பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், உலகில் பல பகுதிகளில் ஜோதிடத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை பெருகி வருவதைப் பற்றி கவலை அடைந்துள்ளனர். விண்வெளி அறிஞர்கள், வான்கோள் இயல்பியலாளர்கள் இதரத் துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளாகிய கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் ஜோதிடர் களால் தனிப்பட்ட முறையிலும், பொதுவாகவும் அளிக்கப்படும் ஆலோசனை மற்றும் கணிப்புகளை கேள்வி கேட்காமல், ஏற்றுக் கொள்ளாமல் எச்சரிக்கையுடனிருக்க பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
ஜோதிடத்தில் நம்பிக்கை கொள்ள விரும்புவோர், அதன் கொள்கைகளுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்பதை உணர வேண்டும்.
ஜோதிடம் பழங்கால மனிதர்களில் உலகம் பற்றிய மாயமான கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தபடியால், ஜோதிடர்களின் கணிப்புகளையும், ஆலோசனைகளையும் அவர்கள் நம்பி வந்தனர் - விண்ணில் உள்ள கோள்களைக் கடவுள்களின் இல்லங்கள் என்றோ, சகுனங்கள் என்றோ கண்டு வந்தபடியால் இங்கு பூமியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுடன் நெருக்கமாக தொடர்புபடுத்திக் கண்டனர். பூமிக்கும் கோள்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் இடையே உள்ள மிக நீண்ட தூரத்தைப்பற்றி அவர்கள் எந்தக் கோட்பாடும் கொண்டிருக்கவில்லை.
ஒருவர் பிறக்கும் நேரத்தில் இந்தக் கோள்களோ நட்சத்திரங்களோ பிரயோகிக்கும் ஆற்றல் நமது எதிர் காலத்தை எந்த வழியிலாவது வடிவமைக்கும் என்று கற்பனை செய்து கொள்வதே தவறாகும் என்று நோபல் பரிசு பெற்ற 19 அறிவியலாளர்கள் 1975ஆம் ஆண்டில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்கள்.
நோபல் பரிசு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த - லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கட்டுமான ஆய்வுப் பிரிவு இணைத் தலைவராகப் பணியற்றிக் கொண்டிருக்கும் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சென்னையில் பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது சோதனைகள், நிரூபணங்கள் முன் நிற்காத ஜோதிடம் முதலியவை மூடநம்பிக்கைகளைச் சார்ந்தவையே என்று மண்டையில் அடித்தது போல கூறியுள்ளார்.
ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரங்கள் மிகுந்த கேட்டினை விளைவிக்கும் என்றும் எச்சரித்தார்.
சோதனைகளில் தோல்வி அடைந்த பிறகும் கூட சில மூடநம்பிக்கைகள் பரவி வருகின்றன.
தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் அறிவியல் பண்புதான் நமக்குத் தேவை என்று மிக அழகாக ஓர் அறிவியல் பாடத்தினை நடத்தி இருக்கிறார்.
நம் நாட்டிலோ அறிவியல் சாதனைகளான தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் இந்த மூடத்தன ஜோதிடத்துக்கு முன்னுரிமை கொடுப்பது வெட்கக் கேடானதும், அறிவு நாணயமற்ற தன்மையும் கொண்டவையல்லவா!
இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்கூட இந்த ஊடகங்களின் மூடநம்பிக் கைப் பிரச்சாரங்களை வெகுவாகக் கண்டித்து வருகிறார்.
இந்த நாட்டைப் பீடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்று தந்தை பெரியார் கூறியதன் அருமை - நமது ஊடகங்கள் நடந்து கொள்ளும் போக்கின் மூலம் பளிச்சென்று தெரிகிறது.
நாய் விற்ற காசு குரைக்காது என்ற எண்ணத்தில் ஊடகங்கள் நடந்து கொள்வது வெட்கக் கேடானதாகும்.
காலத்தையும், பொருளையும், அறிவையும், தன்னம்பிக்கையையும் பலி வாங்கும் ஜோதிடத்தை ஒரு மக்கள் நல அரசு தடை செய்ய வேண்டாமா?
அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று வெறும் ஏட்டில் (அரசமைப்புச் சட்டத்தில்) எழுதி வைத்து விட்டால் மட்டும் போதுமா? அதனைச் செயல்படுத்த வேண்டாமா? அறிவியலுக்கு விரோதமானவற்றை வேரோடு வெட்டி எறிய வேண்டாமா?
------------------------------ "விடுதலை” தலையங்கம் 31-12-2011
2 comments:
அட மண்டூகங்களே!
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன்: மூடநம்பிக்கைகளைக் கைவிட்டு, அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே நம்ப வேண்டும். அறிவியலில்கூட, ஒரு கால கட்டத்தில் சரி என கருதப்படும் விஷயம், மற்றொரு காலத்தில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது.
டவுட் தனபால்: அறிவியல் கண்டுபிடிப்புகள் தவறாகியிருக்குன்னு நீங்க தான் சொல்றீங்க... இப்படி, எப்போ மாறும்னே தெரியாத விஞ்ஞானத்தை நம்புறதா, ஆயிரமாயிரம் வருஷங்களா மாறாத மெய் ஞானத்தை நம்புறதான்னு நீங்களே சொல்லுங்க..! - (தினமலர் 31.12.2011)
அறிவியல் அறிஞர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறுவதன் பொருள் - அறிவியல் என்பது வளர்ச்சி அடையக் கூடியது - மாற்றங்களுக்கு உட்பட்டது என்று கூறுகிறார் - இதில் என்ன குற்றம்?
மாற்றமே கூடாது மனிதன் குரங்காகவே இருக்க வேண்டும் என்று ஹனுமான் பக்தர்களான தினமலர் கூட்டம் கருதுகிறது போலும்.
ஆயிரமாயிரம் வருஷங்களாக மாறாத மெய் ஞானம் என்றால் - அதற்குப் பெயர் காட்டுமிராண்டித்தனம் என்பதுதானே! பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் விழுந்தான் என்பதை நம்ப வேண்டுமா? மாற்றம் என்பதே மாறாதது என்பதுகூட தெரியவில்லையே - ஹி... ஹி..
---"விடுதலை” 31-12-2011
அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று வெறும் ஏட்டில் எழுதி வைத்து விட்டால் மட்டும் போதுமா? அதனைச் செயல்படுத்த வேண்டாமா?
அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் .
Post a Comment