Search This Blog

16.9.10

பார்ப்பனர்கள் தமிழர்களா?

திராவிடர்களாகிய நம்மை ஓர் அஃறிணைப் பொருள் போல பார்க்கிறார்கள்
சென்னையில் தமிழர் தலைவர் பேச்சு

திராவிடர்களாகிய நம்மை பிராமணரல்லாதார் என்று ஓர் அஃறிணைப் பொருளைப் போல மதிக்கிறார்கள் என்று தந்தை பெரியார் கூறிய கருத்தை எடுத்துக்கூறி விளக்க மளித்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை-பெரியார் திடலில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தொடக்க விழா நிகழ்ச்சி 7.9.2010 அன்று நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

வரலாற்றிலே குறிப்பிடத்தக்க நாள்

இந்நாள் வரலாற்றுக் குறிப்பிலே ஏற்றப்பட வேண்டிய ஒரு சிறப்பு மிகுந்த நாள் என்பதை பெருமையோடு பதிவு செய்ய விரும்புகிறோம். (கைதட்டல்). காரணம் நீண்டகாலமாக நமக்கிருந்த குறைபாடு, தனித்தனியே ஆய்வு செய்து குறை களைப் பேசிக்கொண்டிருக்காமல் ஆக்கரீதியாக உடனடியாக திரிபு வாதங்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டியது தெளிவாக்க வேண்டிய விசயங்களை தெளிவாக்குவது.

ஆதாரபூர்வ கருத்துகளைச் சொல்ல

உலகத்திற்கு ஆதாரபூர்வமான கருத்துகளை கொண்டு செல்வது அதுவும் உலகம் இன்றைக்கு இணையதளம் மூலம் இணைக்கப்பட்டிருக்கக் கூடிய காலகட்டத்திலே நிச்சயமாக இந்த குறிப்புகள் இங்கே தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தினுடைய நோக்கங்கள் பணிகள்-Dravidian Historical Research Centre பணிகள் என்ன? இந்த ஆய்வு மய்யத்தி னுடைய மிக முக்கியமான நோக்கங்கள் என்பவை தெளிவாக்கப்படவேண்டும்.

மய்யத்தின் நோக்கங்கள்

இன்றைக்கு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்களாலே துவக்கப்பட்டிருக்கின்றது. எதிர்காலத்திலே அதனுடைய பயன் என்ன? அதனுடைய தாக்கம் என்ன? என்பதையும் மிகத் தெளிவாக நாம் காண இருக்கிறோம்.

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் பணிகளாவன:-

1. திராவிடர் வரலாற்று ஆய்வுக்கு ஊக்க மளிப்பது

2. திராவிடர் வரலாற்று ஆய்வாளர்களுக்கு பாராட்டு

3. திராவிடர் வரலாறுபற்றிய தவறான கருத்துகளுக்கும், திரிபுவாதங்களுக்கும் மறுப்பு 4. திராவிடர் வரலாறு பற்றிய கருத்தரங்குகள்

5. திராவிடர் வரலாறு பற்றிய ஆவணத் தொகுப்பு

6. திராவிடர் வரலாற்றைக் கூறும் பருவ இதழ் நடத்துதல் (Journal of Dravidian Historical Research)

7. திராவிடர் வரலாற்றில் ஆர்வமும், ஈடுபாடும் உள்ளவர்களை உறுப்பினர் ஆக்குதல் (மய்யத்தின் முடிவுக்குக் கட்டுப்பட்டது)

8. திராவிடர் வரலாறு பற்றிய அரிய நூல்களை மறுபதிப்புச் செய்தல், புதிய ஆய்வு நூல்களை வெளியிடல் ஆகியவையாகும்.

ஆய்வாளர்களுக்குப் பாராட்டு

திராவிடர் ஆய்வாளர்களுக்குப் பாராட்டு நடத்தினால்தான், உற்சாகப்படுத்தினால்தான், மற்றவர்கள் நம்மை ஆதரிப்பதற்கு இருக்கிறார்கள் என்ற கருத்துக்கு, எண்ணத்துக்கு வரவேற்பு இருக்குமேயானால் மேலும், மேலும் பலர் புதிதாக வருவார்கள். மற்றவர்கள் உற்சாகம் அடைவார்கள் என்பதற்காக ஆய்வாளர்களுக்குப் பாராட்டு நடத்த வேண்டும்.

எனக்கு முன்னாலே பேசிய பேராசிரியர் முனைவர் இராமசாமி அவர்கள்-திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தினுடைய தலைவர் அவர்கள் நீண்ட செய்திகளைச் சொன்னார்கள். வரலாற்றில் எப்படி உண்மைக்கு மாறான செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன, நமது செய்திகள் போதிய அளவுக்கு இடம்பெறாமல் எப்படி இருக்கின்றன என்பதை அவர்கள் சொன்னார்கள்.

ஆங்கிலத்திலும் எழுதுங்கள்

இங்கே பேசுகிறவர்கள் அந்த செய்திகளை தமிழில் மட்டும் அல்ல. உடனடியாக ஆங்கிலத்திலும் எழுதுங்கள். அவைகளை நூல்களாகக் கொண்டுவருவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

குயஉவரயட நுசசடிச என்பவைகளுக்கு உடனடியாக நாம் பதில் தரவேண்டும். எனவே எதையும் சூட்டோடு சூடாகச் செய்ய வேண்டும். பார்ப்பனர்களுக்கும், திராவிடர்களுக்கும் இருக்கிற மிகப்பெரிய வேறுபாடு படித்த மக்கள் மத்தியிலும் இதுதான். வருத்தத்தோடு இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட வேண்டும்.

பார்ப்பனர்களைப் பாருங்கள்

நீங்கள் ஆங்கில ஏடுகளை, பார்ப்பன ஏடுகளை எடுத்துப் பார்த்தால், நேற்று நடந்த செய்திக்கு காலையிலே ஆசிரியருக்குக் கடிதம் என்று இருக்கும்; அது எழுதப்பட்டக் கடிதங்களாகவும் இருக்கும், ஆசிரியருக்கு வந்த கடிதங்களாகவும் இருக்கும்; ஆசிரியர் கடிதங்களாகவும் இருக்கும். நாம் அது போல் கட்டுப்பாடாக இருக்கவேண்டும். எப்படி இருந்தாலும் உடனடியாக அதற்குப் பதில் எழுதி விடுவார்கள்.

நாங்கள் எழுதி அனுப்புகிறோம். ஆனால், அவர்கள் வெளியிடுவதில்லை என்று சொன்னால் நிச்சயமாக அதை எல்லாம் செய்வதற்குத்தான் இந்த ஆய்வுமய்யம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த அரங்கத்திலே பேசப்படுகின்ற கருத்துகள் கூட, ஓர் ஆவணமாக நிச்சயமாக வரும். இந்த உரைகள் எல்லாம் வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகின்றன.

பெரியார் வலைக்காட்சி மூலமாக உலகம் முழுவதும் இருக்கக் கூடியவர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு பதிவு செய்யப் படுகின்றன. இந்தப் பதிவுகள் பல இடங்களுக்கும் தெளிவாகச் செல்லக்கூடிய அந்த நிலை வரும்.

திராவிடத்தை அழிக்கவே....

எனவே சரியான நேரத்திலே இந்த ஆய்வு மய்யம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்திலே இரண்டு செய்திகளை முன்னிறுத்த வேண்டும்.

திராவிடர் என்ற பெயரே இருக்கக் கூடாது என்று, நம்முடைய இன எதிரிகள் அதற்காகவே இயக்கத்தைத் தொடங்கினார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் வரலாற்றை நீங்கள் பார்த்தீர்களேயானால் திராவிடர் என்ற வரலாற்றை அழிப்பதுதான் அந்த அமைப்பினுடைய நோக்கமாக இருக்கிறது.

குருஜி கோல்வாக்கரினுடைய பஞ்ச் ஆஃப் தாட்ஸ் என்ற நூலிலே சொல்லப்பட்டிருக்கின்றது. திராவிடம் என்பதெல்லாம் கற்பனைகள்; அதே நேரத்திலே இந்துத்துவா என்பது மிக முக்கியம் என்று சொன்னார்கள்.

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கம் 1925லே ஆரம்பிக்கப் பட்டது. ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பும் அதே ஆண்டுதான் ஆரம்பிக்கப்பட்டது.

இருவேறு முரண்பட்ட கலாச்சாரங்களைக் கொண்ட இரு அமைப்புகள். தி.மு.கவைப் பற்றி 2 பக்க வரலாறு கூட எழுதவில்லையே பிபின் சந்திரா என்ற வரலாற்று ஆசிரியர் என்று குறைபட்டு பேசினார் பேராசிரியர் அ.இராமசாமி. ஒன்று, அவர்கள் எழுதமாட்டார்கள்; எழுதினால் தவறான தகவல்களை எழுதுவார்கள். அல்லது திரிபு வாதங்களை எழுதுவார்கள்.

ஆனால் அதே நேரத்திலே பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ரொம்ப அழகான ஒரு செய்தியை அவருடைய நூலிலே எழுதியிருக்கின்றார்.

பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள் என்ன செய்வார்கள் என்றால் இருட்டடிப்பு செய்வார்கள். அந்த இருட்டடிப்பைத் திட்டமிட்டுச் செய்வார்கள். செய்தியாளர்களாக இருந்தால்கூட அதை திட்டமிட்டுச் செய்வார்கள் என்பதை எழுதிவிட்டு அவர் ஓர் அருமையான சொற்றொடரை ஆங்கிலத் தில் கையாளுகிறார்-அம்பேத்கர் அவர்கள். ‘The Conspiracy of Silence’ என்பது.

இவ்வளவு பெரிய புத்தகம் வந்து, அதைப் பற்றி ஒரு செய்தியும் போடாவிட்டால் யாருக்கும் தெரியாது. அதே நேரத்திலே மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவிலே ஒரு 7 பேர் சேர்ந்தால் அந்தச் செய்தி அகில உலகத்திற்கும்சென்று சேரக்கூடிய அளவுக்கு செய்திகள் வெளிவரும். அதற்கு என்ன சொல்லுகிறார்கள் அவர்கள்?

அங்கே இருப்பவர்களுக்காக மட்டும் பேச வில்லை. உலக மக்களுக்காகப் பேசுகிறார்களாம். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சரியான தருணத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆர். எஸ்.எஸ் மதவெறி சக்திகளான பா.ஜ.க ஆட்சியிலே இருக்கும் பொழுது வரலாற்றை முழுக்க முழுக்க காவிமயமாக்கியது. திராவிடர் என்ற ஒரு வரலாறே இல்லை என்று ஆக்கிவிட்டார்கள்.

வரலாற்றை மாற்றி எழுதியவர்கள்

மொகஞ்சதாரோ, ஹரப்பாவின் சின்னமான காளை மாட்டுச் சின்னத்திற்குப் பதிலாக குதிரைகள் என்று மாற்றினார்கள். ஏனென்றால், குதிரைகளோடு வந்தவர்கள் ஆரியர்கள் என்பதற்காக இதை மாற்றினார்கள்.

காளைகளையே குதிரைகளாக்கியவர்கள் பி.ஜே.பியினர். எனவே அவர்கள் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்வார்கள். இதற்கு எப்படி திட்டமிட்டுச் செய்தார்கள் என்றால் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களை அமெரிக்காவில் இருக்கின்ற பேராசிரியர்களை கூலிக்குப் பிடித்து எழுத வைத்தார்கள்.

இது எந்த இனத்திலும் கிடைப்பார்கள். எந்த இடத்திலும் கிடைப்பார்கள். எனவே திராவிடம், திராவிடர் என்று சொல்வது கூடாது என்று கருதுபவர்கள். தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் நாங்களும் தமிழ்மொழி பேசுவதால் தமிழர்கள் என்று சொல்லி உள்ளே வருவார்கள்.

1944ஆம் ஆண்டு திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது

1944ஆம் ஆண்டு சேலத்திலே திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. தென்னிந்திய நல உரிமைச் சங்கமும், நீதிக்கட்சியும் சேர்ந்து, அதன் பெயர் மாற்றப்பட்டு, அறிஞர் அண்ணா அவர்களுடைய பெயராலே திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றத் தீர்மானம் கொடுக்கப்பட்டு, சேலத்திலே நடைபெற்ற மாநாட்டிலே திராவிடர் கழகமாகப் பெயர் மாறியது.

சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணிம் பேச்சை...

சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் சேலம் மாநாட்டிலே கொடி ஏற்றி வைத்துப் பேசினார்கள். அவருடைய பேச்சை தமிழாக்கம் செய்தவர்கள்தான் நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள்.

நான் ஒரு 11 வயது மாணவனாக இருந்த நிலையிலே அந்த மாநாட்டுக் காட்சிகளை எல்லாம் மனதிலே பதிய வைத்துக்கொண்டவன். இதை ஒரு பெரிய வாய்ப்பாக நான் கருதுகின்றேன்.

திராவிடர் இயக்க வரலாற்றில் சேலம் மாநாடுதான் மிகப்பெரிய திருப்பு மய்யம். திராவிடர் கழகம் என்று கட்சிக்கு பெயர் மாற்றம் செய்த பொழுது தந்தை பெரியார் அவர்கள் அதற்கு விளக்கம் சொல்லுகின்றார்.

திராவிடம் என்று சொல்லுவதிலே கூட நம்முடைய இளைஞர்களை குழப்பிக்கொண்டிருக்கின்ற அமைப்புகள்கூட உண்டு. இன எதிரிகளிடம் எரிச்சரிக்கை தேவை. இன எதிரிகளிடமிருந்து நமது அமைப்பைக் காப்பாற்ற வேண்டும்.

இந்த இனத்தின் நன்மைக்காகப் பாடுபடுபவர் களைப் போல சொல்லிக்கொண்டு, அரசியலிலே புது அவதாரம் எடுப்பதற்கு முயற்சி எடுக்கும் சிலரும் கூட, இந்த இனத்தைச் சார்ந்தவர்கள் கூட இப்படி ஒரு முயற்சி எடுக்கிற நேரத்தில் அதற்குப் பதிலடி கொடுக்கத்தான் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் என்ற இந்த அமைப்புத் தொடங்கப் பட்டிருக்கிறது.

பெரியார் பேசுகிறார்

தந்தை பெரியார் பேசுகிறார் கேளுங்கள். எந்த ஒரு நாட்டு மக்களோ அல்லது சமுதாயமோ முன்னேற வேண்டுமானால், அந்த மக்களுக்கு அல்லது அந்த சமுதாயத்தவருக்குப் பொது உணர்ச்சியையும், ஒற்றுமை மனப்பான்மையையும் உண்டாக்கக் கூடிய இலட்சியச் சொல் அல்லது குறிச்சொல் ஒன்று தேவை என்பது விளங்கியது என்று தந்தை பெரியார் சொன்னார். அந்தக் குறிக்கோள்தான் திராவிடர் என்பதாகும். மேலும் தந்தை பெரியார் பேசுகிறார்:

பத்திரிகை பெயரே கட்சிக்கு

இந்த நாட்டு மக்களாகிய நமக்கு ஏராளமான குறைபாடுகள் இருப்பது கண்கூடு. அதை உத்தேசித்தே நமது பெரியோர்கள் 27 ஆண்டுகட்கு முன்னர் நீதிக்கட்சியைத் தோற்றுவித்தார்கள். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. இயக்கம் ஆரம்பிக்கப் பட்ட நாளில் நீதிக்கட்சி என்ற பெயர் இருந்ததில்லை. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படுவதுதான் அதன் பெயர்.

அந்தக் கட்சிக்காக ஏற்பட்ட ஆங்கிலப் பத்திரிகையின் பெயர் ‘Justice’ ஜஸ்டீஸ் என்பது. அப்பத்திரிகையின் பெயரே கட்சிக்கு நிலைத்து விட்டது. கட்சியின் தமிழ்ப் பத்திரிகைக்கு, திராவிடன் என்ற பெயரிருந்தும் நம் கட்சிக்கு திராவிடர் கட்சி என்ற பெயர் ஏற்படாமல் ஆங்கிலப் பத்திரிகையின் பெயராலே கட்சியின் பெயர் வழக்காற்றில் வந்து விட்டதற்குக் காரணம், ஆங்கில மறிந்தவர்களே அக்காலத்தில் நம்கட்சியில் செல்வாக்கும், ஆதிக்கமும் பெற்றிருந்ததுதான்.

அந்தக் காலத்தில் இந்தக் கட்சி எந்த மக்களின் நல்வாழ்விற்காக ஏற்பட்டதோ, அந்த மக்களுக்குப் பெயரென்ன என்ற பிரச்சினை எழுந்தது. ஆனால், திராவிடர் என்ற பெயருக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்காத காரணத்தால் பெரிதும் ஆந்திரர் ஒப்புக்கொள்ளாததால் தென் இந்தியர் என்று ஏற்படுத்திக்கொண்டார்கள். தென் இந்தியர், பார்ப்பனரல்லாதார் என்ற இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரண் பட்ட கருத்துகளைக் கொண்டுள்ளன. (விருது நகர் 11.6.1944 பெரியார் பேச்சு)

திராவிடர்

நாம் இந்தியர் என்பதை மறுக்கிறபடியாலும் இன உணர்ச்சியும், எழுச்சியும் பெற வேண்டுவதாலும் திராவிடர் என்னும் பெயரைக் கொண்டோம். இது புதிதாக உண்டாக்கியதல்ல, மறந்ததை நினைத்துக்கொண்ட தேயாகும். நம்மைக் குறிக்க பார்ப்பனரல்லாதார் என்கின்றோம். அல்லாதார் என்பதைச் சேர்த்துக்கொள்ள நாம் என்ன நாடோடிகளா? நாம் ஏன் அல்லாதார் ஆக வேண்டும்?

காபி குடிக்காமல் இருக்கின்றானா?

சிலர் திராவிடன் என்பது வடமொழி என்பார்கள். அதைப்பற்றிய கவலையோ, ஆராய்ச்சியோ தேவையில்லை. காபி என்பது ஆங்கிலச்சொல் என்று எவனாவது காபி குடிக்காமல் இருக்கின்றானா? மேலும் நமக்கு, திராவிடர் என்பது பெயரல்லவானால் வேறு எதுதான் பெயராகும்? பார்ப்பனரல்லாதார் என்பதா? பார்ப்பனரல்லாதார் என்று கூறிக்கொள்ளும் ஜஸ்டீஸ் கட்சிக்காரர்கள், எந்த வகையில் பார்ப்பனரிலிருந்து வேறுபடு கின்றனர்?

நடை, உடை, பாவனைகளில், மதத்துறையில் வேஷத்தில் பார்ப்பானை விட இரண்டு மடங்காக அல்லவா இருக்கின்றார்கள்? (கும்பகோணம் 26,27.11.1944 குடிஅரசு -பெரியார் பேச்சு)

ஓர் அஃறிணைப் பொருள் போல...

மக்கள், தேவர், நரகர், உயர்திணை; மற்றுயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை என்று தமிழ் இலக்கணங்களில் கூறப்படுவதுபோல், திராவிடர் களாகிய நம்மை, பிராமணல்லாதவர் என்று ஓர் அஃறிணைப் பொருளைப் போல மதித்திருக் கிறார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதற்கேனும் நம்மவருக்கு நேரமில்லையே!

(பெரியார் பள்ளிக்கூடத்திற்கோ, கல்லூரிக்கோ போகாதவரே தவிர, அவரைவிட ஆழமாக படித்து உணர்ந்தவர் வேறு யாரும் கிடையாது. பேரறிஞர் அண்ணா அவர்கள் அற்புதமாகச் சொன்னார். தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார் அவர்கள் என்று ரொம்ப அழகாகச் சொன்னார்)

திராவிடர் என்ற பெயருக்கு ஆதாரம் தேட வேண்டிய அவசியமேயில்லை. முதல் வகுப்புச் சரித்திரப் பாடம் முதல் பெரிய வரலாறுகள் வரையில் எல்லா நூல்களிலும் இதற்கு ஆதார மிருக்கிறது, பழக்க வழக்கங்களிலும் ஆதார மிருக்கிறது. கலாச்சாரங்களிலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன. (விடுதலை தலையங்கம் 18.9.1946)

டாக்டர் மு.வரதராசனார் நூலில்...

டாக்டர் மு.வரதராசனார் தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில் சொல்லியிருக்கின்றார். இந்திய நாடு முழுவதும் மிகப் பழங்காலத்தில் ஒரு மொழி பேசப்பட்டு வந்தது. அதைப் பழந்திராவிட மொழி என்று கூறுவர். 1911ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (Census) அந்த மொழி திராவிட மொழிகளோடு வைத்துக் கணக்கிடப் பட்டது.

வட இந்தியாவில் பிராகிருதம், பாலி முதலியவை செல்வாக்குப் பெற்ற பிறகு, பழந்திராவிட மொழி தென்னிந்தியாவின் அளவில் குறுகிவிட்டது. காலப் போக்கில் தென்னிந்தியாவிலும் ஆட்சி வேறுபாடு, மலை ஆறுகளின் எல்லை வரையறை முதலான காரணங்களால் ஒரு பகுதியில் வாழ்ந்த திராவிட மக்கள் பேசிய மொழிக்கும், மற்றொரு பகுதியில் வாழ்த திராவிடர்கள் பேசிய மொழிக்கும் இடையே வேற்றுமை வளர்ந்தது. போக்குவரத்து குறைந்த அந்தக் காலத்தில் அந்த வேற்றுமை. வளர்வது எளிது. அதனால் தெற்கே இருந்தவர்கள் பேசிய மொழி தமிழ் என வேறுபட்டது. திருப்பதி மலைக்கு வடக்கே வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தெலுங்கு என வேறுப்பட்டது. மைசூர்ப் பகுதியால் பேசிய திராவிட மொழி கன்னடம் என வேறுபட்டது. தென்மேற்கே கேரளத்தில் இருந்தவர்களின் மொழி மலையாளம் என வேறாக வளர்ந்தது. இவை வெவ்வேறு காலங்களில் இவ்வாறு தனித்தனி மொழிகளாக வளர்ச்சி பெற்றன. இந்த நான்கு மொழிகளுக்குள், நெடுங் காலமாக இலக்கிய வளர்ச்சி பெற்று வளர்ந்த மொழி தமிழ்.

திராவிடம் என்ற சொல் பிற்காலத்தில்...

இந்த மொழிகளைக் குறிக்கும் திராவிடம் என்ற சொல் பிற்காலத்தில் ஏற்பட்டது. அது தமிழ் என்ற சொல்லின் திரிபே. தமிழ்-தமிள, த்ரமிள, திரமிட, திரபிட, திரவிட என்று திரிந்தமைந்த சொல். அது ஒரு காலத்தில் கன்னடத்தைக் கருநாட்டுத் தமிழ் என்றும், துளு மொழியைத் துளுநாட்டுத் தமிழ் என்றும், மலையாளத்தை மலைநாட்டுத் தமிழ் என்றும் சிலர் குறிப்பிட்டது உண்டு. ஆனால் இன்று திராவிடம் என்ற சொல், அந்த மொழிகள் தனத்தனியே பிரிவதற்கு முன் இருந்த பழைய நிலையக் குறிப்பதற்கும், இவை ஓர் இனம் என்று கூறி அந்த இனத்தைக் குறிப்பதற்கும் உரிய சொல்லாகப் பயன்படுகிறது என்று மு.வ.சொல்லி யிருக்கின்றார்.


---------------------தொடரும் - “விடுதலை” 15-9-2010


******************************************************************************


திராவிடர்கள் என்பவர்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு

திராவிடர்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் என்ற வரலாற்றுத் தகவலை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கினார்.

சென்னை-பெரியார் திடலில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தொடக்க விழா நிகழ்ச்சி 7.9.2010 அன்று நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை யின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள், வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியிருக்கின்றார். அதிலும் நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். தந்தை பெரியார் மேலும் சொல்லுகிறார்.

மனுதர்ம நூலில் திராவிடர் பெயர்

திராவிட மொழிபேசும் திராவிடரைப் பற்றிச் சிறிது கூற ஆசைப்படுகிறேன். திராவிடம் என்பது நமது நாட்டினுடைய பெயராகும். திராவிடர் என்பதை நம்மில் சிலர் மறுக்கிறார்கள், வெறுக்கிறார்கள். திராவிடர் என்பது என்ன, நாம் கற்பித்த ஒரு பெயரா? இது இன்று நேற்று ஏற்பட்டதல்லவே. ஆரியர் என்ற பெயர் தோன்றிய அன்று ஏற்பட்ட பெயர்தானே திராவிடர் என்பது? நீக்ரோ, மங்கோலியர் என்ற பெயர்கள் ஏற்பட்டதும் அன்றுதானே?

திராவிடர் என்ற பெயரை மனுதர்ம நூலில் காணலாமே! இராமாயணத்தில், பாரதத்தில் கூட இதற்கு ஆதாரம் உண்டே! இந்த நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரைக்கும் இருந்துவரும் போராட்டமெல்லாம் ஆரியர்-திராவிடர் போராட்டமே ஒழிய, வடமொழி-தென்மொழி போராட்டமல்லவே, இதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் காட்டலாமே என்று சொல்லுகின்றார்.

இந்த இயக்கத்தை நடத்துவதிலே அவ்வப் பொழுது என்னென்ன சூழலோ-அதற்கெல்லாம் தந்தை பெரியார் பதில் சொல்லியிருக்கின்றார். பெரியாருடைய கருத்துகளைப் புரட்டினாலே உடனடியாக விடை கிடைக்கும். அதற்கு எந்தக் குழப்பமும் தேவையில்லை.

திராவிடர் இனப் பெயர்

அய்யா சொல்லுகிறார். தமிழர் என்பது மொழிப்பெயர். திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் யாவரும் தமிழர் என்ற தலைப்பில் கூட முடியும். ஆனால், தமிழ் பேசும் அத்தனை பேரும் திராவிடர் ஆகிவிட முடியாது. இனத்தால் திராவிடன் ஒருவன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாயிருந்தாலும், எந்த மொழி பேசுபவனாயிருந்தாலும் அவன் திராவிடர் என்ற தலைப்பில்தான் சேருவான். ஆகையால், திராவிடமொழி தமிழ் என்ற காரணத்திற்காக, தமிழ் பேசும் திராவிடன் அல்லாத ஒருவன் மொழி காரணமாக மட்டுமே தன்னைத் திராவிடனென்று கூறிக்கொள்ள முடியாது. தமிழர் என்றால் பார்ப்பானும் தன்னைத் தமிழனென்று கூறிக் கொண்டு நம்முடன் கலந்துகொண்டு மேலும் நம்மை கெடுக்கப் பார்ப்பான். தமிழர்கள் பட்டியலிலே பார்ப்பனர்களை சேர்ப்பீர்களா இல்லையா? அதற்குப் பதில் சொல்லுங்கள். சேர்ப்போம் என்றால், நீங்கள் அன்றைக்கே ஒழிந்தீர்கள் என்று பொருள் என்று அய்யா அவர்கள் சொல்லுவார்கள்.

பார்ப்பனர் தமிழர் அல்லர்

மறைமலை அடிகள் எழுதிய நூலிலே எழுதியிருக்கின்றார். பார்ப்பனர் தமிழர் அல்லர் என்று. ஆகவேதான் திராவிடர் என்பது பாதுகாப்பானது தெளிவானது.

தந்தை பெரியார் சொல்லும்பொழுது சொன்னார்: திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி, மானமும்-அறிவும் உள்ள மக்களாக அந்த மக்களை ஆக்குவதுதான். தன்னுடைய பணி என்பதை மிகச் சிறப்பாக தெளிவாக எடுத்துச் சொன்னார்.

அது மட்டுமல்ல; இன்னும் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஒன்றிரண்டை மட்டும் எடுத்துச்சொல்கின்றேன். சிந்து வெளி நாகரிகத்தைப் பற்றிச் சொல்லுகிறார்கள். எழுதுகிறார்கள். ஆனால் திராவிடர் நாகரிகத்தை மறுக்கிறார்கள். அது திராவிடர் நாகரிகம் அல்ல; ஏதோ ஒரு நாகரிகம் என்று சொல்லுகின்றார்கள்.

ஆபே டூபே நூல்

எனவே சரியானபடி இதற்கு பதில் அளிக்க வேண்டும். உங்களுக்கெல்லாம் தெரியும் அண்ணா அவர்கள் ஆரிய மாயை எழுதியதற்கு அடிப்படை யான நூல் Hindu Manners, Customs and ceremonies by Abbe J.A.Dubois பிரெஞ்சு பாதிரியார் ஆபே டூபே எழுதிய ஒரு நூல்.

முதலாவது சாப்டரில் எழுதியிருக்கின்றார். ‘‘However, there are several classes of sudras that exist only in certain provinces. Of all the provinces that I lived in, The Dravidian, or Tamil, Country is the one where the ramification of caste appeared to me most numerous’’ இது திராவிட தேசம் என்றே சொல்லுகின்றார்.

அய்யா கேட்டார்: சரி, பார்ப்பனரல்லாதார் என்பதற்கு பதிலாக சூத்திரர் கழகம், பஞ்சமர் கழகம் என்று வைத்துக்கொள்ளலாமா? என்று கேட்டார். இப்படி வைத்தால் அதைவிட அவமானம் வேறு என்ன இருக்க முடியும்? ஆகவே, வரலாற்று ரீதியாக திராவிடம் இருக்கிறதே, அது கை கொடுக்கிறதே அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா? என்று கேட்கின்றார்.

பார்ப்பனர் பழக்க வழக்கங்கள்

பார்ப்பனர்களுடைய பழக்க வழக்கங்கள் என்ன? அவர்கள் என்னென்ன முறைகளைக் கையாளுவார்கள்? பக்கம் 144இல், இந்து மேனர்ஸ் கஸ்டம்ஸ் என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கிறது-THE SAM-KALPA

The Chief Preparatory Ceremony amongest the Brahmins is the Sam-Kalpa, which means literally intensive contemplation.

பார்ப்பனர்கள் யாகம் செய்வதற்கு முன்னாலே, மந்திரம்சொல்லுவதற்கு முன்னாலே என்ன செய்ய வேண்டும்?

1.Of Vishnu 2.He must think of Brahma 3. He must think of the Avatara 4.He must think of Manu. 5. He must think of the Kali-Yuga 6. He must think of Jambu-Dwipa 7.He must think of the great king Bharata 8. He must think of the side of the Mahameru 9. He must think of the corner of the world called Agni diku 10. He must think of the Dravida Country where the Tamil (Arava) language is spoken.

-என்று இப்படி 19 வகை சொல்லப்பட்டிருக்கின்றது. உன்னுடைய எதிரிகளான திராவிடர் களைப்பற்றி, தமிழர்களைப்பற்றி எண்ணிப்பார். அவர்களை எல்லாம் அழிக்க வேண்டுமென்று நினை. அதற்காகத்தான் இந்த யாகம், மந்திரங்களை சொல்லுகிறாய் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்பது பார்ப்பனர்களுடைய வழக்கம்.

பாபா சாகேப்பின் ஆதாரக் கருத்து

அடுத்து பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ‘‘The Untouchables’’ by Dr.B.R.Ambedkar என்ற ஆங்கில நூலில் சொல்லுகிறார்:

தீண்டத்தகாதவர்கள் யார்? என்ற தலைப்பிலே மிக முக்கியமான ஒரு செய்தியைச் சொல்லுகின்றார். திராவிடர்கள் என்பவர்கள் இந்தியா முழுவதும் பரவி இருந்தார்கள். அம்பேத்கர் அவர்கள் ஆய்வு பூர்வமாக ஆராய்ச்சியான கருத்துகளை எடுத்துச் சொல்லுகின்றார். ‘The Untouchables’ என்று அம்பேத்கர் அவர்கள் எழுதிய நூலில் 66ஆம் பக்கத்தில் உள்ள செய்தியைப் படிக்கிறேன்.

‘‘Who are the Dravidians? Are they different from the wages? or are they two different names for a people of the same race?

The popular view is that the Dravidians and wages are names of two different races. This statement is bound to shock many people. Nonetheless, it is a fact that the term Dravidians and Nagas are merely two different names for the same people’’.

ஒரே மக்களுக்காக இரண்டு வகையாக அழைக்கப்பட்ட பெயர்கள்தான் நாகர், திராவிடர் என்பது. நாகர்கோவில், நாகப்பட்டினம், நாகமங்கலம் என்று நாகர், நாகர் என்று வருவதெல்லாம் திராவிடர்க்குரியது. ஆராய்ச்சியாளர்கள் தனியே ஆராய்ச்சி செய்யக்கூடிய செய்தியாகும். மேலும் அம்பேத்கர் சொல்லுகிறார்:

It is not to be dinied that very few will be prepared to admit the proportion that the Dravidians and wages are merely two different names for the same people and fewer that the Dravidians as Nagas occupied not merely south India, but that they occupied the whole of India south as well as North. Nonetheless, these are historical truths’’.

நாகாலாந்து கிழக்கு பகுதியில் இருக்கிறது. இந்தியா முழுவதும் திராவிடர்கள் இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் அம்பேத்கர் அவர்களுடைய ஆய்வுதான்.

திராவிடர் என்பது...

ஆகவே, திராவிடர் என்பது வரலாற்றுப் பூர்வமான பெயர். இது வரலாற்று ரீதியானது மட்டுமல்ல, பன்னாட்டு ரீதியாகவும் வந்த பெயர். திராவிடர் என்பதுதான் சமுதாயத்தில் அனை வர்க்கும் அனைத்தும் என்பதை வலியுறுத்தக் கூடியது. ஆகவே, வடநாட்டில் அசுரர்கள் என்று சொன்னாலும் ஒன்றுதான். நாகர்கள் என்று சொன்னாலும் ஒன்றுதான்; திராவிடர்கள் என்று சொன்னாலும் ஒன்றுதான்.

ஆகவே இதை வைத்துத்தான் திராவிடர் இயக்கங்கள் உருவாகின. இந்த இயக்கங்கள் செய்த பணிகளால்தான் சமுதாயத்தில் இவ்வளவு பெரிய புரட்சிகள். சந்திரயான் பற்றி ஆராய்ச்சி செய்யக்கூடிய நம்முடைய மயில்சாமி அண்ணா துரை அவர்களை நினைத்துப் பார்த்தாலே நம்மவர்களின் திறமை என்ன என்பது விளங்கும்.

நாட்டு ரகசியங்கள்-பாட்டில் விஸ்கிக்கு...

இன்றைக்குத் தமிழர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. அறிவு இருக்கிறது. ஆனால், பார்ப்பனர்களின் திறமை என்ன? ஒரு பாட்டில் சாராயத்திற்காக இந்த நாட்டினுடைய ரகசியத்தையே எதிரிகளுக்குக் காட்டிக்கொடுத்தார்கள்.

எதிரிலே அறிஞர் பெருமக்கள் ஏராளம் இருக்கின்றீர்கள். வெளியிலே ஏராளமான பேராசிரியர்கள் இருக்கிறார்கள். ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.

அவரவர்கள் இன்னின்ன பகுதியை நான் எழுதுகிறேன் என்று எடுத்துக்கொண்டு செய்தால்தான் விரைவிலே நல்ல ஆவணமாக, தொகுப்பு ஆவணமாக வரும். ஆகவே, இந்தப் பணிகள் சிறக்க வேண்டும். பல இடங்களுக்கும் இந்த மாதிரிபிரச்சாரம் பரவ வேண்டும். மக்களிடையே பரவ வேண்டும். அடுத்து இந்த நிகழ்வு மதுரையில் நடைபெறுவதாக இங்கே தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். எதுவாக இருந்தாலும், ஒரு கால வரையறை வைத்து நாம் செய்ய வேண்டும்.

சரக்கு இருக்கிறது

ஆகவே, நமக்கு மறுப்பு எழுதுவதற்கு சரக்கு இருக்கிறது. ஆற்றலாளர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். ஆகவே, அற்புதமான பணியைச் செய்த பேராசிரியர்களுக்குப் பாராட்டு. அதே நேரத்திலே தக்காரைக் கொண்டு இன்றைக்கு நாம் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தைத் தொடங்கியி ருக்கின்றோம். இந்த வரலாற்று ஆய்வு மய்யத்தைத் தொடங்கி வைக்க பல்வேறு பணிகளுக்கிடையிலே நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் வந்திருக்கிறார்கள். எங்களுக்கெல்லாம் மெத்த மகிழ்ச்சியைத் தருகிறது. அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. பேராசிரியர் அவர்கள் எங்கு பேசினாலும் அது திராவிட சமுதாய எழுச்சிக்குப் பயன்படக்கூடியதாக இருக்கும். ஆகவே, இந்த மய்யத்தைத் துவக்கி வைத்து உரையாற்றுமாறு அனைவர் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த அமைப்பு வளர நிதி உதவி அளித்தார்கள். இது அரசியல் சார்பற்ற அமைப்பு. ஆகவே, இந்த அமைப்புக்கு நன்கொடை வழங்குங்கள். இதற்கு வரிவிலக்கு உண்டு. பலபேர் உதவுவதற்குத் தயாராக இருப்பார்கள். நிதி ஆதாரத்தைச் செய்வதற்கு நீங்கள் நல்ல திட்டங்களையும் உருவாக்க வேண்டும்.

அடிக்கடி நீங்கள் கூடவேண்டும்.இரண்டு நிபுணர்கள் சேர்ந்தால் அவர்களிடம்3 கருத்துகள் இருக்கும். ஒத்த கருத்துள்ளவர்கள்தான் இங்கே இருக்கிறார்கள். சிந்திப்பதிலே, அணுகுமுறையிலே வேறுபாடு இருக்கலாம். அதை செயல்படுத்த ஒரே கோணத்திலே நாம் சிந்தித்து செயலாற்றுவோம். மானமிகு, மாண்புமிகு பேராசிரியர் அவர்களை அடுத்து உரையாற்ற அழைக்கின்றேன். -இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


----------------------- “விடுதலை” 16-9-2010

1 comments:

smart said...

நல்ல கட்டுரை எனது சிந்தனையும் சரியா? என்று பாருங்கள்
பெரியார் பிறந்த நாள் சிந்தனைகள்