Search This Blog

15.9.10

மகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த உரையாடல்


மகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை


மகா விஷ்ணுவான ஸ்ரீரங்கம் ரங்கநாதர்:- அடீ என் அறுமைக் காதலியாகிய லட்சுமி! இந்த உலகத்திலும் மேல் உலகத்திலும் உள்ளவர்களுக் கெல்லாம் ஐசுவரியம் கொடுத்துவரும் செல்வ தெய்வமாகிய உன்னையே நான் மனைவியாகக் கொண்டு இருந்தும் என்னையே நீ சாப்பாட்டிற்கே லாட்டரி சீட்டு போடும்படியாய் செய்து விட்டாயே இது யோக்கியமா?
லட்சுமியான ஸ்ரீரங்க நாயகி:- நாதா என் பேரில் என்ன தப்பு? நீங்கள் என் ஒருத்தியோடு மாத்திரம் இருந்தால் பரவாயில்லை. இன்னமும் எத்தனையோ பேர்களை மனைவியாகக் கொண்டிருக்கிறீர்கள். இதெல்லாம் நீர் நன்றாய் நெய்யும் தைரும் சாப்பிட்டதால் உமக்கு கொழுப்பு ஏறியதினால் தானே? உங்கள் பக்தர்களுடைய பெண்களையெல்லாம் கூட கை வைத்து விட்டீர். இப்படிப்பட்ட உம்மை சாப்பாட்டுக்கே லாட்டரி போடும்படியாக ஏன் செய்யக்கூடாது?

விஷ்ணு:- ஐய்யய்யோ அதனாலா இப்படி செய்து விட்டாய்! நான் இதை ஒரு தப்பாக நினைக்கவே இல்லையே. அப்படி செய்வதும் ஒரு லட்சுமிகடாக்ஷம் என்று தானே நினைத்திருந்தேன். உனக்கு கோபமாயிருந்தால் நாளைய தினமே அவர்களையெல்லாம் விரட்டி அடித்து விடுகிறேன்.

லட்சுமி:- விளையாட்டுக்குச் சொன்னேன். கோபித்துக் கொள்ளாதீர்கள். இன்னம் எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். எனக்கு அதைப்பற்றி கவலையில்லை.

விஷ்ணு:- பின்னையேன் லாட்டரி சீட்டு போடச் செய்தாய்?

லட்சுமி:- வேறு சிலருக்கு அதாவது லாட்டரி சீட்டு போடுபவர்களுக்கு செல்வத்தை கொடுப்பதற்காக லாட்டரி சீட்டின் மூலமாய் செல்வத்தை சேர்ப்பதற்கு அப்படிச் செய்யச் சொன்னேன்.

விஷ்ணு:- அப்படியானால் அது எனக்கல்லவா அவமானமாய் இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் லாட்டரி சீட்டு, ரங்க நாதர் லாட்டரி சீட்டு என்று அல்லவா பணம் வசூல் செய்கின்றார்கள். இந்த அவமானத்தில் உனக்கும் பங்கில்லையா?

லட்சுமி:- அடேயப்பா இதில்தானா உமக்கு பெரிய அவமானம் வந்துவிட்டது? உங்கள் பேருக்கு முன்னால் பொட்டுகட்டி உங்கள் தாசி யென்று பெயரும் செய்து கண்ட கண்ட பசங்கள் எல்லாம் கொளுத்துகிறார்களே, அதிலில்லாத அவமானம்தானா உமக்கு லாட்டரி சீட்டில் வந்து விட்டது? பக்தர்களின் பெண்களை தாங்கள் கைப்பற்றுவதும் தங்கள் தாசிகளை பக்தர்கள் அனுபவிப்பதும் தங்களுக்கும் பக்தர்களுக்கும் உள்ள பந்துத்துவமாகும்.

விஷ்ணு:- அதெல்லாம் தான் இப்போது நமது உண்மை பக்தர்களாகிய சுயமரியாதைக்காரர்கள் தோன்றி சட்டசபை மூலமும் குடிஅரசு மூலமும் நிருத்தி நமது மானத்தைக் காப்பாற்றி விட்டார்களே. இனி என்ன பயம். ஏதோ சில கெழடுகிண்டு இன்னம் கொஞ்ச நாளைக்கு இருக்கும் அப்புரம் நம்ம பேரால் இந்த அவமானமான காரியமாகிய அக்கிரமங்கள் நடக்காது.

லட்சுமி:- அப்படியானால் அது போலவே இந்த காரியமும் (அதாவது லாட்டரி சீட்டு போட்டு நமக்கு சோரு போடும் காரியமும்) அவர்களாலேயே சீக்கிரம் நிறுத்தப்பட்டு விடும் கவலைப்படாதீர்கள், இன்னம் கொஞ்ச நாளைக்குப் பொருத்துக் கொண்டிருந்தால் போதும்.

------------------- சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய உரையாடல் - “குடி அரசு” - 09.03.1930

0 comments: