Search This Blog

3.9.10

அழுக்குருண்டை பிள்ளையார்பற்றி பிரச்சாரம் வேகமாக நடக்கட்டும்!

மூன்று இடங்களில் பெரியார் சிலை அடுத்தடுத்து சேதப்படுத்தப்பட்டிருப்பது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட சதியே!
காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்
கழகத் தோழர்களே, அழுக்குருண்டை பிள்ளையார்பற்றி பிரச்சாரம்
புயல் வேகத்தில் நடக்கட்டும்! நடக்கட்டும்!!
தந்தை பெரியார் பிறந்த நாளை தமிழின விழாவாக வீட்டுக்கு
வீடு கொண்டாடுவோம், கொண்டாடுவோம்! தமிழர் தலைவர் அறிக்கை

தந்தை பெரியார் சிலை மூன்று இடங்களில் சேதப்படுத்தப்பட்டது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:

திருச்சி அண்ணா நகரில் இருந்த தந்தை பெரியார் சிலையும், அந்தப் பகுதியிலே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அரசு சார்பில் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையும் ஒரே சமயத்தில் (கடந்த செவ்வாய்க் கிழமை இரவு) விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்ட வகையிலான விஷமம்

இந்தப் பதற்றம் அடங்குவதற்குள், நெல்லை மாவட்டம் கடையநல்லூரையடுத்த மங்கலாபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இருந்த தந்தை பெரியார் சிலை செப்டம்பர் முதல் தேதி இரவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது ஏதோ எதிர்பாராவிதமாக நடந்த அசம்பாவிதமாகக் கருதப்பட முடியாது. அடுத்தடுத்து இரண்டு நாள்களில் மூன்று இடங்களில் இது நடந்திருக்கிறது.

திட்டமிட்ட வகையில் இதன் பின்னணியில் ஒரு சதிக் கும்பல் இருந்திருக்கிறது என்று கருதுவதற்கு நிச்சயம் இடம் உண்டு. காவல்துறை திசை திருப்ப முயற்சிக்கக் கூடாது.

தமிழினத்துக்கே அறைகூவல்!

தந்தை பெரியார் சிலையைச் சீண்டுவது என்பது ஒட்டுமொத்தமான தமிழினத்திற்கு விடப்பட்ட அறை கூவலாகும்.

தந்தை பெரியார் ஒரு கட்சிக்கோ, ஓர் இயக்கத்துக்கோ சொந்தமானவர் அல்லர். ஒட்டுமொத்த தமிழினத்திற்கு உயிர் போன்றவர். தமிழினத்திற்குச் சுயமரியாதையையும், பகுத்தறிவையும் ஊட்டி, இனப் பகையின் ஆதிக்க வேரையறுத்து, புத்துணர்வை ஊட்டிய உலகத் தலைவர் அவர்.

எதிர்நீச்சல் போட்ட தலைவர்

அவர் வாழ்ந்த காலத்திலும் எதிர்நீச்சல் போட்டவர் அவர் மறைந்த இந்தக் காலகட்டத்திலும் அவரை மய்யப்படுத்தியே சர்ச்சைகளும், சிந்தனைகளும் சுழன்று கொண்டிருக்கின்றன. தந்தை பெரியாரின் தேவை மிக அதிகமாக உணரப்படும் காலகட்டம் இது.

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் காவித் தீவிரவாதம்பற்றி கூறிய கருத்தினை வரவேற்று சிதம்பரம் அவர்கள் சொன்னதில் என்ன குற்றம் என்று விடுதலையில் அறிக்கை வெளியிட்ட ஒரு சில நாள்களில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை இந்தக் கண்ணோட்டத்தில் பிரச்சினையை அணுகுவது அவசியம்.

காவல்துறையின் கவனத்திற்கு...!

யாரையோ இரண்டொருவர் மீது வழக்குப் போட்டு கோப்பினை முடிவுக்குக் கொண்டுவரும் சம்பிரதாயமான நடைமுறையை தந்தை பெரியார் சிலை சேதப் படுத்தப்பட்ட இந்தப் பிரச்சினையிலும் உள்ளூர்க் காவல் துறையினர் கடைப்பிடித்தால், அதனைத் தமிழகம் ஏற்காது.

திருச்சியில் தந்தை பெரியார் சிலை தகர்க்கப்பட்ட 24 மணிநேரத்தில் அதே இடத்தில் சிலையைக் கழகத் தோழர்கள் வைத்துவிட்டனர்; அது வேறு செய்தி.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் என்று கவிஞர் கருணானந்தம் அவர்கள் கூறியதுபோல, தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான அய்யா சிலைகளை நிறுவிட கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள்.

எந்த எண்ணத்தின் அடிப்படையில்?

தந்தை பெரியார் சிலையைத் தகர்க்கவேண்டும் என்று நினைக்கிற செயல்படுகிற அந்த எண்ணம் எந்த அடிப்படையில், எந்தப் பின்னணியில் என்பதுதான் முக்கியமானதாகும்.

தீவிரமான முறையில் கொள்கைப் பிரச்சாரம் செய்து வந்த தந்தை பெரியார் வன்முறையை ஒருபோதும் தூண்டியதில்லை பிள்ளையார் உடைப்புப் போராட் டத்தை அறிவித்த நேரத்தில்கூட கோயில்களில் உள்ள சிலைகளை உடைக்கச் சொல்லவில்லை. காசு கொடுத்துக் கடைகளில் வாங்கி, அதனைத்தான் உடைக்கச் சொன்னார்.

கோயில் சிலைகளை உடைக்க முடியாதா?

கோயில்களில் இருக்கும் சிலைகளை உடைப்பது என்பது பெரிய காரியமல்ல! அப்படி உடைக்கவேண்டும் என்றால், முன்னதாகவே அறிவித்து நாள் குறிப்பிட்டு, அந்தக் காரியத்தை எங்களால் நிச்சயம் செய்ய முடியும்.

ஆனால், அதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை; மக்கள் மனதில் உள்ள அறியாமை இருட்டை பகுத்தறிவின் அடிப்படையில் விரட்டுவதன் மூலமாகத்தான் நிரந்தரமான தீர்வைக் காண முடியும் என்பது தந்தை பெரியார் அவர்களின் அணுகுமுறை அதைத்தான் இன்றளவும் கழகம் பின்பற்றி வருகிறது.

முளையிலேயே கிள்ளி எறிக!

தமிழ்நாட்டின் அமைதிச் சூழலைக் கெடுக்க இத்தகு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்று காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறோம்.

பெரியார் சிலையைச் சேதப்படுத்தினால் கழகம் சோர்ந்துவிடாது; மாறாக வீறுகொண்டு எழுந்து, கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தை, கா(லி)விகளின் பிற்போக்குச் சனாதனத்தைத் தோலுரிக்கும் பிரச்சாரத்தைப் பன்மடங்கு மேற்கொள்வோம்.

குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்ட ரீதியான கடமையினைச் செய்ய அரசுக்கு விட்டுவிடுவோம்.

திராவிடர் கழகம் கலைஞர் அரசுக்கு அரணாக இருப்பதை மாற்றவும், இப்படி ஒரு நிலையை உருவாக்கி, ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கப் பார்க்கின்றன ஆரியமும், அதன் கூலிகளும்!

எங்கள் பணியால், பிரச்சாரத்தால் சட்டம் ஒழுங்கு கெடாது; கெடவும் அனுமதிக்க மாட்டோம்.

அழுக்குருண்டை பிள்ளையார்பற்றி பிரச்சாரம் வேகமாக நடக்கட்டும்!

விநாயகர் சதுர்த்தி வரும் இந்தக் காலகட்டத்தில் அதனை மய்யப்படுத்தி, கழகத் தோழர்களே, நமது பிரச்சாரம் புயலாக நாலா திசைகளிலும் சுழன்று அடிக்கட்டும். அழுக்குருண்டைப் பிள்ளையார்பற்றி அதிவேகத்தில் பிரச்சாரம் நடக்கட்டும்; துண்டு அறிக்கைகளை வீட்டுக்கு வீடு விநியோகியுங்கள். சுவரெழுத்து, தட்டி வாசகம் எங்கும் நீக்கமறக் காணப்படட்டும்!

தந்தை பெரியார் சிலையைச் சேதப்படுத்திய காரணத்தால் ஓய்ந்து போனோமா மாறாக ஓங்கி எழுந்தோமா என்பதை நாடு காணட்டும்!

பெரியார் பிறந்த நாளினை பெருஞ்சிறப்புடன் கொண்டாடுவீர்!

வட்டியும் முதலுமாகச் சேர்த்து தந்தை பெரியார் அவர்களின் 132 ஆம் ஆண்டு பிறந்த நாளினை தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவர் வீட்டிலும் கொண் டாடவேண்டும்.

தமிழர்களை ஒருமுனைப்படுத்தும் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை அந்தக் கண்ணோட்டத்தில் வளர்த்தெடுப்போம்!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற புரட்சிக்கவிஞரின் வரிகளை நிலைப்படுத்துவோம்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!


தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
3.9.2010

1 comments:

ஒசை said...

மனித உயிர்களுக்கே பாதுகாப்பு இல்லாத தேசத்துல, சிலைகளோட பாதுகாப்பை பத்தி பேச வந்துட்டீங்க.