பாக் இந்தியா போர்ப் புரளிகளைப் பத்திரிகைகள் வெளியிடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நான் இக்கூட்டத்திற்கு வரும் சமயத்தில் டில்லியில் பலமான வதந்தியொன்று கிளப்பிவிடப்பட்டிருப்பதை அறிந்தேன். அதாவது, இந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாக் இந்தியா போர் தொடங்கப் போகிறதென்று டில்லியில் பேச்சாகவுள்ளது. இது எந்த ஜோதிடர் கிளப்பிவிட்ட புரளி என்பது எனக்குத் தெரியவில்லை. சில நாட்களுக்கு முன், டில்லி செய்தித்தாளொன்றும் இதேமாதிரி வதந்தியைக் கொட்டை எழுத்துத் தலைப்புடன் தந்து வெளியிட்டிருந்தது. பத்திரிகையை அதிகம் விற்க இம்மாதிரிச் செய்திகளை வெளியிடுகிறார்கள் போலும்.
சில பஞ்சாப் பத்திரிகைகளும், சில பம்பாய் பத்திரிகைகளும் இந்த வதந்திகளை வெளியிடுகின்றன. இந்த ஆசிரியர்களின் மனம் மெய்மையில் பாய்வதில்லை போலும். இந்த வதந்திகளின் விளைவாக அமிர்தசரசில் அவதி ஏற்பட்டுள்ளது. இந்த முட்டாள் தனமெல்லாம் எதற்காக?
இந்த நாடு எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஜோதிடர்களை நம்பிக் கிடக்கப்போகிறதா? ஜோதிடர்களின் கருணையால் பிழைக்கப்போகிறதா? பின்னால் நடக்கப் போகும் நிகழ்சிகளைப்பற்றி நிமித்தம் கூறக்கூடிய சக்தி இந்த ஜோதிடர்களுக்கு இருந்திருக்குமேயாயின் அவர்கள் முதலில் தங்கள் சொந்த வாழ்க்கைக்கு வழியைக் கணித்தறிந்துகொண்டிருக்க வேண்டும், பிறரிடம் பிச்சைக் காசுக்குக் கையேந்திநிற்பதை விடுத்து, பிழைக்கும் வழியையறிந்து நடந்து கொண்டிருக்கவேண்டும். இந்த உண்மையை மக்கள் திட்டவட்டமாக அறிந்து ஆராய்ந்து பார்த்து நடந்துகொள்ள வேண்டும்.
மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஜோதிடர்களின் நிமித்தத்தை நம்பிக் கிடப்பது அறிவுகெட்ட முட்டாள்தனத்தின் உச்ச நிலையாகும். இந்நாடு நல்வாழ்வு மிக்க நல்ல நாடாகவிருக்கப்போகிறதா? அல்லது யாரோ ஒரு ஜோதிடன் ஆபத்து வரப் போகிறது என்று சொல்லிவைத்தது கேட்டு திகில் கொண்டு ஓட்டமெடுக்கப் போகிறதா?
செப்டம்பர் 9 ஆம் தேதி பாக்_இந்தியா போர் தொடங்கப் போகிறதென்று இந்த ஜோதிடர்கள் சொல்லி வைத்திருக்கிறார்களே பாருங்கள், இந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சண்டை தொடங்கப் போகிறதா என்று. அன்று சண்டை ஏற்படாவிட்டால், இனிமேல் இந்த ஜோதிடப் புளுகுகளை நம்பும் குருட்டு நம்பிக்கைப் போக்கைக் கைவிடுங்கள். இத்தகைய வதந்திகள் இனச்சச்சரவுகளைத்தான் மூட்டிவிடும். எனவே, மக்கள் இத்தகைய வதந்திகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
(டில்லி ராஜ்ய காங்கிரசுக் கமிட்டி ஆதரவில் கரோல்பாகில் நடந்த பொதுக் கூட்டத்தில் பண்டித நேரு பாகிஸ்தான் போர்பற்றிய வதந்திகளைக் கண்டித்துப் பேசியபோது குறிப்பிட்டது)
----------------"விடுதலை" 08.09.1951
0 comments:
Post a Comment