராமசாமி வீட்டில் மனை வியார் பிரசவ வேதனையைக்கூட லட்சியம் செய்யாமல் அது போலவே சுற்றுகிறார். அவர் வியாபாரத் தொழில் முதலியவை இது சமயம் எவ்வளவோ பாதிக்கப்படுகிறது. இப்பொழுது இந்தக் கூட்டத்தில் தோழர் போக்ஸ் துரையால் அவருக்குக் கொடுக்கப்பட்ட தந்திக்கவரானது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்கின்ற சேதியாகும். தோழர் சி.டி.நாயகம் அவர்கள் ரிடையர் ஆகி ஓய்வாய் இருக்க வேண்டிய காலத்தில், மற்றும் அவருக்கு குடும்பநிலை மிகவும் கவனிக்கப்பட வேண்டிய அவசரமுள்ள சமயத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அலைகிறார். எனக்கு அப்படிப்பட்ட தொந்தரவோ, பெருமையோ ஒன்றும் இல்லாவிட்டாலும் எனது தாயாரை மிக்க கஷ்ட நிலையில் விட்டு விட்டு ஒவ்வொரு நிமிஷமும் முடிவு தந்தியை எதிர்பார்த்துக் கொண்டு திரிகிறேன். தோழர் வி.வி. ராமசாமிக்கு இங்கு வந்த தந்தியை என் தாயார் முடிவுத் தந்திதானோ என்று நெஞ்சம் திக்கென்னும் உணர்ச்சியோடு வாங்கினேன். அது ஆண் குழந்தை பிறந்த தந்தி ஆனதால் அவர்வசம் கொடுத்துவிட்டேன்.

இந் நிலையில் நாங்கள் செய்யும் பிரச்சாரம் மனித சமுக நன்மையை உத்தேசித்து மாத்திரமல்லாமல் மக்களின் இழிவைப் போக்கிச் சுயமரியாதை உணர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்கின்ற ஆசையையும் கவலையையும் கொண்டதேயாகும். ஆதலால் எங்கள் வேலைக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தற்கால அரசியல் நிலை

இன்று நான் அரசியல் நிலை என்பது பற்றி பேசுவேன் என்று குறிப்பிட்டிருக்கிறது. அரசியல் நிலை பற்றி நான் என்ன பேசுவது? நீங்கள் பார்த்தும் கேட்டும் உள்ள விஷயங்களைப் பற்றிதானே பேச வேண்டும். அதாவது சென்ற மாதத்தில் இதே இடத்தில் எனது நண்பர்களான தோழர்கள் சித்தய்யனும், நடேசனும், தமிழ்நாடு ஏஜெண்டும் ஒரு கூட்டத்தாரால் அடியும் உதையும் பட்டதும் அதற்கு தூண்டுகோலாயிருந்த ஒரு தலைவர் தோழர் சத்தியமூர்த்தியார் அவர்கள் இந்த மாதத்தில் திருச்சியில் அதன் வட்டியுள்பட செருப்புகளும், அழுகை முட்டைகளும் அபிஷேமாகும்படியான பாக்கியம் பெற்று ஓடி ஒளிந்து, கதவு தாழ் இடும்படியான நிலைமை ஏற்பட்டது (இது இந்தியன் எக்ஸ்பிரசில் இருக்கிறது) ஆகிய காரியங்கள் தான் இன்றைய அரசியல் நிலைமையாய் இருக்கிறது.

இதைப்பற்றி நான் கவலை கொள்ளவில்லை. ஆனால் வெட்கப்படுகிறேன். ஆனாலும் இன்றைய அரசியல் நிலையில் இவையெல்லாம் முக்கிய இடம் பெற்றிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதை நிறுத்த நம்மால் முடியாது. 1907ல் அதாவது 30 வருஷங்களுக்கு முன்பே நமது அரசியலில் செருப்புகளும், ஜோடுகளும் அதுவும் காங்கிரஸ் மகாசபை கூட்டத்திலேயே கோகலே, திலகர் பிரசன்னத்திலேயே செருப்பு ஜோடு பறந்ததென்றால் சித்தய்யனுக்கு அடி விழுவதும், சத்தியமூர்த்திக்கு செருப்பு பறப்பதும், அதிசயமென்றோ, எதிர்பார்க்காதது என்றோ அரசியலுக்கு விரோதமானதென்றோ யார்தான் சொல்ல முடியும்?

இன்றைய இந்திய அரசியல் தத்துவநிலை வேறு நாட்டிலோ அல்லது பிரிட்டிஷ் அரசாங்கம் இல்லாத இந்தியாவிலோ நடைபெறுமானால் இதுவரை பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார்? இந்து-முஸ்லிம், மேல் ஜாதி - கீழ் ஜாதி என்பவைகளில் ஏதாவது ஒரு பிரிவு பூண்டற்றுப் போயிருக்கும் என்பதை மனதில் இருத்தவேண்டும்.

இந்த மாதிரி வகுப்புச் சச்சரவு இல்லாத வெறும் அதிகாரம் கைப்பற்றும் சச்சரவை அரசியலாகக் கொண்ட மேனாடுகளிலும் இம்மாதிரி பலாத்காரம் சகஜமாய்க் காண்கின்றோம். வகுப்பு உணர்ச்சியுடன் கூடிய அரசியல் சச்சரவில் மேல் நாடுகளிலும் கூட பலாத்காரத்தோடு மாத்திரம் இல்லாமல் கொலைகளும், சுட்டுக் கொள்பவைகளையும் பார்க்கின்றோம். ஆனால் அரசியல் கிளர்ச்சிகளில் இது இயற்கையேயாகும்.

வகுப்புணர்ச்சியே அடிப்படை

நமது அரசியல் கிளர்ச்சி என்பது என்ன? எந்த வகுப்பார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதுதானே ஒழிய வேறு எதை அடிப்படையாய்க் கொண்டிருக்கிறது.

உதாரணம் வேண்டுமானாலும் காந்தியும் - வட்ட மேஜையும் என்கின்ற அத்தியாயத்தை திருப்பி பாருங்கள். அதில் என்ன இருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தார் உங்களுக்கு (இந்தியர்களுக்கு) என்ன வேண்டும் என்று கேட்க அழைத்தார்கள். இந்தியர்களாகிய நாம் அங்கு சென்று என்ன சொன்னோம்?

இந்துக்கள் சார்பாய் காந்தியார் எங்கள் பழைய பழக்க வழக்கம் காப்பாற்றப்பட வேண்டும் என்றார். இந்துக்களில் பார்ப்பனரல்லாதார் சார்பாய் சென்ற ஏ. இராமசாமி முதலியார், பாத்ரோ ஆகியவர்கள் நீங்கள் கொடுக்கப் போகும் சுதந்திரத்தில் எங்களுக்கும் எங்கள் விகிதாச் சாரமாவது கிடைக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

இந்துக்களில் தீண்டப்படாதார் என்கின்ற வகுப்புக்காக தோழர் அம்பேத்கர், எங்கள் வகுப்புக்கு இவ்வளவு என்று பிரித்து கொடுத்து விட்டு பிறகு எவ்வளவு சுதந்திரம் வேண்டுமானாலும் கொடுங்கள் என்று சொன்னார். வெள்ளைக்காரர்கள் பிரதிநிதிகள் நாங்கள் இந்தியாவில் பயமின்றி வாழும்படியான ஏற்பாடுகள் செய்துவிட்டு அதற்கேற்ற சுதந்திரங்கள் கொடுங்கள் என்று சொன்னார்கள்.

கிறிஸ்தவர்கள் பிரதிநிதியும் அப்படியே சொன்னார், முஸ்லிம் பிரதிநிதியாகிய தோழர் ஜின்னா என்ன சொன்னார்? எங்கள் நிலை இன்னதென்று ஏற்பட்டுவிட வேண்டும். எங்கள் சமுக பாதுகாப்புக்காக நான் குறிப்பிட்டுள்ள திட்டங்கள் இந்துக்களால் ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டால் காந்தியார் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போடுகிறோம். அவரையே எங்கள் தலைவராகவும் ஒப்புக் கொள்கிறோம். எங்கள் சமுகத்தின் பேரால் என்ன வேண்டுமானலும் செய்து கொள்ள அனுமதியளித்து வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறோம் என்று சொன்னார்.

இவற்றிற்கெல்லாம் காந்தியாரின் பதில் என்ன? இவர்கள் எல்லோரும் தேசத் துரோகிகள், இவர்கள் எல்லாம் சர்க்கார் கூலிகள், நான் ஒருவன் தான் தேசபக்தன். இந்தியாவில் உள்ள சகல மதஸ்தர்களுக்கும், சகல வகுப்பார்களுக்கும் நான்தான் ஏக தலைவன். நான் கேட்கும் சுயராஜ்ஜியத்தைக் கொடுத்து விட்டால் பிறகு இவர்கள் விஷயத்தை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.

என்று சொன்னதோடு மாத்திரமல்லாமல் இவர்களுக்கு என் சம்மதியில்லாமல் அரசியலில் பிரதிநிதித்துவம் கொடுத்தால் நான் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போவேன் என்று சபதம் கூறி விட்டு வந்தார். வட்டமேஜை அஷ்ட கோணல் மேஜையாயிற்று.

இந்த நிலை சிறிதுகூட மாற்றமடையாத நிலையிலேயே இன்று சீர்திருத்தம் என்பது வந்துவிட்டது அதன்படி சட்டசபைகளுக்குப் போகவும், பதவிகளை ஏற்கவும் வட்டமேஜைக்கு சென்று இருந்த எல்லாக் கட்சியாரும் ஆசைப்பட்டு இப்போதிருந்தே போட்டியும் அடிதடியும் செருப்புப் பறப்புகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.

இன்றைய அரசியல் போராட்டத்தை முஸ்லிம்கள் இந்து முஸ்லிம் போராட்ட மென்கிறார்கள்.

ஆதி திராவிடர் மேல்ஜாதி- கீழ்ஜாதி போராட்டமென்கிறார்கள்.

நாம் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்ட மென்கிறோம்.

பார்ப்பனர்கள் சில கூலிகளையும் பேராசைக்காரரையும் சேர்த்துக் கொண்டு தேசபக்தர்கள் - தேசத்துரோகிகள் போராட்ட மென்கிறார்கள். ஒருவரும் இந்தியர் - பிரிட்டிஷார் போராட்ட மென்று சொல்லுவதில்லை.

உதாரணமாக சத்தியமூர்த்தியார் செல்லுமிடங்களில் எல்லாம் பார்ப்பனரல்லாதார் கட்சியை வெட்டி 500 கெஜ ஆழத்தில் புதைப்பதே தனது வேலை என்கிறார்.

அதோடுகூட பார்ப்பனர்கள் பொதுமக்களை மத விஷயத்தில் ஏமாற்றிப் பணம் பறித்து வாழ்வது போல் இந்த போராட்ட விஷயத்தில் தேசாபிமானப் பேர் வைத்துக் கொண்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து தங்கள் போரை பலமாய் நடத்துகிறார்கள்.

அவர்கள் சிறு கூட்டத்தார் பெருலாபம் கொள்ளை யடிப்பதால் அதற்கு கேடு வரும் போது கட்டுப்பாடாய் வேலை செய்ய சவுகரியமிருக்கிறது. நாம் பெருங் கூட்டத்தாராய் இருப்பதாலும், நம்மிலும் பல பிரிவுகள் இருப்பதாலும், பெரும்பாலான மக்கள் கல்வி அறிவற்றவர் களாய் இருப்பதாலும் பதவி பெற்றவர்களும் படித்தவர் களும் மதவிஷயத்தில் பார்ப்பனர்களுக்கு அடிமையாயும் சுயநலக்காரர்களாயும் இருப்பதாலும், தங்கள் யோக்கியதைகளுக்கு மீறின அந்தஸ்துக்களை இவர் அனுபவித்து விட்டதாலும், இனி எப்படியோ போகட்டு மென்றும், கவலையற்றும், ஒற்றுமையற்றும் கட்டுப் பாடற்றும் திரிவதோடு சமயத்திற்கு தகுந்தபடி நடந்து கொள்ளலாம் என்ற அலட்சியத்துடன் இருப்பதாலும் நமக்கு அச்சிறு கூட்டத்தாரின் எதிர்ப்பிலிருந்தும், விஷமத்திலி ருந்தும், சூழ்ச்சியிலிருந்தும் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.

தேசத் துரோகி யார்?

மற்றபடி நாம் எந்த விதத்தில் தேச துரோகிகள்? இந்த தேசத்துக்கு அந்நிய ஆட்சியென்பதை அழைத்து வந்த வர்கள் யார்? அவர்களுக்கு இங்கு என்றும் நிலை பெறும்படியான ஆட்சிக்கு கட்டடம் கட்டிக்கொடுத்து அவற் றிற்கு தூண்களாய் நின்றவர்கள் யார்? சரித்திரங்களை எடுத்துப் புரட்டிப் பாருங்கள்.

நாம் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையிலோ, ஆதிதிராவிடர் என்கின்ற முறையிலோ, முஸ்லிம்கள் என்ற முறையிலோ, இந்த தேசத்துக்கு துரோகம் செய்ததாக ஏதாவது ஒரு உதாரணத்தை எடுத்துக் காட்டட்டும், நாம் உடனே அதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளத் தயாராய் இருக்கிறோம்.

வெள்ளைக்காரர்களைத் தங்கள் தெய்வம் என்றும், விஷ்ணுவின் அம்சம் என்றும், அவர்களும் தாங்களும் ஒரே ஜாதி என்றும், அவர் முகச்சாயலும், தங்கள் முகச்சாயலும் ஒரேமாதிரி இருக்கிறது என்றும், அவர்களும் தாங்களும் ராஜியாய் போய் இந்த நாட்டில் நிரந்தரமாய் வாழவேண்டுமென்றும் நேற்று வரையில் சொல்லிக் கொண்டிருந்த கூட்டத்தார்கள் யார்? பார்ப்பனர்களா? அவர்கள் ஒழிந்த மற்றவர்களா என்று யோசித்துப் பாருங்கள்.

இன்று கூட பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட விடுதலை கேட்டாலும் சரி, அதற்கு ஆக என்ன தியாகம் செய்ய வேண்டுமானாலும் சரி, வெள்ளைக்கார பூண்டு இந்தியாவில் இருக்கக்கூடாது என்று தீர்மானித்தாலும் சரி. எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்கப்புறம் நடப்பதென்ன? அதில் எங்கள் பங்கு என்ன? என்பதை மாத்திரம் சொல்லிவிடட்டும் நாங்களும் கையெழுத்துப் போடுகிறோம். அதற்கு ஆக பார்ப்பனர்கள் எத்தனைப் பேர் சாகிறார்களோ அதற்கு இரண்டு பங்கு உயிர் கொடுக் கின்றோம், பிறகு யார் தேச பக்தர்கள்? யார் கோழைகள், யார் தேசத்தைக் காட்டிக் கொடுத்து கக்கூசில் போய் ஒளிந்து கொள்பவர்கள்? என்று பார்க்கலாம். அதைவிட்டு விட்டு உண்மைக் காரணம் என்ன என்பதை மறைத்துவிட்டு எங்களைக் கோழைகள் என்றும், தேசத்துரோகி என்றும் சொல்லிவிடுவதாலேயே எங்களை ஒழித்து விடுவது என்று நினைத்தால் அது முடியுமா? என்றுதான் கேட்கின்றேன்.

யார் கோழைகள்?

தோழர் சத்தியமூர்த்தியை விட நான் எதிலும் பயந்தவன் அல்ல. அவர் ஒரு தடவை ஜெயிலுக்கு போயிருந்தால் நான் 7, 8 தடவை ஜெயிலுக்குப் போயிருப்பேன். என் குடும்பமும் ஜெயிலுக்குப் போயிருக்கும். இத் தமிழ்நாட்டில் அரசியலில் கும்பல் கும்பலாக எதிர்வாதம் செய்யாமல் வலுவில் ஜெயிலுக்கு போவதற்கு வழிகாட்டினவன் நானும் என் குடும்பமுமாகும். அதுவும் சத்தியமூர்த்தி செல்வத்துக்கும், அவரது செல்வாக்குக்கும் அவர் பொது வாழ்வில் அடைந்திருக்கும் நிலைமைக்கும் நான் ஒன்றிலும் குறைந்தவனல்ல என்றாலும், அவர் ஏ கிளாஸ் கைதியாய் சிறையிலிருந்தார், நான் சி கிளாஸ் கைதியாய் மூத்திரச் சட்டியில் தண்ணீர் சாப்பிட்டுக் கொண்டு வேலை செய்துகொண்டு கோணிச் சாக்கில் படுத்துக்கொண்டு சிறையில் இருந்தேன். சென்ற வருஷம் எனக்குக் கிடைத்த தண்டனையின் போதுகூட எனக்கு சி கிளாஸ் கொடுக்க வேண்டும் என்று எனது ஸ்டேட்மெண்டிலேயே எழுதிக் கொண்டேன் அதை எனது தோழர் சி. ராஜகோபாலாச் சாரியார் அவர்கள்தான் அடித்து விட்டார்கள்.

பிறகு எனக்கு ஏ கிளாஸ் கொடுத்தார்கள். ராஜ மகேந்திரம் ஜெயிலில் எனக்குக் கொடுத்த கட்டில், மேஜை, மெத்தை எல்லாவற்றையும் வேண்டாம் என்று வாபீஸ் செய்துவிட்டு சி கிளாஸ் கைதியாகவே இருந்தேன். சாப்பாடு மாத்திரம் டாக்டர் சிபார்சின் மீது கோதுமை ரொட்டி கிடைத்தது. மற்றபடி நான் ஜெயிலில் எந்த உயர் நிலையிலும் இருக்க இல்லை, சவுகரியம் அடையவும் இல்லை, ஜெயில் சட்டத்தை எந்த வழியிலும் மீறவும் இல்லை. ஆகவே நாங்கள் சத்தியமூர்த்தியாரை விடவோ, மற்ற யாரையும் விடவோ பாப்பர் என்றோ கோழை என்றோ கஷ்டத்துக்குப் பயந்தவர்கள் என்றோ யாரும் சொல்லிவிட முடியாது.

பயனற்ற தியாகம்

காங்கிரஸ்காரர்கள் அடிபட்டார்கள், உதை பட்டார்கள், லட்சம் பேர் ஜெயிலுக்குப் போனார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்கின்றேன்.

இன்று அவை தப்பு என்று எண்ணவில்லை என்று சொல்வதானாலும் அதனால் பிரயோஜனமில்லை என்றும் அந்த மாதிரி தியாகத்தால் வெள்ளைக்காரர்கள் மனதை இளகச் செய்ய முடியவில்லை என்றும், இனி செய்யக்கூடாது என்றும், காங்கிரஸ் தீர்மானித்து விட்டதா? இல்லையா? என்று கேட்கின்றேன். காங்கிரஸ் 1933ல் தீர்மானித்தால் பார்ப்பனரல்லாதார் இயக்கம் 1920லேயே இப்படித் தீர்மானித்தது. இதில் என்ன தப்பு சொல்ல முடியும்? இதனால் பார்ப்பனரல்லாதார் கோழைகளாகி விடுவார்களா? தேசத் துரோகிகளாகி விடுவார்களா?

சம்பளம்

4000, 5000, 6000 சம்பளம் வாங்குவதைப் பற்றி குறை கூறப்படுகிறது. சம்பளம் வாங்குவதில் தப்பு என்ன? யார் வாங்குகிறார்கள்? பஞ்சாங்கக்காரனுடைய மகனும், முனிசிபாலிட்டி விளக்கில் படித்தவனுடைய மகனுமா, பிச்சை வாங்கி பிழைத்தவனுடைய மகனுமா, வாங்குகிறார்கள்? பெரிதும் தகுந்த யோக்கியதை உடையவர்களே வாங்குகிறார்கள்.

இந்த சம்பளம் யார் கேட்டது? யார் ஏற்படுத்தியது? இவர்கள் வாங்காவிட்டால் அது பார்ப்பனர்களுக்குப் போகாமல் ஏழை மக்களுக்குப் பயன்படுமா? அல்லது பார்ப்பனர்கள் வாங்காமல் இருப்பதாக தக்க ஜாமீன் கொடுப்பார்களா? அப்படி ஆனால் இன்றே ராஜினாமா செய்யலாம்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் மந்திரிகளுக்கு மாதம் 5500 ரூபாய் சம்பளம் ஏற்படுத்தியது பார்ப்பனர்களேயாகும். அவர்களுடைய காங்கிர சேயாகும். நைன்டீன் மிமோராண்டம் என்னும் 19 காங்கிரஸ் தலைவர்கள் கையொப்பமிட்டு பிரிட்டிஷாருக்கு அனுப்பிய காங்கிரஸ் அரசியல் திட்டத்தின் சாரமேயாகும்.

1920 வருஷத்துக்கு முன்னிட்ட காங்கிரசுகள் எல்லாம் 5500 ரூபாய் சம்பளம் கேட்டு ஆதரித்து விண்ணப்பம் போட்டிருக்கிறது. அதை இப்போது பார்ப்பனரல்லாதார் பெறுகிறார்கள். அவ்வளவுதானே ஒழிய, அது பார்ப் பனரல்லாதார் இயக்கத் தீர்மானமல்ல. அப்படி இருந்தும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தார்கள் மாதம் 1000 ரூபாய் குறைத்துக் கொண்டார்கள். சர். சி.பி. ராமசாமி அய்யர், சிவசாமி அய்யர், பி. ராஜகோபாலாச்சாரி, கே. சீனிவாச அய்யங்கார், வி. கிருஷ்ணசாமி அய்யர் ஒருநாள் ஆன போதிலும் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரி ஆகியவர்கள் வாங்கிய சம்பளங்களும் அதற்கு மேற்போகாததுந்தானே ஒழிய வேறில்லை.

அப்படியிருக்க, சம்பளத்தைப் பற்றி ஏன் இவ்வளவு பொறாமைப்பட வேண்டும்?

இவை அதாவது இந்தப்படியான சம்பளமும் உத்தியோகங்களும் பதவிகளும் பார்ப்பனர்கள் பார்த்தால் தேசாபிமானம், பார்ப்பனரல்லாதார் பார்த்தால் தேசத்துரோகம் என்று சொல்லுவதானால் அப்படிப்பட்ட தேசாபிமானத்தை வெட்டிச் சாய்த்து 1000 கெஜ ஆழத்தில் புதைத்தாக வேண்டும்.

காங்கிரசால்
என்ன முடிந்தது?

பார்ப்பனரல்லாதாரை வைது பழி சுமத்தி, சூழ்ச்சி செய்து இந்திய சட்டசபைக்குப் பார்ப்பனர்களும் அவர்கள் அடிமைகளுமே போய் இருந்தும், அங்கு என்ன செய்ய முடிந்தது? அவர்கள் காரியத்துக்குச் சிறிதாவது மதிப்புக் கொடுக்கப்பட்டதா?

அவர்களாவது மதிக்கப்பட்டார்களா? தோழர் சத்தியமூர்த்திக்கு அங்கு எவ்வளவு அவமானம் நடந்தது? என்ன செய்ய முடிந்தது? அப்படியிருக்க இனியும் ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதின் கருத்து என்ன? அது அரசியலுக்காகவா? வகுப்பு ஆதிக்கத்துக்காகவா? என்று கேட்கின்றேன்.

யார் வகுப்புவாதி?

வீணில் எங்களை ராட்சதர், அசுரர், தேசத்துரோகி, உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று வைவதால் ஒரு காரியமும் ஆகிவிடாது. இன்றைய நிலை உள்ளவரை நாங்கள் எதற்கும் பயந்து ஏமாந்து போக மாட்டோம்.

வகுப்புவாதி என்று எங்களைப் பேசிவிடுவதாலேயே நாங்கள் எங்கள் சமுக நலனை விட்டுக்கொடுத்து விட முடியாது. பார்ப்பனர்கள் தங்களைத் தவிர மற்ற எல்லோரையும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், ஆதி திராவிடர், நாம் ஆகிய எல்லோரையும் வகுப்புவாதிகள் என்கிறார்கள். எல்லாச் சமுகத்திலும் இரண்டொரு கூலிகளைச் சேர்த்துக் கொண்டு அவர்களை விட்டும், நம்மை வையச் சொல்லுகிறார்கள்.

இன்று காங்கிரசிலுள்ள பார்ப்பனரல்லாதார்களிலும் எனது தோழர் கல்யாண சுந்தர முதலியார் ஒருவர் தவிர மற்றவர்கள் எல்லோரும் வகுப்பு உரிமையை ஒப்புக் கொள்ளுகிறார்கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். தோழர்கள் வரதராஜுலு, சிதம்பரம் பிள்ளை முதலியவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆகையால் அந்தக் காரணம் வைத்து தேசாபிமானிகளையும், தேசத் துரோகிகளையும், பிரிப்பது தற்கொலையாகும்.

இன்று இந்தியாவில் தலைசிறந்த வகுப்புவாதிகள் பார்ப்பனர்களேயாகும். அவர்கள் வகுப்புவாதத்தால் நமக்குள் இருக்கும் நாம் அனுபவிக்கும் இழிவுகள் நீங்கவே நாம் வகுப்பு உரிமை கேட்கின்றோமே ஒழிய மற்றபடி வெள்ளைக்காரர்களுடைய கூலிகளாய் இருந்தல்ல.

காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் காங்கிரஸ் பார்ப்பனர் ஸ்தாபனம் அல்லவென்றும், காங்கிரஸ் வகுப்பு ஆதிக்கத்துக்குப் பாடுபடும் வகுப்புவாத ஸ்தாபனம் அல்லவென்றும் ருஜுப்பிக்கவேண்டுமானால் எல்லா வகுப்பாரையும் கூப்பிட்டு உட்காரவைத்து அவர்கள் பயத்தை நீக்க முயற்சித்து, முடியாவிட்டால் அவர்களுக்குக் கேட்கும் உரிமை கொடுத்து எல்லோரிடத்திலும் கையெழுத்து வாங்கிக் கொண்டும், அல்லது அது வேண்டாம் என்றால் பார்ப்பனர்கள் மாத்திரம் ஒன்று சேர்ந்து நாங்கள் இந்த அளவுக்கு மேல் எந்த உரிமையும் அனுபவிப்பதில்லை என்று ஒப்புக் கொள்ளட்டும். நாம் ராஜியாய் போகத் தயாராய் இருக்கின்றோம். அதை விட்டுவிட்டு தேசத்துரோக பூச்சாண்டியால் இனி ஏமாந்து போகமாட்டோம், நாங்கள் தோல்வி அடைவதாய் இருந்தாலும் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். உயிர் போகும் வரை போராடியே தீருவோம்.

------------------------------------- 9.6.1936 ஆம் தேதி சேலம் விக்டோரியா மார்க்கெட் மைதானத்தில் சேலம் கவுன்சிலர் தோழர் வி.ஆர். பெருமாள் செட்டியார் தலைமையில் அரசியல் நிலைமை என்பது பற்றி தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு. - "குடிஅரசு" - 14.6.1936

0 comments: