Search This Blog

1.9.10

தமிழனுக்கு உச்சிக்குடுமி எப்படி வந்தது!


ஆரியர் பழக்க வழக்கமும் அவர்களது மதம், கடவுள் ஆகியவைகளும் அவை பற்றிய யோக்கியத் தன்மை, சக்தி, நடப்பு முதலியவைகளும் தமிழர்களாகிய நமக்குப் பெரிதும் பொருத்த மற்றவை என்பது நமது கருத்தாகும்.

இதை மறுத்து அவற்றுள் எதையாவது நமக்கு பொருத்தமுள்ளதென்றும் அவை நம்முடையவையே ஒழிய ஆரியருடைய தல்லவென்றும் நம் சைவப் பண்டிதர்களைப் போல் தமிழர் யாராவது ஆதாரத்தோடு வழக்காடுவார்களே யானால், அப்படி இருந்தாலும் அவை அந்த(அதாவது மக்கள் இன்றைய அறிவுபெறாத அந்த) காலத்தில், அதுவும் ஒரு சமயம் அன்று இருந்த மக்களுக்குப் பொருத்தமாயிருந்தாலும் இருக்கலாமே ஒழிய இந்தக் காலத்திற்கு அவை கண்டிப்பாய் ஒதுக்கித்தள்ள வேண்டியவைகளேயாகும் என்பதும் நமது அபிப்பிராயம்.

அதற்காக வேண்டியே, அதாவது அவைகளை நம் மக்கள் உணர வேண்டுமென்பதற்காகவே அவைகள் பற்றிய ஆதாரங்களை ஆரியர்களாலும், ஆரியர்களின் கொள்கைகளுக்கும் அவர்களது மதம், கடவுள்களுக்கும் அடிமைப்பட்ட நம் பண்டிதர்களாலும், கற்பிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்தே சில எடுத்து, அடிக்கடி குடிஅரசில் எழுதி வரப்படுகிறது.அந்தப்படி இவை சம்மந்தமாக குடிஅரசில்எழுதி வந்ததும், வருவதுமான சேதிகள் கண்டிப்பாக ஆரியர்களால் ஏற்படுத்தப்பட்ட வடமொழி ஆதாரங்களிலிருந்தும், அவைகளை ஆரியர்களாலேயே மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் மொழி பெயர்ப்புகளிலிருந்தும், மற்றும் அவற்றை நம் தமிழ்ப் பண்டிதர்களால் மொழிபெயர்த்தோ அல்லது ஆரியர் மொழி பெயர்த்ததைக் கவிகளாகப் பாடிய கவிகளிலிருந்தோ எடுத்துக் கையாளப்படுபவைகளே யல்லாமல் கற்பனையாக எந்தச் சங்கதியும் குறிப்பிடப்படுவதில்லை என்பதை மறுபடியும் வாசகர்களுக்கு உணர்த்துகிறோம்.

பொதுவாக ஆரிய நாகரிகத்தையோ, அவர்களது பழக்க வழக்கங்களையோபற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமானால் அவர்களுக்குள் ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டு முறையோ, ஒழுக்கமோ, நீதியோ, பகுத்தறிவு உணர்ச்சியோ ஏதும் இருந்ததாகக் காணப்படுவதற்கு இல்லை. அக்கால மானாபிமானத்துக்கும் இக்கால மானாபிமானத்துக்கும் சிறிதும் சம்மந்தமில்லை என்பதாகவும் தெரிகிறது. ஆகவே ஆரியர்கள் சகல துறைகளிலும், அக்காலத்திய ஆரியர் வாழ்வில் பூரண சுயேச்சையோடு எவ்விதக்கொள்கையும் இல்லாமல் அவரவர்கள் இச்சைப்படி விலங்குகள் போல் வாழ்ந்து வந்ததாகவே தெரிகிறது. அதனால்தான் வள்ளுவர்.

தேவரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்

என்று பாடினார் போலும்(தேவர்ஆரியர்). நாளாவட்டத்தில் அவர்கள் இந்தக் கால தேச வர்த்தமானத்திற்குத் தகுந்தபடி எது மேன்மை யாகக் கருதப் படுகிறதோ அதைத் தங்கள் பழக்க வழக்கங்களாக மாற்றி அமைத்துக் கொண்டு வந்து இன்றைய நிலைமைக்கு அவர்கள் வந்திருக்கக் கூடும் என்றாலும் வேத, புராண, இதிகாச காலங்களில் அவர்கள் மிருகப் பிராயத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதே அவற்றிலிருந்து தெள்ளென விளங்குகின்றதாகும்.

நம் பண்டிதர்கள் பெரிதும் அவற்றைத் தங்கள் சமயத்திற்கும், தங்கள் கடவுள் நடப்புக்கும் பொருத்திக்கொண்டதால் அந்தக் கேவலமான சேதிகளை வெறுக்க யோக்கியமற்றவர்களாகி மூடிவைத்துத் தொல்லை கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். அதனாலேயே அவை நம்மாலும் வெறுக்கப்படாமல் உயர் சமயமாகப் போய்விட்டதெனலாம்.

அந்தக் காலத்தில் கணவன், மனைவி என்கின்ற கூட்டு வாழ்க்கை ஒப்பந்தம் இன்று இருப்பதில் 100இல் ஒரு பங்கு இருந்ததாகக்கூட தெரியவில்லை.

அந்தக் காலத்து நாணயம், ஒழுக்கம், நம்பிக்கை, நல்லெண்ணம், பிறர்நலம் பேணுதல் முதலிய நற்குணங்களும் இக்காலத்தவைகளுக்கு மிகமிக மாறுபட்டதும் தாழ்ந்ததுமாகவே இருந்து வந்திருக்கிறது. அந்தக்கால ஆரியர்களுக்கு ஏதாவது ஒரு சமயம் இருந்திருப்பதாகக்கூடத் தெரியக்காணுவ தில்லை. அவர்களுக்கு அப்போது ஏதாவது ஒரு கடவுளே, பலகடவுள்களோ இருந்திருந்ததாகவும் தெரியவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பஞ்ச பூதங்களையும், சூரியன், சந்திரன் முதலியவைகளையும் மனிதனைப்போல் உருவகப்படுத்திக்கொண்டு தங்களுக்கு வேண்டியதை நல்கும்படி வேண்டிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்படி வேண்டியிருப்பதிலும் ஒரு கவனிக்கத்தக்க விஷயமென்னவென்றால், தங்களுடைய ஒழுக்க ஈனங்களையும், மோசடிகளையும் அவைகளுக்கும் கற்பித்து இருக்கின்றார்கள்.

ஆரியர்களின் முதல் ஆதாரம் வேதம் என்பதாகத்தான் தெரிகிறது. அந்த வேதம் பெரிதும் விபச்சாரம், மதுமாம்சம் அருந்துதல், தாங்கள் அல்லாதவர்களை (ஆரியரல்லாதவர்களை) இழிவாய்ப் பேசுவதும், அவர்களை அடியோடு அழிக்கவும், தங்களுக்கு ஏவலாளாகக் கொள்ளவும், பழிவாங்கும் தன்மைபோல் கொடுமை செய்வதுமான காரியங்களையே கொள்கையாகவும், பிரார்த்தனையாகவும் கொண்டிருக்கின்றன. வேதத்திலும் அதன் பின் ஏற்பட்ட வேதசாரமான புராணக்கதை, காவிய இதிகாசங்களிலும் பார்த்தால் தகப்பன் மகன், அண்ணன்தங்கை என்கின்ற பேத முறைகூட இல்லாமலும், மிருகம், மக்கள் என்கின்ற இன பேதம்கூட இல்லாமலும், ஆணும், ஆணுமாகவும் இன்னமும் எத்தனையோ விதமாக இயற்கைக்கு விரோதமான சேர்க்கையுடன் இருந்து வந்திருப்பதாகப் பல இடங்களில் காணப்படுகின்றன.

இவைகளையெல்லாம் ஏதோகாட்டுமிராண்டி காலத்துக் கொள்கை என்றும், எந்த சமூகத்திலும், மனிதன் மிருகப் பிராயத்தில் இருந்த காலத்தில் இப்படித்தான் இருந்திருக்க முடியும் என்றும், ஒருவிதத்தில் சமாதானம் செய்து கொள்ளலாம் என்றாலும், மேற்கண்ட விஷயங்களைக் கொண்ட ஆதாரங்களை இன்று ஆரியரும், தமிழரும், தங்கள் தங்கள் சமய ஆதாரங்கள் என்றும் தங்களால் போற்றிப் பாராட்டிப் பாதுகாக்க வேண்டிய புண்ணிய சரித்திரங்கள் புண்ணிய காரியங்களில் என்றும் பிரசங்கித்துப் பிரச்சாரம் செய்கின்றார்களே இதற்கு என்ன சமாதானம் என்பது நமக்கு விளங்கவில்லை. சிவன், விஷ்ணு, பிரம்மா, சுப்ரமணியன்,இராமன் கிருஷ்ணன் முதலிய கடவுள்களைப் பற்றிப் பிறகு யோசிப்போம். அக்கினி, வாயு, வருணன் முதலிய பஞ்சபூதக் கடவுள்களைப்பற்றியும் பிறகு யோசிப்போம். இந்திரன் என்கின்ற கடவுளைப்பற்றி ஆரியர்கள்தானாகட்டும், தமிழர்கள்தானாகட்டும் அக்கடவுளின் கதைகளையும், பண்டிகைகளையும் எதற்காக கொண்டாட வேண்டும் என்று கேட்கிறோம்.

இந்திரவிழா சிலப்பதிகாரத்திலேயே கொண்டாடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ஆரியர்கள் தவிர தமிழர்களும் ஆதிகாலத்தில் இருந்தே இந்திரவிழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள் என்றும் ஆதிகாலத்திலிருந்தே தமிழர்கள் தன்மானமிழந்து ஆரியர்களுக்கு அடிமைப்பட்டு வந்திருக்கிறார்கள் என்றும் தெரியவருகிறது. பழந்தமிழ் அரசர்கள் என்று சொல்லி உரிமை கொண்டாடப்படுபவர்களான மூவேந்தர் (சேர, சோழ, பாண்டியர்) எவருமே உண்மைத் தமிழனாக இருந்ததாகச் சொல்லுவதற்கு ஆதாரமே காண முடியவில்லை.

இன்றைய அரசியல் உலகத்தில் ஒரு முத்துரங்க முதலியாரும், பண்டிதர்கள் உலகத்தில் ஒரு கதிரேசன் செட்டியாரும், கலைவாணர்கள் உலகத்தில் ஒரு சிதம்பரநாத முதலியாரும் ஆகிய பெரியோர்கள் இன்று எப்படித் தமிழர்களாக இருந்து வருகிறார்களோ அப்படித்தான் பழங்கால தமிழரசர்கள் உலகத்திலும் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் தமிழர்களாக இருந்திருக்கிறார்களே ஒழிய இன்று தமிழர்களின் உள்ளத்தில் உதித்தெழுந்த உணர்ச்சிப்படியான தமிழன் ஒருவனைக்கூட அக்காலத்தில் இருந்ததாகக் காணமுடியவே இல்லை.

தமிழர்களுக்கு ஆரியர் வேதம், கடவுள், சமயாதாரம் ஆகியவைகள் தவிர்த்த தனித்தமிழ்க் கொள்கையோ முறையோ ஏதும் இருந்ததாகச் சொல்ல நம் ஆராய்ச்சியாளர்களுக்கு இடமில்லாமலே நம் இன்றைய தமிழ்ப் பண்டிதர்களும், பழங்காலப் பண்டிதர்களும் இன்றைய அரசர்களும், பழந்தமிழ் அரசர்களும் செய்து விட்டார்கள். பெரிய புராணத்தையும், பக்த லீலாமிர்தத்தையும், கந்த புராணத்தையும், கம்பராமாயணத்தையும் கட்டிக்கொண்டு அழும் தமிழன் எவனாகட்டும் அவன் தனித் தமிழர் கொள்கை இதுவென எதையாவது காட்ட முடியுமா என்றும், இப்படிப்பட்ட தமிழன் யாராய் இருந்தாலும் அவன் பண்டார சன்னதியாயிருந்தாலும், அவன் நாஸ்திகனல்லாமல் அதுவும் முழு முழு நாஸ்திகனேயல்லாமல், கடுகளவு ஆஸ்திகனாகவாகிலும் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

அன்பே கடவுள், உண்மையே கடவுள், ஒழுக்கமே கடவுள், ஒப்பு நோக்கே (சமரசமே) கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு தமிழ் ஆஸ்திகன் மேற்கண்ட பெரிய புராணாதிகளையும், அவற்றில் வரும் கடவுளர்களையும், அவர்களது செயற்கைகளையும், பாராட்டி வழிபடுகிறவனாக இருந்தால் அவன் எப்படி தமிழ் ஆஸ்திகனாவான்? என்று கேட்கிறோம்.

தமிழனுக்கு உச்சிக்குடுமி எப்படி வந்தது! தீட்சை எங்கிருந்து வந்தது? பஞ்சாட்சரமேது! முத்திரஸ்தானம், (சமாசனம்) ஏது? அஷ்டாட்சரம் எது? பஞ்சகச்சம், திருநீறு திருநாமம் பூச்சுக்கள் ஏது? என்பன போன்ற எத்தனையோ விஷயங்கள் கவனித்தால் உண்மைத் தமிழன் எவனாவது இருக்கிறானா என்பதும் விளங்காமல் போகாது. தமிழனென்று தன்னை சொல்லிக் கொள்ள வேண்டுமென்றும், தமிழனுக்கு என்று தனிக் கொள்கைகள், அடையாளங்கள் ஒன்றும் இருக்க வேண்டியதில்லை என்றும் கருதிக் கொண்டு தமிழனில் பெரியவனாகத் தன்னைக் கருதவேண்டும் என்றிருப்பவர்கள் நம்மீது கோபித்துத்தான் தீருவார்கள். அதற்கு நாம் என்ன செய்யலாம்? இவர் கோபத்தைவிட, அதனால் ஏற்படும் கேட்டைவிட, தமிழர்களின் மானம் பெரிது என்று எண்ணுவதால் இவர்கள் கோபத்தால் வந்தது வரட்டும் என்கின்ற துணிவு கொள்ளவேண்டி இருக்கிறது.

-----------------------------பெரியார் ஈ.வெ.ரா - "குடிஅரசு" கட்டுரை _ 13.11.1943

2 comments:

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி