Search This Blog

10.9.10

பிள்ளையார் தருவாரா முத்தமிழை?



ஈரோடு மதரசா இசுலாமியா உயர்நிலைப்பள்ளியில் பேச புரட்சிக் கவிஞரை அழைத்திருந்தார். ஈரோடு தமிழன்பன். 11.11.1963 காலையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு அறிவியல் ஆசிரியர் வாசுதேவன் தலைமை வகித்தார். கவிஞர் ஈரோடு தமிழன்பன் வரவேற்புரை நிகழ்த்தியதும், புரட்சிக்கவிஞர் உவப்போடும், உணர்ச்சியோடும் பேசத் தொடங்கினார்.

தாய்மொழியாகிய தமிழை விரும்ப வேண்டும்; கற்க வேண்டும். தமிழ்ப் பகைக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றெல்லாம் இளைய மாணவர்களுக்கு ஏற்ற நடையில் ஏற்ற முறையில் புரட்சிக் கவிஞர் பேசிக் கொண்டே வந்தவர், தமிழ்மொழியின் இலக்கியங்களை நன்கு உழைத்துக் கற்க வேண்டும் என்பதை வற்புறுத்த முற்பட்டார்.

விலை போட்டு வாங்கவா முடியும் கல்வி! என்று பாடியவரல்லவா அவர்! அவர் சொன்னார், தமிழை கடையிலே வாங்கி வரும் மளிகைச் சரக்காக நினைத்து விடக்கூடாது; கடவுளை வழிபட்டு அதை எளிதாக எவனும் வாங்கிவிட முடியாது. யாரோ விநாயகரிடம் போய், யாரோ என்ன அவ்வையார் தான் நான் பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் கொடுக்கிறேன்! நீ சங்கத் தமிழ் மூன்றையும் எனக்குக் கொடு என்று தந்திரமாகக் கேட்டாராம். அதாவது உனக்கு நான்கு தருகின்றேன்; நீ எனக்கு மூன்றைக் கொடு!

எப்படி இருக்கிறது பாருங்கள்? பால், தேன், பாகு, முந்திரிப் பருப்பு எல்லாம் அஞ்சு ரூபாய்க்குள்ளே அகப்படுகிற கடைச் சரக்குகள்! பதிலாக முத்தமிழும் வேண்டுமாம்! தமிழென்ன அவ்வளவு மட்டச்சரக்கா? ஒவ்வொருவனும் எவ்வளவு முயற்சி எடுத்து, எவ்வளவு காலம் உழைத்து, எவரெவரிடம் போய், கற்று முடிக்க முடியாத தமிழை விநாயகராகப் பார்த்து இந்தா பிடி என்று கொடுத்து விட முடியுமா?

எனவே மாணவர்களாகிய நீங்கள், தாய்மொழியாகிய தமிழ்மேல் பற்றுக் கொண்டு நன்றாகக் கற்க வேண்டும்; பிழையில்லாமல் கற்க வேண்டும் இப்படிப் புரட்சிக் கவிஞர் சொல்லி வந்த கருத்துகளை எம் மாணவர்கள் கருத்துகளாக ஏற்கவில்லை; பொன்னாய், வைரமாய்ப் புது முத்தாய் அள்ளி அள்ளிக் குவித்துக் கொண்டனர்; கொண்டாட்டம் போட்டனர்!

படிக்கையிலே தொல்லை இருக்கும்; படித்து
முடிக்கையிலே முற்றும் மகிழ்ச்சி முடிந்த பின்
தொட்டதெல்லாம் வெற்றி, துயரின்றி வாழலாம்
கட்டாயம் கல்வி பயில்.
சொட்டுக் குழம்புக்கும் சோற்றுக்கும் கையிலொரு
துட்டுக்கும் கண்ணயர்ந்து தூங்குவதற்கும் கட்டத்
துணிக்கும் துடிக்கின்ற ஏழையையும் நல்ல
பணக்கார னாக்கும் படிப்பு.

புரட்சிக் கவிஞர் தமது குயில் ஏட்டில் எழுதி வெளியிட்டிருந்த கல்வி பற்றிய இவ்வெண்பாக்களையெல்லாம் அறிந்திருந்த எங்கள் மாணவர்கள் காட்டிய ஆர்வத்தை, அடக்கத்தை, அமைதியைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனார், பாராதிதாசன்.

---------------------நன்றி: பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் நூல்

0 comments: