Search This Blog

26.9.10

கடவுள் பெயரால் ஆபாசம்-அருவருப்பு

மதவெறியைக் கிளப்பக் கூடிய சக்திகள் விழிப்போடிருக்கின்றன
சென்னையில் தமிழர் தலைவர் பேச்சு

மதவெறியைக் கிளப்பக்கூடிய சக்திகள் இன்றைக்கும் இருக்கின்றனவே என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டி விளக்கிப் பேசினார்.
சென்னை திருவல்லிக்கேணியில் 18.9.2010 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


வெள்ளைக்காரர்கள்

வெளிநாட்டிலிருந்து வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள். சிதம்பரம் வல்லபைகணபதி, மத்தூர் வல்லபை கணபதி கோயில் ஆகியவற்றைப் பார்க்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
இது என்ன? என்று வெள்ளைக்காரன் விளக்கம் கேட்டால், இதுதான் எங்களுடைய கடவுள் என்று சொன்னால், இதைப் பற்றிய விளக்கத்தை ஏற்றுக்கொள்வாரா? இல்லிங்க, இது யானைக் கடவுள் என்று சொன்னால், யானைக் கடவுள் எப்படி வந்தது என்று கேட்க மாட்டானா? அரை யானை; அரை மனிதன் என்று சொன்னால் ஏற்க முடியுமா?


வல்லபை கணபதி


யானைத் தலையை எடுத்து மனிதனுக்கு ஒட்டவைத்தது என்று சொன்னால் ஏற்க முடியுமா? வல்லபைகணபதியினுடைய வரலாறை வெள்ளைக்காரனிடம் விளக்கினால் என்ன ஆகும்? கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று தந்தைபெரியார் சொன்னதற்கு இப்பொழுது, யாராவது பதில் சொல்லுங்கள். காட்டுமிராண்டி காலத்து சிந்தனை அது. அந்த சிந்தனையை இன்றைக்கும் நாம் தூக்கி வைத்துக் கொண்டி ருப்பதால் என்ன இலாபம்? ஒரு மதம்-ஒரு கடவுள் கதையைச் சொல்லுகின்றான். இன்னொரு மதம் இன்னொரு கதையைச் சொல்லுகிறது.


மனித இரத்த ஆறு ஓடலாமா?


இந்தக் கடவுள்களைக் காட்டி, மனித இரத்தம் தெருக்களில் ஓடலாமா? இந்த இடத்திற்குப் போகாதீர்கள் என்று காவல்துறை சொன்னால், நாங்கள் அந்த இடத்திற்குப் போக மாட்டோம்.


பெரியார் பிறந்தநாள் விழா என்பதற்காகத் தான் நாங்கள் இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று விரும்பினோமே தவிர, வேறு ஒன்றும் இல்லை.
ஏனென்றால், காவல் துறைக்கு இருக்கின்ற மரியாதை இருக்கிறது பாருங்கள், யார் ஆட்சிக்கு வந்தாலும் அது குறையக்கூடாது என்று கருதுகின்றவர்கள்.


காவல்துறையை மதிக்க வேண்டும்


ஏனென்றால், காவல்துறைதான் எல்லோருக்கும் பாதுகாப்பு. (கைதட்டல்). ஆட்சிகள் மாறும். ஆனால் காவல்துறையினுடைய கடமைகள் இருக்கிறது பாருங்கள், அது என்றைக்கும் மனித சமுதாயத்திற்குத் தேவை.
ஆகவே, அவர்களை சங்கடப்படுத்த வேண்டும் என்பதோ, மற்றதோ நம்முடைய நோக்கம் கிடையாது. தந்தை பெரியார் அவர்கள் இதில் ரொம்ப குறியாக இருந்தவர்கள். காங்கிரஸ் கட்சி காவல்துறையினரை எதிர்த்தபொழுதுகூட தந்தை பெரியார் சொன்னார். காவல்துறையினரை எதிர்க்கக் கூடாது. காரணம் என்னவென்றால், இன்றைக்கு ஒரு ஆட்சி இருக்கலாம்; நாளைக்கு இன்னொரு ஆட்சி இருக்கலாம். யார் ஆட்சியில் இருந்தாலும், மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பவர்கள் அவர்கள்தான். அவர்கள் மாறுபாடாகக் கூட நடக்கலாம். அது திருத்தப்பட வேண்டியதே தவிர, வேறு ஒன்றும் இல்லை.


கடவுள் பெயரால் ஆபாசம்-அருவருப்பு


ஆகவே, கடவுள் என்ற பெயராலே ஆபாசத்தை, அருவருப்பை, ஒழுக்கக்கேட்டை, மூட நம்பிக்கையை உருவாக்கி வைத்துக்கொண்டு-அதை வைத்துப் பிழைக்கலாம் என்று ஒரு சாரார் நினைக்கிறார்கள். இன்னொரு சாரார்- அமைதியான இந்தப் பூமியிலே ஒரு கலவரத்தை உருவாக்கலாம் என்று நினைத்து செயல்படுகிறார்கள் என்று சொன்னால், எவ்வளவு கொடுமை என்பதை எண்ணிப் பாருங்கள்.


எல்லோரும் வாழ வேண்டும்


பன் மதங்கள், பல ஜாதிகள், இருந்தாலும் என் மதம் மட்டுமே ஆட்சியிலே இருக்க வேண்டும். உன் மதம் சாக வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் அல்ல நாங்கள். எல்லோரும் வாழ வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் நாங்கள். எல்லோரும் நல்லிணக்கத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்லுகின்ற இயக்கம் சுயமரியாதை இயக்கம்- திராவிடர் கழகம். 24ஆம் தேதி பாபர் மசூதி சம்பந்தமாக ஒரு தீர்ப்பு வருகிறது என்று சொன்னவுடனே, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றார்கள். எல்லோரும் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய அரசு சொல்ல வேண்டியதன் அவசியமென்ன?


மதவெறியைக் கிளப்பிவிடக்கூடிய சக்திகள்


மதவெறியைக் கிளப்பிவிடக்கூடிய சக்திகள் ரெடியாக இருக்கின்றன என்பதுதானே அர்த்தம்? தீயை அணைக்கிறோம், தீயை அணைக்கிறோம் என்று சொல்லி பெட்ரோல் ஊற்றினால் என்ன ஆகும்? இதுவா தீயை அணைக்கின்ற முறை? ஆகவேதான், எங்களைப் பொறுத்தவரையிலே நாங்கள் மனிதநேயத்தோடு தெளிவாக இருக்கக் கூடிவர்கள். கடவுளை மற; மனிதனை நினை! என்று தந்தை பெரியார் சொன்னார் (கைதட்டல்).
ஒருவர் கோவில் கட்டினால், இந்துக்கள் மட்டும் அந்தக் கோவிலுக்குப் போவார்கள். ஒருவர் சர்ச்சைக் கட்டினால், கிறித்துவர்கள் மட்டும் சர்ச்சுக்குப் போவார்கள். ஒருவர் மசூதி கட்டினால், முஸ்லிம் மட்டும் போவார்கள்.


பள்ளிக்கூடம்-மருத்துவமனை என்றால்


ஒருவர் பள்ளிக்கூடம் கட்டினால், அனைவரும் போவார்கள். ஒருவர் மருத்துவமனை கட்டினால், எல்லா நோயாளிகளும் போவார்களே! கடவுளை மற; மனிதனை நினை என்று சொன்ன தந்தை பெரியார் வாழ்க என்று சொல்லி, உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி, இந்தப் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி அளித்த காவல்துறை அதிகாரிகளுக்கும், திராவிடர் கழகத்தின் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்து விடைபெறுகிறேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

----------------”விடுதலை” 26-9-2010

0 comments: