Search This Blog

1.12.11

சில்லறை வர்த்தகப் பிரச்சினை ஒருபார்வை


வெள்ளையன் வெளியேறி கொள்ளையன் புகுவதா?


சில்லறை வர்த்தகப் பிரச்சினை பெரும் பூகம்பமாகக் கிளம்பிவிட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலேயே எழுந்து நிற்கின்றன.

இது தொடர்பாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட வில்லை.

பி.ஜே.பி., பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க் சிஸ்டு), சிவசேனா, அ.இ.அ.தி.மு.க. முதலிய எதிர்க்கட்சி கள் மாத்திரமல்லாமல், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தி.மு.க., திரிணாமுல் காங்கிரசும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக் குக் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தி உள்ளன.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் அகாலிதளம் ஆகிய மக்களவை உறுப்பினர்கள் 227 பேர் ஆதரிக்கும் நிலையில், அதனை எதிர்ப்போர் எண்ணிக்கை 272 ஆகும்.

மக்களவையில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு 51 சதவிகிதம் அனுமதிக்கப்படுவது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அது கண்டிப்பாகத் தோல்வியைச் சந்திக்கும் நிலைதான்!

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி ராஜினாமா செய்யவேண்டும் என்று குரல் செங்குத்தாக எழுந்து நிற்கும். மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய பலகீனத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து தப்பிப் பிழைப்பது என்பது எளிதான ஒன்றல்ல.

இதன் இலாபச்சுளையை முழுமையாக விழுங்கிட பாரதீய ஜனதா என்னும் மதவாத முதலை, தன் வாயை ஆர்வமாக அகலமாகத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

எனவே, அரசியல் கண்ணோட்டத்திலும் இந்தப் பிரச்சினையை விழிப்பாக அணுகவேண்டிய அவசியம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு இருக்கிறது.

இந்த நிலையில், எடுத்த முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாது என்று பிரதமர் கருத்துத் தெரிவிப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

அந்நிய முதலீடுகளால் ஏற்படும் எதிர்விளைவுகளை நாம் அறியாதவர்கள் அல்லர். பிஸ்லேரி என்பது தம்ஸ்அப் குளிர்பானத்தை விற்றுக் கொண்டிருந்த நிறுவனம் ஆகும். கொக் கோகோலா என்ற ஒட்டகம் உள்ளே புகுந்ததும், அந்த நிறுவனம் கொக்கோகோலாவிடம் விற்றுவிட்டு கடையைக் கட்டிக் கொண்டுவிட்டது. கொக்கோகோலா கின்லி என்ற பெயரில் குடிநீர் வியாபாரத்தைத் தொடங்கியதும், பெப்சி என்ன செய்தது? அக்வாஃபினா என்னும் பெயரில், சந்தைக்கு வந்தது. நெஸ்லே நிறுவனம் கையைக் கட்டிக்கொண்டு நிற்குமா? பியூர் லைஃப் என்ற முத்திரையுடனும், பிரிட்டானிய நிறுவனம் ஒன்று பியூர் ஹெல்த் என்ற முகமூடியுடனும் இந்தியாவுக்குள் புகுந்து தன் வியாபார வேட்டையை நடத்தியதா - இல்லையா?

இதற்கு உலக அழகிகள் அய்ஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் போன்றவர்களை விளம்பர முகவர்களாக அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வில்லையா? இந்த உலக அழகிகளை உருவாக்கும் பின்னணியில்கூட இந்த உலக வர்த்தகர்கள்தான் பின்னணியில் உள்ளனர் என்ற ரகசியம் தெரியுமா? கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களும் விளம்பரத்திற்கு பயன்படுத்தப்படவில்லையா?

தொலைக்காட்சிகள் பெருந்தொகைகளைப் பெற்றுக் கொண்டே, இந்தப் பன்னாட்டு முதலாளிகளின் பாதங்களைத் தாங்கிப் பிடிக்கவில்லையா? 10 லட்சம் மக்கள் உள்ள இடத்தில்தான் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்று சமாதானம் சொல்லப்படுகிறதே! இந்த நிறுவனங்களால் மக்களுக்குப் பயன் என்று மத்திய அரசு தெரிவிக்கிறதே - அது உண்மை என்னவென்றால், கிராமங்களிலும் ஏற்படுத்தவேண்டும் என்று சொல்லத் தயங்குவது ஏன்? கிராமங்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற கருத்து அரசுக்கு இருக்குமானால், நகர்ப்புற மக்கள் பாதிக்கப் பட்டால் பரவாயில்லை என்று அரசு கருதுகிறதா? மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ள அந்நிய நாட்டு விதைகள் வசீகரமாக விளம்பரம் செய்யப்பட்டதை நம்பி விவசாயம் செய்யக் கிளம்பிய நமது உழவர் குடிகளின் நிலை என்ன தெரியுமா? மரபணு மாற்றப்பட்ட விதைகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட நெல்லில் இருந்து விதை நெல்லைப் பயன் படுத்த முடியாது. விதை நெல்லுக்கு அந்நியர்களை எதிர்பார்க்கும் விவஸ்தை கெட்ட நிலைதான்.

அந்நியன் வெள்ளைக்காரன் ஆட்சியிலிருந்து நாடு விடுதலை அடைந்துவிட்டது என்று கூறிக்கொண்டு, இப்பொழுது வேறு காரணம் கூறி அந்நியர்களிடம் இந்தியாவின் பொருளாதார ஆதிக்கத்தை ஒப்படைக்கத் துடிப்பது ஏன்? மக்கள் விழிப்புணர்வு பெறுவார்களாக!
------------------"விடுதலை” தலையங்கம் 1-12-2011

0 comments: