சிலிர்க்கட்டும் சீர்காழி!
மானமிகு தோழர்களே, சீர்காழி அழைக்கிறது வாருங்கள். வரும் 27ஆம் தேதி மாலை சீர்காழி நகரம் சீர்திருத்தத்தையும் கடந்து புரட்சிப் பூபாளம் பாடும்போர் மறவர்களின் - புது புறநானூறு அரங்கேற்றம்.
திருவாரூர் மண்டல திராவிடர் கழக மாநாடு சீர்காழியில் நடைபெற உள்ளது. இந்த சீர்காழி இயக்க வரலாற்றில் நேற்றுப் பெய்த மழையில் இன்று முளையிட்ட காளான் அல்ல!
இயக்க வரலாற்றில் சீர்காழிக்கென்று சீர்மிகு அத்தியாயம் உண்டு.
அதன் நுனியைத் தொட 75 ஆண்டுகள் பயணிக்க வேண்டும். 1935 ஜூலை 9ஆம் தேதி இதே சீர்காழியில் ஊழியக்காரன் தோப்பில் தஞ்சை மாவட்ட ஆதிதிரா விடர் முதலாவது அரசியல் மாநாடு நடைபெற்றுள்ளது.
மாநாட்டுத் தலைவர் யார் தெரியுமா? தஞ்சை ஜில்லா மிராசுதாரும், கிழக்குத் தஞ்சை ஜில்லா போர்டு தலைவருமான என்.ஆர்.சாமியப்பா முதலியார்; திறப் பாளரும் சாதாரணமானவர் அல்லர். சென்னை மாநில இரண்டாவது அமைச்சர் பி.டி.ராஜன் பார் அட் லா ஆவார்.
இரண்டாம் நாள் வாலிபர்கள் மாநாடு. அன்ன பூர்ணி அம்மையார் தலைமை வகிக்க - தோழர் ஈ.வெ.ராமசாமி (குடிஅரசு, 7.9.1935 அப்படிதான் குறிப்பிடுகிறது) திறந்து வைத்தார்.
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, பூவாளூர் பொன்னம்பலனார், மஞ்சுளாபாய், கே.எம். பாலசுப்பிரமணியம், சித்தர்க்காடு ராமையா என்று பெரும் தளகர்த்தர்கள் எல்லாம் அம்மாநாடுகளில் அரிமா முழக்கமிட்டுள்ளனர்.
சாமியப்ப முதலியார் மிராசுதார் ஆயிற்றே - பார்ப்பனருக்கு அடுத்த உயர்ஜாதியைச் சேர்ந்தவர் ஆயிற்றே. அவர் ஆதிதிராவிடர் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிலாமா என்று அவசரப்பட்டு ஆரா திக்கும் கத்துக்குட்டிகளுக்கு நமது அய்யா, அன்றே அந்த மாநாட்டிலேயே தலைவரை வழிமொழியும் பாங்கில் பளார் என்று தெரிவித்தும் விட்டார்.
தோழர் சாமியப்பா அவர்கள் பொதுவாகப் பிராமணர்களுக்கு அடுத்தபடியாக சொல்லப்படும் சமூகத்திலுதித்தவரும், தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்துவதில் முதல் பட்டம் பெற்ற சமூகத் திலுதித்தவருமான தோழர் சாமியப்பா ஆதிதிராவிடர் மகாநாட்டுக்குத் தலைமை வகித்து வந்த பெரிய தியாகம் என்று குறிப்பிட்டது சாதாரணமானதன்று.
நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மிட்டா மிராசு தார்களாக இருந்தாலும் அதன் ரிங் மாஸ்டராக இருந்தவர் தந்தை பெரியார் ஆயிற்றே - அவர் கண்காணிப்பாலும், கருத்து ஒளியாலும் தங்களைத் தாழ்த்திக் கொண்டு தலையாய பணிகளை அர்ப்பணித்த மனப்பான்மையுடன் செய்தனர் என்பது தான் தனிச் சிறப்பாகும். அந்த மகாநாட்டில் 21 தீர்மானங்கள் என்றால், மகாநாட்டின் மகத்தான சிறப்புக்கு வேறு கட்டியமும் கூற வேண்டுமோ!
தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி கேட்டுப் போராடி வெற்றி பெற்றவர் அண்ணல் அம்பேத்கர். வருணாசிரம வாதியான காந்தியாரின் பிடிவாதத்தால் அது தட்டிப் பறிக்கப்பட்டது.
அந்த நெருக்கடியான நேரத்திலும் ஒரு காந்தியா ரின் உயிரைவிட கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் நலனே முக்கியம் என்று அம்பேத்கர் அவர்களுக்கு அய்ரோப்பிய நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த தந்தை பெரியார் தந்தி ஒன்றும் கொடுத்தார் என்பது - ஒடுக்கப்பட்ட மக்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய உன்னதமான தகவலாகும்.
சீர்காழி ஆதிதிராவிடர் மாநாட்டின் 3ஆவது தீர்மானம் அது தொடர்புடையதே!
பூனா ஒப்பந்தத்தால் ஏற்பட்ட கூட்டுத் தொகுதியில் நம்மவர்கள் நலத்திற்கென உழைத்துவரும் தோழர்கள் சுயராஜ்ய அரசியலில் இடம் பெற முடியாமல் கஷ்டப் படுவதைத் தடுப்பான் வேண்டி மேற்படி கூட்டுத் தொகு தியை விலக்கும்படி இம்மாநாடு தீர்மானிக்கிறது.
ஒவ்வொரு தீர்மானமும் ஆதிதிராவிட மக்களின் உரிமைகளை நோக்கிய அரிமா அணிவகுப்பாகும்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு திராவிடர் கழகம் என்ன செய்தது என்று வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று குறைப் பிரசவ கூச்சல்காரர்களுக்குச் சீர்காழி மாநாடு செவுளில் அறை கொடுப்பது போன்றதாகும்.
பார்ப்பனர்களுக்கு முந்திய தமிழிசை மூவர்கள் முத்துத்தாண்டவரும், அருணாசல கவிராயரும், தில்லை விடங்கன் மாரிமுத்தாப் பிள்ளையும் இசைமாரி பொழிந்த பூமி இது.
நமது நெடுநாளைய கோரிக்கையை ஏற்று மானமிகு கலைஞர் அரசால் நம் தமிழின இசை வித்தகர்களின் பெயரால் பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் எழுப்பிட அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது.
மூடநம்பிக்கையின் முற்றமும் இந்தச் சீர்காழியில் உண்டு. அப்பன் சின்னசாமி அய்யர் குளத்தில் குளிக்கச் செல்லும் முன் மகன் திருஞானசம்பந்தனை படித்துறை மேல் படிக்கட்டில் நிற்க வைக்க, பாலகன் பாலுக்கழ, பார்வதி தேவியார் கீழே இறங்கி வந்து ஞானப்பால் ஊட்ட தோடுடைய செவியன் என்ற தேவாரப் பாட லைப் பாடத் தொடங்கினான் என்கிற பார்ப்பனர்களின் சரடுதான் அந்த மூடநம்பிக்கை.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பூம்பாவை திரைப்படத்திலே இந்த அருள் பித்தலாட்டத்தைத் தோலுரித்துக் காட்டினார்.
கலைவாணர்:
சின்னவயதிலே கன்னித்தமிழிலே
சொன்னான் ஒரு பாட்டு
என்று போடுறியே வேட்டு!
மற்றவர்கள்: அன்னை பார்வதி அன்புடன் பாலை
அவர்க்களிக்க வந்தாள்; ஞானம்
அப்பொழுதே தந்தாள்
மண்ணில் சைவ மதமே
தழைக்க மழையெனவே...
கலைவாணர்: உழைப்பதன் வெற்றிப் பயனே அருளாம்
உண்மை தெரிந்திடா
விளைவும், மோட்சம் கடவுள் கூட்டம்
வீணான வார்த்தையடி!
அருளாள் பிழைப்போமா?
பொருளால் பிழைப்போமா?
உடுமலை நாராயண கவி பாடல் எழுத, கலைவாணர் கிண்டலடிப்பார்.
வருடா வருடம் சீர்காழியிலேயே பார்வதி ஞானப் பால் ஊட்டியதாகக் கதையளக்கும் திருவிழா நடந்து கொண்டு தான் இருக்கிறது.
மும்பையிலே திலகர் என்ற பார்ப்பனர் கட்டிவிட்ட அழுக்கு மூட்டையான பிள்ளையார் ஊர்வலத்தைத் தமிழ்நாட்டிலும் இறக்குமதி செய்துள்ளனர்.
மதங்களுக்கு ஜீவ நாடியாய் இருந்து வருவது பணமும் பிரச்சாரமுமேயல்லாமல், அவற்றின் தெய்வீகத் தன்மையோ, உயர்ந்த குணமோ என்று எதையும் யாரும் சொல்ல முடியாது என்றார் தந்தை பெரியார் (குடிஅரசு, 8.10.1933)
மதங்களின் இந்த மூடப் பிரச்சாரத்தை பகுத்தறிவுப் பிரச்சாரத்தால்தான் முறியடிக்க முடியும்.
வரும் திங்களன்று சீர்காழியில் மண்டல மாநாடு மட்டுமல்ல - அதனையொட்டியே மாபெரும் மூடநம் பிக்கை ஒழிப்புப் பேரணியும் இடம்பெறும்.
ஜெயிப்பது யார் பிள்ளையார் கூட்டமா, பெரியார் பெரும்படையா என்பதைக் காட்டுவோம், வாருங்கள் கருஞ்சட்டைத் தோழர்களே!
வகுப்புரிமையின் சிற்பி எஸ்.முத்தையா முதலியார் சீர்காழி மண்ணுக்குச் சொந்தக்காரர். சீர்காழியை யடுத்த குரும்பக்குடி மிராசுதார் அவர்.
வகுப்புரிமைத் திசையில் முதல் ஆணையை 1928இல் பிறப்பித்து ஒடுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் பாலை வார்த்த பெருமகன் அவர். ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் பிறக்கும் ஒரு குழந்தைக்கு முத்தையா என்று பெயரிடுங் கள் என்று தந்தை பெரியார் எழுதினார் என்றால் அந்தப் பெருமகனாரின் பெருமைக்கு வேறு எந்த வைர முடிவேண்டும்?
தமிழ்நாட்டில் செயல்பாட்டிலிருந்த இட ஒதுக்கீட்டை நீதிமன்றங்கள் நிராகரித்த நிலையில், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துக என்று தந்தை பெரியார் களம் இறங்கி போராடிய அந்தத் தருணத்தில், நமது முத்தையா முதலியார் என்ன சொன்னார் தெரியுமா?
இந்தத் தீமை அகற்றப்பட மய்ய அரசு முன்வர வில்லை என்றால் இந்தியாவிலிருந்து சென்னை மாநிலம் பிரிய வேண்டும் என்று இடிமுழக்கம் செய்தார் என்றால் சாதாரணமா?
அந்த சமூக நீதிச் சிற்பியின் உருவப் படத்தைத் திறந்து அவரின் சொந்த மண்ணிலே சமூக நீதி சங்கநாதம் செய்ய உள்ளார் நமது தமிழர் தலைவர்.
கருஞ்சட்டைக் குடும்பத்திலே பிறந்து - இன்றைய தினம் மானமிகு, மாண்புமிகு கலைஞர் அவர்களின் அமைச்சரவையிலே அங்கம் வகிக்கும் மானமிகு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் உ.மதிவாணன் பங்கேற்க உள்ளார்.
வயது 95இல் அடி எடுத்து வைத்தாலும் வாலிபர் போல நடைபோடும் திருவாரூர் மண்டலத் தலைவர் மானமிகு எஸ்.எஸ்.மணியம் அவர்கள் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார். கழக முன்னணியினர் பங்கேற்ற உள்ளனர்.
மண்டல மாநாடு என்றாலும் மாவட்ட மாநாடு போல ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. சுவர் எல்லாம் மண்டல மாநாட்டை பற்றிப் பேசுகின்றன. எங்குப் பார்த்தாலும் டிஜிட்டல் பேனர்கள்.
தேநீர்க் கடைகளிலும் பேருந்து நிலையங்களிலும் மாநாட்டைப் பற்றிதான் மக்கள் பேச்சு.
சமூக நீதிக் களத்திலே சாதிக்க வேண்டியவை இன்னும் பல உண்டு. ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பிலும் நமது பயணம் தொடர வேண்டியுள்ளது. பெரியார் வலம்வந்த மண்ணிலே காவிக் கூட்டத்திற்கு இடம் இல்லை என்று காட்ட வேண்டிய கடமையும் நமக்கிருக்கிறது.
இந்தக் கடமைகள் அழைக்கின்றன - வாலிபர்களே வாருங்கள், வாருங்கள் - இளைஞர்களே கூடுங்கள், கூடுங்கள்! தாய்க்குலமே அணிவகுத்து வாருங்கள்; தொழிலாளர்களே தோள் தூக்கி வாருங்கள்! மாணவப் பட்டாளமே மார்பு நிமிர்த்தி வா!
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழர்களே, கழகத்தின் அழைப்புக்குக் காதுகளைக் கொடுங்கள்!
சிங்கநாதம் கேட்கட்டும்!
சீர்காழி சிலிர்க்கட்டும்!!
வாரீர்! வாரீர்!!
--------- மின்சாரம்--"விடுதலை" 24-9-2010
காந்தியாரையே சிந்திக்க வைத்த சீர்காழி
இம்மாதம் 12ஆம் தேதி சீர்காழியில், மாவட்டக் கழக அமைப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் 80 வயதை நெருங்கும் மானமிகு ச.மு.செகதீசன் அவர்களின் பகுத்தறிவுச்சுடர் ஏந்துவீர்! என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் தேதி கொடுத்திருந்தார்.
அன்று விநாயகர் சதுர்த்தி என்பதால், வேறு தேதிக்கு நிகழ்ச்சியை ஒத்தி வைத்துக்கொள்ளுங்கள் என்று காவல்துறையினர் முன்கூட்டியே சொன்னார்கள். அதன் விளைவு என்ன தெரியுமா?
வெறும் கவிதை நூல் வெளியீட்டு விழா மட்டுமல்ல மண்டல மாநாட்டையே அதே சீர்காழியில் நடத்துங்கள்! என்று ஆணையிட்டார் தமிழர் தலைவர். அதன் விளைவுதான் நாளை மறுநாள் (27.9.2010) சீர்காழியில் நடக்க இருக்கும் கழக மண்டல மாநாடு.
எந்தப் பின்னடைவையும் முன்னேற்றத் திசையைநோக்கிப் பேரடி எடுத்து வைப்பதுதான் திராவிடர் கழகத்தின் அணுகுமுறை. அதன் விளைச்சலை சீர்காழியில் கண்டு களிக்கப்போகிறோம்.
..........
இந்தச் சீர்காழியிலே குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சி ஒன்று, காந்தியார் அவர்களையே தம் போக்கில் சித்தம் மாறச் செய்த தலையான, ஒரு சம்பவம்-அதனைச் சாதித்தவர்கள் சுயமரியாதை இயக்கத்தினர். 16.2.1934 அன்று சீர்காழிக்கு வருகை தந்தார் காந்தியார்.... மாநாடு நடைபெற்ற இடம் சீர்காழி ஊழியக்காரன் தோப்பு; அதே இடத்தில்தான் அதற்கு அடுத்த ஆண்டில், சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆதிதிராவிடர் முதலாவது அரசியல் மாநாடும் நடைபெற்றது.
காந்தியாருக்குப் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வரவேற்புகள் அளிக்கப்பட்டன. காந்தியார் அங்கு வந்தபோதும், கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோதும் சுயமரியாதை இயக்கத்தினர் கருப்புக்கொடிகளைக் காட்டிக்கொண்டு நின்றனர்.
காந்தியார் அதனைக் கவனித்தார்; கவனித்ததோடு மட்டுமல்ல, அதைக் கணக்கிலும் எடுத்துக்கொண்டார்; அந்தக் கூட்டத்திலும் அது பற்றிக் குறிப்பிடவும் செய்தார். இதோ காந்தியார் பேசுகிறார்:
கருப்புக்கொடியை ஆட்டிக்கொண்டிருந்தாலும் கூட, அவர்கள் மரியாதையோடும், ஒழுக்கத்தோடும் நடந்துகொள்வதை நான் பாராட்டுகிறேன். இப்பொழுது செய்வது போல், தங்களுடைய உணர்ச்சியை வெளிக்காட்ட அவர்களுக்கு முழு உரிமையுண்டு.
சுயமரியாதை இயக்கத்தினர் என்று கூறிக்கொள்பவர்களுக்கும் எனக்கும் எத்துணையோ அம்சங்களில் உடன்பாடு இருக்கின்றது என்று நேற்று நான் கூறினேன்.
ஆண்டவன் என்று ஒருவர் இல்லை; அப்படியே இருப்பதானாலும், எங்களைப் பொறுத்தவரை அது மனித வர்க்கம்தான் என்று சுயமரியாதை இயக்கத்தினர் கூறுகிறார்கள். ஆண்டவன் ஒருவர் இருப்பதாக நம்பும் அளவுக்கு நான் மூடநம்பிக்கை உள்ளவன்தான் என்பது ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால், சொற்களை வைத்துக்கொண்டு அவர்களுடன் சண்டையிட நான் விரும்பவில்லை. மனித சமூகம் என்ற சொல் அவர்களுக்குப் பிடிப்பதாயிருந்தால், ஆண்டவனை மனித சமுதாயம் என்ற பெயரால் அழைக்க நான் தயாராய் இருக்கிறேன். அன்பும், ஜீவகாருண்யமும்தான் தங்களுடைய குறிக்கோள் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களுடன் நேற்று பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களின் குறிக்கோளைப் பாராட்டுவதாகச் சொன்னேன். அவர்களுடைய குறிக்கோளுடன் நூற்றுக்கு நூறு உடன்படுவதாகவும் சொன்னேன் என்று குறிப்பிட்டார்.
(தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 775)
கடவுள் நம்பிக்கை என்பது, ஒரு மூடநம்பிக்கைதான் என்றும், ஆண்டவனை மனித சமுதாயம் என்ற பெயரால் அழைக்க நான் தயாராய் இருக்கிறேன் என்றும் காந்தியாரைச் சொல்ல வைத்ததுசிந்திக்க வைத்தது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பதை நன்றாக நினைவில் வையுங்கள்!.
சீர்காழி சுயமரியாதை இயக்கத்துக்காரர்கள், காந்தியாரை இவ்வாறு பேச வைத்துள்ளனர் என்பதைச் சொல்லும்போது, இயக்கத் தோழன் ஒவ்வொருவனின் மார்பும் புடைக்கிறது; தோளும் விம்மி எழுகிறது.
தந்தை பெரியார் சொன்னாரே- நினைவிருக்கிறதா? என்னுடைய பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி விளையாட்டு உணர்ச்சியல்ல; காந்தியாரையே திருத்திய உணர்ச்சி! காந்தியைப் பார்ப்பனரால் சொல்லச் செய்த உணர்ச்சி என்பது மாத்திரமல்ல; 3 தரம் மந்திரிப் பதவியை உதைத்துத் தள்ளிய உணர்ச்சியாகும். இது ராஜாஜிக்கும், ராஜா சர். முத்தையா செட்டியாருக்கும் தெரியும். ராவ்பகதூர், திவான் பகதூர் பட்டத்தையும், தினம் 100 ரூபாய் டபுள் பஸ்ட் கிளாஸ் பந்தா உள்ள கமிசன் பதவியையும் உதைத்துத் தள்ளிய உணர்ச்சியாகும். இதை 1919 ஆம் ஆண்டு போர்ட் செயின்ட் ஜார்ஜ் கெசட்டில் பார்த்தால் தெரியும்.
(விடுதலை, 2.5.1968)
காந்தியாரையே திருத்திய உணர்ச்சி- தந்தை பெரியார் அவர்களுடைய உணர்ச்சி என்பதை நினைவு கூர்ந்தால், சீர்காழி சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் காந்தியாருக்குக் காட்டிய கருப்புக்கொடியின் மேன்மை என்ன என்பது விளங்காமற் போகாது!
அன்றைக்கு வெறும் கருப்புக்கொடி பிடித்து, காந்தியாரையே சிந்திக்க வைத்த சுயமரியாதைத் தொண்டர்களின் வழிவந்த கருஞ்சட்டைத் தொண்டர்களே! கருப்பும் நடுவில் சிவப்பு வட்டமும் சேர்ந்த கழகக் கொடி பிடித்து, சீர்காழியையே கருஞ்சட்டைக்கடலாக்க-கருஞ்சிறுத்தையாய் வாரீர்! வாரீர்! என்று அழைக்கிறோம்.
--------------- மின்சாரம் -"விடுதலை" 25-9-2010
3 comments:
தேநீர் கடைகள், பேருந்து நிலையங்கள், டாஸ்மாக் பார்கள் என்று எங்கும் பரபரப்பு பேச்சு... பக்கத்துல போய் உற்று கேளுங்க. பகுத்தறிவு குமாரர்களால் வெளியிடப்படவிருக்கும் எந்திரன் திரைப்படம் குறித்த பேச்சா இருக்கப்போகுது.
அது ஒரு காலம்
இன்று...........???
//ஒசை. said...
தேநீர் கடைகள், பேருந்து நிலையங்கள், டாஸ்மாக் பார்கள் என்று எங்கும் பரபரப்பு பேச்சு... பக்கத்துல போய் உற்று கேளுங்க. பகுத்தறிவு குமாரர்களால் வெளியிடப்படவிருக்கும் எந்திரன் திரைப்படம் குறித்த பேச்சா இருக்கப்போகுது.
September 28, 2010 1:42 PM //
ஊத்திக்கினே "ஓசை"யை கேட்டாச்சா...அதை அப்படியே போதையில இங்க வந்து ஊத்தறதா?
Post a Comment