புதுக்கோட்டையில் தோழர் ஈ.வெ.ரா.
ஆஸ்திகம் - நாஸ்திகம்
தலைவரவர்களே, தோழர்களே!
இந்தப் புதுக்கோட்டையில் எங்களுக்காக நடத்தப்பட்ட ஆடம்பர வரவேற்புகளுக்கும், விருந்துகளுக்கும் இங்கு நடைபெறுகிற நடவடிக்கை களுக்கும் நான் நன்றி செலுத்துவதுடன் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தோழர்கள் ரங்கம்மாள் சிதம்பரம் தம்பதிகள் சீர்திருத்த முறையில் விவாகம் செய்து கொண்டவர்களாதலால், அவர்கள் பாராட்டுதலுக்கும், வரவேற்புக்கும் உரியவர்கள் ஆவார்கள். ஆனால் எனக்கு எதற்காக இந்த ஆடம்பர வரவேற்புகள் என்பது எனக்கே விளங்கவில்லை.
இந்த ராஜ்யம் ஒரு சுதேச சமஸ்தானமாதலால் இங்கு நமது இயக்கத்தைப் பிரசாரம் செய்வதற்கு சமஸ்தானத்திலோ, அல்லது வேறு வகையிலோ ஏதாவது இடையூறு ஏற்படுமோ எனக் கருதி, இந்த முறையில் ஏதாவது வகை செய்யக் கருதி தோழர் வல்லத்தரசும் அவர்களது தோழர்கள் முரு. தேனப்பன், அ.செ.சு. சாமிநாதன், லெ. சோமசுந்தரம், கா.ச. சடையணன், சி.பெ.க. பெரிய கருப்பன் முதலியவர் களும் இந்த ஏற்பாடு செய்தார்களோ என்று எண்ணுகிறேன். (சிரிப்பு)
இந்த இரகசிய ஏற்பாட்டிற்கு இவ்வளவு பேர்கள் வந்து கூடியிருப்பது எனக்கு மகிழ்ச்சியாய் இருப்பதோடு, இந்த வரவேற்புப் பத்திரத்தில் கண்ட வாக்கியங்களைக் கவனிக்கும் போது சுயமரியாதை இயக்க சீர்திருத்தத் துறையில் இந்த ராஜ்யம் உச்சஸ்தான விருப்பம் கொண்டதாகவே தெரிகின்றது. வரவேற்புப் பத்திரத்தில் என்னைப் பற்றி புகழ்ந்திருக்கும் விஷயங்களை நான் ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் அதில் கண்டுள்ள அதி தீவிர வாக்கியங்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அதற்காக நன்றி செலுத்த வேண்டியவனாயிருக்கிறேன்.
இந்த வரவேற்பு ஆடம்பரங்கள் புதுக்கோட்டை சமஸ்தான இளைஞர் சங்கத்தின் பேரால் இருப்பதால், இளைஞர்களைப் பற்றி இரண்டொரு வார்த்தை பேசிவிட்டுப் பிறகு பத்திரத்திற்குப் பதில் சொல்லுகிறேன்.
இளைஞர்கள் என்பவர்கள் தூய்மையான மனதையுடையவர்கள். அவர்கள் உலக வாழ்க்கை வியாபாரத்தில் நுழையாதவர்களாதலால் அவர்கள் எண்ணமும், காரியமும் ஒன்றாய் இருப்பதற்குச் சௌகரியம் உண்டு. ஆனால் அவர்களுக்குப் போதிய உலக அனுபவம் ஏற்படக் காலம் இல்லை. ஆதலால் இளைஞர்கள் திடீரென்று எந்தக் காரியத்திலும் பிரவேசித்துவிடக் கூடாது. விஷயங்களை ஆலோசித்துப் பார்க்க வேண்டும். தங்கள் எண்ணங்களுக்கும், செய்கைகளுக்கும் அனுபவ பலன் என்ன? அது எப்படிப்பட்டது? என்பதை நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்து சரித்திரங்களையும் சம்பவங்களையும் அறிந்தே ஒரு துறையில் இறங்க வேண்டும். இளைஞர்கள் முதலில் சமூக வாழ்விலுள்ள கஷ்டங்களை ஒழிக்கப் பாடுபட வேண்டும். திடீரென்று அரசியலில் குதிக்க வேண்டியதில்லை. ஏனெனில் அரசியல் என்பது சூதாட்டம் போன்ற காரியமானதால் இளைஞர்கள் சுலபத்தில் ஏமாந்து போகக் கூடும். அதைப் பெரியவர்களுக்கு விட்டு விட்டு மனித வாழ்க்கையைச் சுலபமாகவும், சௌக்கியமாகவும் இருக்கும்படி பார்க்க வேண்டும். இந்தப் பலனால்தான் ஒரு தேசத்தின் சமூகத்தின் பெருமை இருக்கின்றதே ஒழிய அரசியலிலேயே இருப்பதாகச் சொல்ல முடியாது.
நிற்க, சீர்திருத்தத் துறையில் நான் பெரிய மாறுதல் செய்திருப்பதாகப் புகழுகிறீர்கள்.
சீர்திருத்தம் என்பது ஒரு பிரமாதமான காரியமல்ல. மக்கள் தாங்கள் இருக்கும் நிலையிலிருந்து முற்போக்கடைய எண்ணுவதும் மாறுதல் அடைய ஆசைப்படுவதும் இயற்கையேயாகும்.
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மனிதனும் அவனவன் வாழ்வில் முற்போக்கும், மாறுதலும் அடைந்துகொண்டே வருகிறான். இதற்காகத் தனி லட்சியம் தேவையில்லை. மரக்கட்டை போல் உணர்ச்சியற்றவனாய் இருந்தாலும் அவன் கூட காலப்போக்கில் தானாகவே மாறுதலும், முற்போக்கும் அடைந்துதான் தீருவான்.
ஆனால் அப்படிப்பட்ட விஷயங்களில் நம் போன்றவர்கள் செய்யும் விசேஷ காரியம் என்னவென்றால் எப்படிப்பட்ட மாறுதல், எப்படிப்பட்ட முற்போக்கு அவசியம் என்பதில் செலுத்தும் கவனமேயாகும்.
தானாகப் போய்க்கொண்டிருக்கும் முற்போக்குக்கும், மாறுதலுக்கும் தடையாயிருந்து அவற்றை வேறு வழியில் திருப்புவதினால் சில சமயங்களில் பெருத்த கிளர்ச்சி ஏற்பட்டு விடுகின்றது. அதற்கு எதிர்ப்பும், பழிப்பும் பலமாய் ஏற்பட்டு விடுகின்றது. இப்படிப்பட்ட சமயங்களில் சிலர் பழமையை எதாஸ்திதியை குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டு உபத்திரவப்படுகிறார்கள். தொல்லைகளை விளைவிக்கிறார்கள். இத்தொல்லையும் உபத்திரவமும் தங்கள் அறியாமையால் செய்வதும் உண்டு. சிலர் தங்கள் சுயநலங்களுக்கு ஹானி ஏற்படுமே என்ற கெட்ட எண்ணத்தின் மீது செய்வதும் உண்டு.
எப்படியிருந்தாலும் அபாயமான வழியில் கெடுதி உண்டாக்கும் வழியில் மாறுதலும், முற்போக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மக்கள் கடமையாகும். மாறுதல் வரும் போது அதைக் கையாளுபவர்கள் துன்பத்துக்கும், பழிப்புக்கும் ஆளாவது என்பதில் புதிதல்ல. சரித்திரகால இயற்கையாகும். சாக்ரடீஸ், புத்தர், கிறிஸ்து, மகம்மது ஆகிய பெரியார்கள் இன்று எவ்வளவோ மக்களின் வணக்கத்துக்கும், மதிப்புக்கும் உரியவர்களானாலும் அவர்கள் காலத்தில் எவ்வளவோ தொல்லைக்கும், இழிவுக்கும், பழிப்புக்கும் ஆளானதாகச் சரித்திரங்கள் சொல்லுகின்றன.
அதுபோலவே சில மாறுதல்கள் தற்கால மக்களுக்குக் கசப்பாயிருந்தாலும் பிற்கால மக்களால் மதிப்பும், பெருமையும் பெறும் என்ற துணிவு எனக்குண்டு. அந்த நம்பிக்கையின் பேரில் தான் நாம் எந்த மாறுதலையும் திருத்தத்தையும் செய்யத் துணிய வேண்டுமே ஒழிய, நாம் இன்றே பாராட்டப்பட வேண்டும் என்று கருதிக் கொண்டு செய்வது பயன்படாது.
கல்யாணம், இழவு, வாழ்வு முதலிய துறைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் சுயமரியாதை இயக்கம்தான் என்று இங்கு பேசியவர்கள் சொன்னார்கள். அதை முழுவதையும் நான் ஒப்புக் கொள்ள வில்லை. காலதேசவர்த்தமானம் மக்களை அப்படிச் செய்யச் செய்கின்றது. அதில் சிலவற்றிக்கு சுயமரியாதை இயக்கம் துணைபுரிந்தது என்று சொல்லலாம்.
குறிப்பாக மனித சமூகத்தில் பெண்கள் விஷயத்தில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட வேண்டியது அவசியம். இது தீண்டாமையை ஒழிப்பதை விட அவசரமாய்ச் செய்ய வேண்டிய காரியம் என்பது எனது அபிப்பிராயம்.
அதிலும் விதவைக் கொடுமை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். அது மனித தர்மத்துக்கு மாத்திரமல்லாமல், ஜீவ தர்மத்துக்கே விரோதமானதாகும். விதவைகளைப் பற்றி நினைக்கும் போது எனக்கு ராஜாராம் மோகன்ராயைப் பற்றித்தான் ஞாபகம் வருகின்றது. இன்றைய விதவைகளின் கொடுமைக்கு அவர்தான் காரணம் என்று சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறேன். ஏனெனில் இந்து சாஸ்திர முறைப்படி புருஷன் இறந்தவுடன் பெண்ஜாதியை கட்டையில் பலாத்காரமாயாவது வைத்து புருஷனுடன் கட்டி நெருப்பை வைத்து சுட்டுவிடும் முறை இன்று இருக்குமானால் இன்று உலகில் விதவைகளே இருக்க மாட்டார்கள். விதவைக் கொடுமையும் இருக்காது. விதவைகளை சுடக்கூடாது என்று சொன்னவர் அவ்விதவைகளுக்கு ஏதாவது ஒரு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதில்லாமல் இன்று இந்தியாவில் மாத்திரம் குழந்தைகள் உள்பட பெண்களில் 100க்கு 25 பேர் விதவைகளாய் இருக்கிறார்கள் என்றால் இது கொடுமை அல்லவா? இதை ஒழிப்பதைவிட வேறு ஜீவகாருண்ய வேலையோ, சீர்திருத்த வேலையோ இருக்கின்றதா என்று கேட்கின்றேன். அதுபோலவே பெண்கள் சுதந்திர விஷயமும் மோசமாகவே இருக்கின்றது. பெண்கள் விலைப் பொருளாக மதிக்கப்படுகின்றனர். மற்றும் அடிமைப் பொருளாகவும் மதிக்கப்படுகின்றனர். குழந்தைப் பருவம், இளமைப் பருவம், கல்யாணப் பருவம், வாழ்க்கைப் பருவம், முதுமைப் பருவம் ஆகிய எல்லாப் பருவங்களிலும் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். இவைகளைப் பற்றி நான் சொல்லுவது பழமை விரும்பிகளுக்கு கஷ்டமாய்த் தோன்றலாம். ஆனால் அப்படிப் பட்டவர்கள் பெண்களாயிருந்து அனுபவித்துப் பார்த்தால் தெரியும்.
ஆஸ்திக நாஸ்திகம்
முடிவாக ஆஸ்திக நாஸ்திகத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். இது ஒரு பயனற்ற விஷயம். ஏனெனில் ஆஸ்திகமும், நாஸ்திகமும் 100க்கு 99 பேர்களின் அபிப்பிராயங்கள், பழக்கவழக்கங்கள், பிறர் சொல்லிக் கொடுப்பதால் சேர்க்கையால் ஏற்படுவதே ஒழிய ஒரு இயற்கை உணர்ச்சி அல்ல. அன்றி பசி, தூக்கம், பஞ்சேந்திரிய உணர்ச்சி ஆகியவைகளைப் போல் இயற்கையாய் ஏற்படும் எண்ணமும் அல்ல. அதைப்பற்றி மனிதன் கவலைப்பட வேண்டியதே இல்லை. அது இன்று ஒரு ஆராய்ச்சி விஷயமாகி, நாகரீக விஷயமாகவும் பேசப்பட்டு வருகின்றது. மனிதனுக்கு கட்டும், காவலும், சட்டமும், போலீசுமாய்த்தான் இருக்கின்றனவே ஒழிய கடவுளோ, நரகமோ, சாஸ்திரமோ, ஒழுக்கமோ கட்டிக் காப்பாற்றி விடவில்லை. அனுபவத்திலும் எவனும் அவற்றின் மீது எவ்வித பொறுப்பையும் சுமத்துவதும் இல்லை. ஆதலால் ஆஸ்திகம் நாஸ்திகம் என்பது ஒரு பயனற்ற பிரச்சினையாகும். மற்றும் அது அவனவனுடைய சொந்த புத்தி, யோசனையைப் பொருத்ததாகும். ஆதலால் நமது வாழ்வில் ஏற்பட வேண்டிய இன்ப, துன்பங்களுக்கும், முற்போக்குக்கும், மாறுதலுக்கும் ஆஸ்திக நாஸ்திகத்தைக் கொண்டு வந்து குறுக்கே போட்டுக்கொண்டு யாரும் கஷ்டப்பட வேண்டியதில்லை. நம்மைப் பொருத்தவரையில் எந்த அளவில் ஆஸ்திகத்தில் பிரவேசிக்கின்றோம் என்று நினைப்பீர்களானால் வாழ்க்கையின் நலங்களைக் கடவுளின் மீது பொறுப்பேற்றுவதும், கடவுளுக்காகச் செல்வங்களை மக்கள் வாழ்க்கைக்குரிய பொருள்களைப் பாழாக்குவதையும் பொருத்த அளவில் தான் பிரவேசிக்கின்றோம். மற்றபடி எவன் எத்தனை கடவுளை எந்த விதமாக நினைத்துக் கொண்டாலும், வணங்கினாலும், அவற்றோடு பேசினாலும் அதுவே ஆய்விட்டாலும் நமக்கு அக்கரையில்லை (சிரிப்பு) உலகத்தைப் பொது என்றும் உலகப் பொருள் போக போக்கியங்கள் யாவருக்கும் சமம் என்றும் எண்ண வேண்டும். இதற்குக் கடவுள் குறுக்கிடாமல் இருந்தால் கடவுளைப்பற்றிய வேலை நமக்கு இல்லை. அதைப் பற்றிய கவலையும் இல்லை. ஆகையால் அதை ஒரு பெரிய பிரச்சினையாக வைத்துக் கொண்டு எவரும் கஷ்டப்பட வேண்டியதில்லை.
மற்றொரு சமயம் இந்த ஊருக்கு வந்து இன்னும் பல விஷயங்களைப் பற்றிப் பேச ஆசைப்படுகிறேன். கடைசியாக உங்கள் வரவேற்புக்கும், புகழ்மொழிகளுக்கும், என்னிடம் காட்டிய அன்புக்கும் சிறப்பாக தோழர் முத்துசாமி வல்லத்தரசு அவர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
------------------- 07.10.1934இல் புதுக்கோட்டை டவுன்ஹாலில் நடைபெற்ற கோட்டையூர் தோழர் சிதம்பரம் தோழர் ரங்கம்மாள் ஆகியோருக்குத் திருச்சியில் நடந்த விதவைக் கலப்பு மண பாராட்டுவிழாவில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை. ”பகுத்தறிவு” - 14.10.1934
0 comments:
Post a Comment