திரைப்பட விழா ஒன்றில் பங்கு ஏற்ற முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திரைப்படங்களில் பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துச் சொல்லத் தயங்கக் கூடாது - அஞ்சக் கூடாது என்று கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்க சிறந்த கருத்தாகும்.
திராவிட இயக்கத்தினர் என்ன சாதித்துவிட்டனர் என்று சத்து இல்லாத கேள்வியை எழுப்பும் சில சருகு மனிதர்களும், சக்கை ஏடுகளும் நம் நாட்டில் உண்டு.
திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திரைப்பட உலகில் கால் எடுத்து வைத்த பிறகுதான் மறுமலர்ச்சி அத்தியாயம் மணம் வீச ஆரம்பித்தது. நல்ல தமிழைக் காது குளிரக் கேட்க முடிந்தது. நல்ல கருத்துகள் சிந்தனைக்கு விருந்தாகக் கிடைத்தன. மூட நம்பிக்கை என்னும் இருள் ஓட்டம் பிடித்தது.
அறிஞர் அண்ணாவின் வேலைக்காரியாகட்டும், கலைஞர் அவர்களின் பராசக்தியாகட்டும் அந்தக் கால கட்டத்தில் எத்தகைய எழுச்சியை ஏற்படுத்தியது! அதற் கேற்றாற்போல உடுமலை நாராயண கவியும், கலைவாணரும் நமக்குக் கிடைக்கப் பெற்றனர். இந்த இருவர் கூட்டணி திரையுலகத்தையே ஒரு கலக்குக் கலக்கியது.
கலைவாணருக்கென்றே திரைப்படத்தில் கதைக்குச் சம்பந்தமில்லாமலேயே ஒரு தனிப் பிரிவு திரைப்படம் முழுவதும் தொடக்க முதல் கடைசிவரை இடை இடையே ஓடிக் கொண்டிருக்கும்; அந்தக் காட்சி எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து இருப்பார்கள் பொதுமக்கள்.
சிரிக்கவும் வைப்பார்கள் - அதன் வழி சிந்திக்கவும் வைப்பார்கள்.
ஒரு திரைப்படத்தில் கீழ்ஜாதிக்காரர் தண்ணீர் குடித்த தம்ளரைத் தண்ணீர் ஊற்றிக் கழுவச் சொல்லுவார் முதலாளி. அதன்பின் அதே கீழ்ஜாதிக்காரர் ரூபாய் நோட்டைக் கொண்டு வந்து வைப்பார் - அப்பொழுது கலைவாணர் அந்த ரூபாய் நோட்டுமீது ஒரு சொம்புத் தண்ணீரை ஊற்றுவார்.
முதலாளி சத்தம் போடுவார் - திட்டுவார். வேலைக்காரரான கலைவாணரோ, ஏன் எஜமான் திட்டுறீங்க என்று கேள்வி கேட்பார். ரூபாய் நோட்டுல தண்ணியை ஊத்தினா திட்டாமல் என்ன செய்வாங்களாம் என்று முதலாளி கேட்பார். அது கீழ்ஜாதிக்காரர் கொடுத்த நோட்டுங்களாச்சே என்பார் கலைவாணர். ரூபாய்க்கெல்லாம் தீட்டுக் கிடையாது என்பார் முதலாளி, திரைப்படக் கொட்டகையே குலுங்கும் - வெடிச்சிரிப்புக்கும், கைதட்டலுக்கும்.
அந்தக் காலத்தில் அது தேவைப்பட்டது. இப்பொழுது ஏன் என்று கேட்கவும் முடியாது. இன்னும் இரட்டைக் கிளாஸ் உள்ள தேநீர்க்கடைகள் கிராமப் பகுதிகளில் இருக்கத்தான் செய்கின்றன. இன்னும் ஒவ்வொரு ஆண்டும் காந்தியார் பிறந்த நாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளத்தான் படுகிறது. சமபந்தி போஜனமும் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. எனவே, இன்றைக்கும்கூட தீண்டாமை ஒழிப்பு - அதற்குமூல வேரான ஜாதி ஒழிப்புக் கருத்துகள் பெரிய திரை, சின்னத்திரை, நாடகங்கள்மூலம் பிரச்சாரம் செய்யப்படவேண்டிய அவசியம் இருக்கவே செய்கிறது.
ஜாதிவாரியாக இன்னும் சிறப்பு இதழ்களை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். தந்தை பெரியார் அவர்களைத் தெரிவிக்க எத்தனையோ கொள்கை வழிபட்ட அம்சங்கள் இருக்கும்பொழுது, நாயக்கர் சமுதாயம் கொடுத்த நன்கொடை என்று ஒரு வார இதழ் எழுதுகிறது என்றால், நிலைமையைத் தெரிந்துகொள்ளலாமே!
வெங்கட் என்ற பார்ப்பனர் நாடகங்களை நடத்தக் கூடியவர். மருத்துவமனையில் குழந்தை மாறாட்டம் காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவன் பிற்காலத்தில் சங்கராச்சாரியானார் என்ற முறையில் நாடகத்தை நடத்தியபோது, பார்ப்பனர்கள் நேரடியாகவே மோதி நாடகத்தை நடத்தவிடாமல் தடை செய்தனரே, இதில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியும் தலையிட்டு, வெங்கிட்டை நேரில் வரச் சொல்லி, மிரட்டினாரே!
இந்த நிலையில், திரைப்பட, நாடகக் கலைஞர்கள் ஆற்ற வேண்டிய பகுத்தறிவுக் கடமை - இந்தக் காலகட்டத்திலும் மிக அதிகமாகவே இருக்கிறது.
திரைப்படத் துறையில் சீர்திருத்தங்கள் செய்தது ஒரு பக்கம் என்றாலும், நாடகத் துறையில் திராவிட இயக்கத் தவர்கள் சாதித்தவை சாதாரணமானவையல்ல. இத்திசையில் நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள் உண்மையான புரட்சி நடிகர் ஆவார். அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அதிர்வேட்டுகள்!
ஒரு நாடகத்தில் திதி கொடுக்கப் பார்ப்பனர் வருவார். ராதாவிடமிருந்து வரவேற்பு பலமாக இருக்கும்.
புரோகிதரைப் பார்த்து அவர் கேட்பார் - உங்களிடம் கொடுக்கும் உணவுப் பொருள் எல்லாம் எங்கள் அப்பனுக்குக் கண்டிப்பாகப் போய்ச் சேரும்தானே - சந்தேகம் இல்லையே என்று கேட்பார். அதிலென்ன சந்தேகம்? பேஷா போய்ச் சேரும் என்பார் புரோகிதர்.
ஓ, பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியோ! என்று நடிகவேளுக்கே உரித்தான குரலில் ஒரு இழுப்பு இழுப்பார். நாடகக் கொட்டகையே அதிரும் வகையில் கைதட்டல் இருக்கும்.
அடுத்து வருவதுதான் இன்னும் சுவையானது. எங்கள் தகப்பனார் இருக்காரே, அவருக்குக் கருவாடு இல்லேன்னா ஒரு பிடி சோறுகூட உள்ளே போகாது. தினம் மீன் வேணும், கறி வேணும். நீங்க என்ன பண்றேள் - கருவாடு, மீன், கறி சகிதமா சமையல் ரெடியா இருக்கு - என் எதிரே உட் கார்ந்து சாப்பிடணும்; அதன் மூலமா எங்கள் அப்பா வயிறு நிறையணும் என்பார் அவ்வளவுதான், புரோகிதன் எடுப்பான் ஓட்டம்.
திராவிட இயக்கம் இப்படி எல்லாம்தான் கருத்துப் புரட்சி செய்தது; இவற்றையெல்லாம் மனதிற்கொண்டுதான் கலைஞர் அவர்கள் திரைப்படங்களில் பகுத்தறிவுக் கருத்து களைப் பரப்பவேண்டும் என்று கூறுகிறார். குறிப்பாக திராவிட இயக்கத்துக்குச் சம்பந்தப்பட்டவர்கள் எடுக்கும் திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும் - தமிழ் மக்களும் அதைத்தான் பொதுவாக எதிர்பார்க் கிறார்கள்.
------------------- “விடுதலை” தலையங்கம் 10-09-2010
1 comments:
பெரிய திரை, சின்னத்திரை, நாடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் பகுத்தறிவு பிரச்சாரம் செய்யப்படவேண்டிய அவசியம் இருக்கவே செய்கிறது//
எல்லாமே பகுத்தறிவுகளின் கையில் உள்ள போது, நீங்களே அந்த வேலைகளை செய்யலாமே.
அதற்கு முன்பு பேரன்களின் திரைப்பட நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் வைக்க சொல்லுங்கள்.
மேலும் வாசிக்க : http://oosssai.blogspot.com/2010/09/blog-post_06.html
Post a Comment