Search This Blog

11.12.11

மடப்பசங்களுக்கு ஸ்ட்ராங் என்ன, லேசு என்ன?- பெரியார்

அந்தக் காலத்தில் நான் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கு மிகவும் வேண் டியவனாகத்தான் இருந்தேன். என்னை நிரம்பவும் மதிப்பார்கள். .காரணம் நான் எல்லாப் பதவிகளிலும் இருந்து வந்தவன் திரு. இராஜகோபாலாச் சாரியாரே வந்து, சமுதாயச் சீர்திருத்தம் தானே நமக்கு வேண்டும். அது காந்தியால்தான் முடியும். என்று சொல்லி என்னைக் காந்திக்குச் சிஷ்யன் ஆக்கினார். நானும் சேர்மன் (ஈரோடு நகர்மன்றத் தலைவர்) பதவியை இராஜிநாமா கொடுத்து வெளியேறி, காங்கிரசில் சேர்க்கப்பட்டு விட்டேன். சென்றபிறகு தமிழன் ஒருவனுக்காவது அதுவரை கிடைத்திருக்காத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர் தலைவர் இடத்தில் உட்கார வைத்தார்கள்.

ஏனென்றால் திரு.வி.க. (கலியாண சுந்தரனார்) சாதாரணமாக ஒரு பள்ளிக்கூட வாத்தியாராக இருந்தவர். டாக்டர் வரதராஜுலு அவர்கள் பிரபஞ்சத்தின் வாரப் பத்திரிகை நடத்தி வந்தார் என்றாலும் பார்ப்பனர்கள் அவரை அவ்வளவு நம்ப மாட்டார்கள். திடீரென அவர்களை யாரும் மாற்றி விடலாம் என்று அவர்களுக்குத் தெரியும். வ.உ. சிதம்பரனார் ஒருவர் அவர் பாவம்! எல்லாவற்றையும் விட்டு நொடிந்து போய் கஸ்தூரி ரங்க அய்யங்கார் தயவில் இருந்தவர். அதனால் சிறிது வசதி உள்ளவன்; பெரிய வியாபாரி; பதவிகளை விட்டு வந்தவன் என்கிற முறையில் இராஜகோபாலாச்சாரியார் என்னைத்தான் நம்பி எதற்கும் எனக்கு மதிப்புக் கொடுத்து முன்னே வைப்பார். உண்மையாகவே நானும் அதை நம்பி அவரிடம் மிக்க விசுவாசமாக இருந்து பெரிய பிரச்சாரம் செய்து பார்ப்பனருக்கு நாங்கள் மேடை தேடிக் கொடுத்து விட்டோம்! அப்போதே நான் நாம் தொட்டால் தீட்டுப்பட்டு விடும் என்கிற சாமி நமக்கு எதற்கு? அதை எடுத்து ரோடுக்கு ஜல்லி போடணும்; அல்லது ஆற்றிலே தூக்கிப் போட்டு வேட்டி துவைக்கப் போடணும் இப்படித்தான் பேசுவேன். டாக்டர் வரதராஜுலு, கல்யாணசுந்தரனார். சிதம்பரனார். நான் ஆகிய நால்வரில் பார்ப்பனர்கள் என்னைத்தான் முன்னே தள்ளுவார்கள்! என்னைப் பார்த்து பதவி வேட்டைக்காரன் என்று எவரும் சொல்ல முடியாது என்பதால் பார்ப்பனர்களும் நான் என்ன சொன்னாலும் வாயை மூடிக் கொண்டுதான் இருப்பார்கள்.

ஜாதி, மதம், கடவுள் துறையில் இப்பொழுது சொல்லுவதெல்லாம் நான் அப்போதே சொல்லுவேன். நான் பேசி முடித்து வந்ததும் ஆச்சாரியார் சொல்லுவார் நாயக்கர் உங்களு டையது ரொம்ப (நிறைய) (Strong dose)என்று சொல்லுவார். நான் சொல்லுவேன் நீங்க என்னங்க. இந்த மடப்பசங்களுக்கு ஸ்ட்ராங் என்ன, லேசு என்னங்க என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளுவேன். அவரும் வேறு வழி இல்லாததால் சிரித்துக் கொள் ளுவார்.

-------------08.01.1959 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், இரணியல் ஆகிய ஊர்களிலும் சுற்றுப் பயணத்தின்போது பெரியார் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து ”விடுதலை” 08.01.1959.

0 comments: