Search This Blog

25.9.10

பிள்ளையார் கதையைப்பற்றி பேசியதற்கு கலைஞர் மீதே வழக்கு


பிள்ளையார் கதையைப்பற்றி பேசியதற்கு
கலைஞர் மீதே வழக்குப் போட்டு விட்டார்கள்!
சென்னைப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்

பிள்ளையாரைப் பற்றி பேசியதற்காக கலைஞர் மீதே வழக்குப் போட்டு விட்டார்கள் என்று திராவிடர் கழக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கமளித்தார்.

சென்னை திருவல்லிக்கேணியில் 18.9.2010 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஒரு காலத்தில், அறிவு விளங்காத காலத்தில் எல்லாம் பொம்மை விளையாட்டே என்று விளையாடிக் கொண்டிருந்தனர். யார்? வள்ளலார் சொன்னார்- எல்லாம் பொம்மை விளையாட்டே! என்று சொன்னார். அன்றைக்கு இருந்த மனிதனுடைய அறிவு அவ்வளவுதான். தீவட்டி காலம் வேறு. மின் வெளிச்ச காலம் வேறு.

காற்றடித்தது, பார்த்தான்; எல்லாம் வாயு பகவான் என்று கன்னத்தில் போட்டுக் கொண்டான். அன்றைக்கு காட்டுமிராண்டி காலத்தில் இருந்த மனிதன்-குகையிலே வாழ்ந்த மனிதன் காற்றை வாயு பகவான் என்று சொன்னான். அந்தக் காலத்தில் அவனுக்கு இருந்த அறிவு அவ்வளவுதான். வாயு பகவானை இன்றைக்கு எங்கே கொண்டு போய் வைத்து விட்டான்? இதோ.. ஃபேனுக்குள் கொண்டு போய் வைத்து விட்டான். சுவிட்சை ஆன் பண்ணினால் வாயு பகவான் சுற்ற வேண்டும். இன்னும் சொல்லப் போனால், ஸ்விட்சை ஸ்லோவில் வைத்தால் ஸ்லோவிலேயே சுற்ற வேண்டும். வாயு பகவான் நினைத்தால் ஃபாஸ்ட்டில் கூட போக முடியாது.

வாயு, அக்னி பகவான்கள் நமக்கு வேலைக்காரர்கள்

இப்பொழுது வாயு பகவான் நமக்கு வேலைக் காரனா-இல்லையா? (சிரிப்பு - கைதட்டல்) இப்பொழுது அக்னி பகவானை வத்திப் பெட்டிக்குள் வைத்தாகி விட்டது.

கலைஞர் இப்பொழுது எல்லோருக்கும் இலவச கேஸ் அடுப்பு கொடுத்துவிட்டார். டக்கென்று தட்டினவுடனே எரிகிற மாதிரி அளவுக்கு வந்தாகி விட்டது. வாயு பகவான், அக்னி பகவான் எல்லாம் இப்பொழுது கூப்பிட்டவுடனே வருகின்றான். வா இந்த பக்கம் என்றால் வருகின்றான். இந்த பகவான்கள் எல்லாம் இன்றைக்கு வேலைக்காரனா? அல்லது எஜமானனா? அன்றைக்கு அறிவு வளராத காலத்தில் ஆதி மனிதன் சந்திலே, பொந்திலே வாழ்ந்த மனிதன் அவற்றைக் கடவுளாகக் கும்பிட்டான். அன்றைக்கு அதை ஏற்றுக் கொண்டிருந்தான்.

பிள்ளையாருக்கு 15 மனைவிகளாம்!


பிள்ளையார்பற்றி கதைகள் ஏராளம் உண்டு. பலவற்றிலும் - எல்லாம் கட்டுக்கதை புராணங்கள் தானே - தமிழ்நாட்டில் அது இறக்குமதி கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதானே!

அபிதான சிந்தாமணி 1910இல் வெளிவந்த அந்தக்கால தமிழ் கலைக்களஞ்சியம் - என்சைக்ளோ பீடியா!

அதில் பிள்ளையாருக்கு 15 மனைவிகள் உண்டு என்று சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன!

1. சித்தி என்ற மனைவி 2. புத்தி என்ற மனைவி (சித்தி புத்தி விநாயகர் என்றால், இரண்டு மனைவிமார்களையும் இணைத்ததுபோலும்!) 3. மோதை 4. பிரமோதை 5. சுமகை 6. சுந்தரி 7. மனோரமை 8. மங்கலை 9. கேசினி 10. காந்தை 11. சாருகாசை 12. சுமத்திமை 13. நந்தினி 14. காமதை 15. வல்லபை
முதலியவரை மணந்தனர்.

பக்கம் 1751, விநாயகர் தலைப்பு இது ஒரு ஆதாரம்

பெரியார் எழுதியதைத்தானே
சொன்னோம்?

நாங்கள் விநாயகன் பிறப்பைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரையைத்தான் இப்பொழுது எடுத்துப் போட்டிருக்கின்றோம். இது அபிதான சிந்தாமணி அந்தக் காலத்து என்சைகுளோ பீடியா.

அண்மைக் காலத்தில் தான் இந்தப் பதிப்புகள் வெளியே வந்திருக்கிறது. தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி பயன்படுத்துகின்ற நூல் இது. சிங்காரவேலர் - புலவர் பச்சையப்பன் கல்லூரியிலே பேராசிரியராக இருந்தவர். பச்சையப்பன் கலாசாலை தமிழாசிரியரும், அபிதான சிந்தாமணியின் நூலாசிரியருமான காலஞ்சென்ற சிங்காரவேலு முதலியார் 1910இல் முதலில் எழுதியிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வந்த நூல். சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்னாலேயே வந்த புத்தகம் இது. இதில் நிறைய செய்திகள் இருக்கின்றன. அவ்வளவு நேரத்தை நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. வருத்தப்படுகிற தோழர்கள், கோபப்படுகிற தோழர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக நான் சொல்லுகின்றேன்.

மிரட்டலுக்கு அஞ்சுகிறவர்கள் அல்லர்!

நீதிமன்றம் அது, இது என்று சொல்லி மிரட்டலாம் என்று பார்த்தால், அதற்கெல்லாம் அஞ்சுகிறவர்கள் அல்லர் நாங்கள். அப்படி வந்தால் நல்ல வாய்ப்பு என்று கருதுகிறவர்கள் நாங்கள். இரண்டாவது ஜெயிலுக்குப் போவதற்கு யாருமே பயப்படுவது கிடையாது. ஜெயிலில் இருக்கிற அதிகாரிகளே இப்பொழுது ஜெயிலுக்கு போகிறார்கள். ஒரு காலத்தில் அரசு அதிகாரிகள் போக மாட்டார்கள். எங்களை மாதிரி போராட்ட வீரர்கள் அடிக்கடி ஜெயிலுக்குப் போவோம்.

ஆகவே இந்த அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்கள் நடவடிக்கைகள் இவை எல்லாம் தேவையில்லை. ஏன், நாங்கள் இதைச் சொல்லுகிறோம். பக்தியைக் காட்டி, விநாயகனைக் காட்டி இந்த நாட்டில் அமைதியைக் கெடுக்கிறார்கள்.

ஏராளமான காவல்துறையினர்

இந்தப் பிள்ளையாருக்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு. அதிகாரிகளுக்கு ஓய்வு கிடையாது. இந்த கூட்டம் நடந்தால் கூட என்ன நடக்குமோ என்ற கவலை. அவர்களுடைய குடும்பம், அவர்களுடைய வாழ்க்கை அத்தனையையும் விட்டு, விட்டு விநாயகனை கடலில் கரைப்பதற்காக பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் எல்லாம் யார்? நமது அதிகாரிகள் அல்லவா? எங்கே பிள்ளையார் ஊர்வலம் விடுவது? பெரியார் பிறந்த மண்ணிலே ஊர்வலம் விடுவதா? பாபர் மசூதியை இடித்த பொழுது இந்தியா முழுவதும் கலவரம் ஏற்பட்டது. கலவர பூமியானது. இரத்த ஆறு ஓடிற்று. ஒரே ஒரு மாநிலம்தான், ஒரே ஒரு கொலை கூட இல்லாமல், இந்த மாநிலத்தின் காவல் துறையை கேரளத்திற்கும், ஆந்திரத்திற்கும் அனுப்பியது. இந்த மண் தமிழ் மண். இதற்கு பத்திரிகையாளர்கள் எழுதினார்கள். தமிழ்நாட்டில் எந்த கலவரமும், ரத்தக் களறியும் நடைபெறாததற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டை, தமிழ் மண்ணைப் பக்குவப்படுத்தியிருக்கிறார் என்று எழுதினார்கள்.

கடவுள் இல்லை என்று சொல்லுகிறவர்கள்

தமிழ்நாட்டில் மனித நேயம் இருக்கிறது. மதவெறி கிடையாது. தமிழ்நாட்டில் அண்ணன், தம்பிகளாக இருக்கக் கூடியவர்கள். இதோ பாருங்கள். கோயிலுக்குப் பக்கத்திலேயே கூட்டம் நடத்துகிறோம்.

கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை,; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்,

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகின்ற ஓர் இயக்கம் இந்த இயக்கம் (கைதட்டல்). ஆனால் ஒரு சிறிய பிரச்சினை பக்தர்களுக்கு எங்களால் உண்டாகுமா? அல்லது உண்டாக விடுவோமா?

பெரியார் கேட்ட கேள்விக்கு....

எங்கள் கூட்டத்தில் தான் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். எல்லோர் கேட்ட கேள்விக்கும் பெரியார் பதில் சொன்னார். ஆனால், பெரியார் கேட்ட கேள்விக்கு இதுவரை எவனும் பதில் சொல்லவில்லை (கைதட்டல்). அதுதான் மிக முக்கியம்.

பக்தியைக் காட்டி
கலவர பூமியாக ஆக்க...

கடவுளை, மதத்தை பக்தியைக் காட்டி இந்தநாட்டை ஒரு கலவர பூமியாக ஆக்குகிறார்களே!

இஸ்லாமிய சகோதரர்களாக இருக்கட்டும், கிறிஸ்தவ சகோதரர்களாக இருக்கட்டும்; யாரும் யூத நாட்டிலிருந்து இஸ்ரேல் நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்லர். யாரும் அரேபிய நாட்டிலிருந்து ஹெலி காப்டரில் வந்தவர்கள் அல்லர். மூன்று தலைமுறைக்கு முன்னாலே, அய்ந்து தலைமுறைக்கு முன்னாலே இவர்களும் இந்த நாட்டைச் சார்ந்தவர்கள் தான். இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தான்.

இந்துவாக இருந்தாலும், மற்றவர்களாக இருந்தாலும் எல்லோரும் மனிதர்கள்தானே. மதங்கள் நம்மைப் பிரிக்கலாம். மனங்கள் நம்மைப் பிரிக்கக் கூடாது என்று சொல்லுவதுதான் சுயமரியாதை இயக்கம். கடவுள் பக்தி, மதம் என்கிற போதை பக்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று சொல்ல வேண்டிய கடமைக்காகத்தான் நாங்கள் இந்தப் பணியைச் செய்கின்றோம். ஏன் நோட்டீஸ் அடிக்கிறோம்? மற்றவர்களை புண்படுத்த வேண்டும் என்பது எங்களுடைய ஆசையா? மற்றவர்களை சங்கடப்படுத்த வேண்டும் என்பதா எங்களுக்கு ஆசை?

பிள்ளையார் கதையை சொல்லும் போது - ஒரு கதை அல்ல; எத்தனையோ கதை இருக்கிறது.

பிள்ளையார் பற்றி பலவகையான கதைகள்

ரொம்பபேர் என்ன தெரிந்து வைத்திருக்கிறோம்? பிள்ளையார் என்றால் அவர் திருமணம் ஆகாதவர். பிள்ளை-யார்? என்று போட்ட புத்தகத்திலேயே ஆதாரபூர்வமான பல செய்திகள் இருக்கின்றன.

வடநாட்டில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையான கதையை எழுதி வைத்திருக்கின்றான். இரண்டும், இரண்டும் கூட்டினால் நான்கு என்றால், அமெரிக்காவில் கூட்டினாலும் நான்குதான்; இங்கே கூட்டினாலும் நான்குதான்.

அதே மாதிரி அறிவியல் தத்துவம் என்றால் ஒரே மாதிரிதான். அபிதான சிந்தாமணியில் ஒரே ஒரு சங்கதியை நான் சொல்லுகின்றேன். விநாயகர் என்ற தலைப்பில் பல புராண செய்திகள் இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. ஒன்றை சொல்ல விரும்புகிறேன். தன்னை நம்பினாருக்கு விக்னத்தை நீக்குபவரும், அவ்வகையில் வணங்காத வருக்கு விக்னத்தைத் தருபவரும், தனக்கு மேல் நாயகர் இல்லாததால் இப்பெயர் வந்தது.

பிள்ளையார் இப்படி இருந்தால்...

தன்னை வணங்கியவனுக்கு லாபம் கொடுக்கின்றான். வணங்காதவனுக்கு தண்டனை கொடுக்கின்றான் என்றால் அவன் கருணையே வடிவானவனா? என்னைக் கும்பிடுகிறவனை விட்டு விடுவேன். என்னை கும்பிடா தவர்களை ஒவ்வொரு அறை கொடுத்து கொண்டு போவேன் என்று சொன்னால் அது மரியாதையா? முதலில் இந்தத் தத்துவமே தவறு. இவருக்கு யானை முகம் கொண்ட வரலாற்றை கஜபு தலைப்பில் காண்க என்று இருக்கிறது. இவருக்கு சிந்தாமணி விநாயகர் எனவும், வஸ்திர துண்டு விநாயகர் எனவும், கலாதனர் எனவும், கணேசர் எனவும், பாலசங்கரர் எனவும், கபிலர் விநாயகர் எனவும், தூமதேபு எனவும், மகோச்சுடர் எனவும், இண்டு விநாயகர் எனவும், வல்லபை கணேசர் என்று இத்தனை பெயர் அவருக் குண்டு. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது. இவர் சித்தி புத்தி விநாயகர். யார் யாரை விநாயகர் திருமணம் செய்து கொண்டார் என்ற என்ற பெரிய லிஸ்ட்டே போட்டிருக்கின்றான்.

கடவுள் விவகாரம் - நீதிமன்றத்திற்கு

இதெல்லாம் நீதிமன்றத்திற்குப் போக வேண்டாமா? அதனால் வழக்கு சீக்கிரம் வரவேண்டாமா? பிள்ளை யாரைக் கொண்டு வந்து மரத்துக்கடியில் வைத்தான். குளத்துக் கரையில் வைத்தான். ஏன் அப்படி வைத்தான் என்றால் பிள்ளையாருடைய தாயார் பார்வதி மாதிரி மனைவி வேண்டுமாம். முதல்வர் கலைஞர் அவர்கள் விநாயகரைப் பற்றிப் பேசியதற்காக வடநாட்டுக்காரன் அவர் மீது வழக்கு போட்டனர்.

இப்பொழுது அல்ல. கொஞ்ச நாட்களுக்கு முன்னாலே இந்தக் கதையைச் சொன்னார். இதை அவர் சொன்னவுடனே அவர் மீது வழக்குப் போட்டான். திராவிடர் கழகம் அப்பொழுது தி.மு.கவை ஆதரிக்காமல் தள்ளியிருந்த காலம்-அரசியல் ரீதியாக.

ஏனென்றால், அவர்கள் பி.ஜே.பி.யோடு இருந்தார்கள். அதனால் நாங்கள் ஆதரிக்கவில்லை.

கலைஞர் மீது வழக்கு

ஒரு நிகழ்ச்சியில் கலைஞர் பிள்ளையாரைப் பற்றிப் பேசினார். பகுத்தறிவை கலைஞர் அவர்கள் குறைத்துக் கொள்ள மாட்டார். கலைஞர் மீது வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நோட்டீஸ் கொடுத்தான்.

நான் அன்றைக்கே வெளிப்படையாக அறிக்கை கொடுத்தேன். கலைஞர் மீது கணபதிக்காக வழக்கு போட்டால்- இந்த பேச்சுக்காகப் போட்டால் - வாதாடக் கூடிய முதல் வக்கீலாக நான்தான் இருப்பேன். நீதிமன்றத்திற்கு அவருக்காக வாதாடப் போவேன் என்று விடுதலையில் எழுதினேன். பிறகு அந்த வழக்கை வாபஸ் வாங்கி விட்டார்கள்.

(தொடரும்)-------------"விடுதலை” 25-9-2010

0 comments: