Search This Blog

18.12.11

பெரியார் கொள்கையை உலகமெல்லாம் பரப்பிட வீரமணி வாழ வேண்டும்!

அன்றைக்கு நடைபெற்ற மாநாடுகள் இயக்க வளர்ச்சியின் ஏணிப்படிகள்
தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உரை

இயக்க வரலாற்றில் அன்றைக்கு நடைபெற்ற மாநாடுகள் இயக்கத்தின் ஏணிப் படிகள் என்று தி.மு.க பொதுச்செய லாளர் பேராசிரியர் க.அன்பழகன் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை பெரியார் திடலில் 2.12.2011 அன்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரை வருமாறு:

இளவல் வீரமணி 79ஆம் ஆண்டு பிறந்தநாள் என்னுடைய அன்புக்கும் பாராட் டுக்குமுரிய திராவிடர் கழகத்தி னுடைய தலைவர் இளவல் வீரமணி அவர்களுடைய பிறந்தநாள் இன்று .

நம்முடைய ஆசிரியர் வீரமணி, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் வீரமணி, கொள்கைகாவலர் வீரமணி

அவர்களுடைய 79ஆவது ஆண்டு பிறந்தநாளில் அவரை வாழ்த்துகின்ற ஒரு நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்த தற்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடை கிறேன்.

நானே வந்து வாழ்த்த வேண்டும்!

வீரமணி அவர்களுக்கு வயது இப்பொழுது 79 அவர் குறைந்தது இன்னும் 20,30 ஆண்டுகள் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன். (கைதட்டல்)

சுயநலமில்லாமல் நான் அவர்களை வாழ்த்தவில்லை. அப்பொழுதும் நானே வந்து அவரை வாழ்த்த வேண் டும் என்ற ஆசையோடு (பலத்த கைதட்டல்). அவர் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். (சிரிப்பு)

பெரியார் கேட்பார்

தந்தை பெரியார் தான் சொல்லுவார். வாழ்த்துவதிலேயா ஒருவர் வாழப் போகிறார் என்று கேட்பார்.

வாழ்த்து பெறுகிறவர் வாழுகிறாரோ இல்லையோ வாழ்த்துகிறவர் வாழுவார். (சிரிப்பு-கைதட்டல்). வாழ்த்துகிற உள்ளம் வாழும். வாழ்த்துகிற நெஞ்சம் வாழும். வாழ்த்துகிற எண்ணம் வாழும். அந்த முறையில் இந்த நிகழ்ச்சியிலே நம்முடைய வீரமணி அவர்களைப் பற்றி எனக்கு முன்னாலே பேசிய நீதியரசர் அவர்கள் அவருடைய எண்ண ஓட்டத்தை மிகத் தெளிவாக விரிவாக விளக்கமாகப் பேசினார்கள்.

நீதியரசர் பு.ரா.கோகுலகிருஷ்ணன்

அடிக்கடி நீதியரசர் என்னைப் போல உங்களிடத்திலே பேசக்கூடிய வாய்ப்பு பெற்றவர் அல்ல. ஆனால் தொடக்க காலத்திலே திராவிடர் இயக்கத்திலே தந்தை பெரியார் வழியிலே வந்தவர். அறிஞர் அண்ணா அவர்களுடைய தம்பியாக, கலைஞர் அவர்களுயை நண்பராக தொடர்ந்து இந்த இயக்கத்திலே இருந்தவர். குஜராத் மாநில நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த காலத்திலும் சரி, சென்னையிலே சில காலம் தலைமை நீதிபதியாக இருந்த பொழுதும் சரி நம்முடைய இயக்கத்தின் ஒரு பிரதிநிதியாகத்தான் தலைமை நீதிபதியாக விளங்கினார்கள். (பலத்த கைதட்டல்). நீதிபதியானாலே பல பேருக்கு இனி நாம் திராவிடர் அல்ல என்ற எண்ணம் வரும். (சிரிப்பு -கைதட்டல்).

நீதிபதியாக ஆகிற வரையில்தான்!

நீதிபதியாக ஆகிற வரையில்தான் அவன் தமிழன்; பதவி கிடைக்கிற வரையில்தான் திராவிடன். அவனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிற வரையில்தான் பெரியார், அண்ணா எல்லாம். வாய்ப்பு கிடைத்தால் அவன் பறந்துவிடுவான். ஆனால் நீதியரசர் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அந்த கொள்கை அவருடைய உள்ளத்திலேயிருந்து இன்றைய தினம் வீரமணி அவர்களைப் பற்றிப் பேசுகிற பொழுது பல செய்திகளை கேட்ட வர்கள். அதேபோல் நமது சுப.வீர பாண்டியன் அவர்கள் அவர் ஒரு வகையிலே பார்த்தால் அவருடைய தந்தையாரிடத்திலே நான் பழகுகிற நண்பராக இருக்கிற வாய்ப்பு பெற்றவன். ஆனால் அவருடைய தந்தையார் அண்ணா அவர்களோடு சேர்ந்து மிக நெருக்கமாகப் பழகக்கூடிய அந்த நிலையிலே விளங்கியவர்.

சுப.வீரபாண்டியன்

கல்லக்குடி போராட்டத்திலே கலைஞரோடு சிறைச்சாலைக்குச் சென்றவர். சுப.வீரபாண்டியன் அவர்கள் ஒரு தமிழ் அறிஞராக இலக்கியத்திலே தேர்ந்தவராக தமிழ் இனத்தின் வரலாற்றைப் புரிந்தவராக பெரியாருடைய தொண்டை முழு அளவில் உணர்ந்த வராக பேரறிஞர் அண்ணா அவர் களால் காட்டப்பட்ட வழியால் இந்த நாடு பெற்ற நன்மையை விளங்கிக் கொண்டவராக சுப.வீரபாண்டியன் அவர்கள் விளங்குகிறார். அவரைப் பற்றி ஆற்றிய உரை உணர்ச்சி மிக்க உரை அந்த உரைக்காக உள்ளபடியே சுப.வீரபாண்டியன் அவர்களை நான் பாராட்டுகின்றேன். (பலத்த கைதட் டல்)

வீரமணி ஒரு விமர்சனம்!

நம்முடைய வீரமணி அவர்களைப் பற்றி ஒரு நூல் அவரை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு சோலை அவர்கள் வீரமணி ஒரு விமர்சனம் என்ற தலைப்பிலே ஒரு நூலை எழுதியிருக்கின்றார். சோலை ஒரு பெரிய எழுத் தாளர். ஏறத்தாழ 45,50 ஆண்டு காலமாக கொஞ்சம் அரசியலில் சாயம் உள்ள பல்வேறு ஏடுகளில் ஆசிரியராக, எழுத்தாளராக, கட்டுரையாளராக விளங்கினாலும் கூட, அவர் அடிப்படையிலே ஒரு தேசியவாதி. இலட்சியத்திலே பொது உடைமைவாதி. வாழ்க்கையிலே சுயமரியாதை காரர். சுயமரியாதையோடு வாழுகிறவர்தான் தமிழன் என்று உணர்ந்தவர். பகுத்தறிவு நோக்கத்திற்கு பெருமளவுக்கு தனது எழுத்துக்களைப் பயன் படுத்தியவர்.

வீரமணியை எந்தெந்த கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டுமோ!

பெரியாரோடு நெருங்கிப் பழகா விட்டாலும் கூட பெரியாரை அறிகிற வாய்ப்பு உடையவர். காமராஜரை அறிந்த வாய்ப்புடையவர் அண்ணா வினுடைய அறிமுகத்தைப் பெற்றவர். கலைஞருடைய நட்பைப் பெற்றவர். நம்முடைய வீரமணி அவர்களைப் பாராட்டி எழுதியிருக்கின்ற இந்த நூலைப் படித்துப் பார்த்தால் வீரமணியை எந்தெந்த கோணத்திலே புரிந்து கொள்ள வேண்டுமோ அத் துணை கோணத்திலேயும் அவர் எழுதியிருக்கின்றார்.

ஒரு படப்பிடிப்பாளர் திரைக் கதைக்காகவோ, நாடகத்திற்காகவோ படம் எடுக்கின்ற பொழுது அந்த படம் வெவ்வேறு கோணத்திலிருந்து எடுத்தால் எப்படியோ அதைப் போல, வீரமணி அவர்களை இளமையிலே இருந்து அவருடைய வாழ்வு, வளர்ச்சி, அவருடைய கொள்கை உறுதி தொண்டார்வம் இவை அத்தனையையும் விளக்கியிருக்கின்றார். (கைதட் டல்) அவர் சிறந்த எழுத்தாளர் என்று நான் சொன்னதற்கு காரணம் தேசிய உணர்விலேயிருந்து தன்னை அடி யோடு விடுவித்துக் கொண்டு அல்ல.

தேசிய உணர்வு என்பது பொது உடைமை பகுத்தறிவு கோட்பாட் டையும் தாங்கிக் கொள்ள வேண்டும்.

வீரமணியை மாவீரனாக படம் பிடிக்கின்றார்

சுயமரியாதை உணர்வோடு செயல் பட வேண்டும். திராவிட இனத்தையும் போற்ற வேண்டும். இந்த உணர்வோடு அவர்கள் எண்ணிப் பார்க்கின்ற காரணத்தால் அவர் காண்கின்ற ஒரு மாவீரனாக நம்முடைய வீரமணியை படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார்.

இங்கே நம்முடைய சுப.வீரபாண் டியன் அவர்கள் கூட பேசுகிறபொழுது ஈரோட்டு இராவணன் பெற்ற இந்திரஜித்து இராவணனுக்குக் கிடைத்த இந்திரஜித்து என்று சொல்லுகின்றார். அப்படி அவராலே குறிப்பிடப்பட்டிருக்கின்றார்.

சோலை எழுத்து பட்டுகத்தரித்ததுபோல

உண்மையாகவே நம்முடைய சோலை அவர்களுடைய எழுத்து பட்டு கத்தரித்தது போல அமையும். நானெல்லாம் பேசுவதோ, எழுதுவதோ அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும் சில கருத்துகள் வரும் இடையிலே அவரிடம் கருத்துக்கள் தான் வரும். சொற்களைக் கொண்டு ஓட்டிக் கொண்டிருக்க மாட்டார்.

நடைக்காக எழுத மாட்டார். எழுத வேண்டிய செய்தியை மட்டும் மிகச் சுருக்கமாக அதே நேரத்தில் தெளிவாக, திட்டவட்டமாக வரையறுத்துச் சொல்லுகிற வல்லமையுள்ளவர்.

எனவே அவர் அப்படி எழுதிய அந்த நூலைப்பார்த்தால் பல இடங் களிலே அவருடைய நடையிலே இமயம் என்று ஆங்கிலத்திலே சொல் லுவார்கள். அந்தந்த மொழியில், அந்தந்த சொற்றொடரை சேர்த்து ஒரு புது கருத்தை அந்த சொல்லிலே இல்லாத ஒரு கருத்தை உருவாக்குவார். அப்படி பல இடங்களிலே அமைத்து எழுதக் கூடிய ஆற்றல் சோலை அவர்களுக்கு உண்டு. அனுபவப் பட்டவர். பட்டறிவு மிக்கவர் எதை எப்படிச் சொல்ல வேண்டும். பளிச் சென்று எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை அறிந்தவர்.

பெரியார் பேச்சை எத்தனை மணி நேரமும் கேட்கலாம்!

ஒரு வகையிலே சொல்லப் போனால் பெரியார் அவர்கள் பேச்சிலே கூட எப்பொழுது பேசி னாலும் அனுபவத்திலிருந்து சொற்கள் வரும்.
கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பெரியாருடைய பேச்சைப் பற்றி எழுதுகிறபொழுது சொன்னார்கள்.

எத்தனை மணி நேரம் வேண்டு மானாலும் பெரியார் பேசுவதை கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.

ஏன் பெரியார் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கலாம் என்றால், வீண் வார்த்தைகளே கிடையாது. கருத்துகள் தொடர்ந்து செறிவாக வருகிற காரணத்தால் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.

ஒரு வீண் வார்த்தை கூட வராது

ஓரு பகுத்தறிவுவாதிக்கு வீண் வார்த்தை எதற்காக? புராணம் பாடுகிறவனுக்கு வேண்டுமானால் வீண் வார்த்தை வரலாம். (பலத்த கைதட் டல்)

பகுத்தறிவுவாதி சிந்தித்து பேசுகிறவன்

பகுத்தறிவுவாதி சிந்திப்பதை பேசுகிறவன். சிந்திப்பதற்காக பேசுகி றவன் சிந்திக்க வைக்கப் பேசுகிறவன். சிந்திக்க வைத்து வாழ்க்கைக்கு தேவையானவற்றைப் பேசுகிறவன் (கைதட்டல்) எனவே தந்தை பெரியாரைப் போல அவருடைய பேச்சு எப்படித் திட்டவட்டமாக அமை யுமோ அதுபோல பல இடங்களில் இவரும் பல செய்திகளைச் சொன் னார்.

சோலை அவர்கள் வீரமணி ஒரு விமர்சனம் என்ற தலைப்பில் எழுதிய இந்த நூலிலே ஓரிடத்தில் சொல் லுகிறார்.

இரத்தப்பசி

மிருக உணர்வுள்ள மனிதர்களுக்கு ரத்தப்பசி என்று கூறுகிறார். மிருகங்கள்தான் ரத்தத்தைக் குடிக்கும். மாமிசம் சாப்பிடும் இன்னொரு மிருகத்தை வேட்டையாடுகிற பொழுது அதன் ரத்தத்தைக் குடிக்க வேண்டிய அவசியம் வரும். இதுபோன்ற ஒரு நிலை எங்கேயென்றால் புதுவையிலே திராவிடர் கழகம் தோன்றிய அந்த காலத்தில் அந்த இயக்கம் சார்பாக நடைபெற்ற ஒரு சிறிய மகாநாட்டில் நாடகம் நடத்திய கலைஞர் அந்த ஊரிலே உள்ளவர்களாலே அடையாளம் காணப்பட்டு அந்த மாநாடு நடைபெற்ற நேரத்தில் கலைஞர் தாக்கப்பட்டார்.

அவரைத் தாக்கி அடித்து உதைத்து ஒரு சாக்கடை ஓரத்தில் உருட்டிவிட்டுப் போனார்கள்.

புதுவையில் கலைஞர் தாக்கப்பட்ட பொழுது

அது மிருக உணர்ச்சியுள்ளவர்க ளுடைய ரத்தப் பசி. கலைஞரை அந்த கொடுமைக்கு ஆளாக்கியது எதிரி களாலே தாக்கப்பட்ட கலைஞர் ஒரு வீட்டிலே பாதுகாக்கப்பட்டார்.

அந்த அம்மையார் கலைஞரைக் கொண்டு வந்து பெரியாரிடம் ஒப்படைத்தார்.

தந்தை பெரியார் அவர்கள் கலைஞர் அவர்களைத் தொட்டு மருந்து போடுகிற அளவுக்கு அன்பு காட்டினார்கள். அது கலைஞர் அவர்களுடைய உள்ளத்திலே என் றைக்கும் பசுமையாக இருக்கின்ற ஓர் எண்ணம்.

அந்த நிகழ்ச்சியை சொல்லுகிற பொழுது மிருக உணர்வுள்ள மனிதர் களுக்கு ஏற்படுகின்ற ரத்தப் பசி என்று சொல்லுகின்றார்.

மகாநாடுகள் ஏணிப்படிகள்

அதேபோல் வேறு ஒரு இடத்திலே இயக்கத்தினுடைய வளர்ச்சியைப் பற்றிச் சொல்லுகிற பொழுது மகா நாடுகள் இயக்க வளர்ச்சியின் ஏணிப் படிகள் வியர்வைத் துளிகளின் வெற்றிகள் இயக்க வளர்ச்சியிலே ஒவ்வொரு மகாநாடுகளும் இயக்க வளர்ச்சியின் ஏணிப்படிகள்.

நம்முடைய சுப.வீரபாண்டியன் அவர்கள் பேசுகிற பாழுது சொன்னார். மதுரை கருஞ்சட்டை மாநாடு அந்த கருஞ்சட்டை மாநாடு ஏறத்தாழ 1945ஆம் ஆண்டு நடைபெற்றது.

பந்தல் கொளுத்தப்பட்டு

அந்த மாநாட்டிலே நான் கூட ஒரு பேச்சாளர். பட்டுக்கோட்டை அழகிரி, தந்தை பெரியார் அவர்கள் நாங்க ளெல்லாம் எப்படியோ ஒரு நிலை பேசுகிற வாய்ப்பு ஏற்பட்டது.

ஆனால் பெரியார் அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்ற பொழுது கலவரம் பெரிதாகி மகாநாட்டுப் பந்தலே கொளுத்தப்பட்டு அதற்குப் பின்னர் அவற்றை எல்லாம் பாதுகாப்பதே ஒரு பெரிய வேலை.

யாருக்கும் தீங்கு இல்லாமல்

யாருக்கும் தீங்கு இல்லாமல் பாதுகாப்பதே ஒரு வேலையாகி கழக முன்னணித் தோழர்கள் எல்லாம் முன்னின்று பெரியாரை-மற்றத் தலை வர்களைப் பாதுகாத்து அன்று இரவோ அல்லது மறுநாளோ மாநாட் டிற்கு வந்தவர்களை வெளியூர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப் பட்டது.

------------------------------தொடரும் 16-12-2011

இங்கிலாந்து நாட்டிலே செருப்பு தைக்கிறவன் பிரதமராக முடிகிறது

சாஸ்திரம், சமஸ்கிருதம் படித்த ஒரு சூத்திரன் சங்கராச்சாரியாக முடியுமா?

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் கேள்வி

இங்கிலாந்து நாட்டிலே ஒரு செருப்பு தைக்கிறவன் பிரதமராக வர முடிகிறது. சாஸ்திரம், சமஸ்கிருதம் படித்த ஒரு சூத்திரன் இந்த நாட்டிலே சங்கராச்சாரியராக வர முடியுமா? என்று தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்ப ழகன் கேள்வி எழுப்பினார்.

சென்னை பெரியார் திடலில் 2.12.2011 அன்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

மதுரை வழியாகச் செல்லாமல்

மதுரை கருஞ்சட்டை மாநாடு-கொளுத்தப்பட்டதால் மதுரை வழியாக போக முடியாது என்பதை அறிந்து வெவ்வேறு வழியாகப் போய் அவரவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். நம்முடைய சுப.வீரபாண்டியன் அவர்களுடைய தந்தையார் இராம. சுப்பைய்யா அவர்களும் நானும், குடந்தையைச் சேர்ந்த பாவலர் பாலசுந்தரமும் கட்சியிலே அவர் முன்னணி பேச்சாளர். நாங்கள் மூன்று பேரும் மானாமதுரை ரயில் வழியாக வந்து காரைக்குடிக்குப் போய் ராமசுப்பய்யா அவர்களுடைய வீட்டிலே தங்கி ஏற்கெனவே ஏற்றுக்கொண்டபடி மறுநாள் பக்கத்திலே ஒரு ஊரிலே பொதுக்கூட்டம் ராம சுப்பய்யா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த கூட்டத்திலே போய் கலந்து கொண்டு பேசினேன்.

மதுரையினுடைய தொடர்ச்சி-கல்வீச்சு

அந்த கூட்டத்திலேயும் கல்வீச்சு. (சிரிப்பு-கைதட்டல்). மதுரையினு டைய தொடர்ச்சி அதுவரைக்கும். அதை முடித்துக்கொண்டு அதற்குப் பிறகுதான் சென்னைக்குத் திரும்பி வந்தேன். இதை எதற்குச் சொல்லுகிறேன் என்றால் அந்த கருஞ் சட்டை மாநாடு. அந்த மாநாடு கொளுத்தப்பட்ட காரணத்தினாலே நம்முடைய நியாயத்தை உலகம் உணருவதற்கு ஒரு பெரிய வாய்ப்பு ஏற்பட்டது- (பலத்த கைதட்டல்).

இவ்வளவு எதிர்ப்புக்கிடையிலே பல பேர் இருக்கிறார்கள். எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் அவர்கள் துணிந்து நிற்கிறார்களே என்று மற்றவர்கள் வியந்து சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு பக்குவம் இருந்ததே. அந்த காலத்தில் நமக்கு ஒரு பெரிய வளர்ச்சி. இந்த காலத்தில் தேர்தலில் வெற்றி பெறுவது தோற்பது அது வரையிலேதான் தாக்குதல் என்று நாம் எண்ணுகிறோம்.

நாம் நடமாடுவதற்கே தடை...!

அந்த காலத்திலே நாம் நடமாடு வதற்கே தடை. நம்முடைய தோழர்களில் பல பேர் கருஞ்சட்டை அணிந்து கொண்டு மதுரை நகரத்திற்குள் போய் விட்ட காரணத்தால் அவர்கள் கோவிலுக்குள் வந்து கடவுளுக்கு எதிராக, தெய்வத்திற்கு எதிராக ஆன்மிகத்திற்கு எதிராக அவர்கள் ஏதோ பிரச்சாரம் செய்ததாகத் தாக்கப் பட்டு தாக்கியவர்களை தாக்கிக் கொண்டே வந்து அது மதுரை மாநாட்டுப் பந்தல் வரையிலே வந்தது.

இருட்டிலே திருடனைப் பிடிப்பது போல்

அந்த காலம் பெரியார் அவர்கள் இந்தக் கொள்கையைத் தொடங்கி வைத்த காலம். சாதாரணமான காலமல்ல. இருட்டிலே விளக்கு இல்லாமல் திருடனைப் பிடிக்கிற காரியம். (சிரிப்பு-கைதட்டல்). இந்த சமுதாயத்தைப் பற்றி ஆழமாக உணர்ந்த காரணத்தால் பெரியார் அவர்களால் அந்தப் பணியை ஏற்க முடிந்தது. அவர் சொல்லுவார். நானே இதை ஏற்றுக்கொண்டேன். என்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? இந்தப் பணியை நான் ஏற்றுக்கொண்டு எப்படியோ என் வாழ்நாளில் நிறைவேற்ற நான் முயற்சிப்பேன் அதற்கு ஒரு அழகான உவமை சொல்லுவார்கள்.

மயிரைக்கட்டி மலையை இழுப்பேன்

தலைமயிரைக் கொண்டு ஒரு மலையைக் கட்டி இழுக்கிறேன். வந்தால் மலை. போனால் மயிர் என்று பெரியார் சொல்லுகிற ஒரு உவமை. (கைதட்டல்).

நம்முடைய இலட்சியம் மிகப் பெரியது

எதற்காக இதைச் சொல்லுகிறோம் என்றால் நம்முடைய உழைப்பு என்ப தெல்லாம் சாதாரணம். நம்முடைய இலட்சியம் மிகப்பெரியது. ஏன் இலட்சியம் பெரியது என்று கேட் டால் இனத்திற்காக இந்த இனம் வாழ்ந்த இனம். திராவிடர்களைப் போல் வாழ்ந்த இனம். இல்லை வாழுகிற இனமும் கிடையாது. (கை தட்டல்). தமிழைப் போல் உயர்ந்த மொழியும் கிடையாது. நீக்கப்பட்ட மொழியும் கிடையாது.

தமிழனைப் போல ஏமாளியும் கிடையாது

தமிழனைப் போல் அறிவாளியும் கிடையாது. ஏமாளியும் கிடையாது. (கைதட்டல்). வரலாற்று அடிப் படையிலே பார்த்தால் உலகுக்கே வரலாற்றைத் தந்தவன் தமிழன். தன் வரலாறு தெரியாமல் தவிப்பவன் தமிழன் (பலத்த கைதட்டல்). இன்றைக்கு மொழி என்று எடுத்துக் கொண்டால் ஒரு மொழியினுடைய எழுத்து முதல் முதலிலே எந்த எழுத்தாவது பிறந்தது என்றால் தமிழில் தான்.

உலகத்தில் முதல் இலக்கணம் பிறந்தமொழி

உலகத்திலே முதன் முதலில் இலக்கணம் பிறந்த ஒரு மொழி உண்டு என்றால் அது தமிழ்தான். நம்முடைய தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் முதல் மொழி. மூத்த மொழி.

பல மொழிகளுக்குத் தாய்மொழி. நாகரிகத்திற்கு வித்தாக இருந்த மொழி நானிலத்தை வாழவைத்த மொழி. அந்த மொழி நாசமாகிற அளவுக்கு அந்த மொழி நீஷ மொழியாக இந்த நாட்டிலே பேசப்பட்டது.

ஒதுக்கப்பட்ட மொழி

நம்முடைய தாய்மொழி-தமிழ்தான் நீஷ மொழி. நீஷ மொழியினால் இழிந்தவர்கள் பேசுகிற மொழி. கேவலமான மொழி. தெய்வத்திற்கு ஏற்காத மொழி. உயர்ந்த சிந்தனைகள் இடம் பெறாத மொழி. இன்னும் சொல்லப்போனால் ஒதுக்கப்பட்ட மொழி. இருப்பவை எல்லாம் வட மொழியிலிருந்து இரவல் பெற்ற மொழி. அப்படி எல்லாம் தமிழ் இழிக்கப்பட்டது. கேவலப்படுத்தப் பட்டது. ஆனால் பல பேரால் அதை உணர முடியவில்லை.

பரம்பரை முட்டாள்தனம்...!

அறியாமை ஒரு பக்கம். ஆதிக்கம் ஒரு பக்கம். மூடநம்பிக்கை ஒரு பக்கம். பரம்பரை முட்டாள்தனம் ஒரு பக்கம். இவைகளில் வீழ்ச்சி அடைந்த இனம் தமிழ் இனம். அந்த தமிழினம் தலைநிமிர வைக்க வேண்டும் என்று பெரியார் கருதினார். எந்த அடிப் படையிலே கருதினார் என்றால் பெரியார் டாக்டர் கால்டு வெல்லைப் பற்றிப் படித்துவிட்டு அதைத் தொடங்கவில்லை.

பரிதிமாற் கலைஞரைப் படித்து விட்டுத் தொடங்கவில்லை. சமுதாயத் திலே பார்க்கிற பொழுது நம்மிலே பல பேர் சூத்திரர்களாக இருக்கிறோம்.

செட்டியார், முதலியார் வரிசையாக அத்துணை பேரும் சூத்திரன். அத்தனை பேரும் தாழ்ந்தவன். இந்த நாட்டிற்குரியவனெல்லாம் தாழ்ந்த வனா?

ஏன் இந்த நிலை?

இந்த மண்ணிலே பிறந்தவன் எல்லாம் பிறவியிலே இழிந்தவனா? அப்படி சூத்திரர்கள் என்று சொல்லு வதற்கு என்ன காரணம்? பார்ப்பனர்களின் சாஸ்திரத்தாலே நாம் சூத்திரர்களாக ஆக்கப்பட்டோம். அந்த சாஸ்திரம் யாருடைய சாஸ்திரம். அந்நியர்களுடைய சாஸ்திரம். ஆரியர் களுடைய சாஸ்திரம். வைதீக சாஸ் திரம். வர்ணாஸ்ரம தர்ம சாஸ்திரம். அதை வைத்து நம்மை இழிவு படுத்துகிறார்கள். இதிலிருந்து விடு விக்கப்படவேண்டும்.

அது காங்கிரசாக இருந்தாலும், பிராமணன் செல்வாக்குப் பெறுகிறான் என்றால் ஒரே காரணம். அவன் இயற்கையிலேயே உயர்ந்த ஜாதி என்று எல்லோரும் நம்புகிறார்கள்.

ஜஸ்டிஸ் சி.சங்கரன்

ஜஸ்டிஸ் சி.சங்கரன் நாயர் என்பவர் நீதிபதியாக இருந்தவர். அவர் காங்கி ரசிலே இருந்தபொழுது மிகுந்த அக் கறையோடு இருந்தார். அப்படி அக்கறை யாக இருந்தவர். சென்னையில் ஒரு கூட்டத்திலே பேசினார். நாம் சுதந்திரம் கேட் கிறோம். சுதந்திரமே நமக்கு கிடைத் தால் கூட, ஜனநாயக முறையிலே நம்மால் ஆட்சி நடத்த முடியுமா?

இந்து வாசகர் 1908ல் எழுதியது

ஏனென்றால் நமக்கிடையே இருக்கின்ற ஏற்றதத்தாழ்வுகள் போகிற வரையிலே ஜாதி இருக்கிற வரையில், தீண்டாமை இருக்கிற வரையில், மனிதனை மனிதன் இழிவாக நினைக் கிற வரையில் ஜனநாயகம் வருமா?

இதை ஜஸ்டிஸ் சி.சங்கரன் நாயர் கேட்டார். இவர் பேசியதை பார்த்த சுதந்திரத்திற்காக பாடுபடுவதாக சொல்கிறவர் இந்து பத்திரிகையில் எழுதினார்.

1908ஆம் ஆண்டு இந்து வாசகர் என்ற பெயராலே இந்து பத்திரிகையில் எழுதுகின்றார். ஜஸ்டிசாக இருக்கின்ற சி.சங்கரன் நாயர் போன்றவர்கள் சுதந்திரம் கிடைப்பதற்கு எதிராக வெள்ளைக்காரனுக்கு ஆதரவாக இந்தியர்களை நாம் இப்படிக் கேவலப் படுத்துகின்ற முறையிலே எழுதுவது நியாயம் தானா? என்று அவர் எழுதினார்.

பாரதியார் பதில் எழுதினார்

இந்த செய்தி இந்து பத்திரிகையில் வந்தது. அந்த நாட்களிலே பார்ப்பனராக இருந்தால்கூட தேசிய உணர்விலே ஈடுபட்டிருந்தாலும் பகுத்தறிந்து பார்க்கின்ற ஒரு பக்குவம் பெற்றவராக தேசிய கவி பாரதியார் இருந்தார்.

அவர் இந்து பத்திரிகைக்குப் பதில் எழுதினார். இந்து பத்திரிகையி னுடைய வாசகர் ஒருவர். இப்படி எழுதியிருக்கின்றார் என்பதை எடுத்துக்காட்டி சங்கரன் நாயர் சொன்னதிலே என்ன தவறு?

வெள்ளைக்காரன் நாட்டிலே அவன் அனுபவிக்கின்ற சுதந்திரம் கிடைக்குமேயானால் நம்முடைய நாட்டிலே நாம் ஒற்றுமையாக ஒன்று பட்டு ஒரு ஆட்சி நடத்த முடியுமா?

நம்மிலே யார் தகுதி உள்ளவனோ அவன் ஆட்சிக்கு வர முடியுமா? நம் மிடத்திலே இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள், ஜாதி வேற்றுமைகள், நம்மை ஒன்றுபட்டு வாழ வைக்குமா? என்றெல்லாம் பாரதியார் கேட்டு விட்டு மேல் நாட்டிலே இங்கிலாந் திலே ஒரு செருப்பு தைப்பவன் காப்புலர்? அவன் கூட இங்கிலாந்திலே பிரதமராக வர முடியும்.

இங்கே சாஸ்திரங்களைப் படித்திருக்கின்ற ஒரு சூத்திரன் கூட, இந்த நாட்டிலே சங்கராச்சாரியாராக வர முடியுமா? (பலத்த கைதட்டல்) என்று பாரதியார் கேட்டார். பாரதியாரைத் தவிர வேறு யாராவது எழுதியிருந்தால் நான் சொல்ல மாட்டேன். (சிரிப்பு கைதட்டல்).

பாரதியாரே எழுதினார்.

நல்லெண்ணம் இருக்குமானால் இப்படிப்பட்ட கருத்துகள் அந்த வட்டாரத்திலிருந்து பிறக்கும். ஆனால் சமுதாயத்திலே எந்த அளவுக்கு வேரோடிப்போயிருக்கிறது என்று பார்த்தால் அவனவன் இழிவை அவனவன் நம்பிக்கொண்டிருந்தான்.

-----------------தொடரும் 17-12-2011

பெரியார் கொள்கையை உலகமெல்லாம் பரப்பிட வீரமணி வாழ வேண்டும்! தொண்டு தொடர வேண்டும்!! தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் பாராட்டி வாழ்த்து

பெரியார் கொள்கையை உலகமெல்லாம் பரப்ப வீரமணி நீண்ட காலம் வாழ வேண் டும். அவருடைய தொண்டு தொடர வேண்டும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்ப ழகன் வாழ்த்துகூறி விளக்கினார்.
சென்னை பெரியார் திடலில் 2.12.2011 அன்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

அந்த அளவுக்கு அறிவில்லாதவர்கள்

சமுதாயத்தில் அவனவன் இழிவை அவனவன் நம்பிக்கொண்டிருந்தான். நான் செட்டியார், நான் முதலியார், நான் நாடார் என்று சொல்லுகின்ற ஒவ்வொருவரும் நான் இத்தனை படிக்கட்டுக்குக் கீழே நான் இவ்வளவு இழிந்தவன். நான் இவ்வளவு தாழ்ந்த வன். இவ்வளவு அறிவில்லாதவன். இவ்வளவு அடிமையாக இருப்பவன் என்று ஒவ்வொருத்தரும் ஒத்துக் கொண்டார்கள். முதலியார் சொன்னார். பார்ப்ப னருக்கு அடுத்த அடிமை நான்தான் என்று சொன்னார். (சிரிப்பு-கைதட்டல்). பிள்ளைமார் என்ன சொன்னான். அவர்கள் இரண்டு பேருக்கு அடுத்தது நான்தான் என்று சொன்னான். (கைதட்டல்). ஆக தாழ்த்தப்பட்ட மக்கள் வரையில் அந்த ஜாதிப்படிக்கட்டு உணர்வு மனதிலே பதிந்து போயிருக்கிறது.

பிராமணர்களைப் போற்றி

பக்கத்திலே இருக்கிறவனைப் பார்க்கிறபொழுது இவன் நம்மைவிட உயர்ந்தவன் என்று எண்ணி இவனே அவர்களிடத்திலே அடங்கி, பணிந்து பிராமணர்களைப் போற்றி நடந்து கொள்ளக்கூடிய ஒரு பக்குவத்தை மனப்பான்மையை பெற்றிருந்தான்.
அந்த காலத்தில்தான் பெரியார் அவர்கள் நடைமுறையில் பார்த்தார். அவர் வீட்டிற்கு வந்த பிராமணர்களைப் பார்த்தார். அவர் வீட்டுக்கு வந்த மற்ற சமூகத்தினரைப் பார்த்தார். எது எது எப்படி, எப்படி நடக்கிறது என்று பார்த்தார்.
இதை எல்லாம் பார்த்த அவருடைய மனத்திற்கு திட்டவட்டமாகத் தெரிந்தது. இந்த சமுதாயம் ஜாதி வேற்றுமை இருக்கிறவரையில் பிராம ணர்களின் தலைமை இருக்கிற வரை யில், வைதீகத்தை மதிக்கிற வரையில் வாழாது.

சுயமரியாதை உணர்வை ஊட்டினால்தான்

சுயமரியாதை உணர்வை ஊட்டி னால்தான் இந்த சமுதாயம் வாழும் என்று அந்த காலத்திலே சொன்னார். இப்படி சொல்வதற்கு மிகப்பெரிய துணிச்சல் தேவை.
மிகப்பெரிய வீரம் தேவை. மிகப் பெரிய அஞ்சாமை தேவை. ஆண்மக னாகவும் இருக்க வேண்டும். வீரனா கவும் இருக்க வேண்டும். போராடுகிற வல்லமை உடையவராக இருக்க வேண்டும்.
தன்னைப் பற்றிக் கவலைப்படாத வனாக இருக்க வேண்டும். இதற்காகத் தான் பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்கள்.

என்னதான் நாம் பாடுபட்டாலும் கூட!

பெரியார் அவர்கள் காங்கிரசிலே இருந்தபொழுது, அவருக்குப் பொதுத்தொண்டு ஆர்வம் . பல்வேறு பதவிகளிலே இருக்கின்ற பொழுது மக்களுக்குத் தொண்டு செய்கின்ற ஆர்வம். ஆக தொண்டு செய்தால்கூட, நாம் என்னதான் பாடுபட்டாலும் கூட, இந்த சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்த சமுதாயத்திலே சுயமரியாதை உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கருதிய காரணத்தால்தான் 1925 ஆம் ஆண்டிலே சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி அது மெல்ல மெல்ல வளர்ந்து இன்றைக்கு வீரமணியால் அது காப்பாற்றப்படுகிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. (கைதட்டல்).

சுயமரியாதைப் பஞ்சாங்கம்

முதன் முதல் சுயமரியாதை கொள்கையைப் பரப்புவதற்கு சுயமரியாதைப் பஞ்சாங்கம் என்று ஒரு அட்டை வெளியிடப்பட்டது.
அந்த சுயமரியாதைப் பஞ்சாங்கத்திலே பார்ப்பானை நம்பாதே! புரோகி தத்தை ஏற்காதே! பஞ்சாங்கத்தைப் பார்க்காதே! பூநூலை மதிக்காதே! உச்சிக் குடுமியை வணங்காதே என்பது போல இந்த வார்த்தைகள் இருக்கும். (பலத்த கைதட்டல்). என்னுடைய 5 வயதில் ஏழு வயதில் நான் படித்த முதல் அரிச்சுவடி இதுதான். (பலத்த கைதட்டல்).

பிராமணன் எனக்கு எதிரி

நான் பிராமணர்களை எதிரிகள் என்றுகூட நினைக்கவில்லை. அவனி டம் மண்டியிருகின்ற பொழுது தான் அவன் எனக்கு எதிரி. அவனும் நானும் நண்பராக இருக்கிற பொழுது அவன் எப்படி எனக்கு எதிரி?
அவன் உயர்ந்தவன், நான் தாழ்ந்தவன் என்றால் அவன் எனக்கு முதல் எதிரி. (கைதட்டல்). தமிழர்கள் அறியாத ஒரு பெரிய உண்மை இருக்கிறது.

வடபுலத்தில் பிராமணர்களின் செல்வாக்கு

வடபுலத்திலே பிராமணர்களுடைய செல்வாக்கு வளர்ந்த காலத்தில் சாஸ்திரங்களை உருவாக்கினார்கள். பிரம்மாவின் பெயராலே, மகாவிஷ்ணு வின் பெயராலே, நாரதருடைய பெயராலே மனுதர்மத்தின் பெயராலே அவனவன் சாஸ்திரத்தை தயார் செய்து கொண்டான். அப்படி தயாரித்த அந்த சாஸ்திரங்கள்தான் இந்த நால்வகை ஜாதியை உறுதிப்படுத்தின.

நால்வகை ஜாதி

அந்த நால்வகை ஜாதியை உறுதிப் படுத்தியது மட்டுமல்ல. அப்படி உறுதிப்படுத்தப்பட்ட பொழுது ஆரியர்களுக்கிடையிலே பிராமணன், சத்திரியன், வைசியன் இந்த மூன்று பிரிவும் அவர்கள் அல்லர். இந்தியாவில் இருக்கின்ற மீதி எல்லாமக்களும் சூத்திரர்கள். வட மொழியைத் தவிர இந்த நாட்டிலே எல்லா மொழிகளும் சூத்திரர்கள் மொழி பிராகிருத மொழிகள். எல்லா மொழிகளும் வடமொழியில் கடன் வாங்கியதாக ஒரு கற்பனை.

செத்துப்போன வடமொழி

வடமொழி செத்துப் போன மொழி. (சிரிப்பு-கைதட்டல்). இப் பொழுது செத்துப்போன மொழி அப்பொழுது பிறக்காத மொழி. (சிரிப்பு-கைதட்டல்). தமிழ் இருந்த பொழுது வடமொழி பிறக்கவில்லை.
வடமொழி என்பதில் எழுந்து கிடையாது. ஏடு கிடையாது. இலக் கியம் கிடையாது. ஆக அந்த மொழியின் பெயராலே, ஆண்டவன், படைத்த மொழியின் பெயராலே சொன்னதால் அதற்கு ஒரு செல்வாக்கு.

உலகத்தில் திருமணம் முறையை

உலகத்தில் திருமணம் என்பதை நடைமுறைப்படுத்திக்கண்டுபிடித்தவன் தமிழன்தான். திருமணம் என்பது அமெரிக்காகாரனுக்கும் தெரியாது. ஆப்பிரிக்காகாரனுக்கும் தெரியாது. களவு, கற்பு இதுதான் வாழ்க்கை. ஒரு ஆண்-பெண் இணைந்து வாழ்வதுதான் திருமண வாழ்க்கை. அந்த ஆண்-பெண்ணை நமது வீட்டு ஆண்-பெண் என அத்துணை பேரும் மதித்தார்கள். ஒன்றே குலம்
ஒருவனே தேவன்!
என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருந்த ஒரு காலம்.

வேற்றுமை இல்லாத காலம்

வேற்றுமை இல்லாத காலம். அப்படி சேர்ந்து வாழ்ந்தார்கள். அது தான் இல்லறம். அந்த காலத்துமனை வாழ்க்கை அந்த காதலில் பெற்றோர் ஏற்கவில்லையென்றால் இரண்டு பேர் ஊரை விட்டே ஓடிப்போய் வேறு ஒரு ஊரிலே வாழ்வார்கள். அதற்கும் ஒன்று மாறுபாடு கிடையாது.

இதுதான் ஆண்-பெண் இருவரும் சேர்ந்து வாழுகிற வாழ்க்கை. உலகத்தில் தோன்றிய முதல் முறை.


ஆரியர்களுக்கு இந்த முறை தெரியாது

ஆரியர்களுக்கு இந்த முறை எல்லாம் தெரியாது. ஒரு பெண் கிடைத்தால் நான்கு பேரா அய்ந்து பேரா என்பதில் கூட்டு. (சிரிப்பு-கைதட்டல்). அவர்களுடைய திருமணம் என்பது பிற்காலத்தில் வந்த சடங்கு சென்ற இடத்தில் யார் கிடைத்தார்களோ, அவர்களோடு வாழ்வார்கள். அது ஒரு காலம்.

விசுவாமித்திர கோத்திரம்

எனக்கு வரலாறு அடிப்படையிலே சொல்ல வேண்டுமானால் விசுவாமித்திர கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் முதன் முதல் ஏறத்தாழ ஒரு 500 பேர் என்று சொல்லுகிறார்கள். 200 பேர் வடக்கேயிருந்து வந்து கோதாவரி கரையிலே வந்து தங்கினார்கள். அத் தனை பேரும் ஆடவர்கள். நாட்டை விட்டு வேறொரு நாட்டிற்கு வருகிற வர்கள். குடும்பத்தோடு வரமாட்டார்கள். வந்தவனெல்லாம் பிரமச்சாரி. அவனோ விசுவாமித்திர கோத்ரம். அந்த கோத்ரத்தைச் சோந்தவர்கள் திராவிடப் பெண்களைத் தான் தங்கள் வாழ்க்கைக்கு மனைவியாக ஏற்றுக் கொண்டார்கள்.

பிரம்ம ராட்சசர்

அந்த சமூகத்திற்குப் பெயரே பிரம்ம ராட்சசர் பிராமண குலத்துக்கும் ராட்சச குலத்திற்கும் கலப்பு ஏற்பட்டது. பி.பி.சீனிவாச அய்யங்காருடைய ஞசந ஹசலய கூயஅடை ஊரடவரசந என்ற புத்தகத்திலே எழுதியிருக்கின்ற செய்தி அது. அப்படி பிராமணர்களுக்கும் ராட்சர்களாகிய அசுரர்களுக்கும் ஏற்பட்ட கலப்பு. அது விசுவாமித்திர கோத்திரத்தினுடைய மறுவடிவம். அப்படியும் வாழ்ந்தி ருக்கிறார்கள். ஆனால் தமிழன் அப்படி இல்லை. பிரம்மாவும் கிடை யாது. ராட்சசனும் கிடையாது. மனி தர்கள்தான் காதல் ஏற்பட்டது. கலப்பு ஏற்பட்டது. திருமணம் நடைபெற்றது. திருமணம் இல்லாமலும் வாழ்க்கை நடத்தினார்கள். ஒன்றுபட்டு வாழ்ந் தார்கள்.

சூத்திரனுக்கு திருமண உரிமை கிடையாது

ஆனால் பிராமணர்கள் ஏற்படுத்திய சாஸ்திரத்தில் சூத்திரனுக்கு திருமண உரிமை கிடையாது. வைசியருக்குத் திருமணம் உண்டு. சத்திரியனுக்குத் திருமணம் உண்டு. பிராமண னுக்குத் திருமணம் உண்டு. இந்த மூன்று பேருக்கும் திருமணம் செய்து வைக்கின்ற திருமண உரிமை பிராமண புரோகிதருக்கு உண்டு.
ஆனால் சூத்திரர்களுக்குத் திருமணமே கிடையாது. பின் என்ன என்று கேட்டால் திருமணம் கிடையாது. சேர்த்து வைப்பதற்காக பிராமணன் சடங்கு செய்வான். கணவன், மனைவி என்று சொல் லாமல் சேர்த்து வைக்கிற முறையிலே சூத்திரர்களுக்கோ, மற்றவர்களுக்கோ அவர்களுடைய அகராதிப்படி திரு மணம் செய்து வைக்க காரணம் என்ன என்று கேட்டால், திருமணம் செய்து வைத்து வாழ்க்கை நடத்தினால் அவர் களுக்குப் பிறக்கிற பிள்ளைகள் நியாயமாக உரிமை உள்ள பிள்ளைகளாக ஆகிவிடும். நியாயமான உரிமை உள்ள பெற்றோர்களுக்குப் பிறந்த பிள்ளைகளாக ஆகிவிடும். அவர்களுக்கு மானம் வந்துவிடும். தன் மானம் வந்து விடும். இனப்பற்று வந்துவிடும். அவர்கள் தலைநிமிர்ந்து நடப்பார்கள்.

பெரியார் புரிந்துகொண்ட காரணத்தால்தான்

அதற்கெல்லாம் இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காக திருமணமே கிடையாது. உங்கள் அப்பனுக்கும், ஆயிக்கும் திருமணம் இல்லை. ஒரு வரை ஒருவர் சேர்த்து வைத்துக் கொண்டார்கள். ஆகவே நீங்கள் எல்லாம் சூத்திரர்கள். இந்த நாட்டிலே பிறக்கின்ற ஒவ்வொரு பிள்ளையையும் சூத்திரனாக் குவதற்காக சாஸ்திரத் திலேயே அப்படி எழுதி வைத்துக் கொண்டார்கள்.
இதை எல்லாம் நடைமுறையிலே தந்தை பெரியார் அவர்கள் புரிந்து கொண்ட காரணத்தினாலேதான் நம்மை எல்லாம் மனிதனாக்குவதற் காக பாடுபட்டார். அவருடைய கருத் துகள், விளக்கங்கள் எல்லாம் ஒரு பக்கம்.

பெரியாரைப் பற்றி அண்ணா சொன்னார்

நாம் மனிதன் என்று உணருவதற்கு நடைமுறைப்படுத்துவதற்கு, வாதாடுவதற்கு, வல்லமையைக் கொடுத்தவர் தந்தை பெரியார். (கைதட்டல்). அதனால்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெரியாரை விட்டு விலகி வந்த பொழுது அய்யாவை விட்டு கட்சி என்ற முறையிலேதான் வெளியே வந்தாரே தவிர, அய்யாவை தன்னுடைய மனதிலிருந்து நீக்கவில்லை. (பலத்த கைதட்டல்).
ஒரு காலத்திலே அவர் சொல்லுகிற பொழுது சொல்லுகிறார். என்னுடைய வாழ்நாளில் நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் பெரியார் தான் என்று (பலத்த கைதட்டல்).
இன்னொரு நேரத்திலே அவர் சொன்னார். தந்தை பெரியார் இல்லாவிட்டால் நாம் இல்லை எப்பொழுது? ஆட்சிக்கு வந்த பொழுது சொல்லுகிறார்.ஆனால் அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் நமக்கு அடிப்படையான தகுதியைத் தந்தவர் பெரியார்.

பெரியார் இலட்சியம் காப்பாற்றப்பட வேண்டும்

ஆக திராவிடர் கழகத்தின் தந்தை பெரியார் வளர்த்த அந்த இலட்சி யத்தை தொடர்ந்து காப்பாற்ற வேண் டிய அவசியம் இந்த நாட்டிலே இருக் கிறது.
இன்னமும் எல்லா மனிதர்களுக்கும் தலைநிமிர்ந்து வாழக்கூடிய தகுதியைப் பெற்று வருகிறார்கள். படித்தவனெல்லாம் தங்களை

தாழ் வாக நினைத்துக்கொள்ளக்கூடிய நிலைமை இந்த நாட்டிலே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் படித்த மேல்ஜாதிக்காரனுடைய ஆதிக்கத் தைப் பார்த்து கீழ் ஜாதிக்காரன் படித்திருந்தாலும் அவனிடம் கைகட்டி நிற்கின்ற மனப்பான்மை இருந்தது.

படித்தவர்கள் நம்மவர்களிலே யாராவது மேல்நிலையிலே இருப்பார் களேயானால் மிக்க ஆச்சரியமாக கருதப்பட்டது. இன்னும்சொல்லப் போனால் படித்த தமிழனைவிட படிக்காத பார்ப்பானுக்கு அதிக உயர்வு இருக்கிறது.

கலைஞரைப் போல் தொண்டு செய்த

தமிழ்நாட்டிலே அரசியலிலே கூட நீங்கள் எண்ணிப் பார்ப்பீர்களேயானால் கலைஞரைப் போல் தொண்டு செய்த ஒரு தலைவனும் இல்லை. (பலத்த கைதட்டல்).
வெறுப்பதற்கான காரணம். சுட்டிக்காட்டப்படுகின்ற கலைஞரைப் போல் ஒருவருக்கு இல்லை. (கைதட்டல்). என்ன காரணம்? அவர் தமிழன்.

ஒரு வேளை அவர் ஒரு பிராமணராக இருந்திருப்பாரேயானால் எனக்கு கூட ஒரு துணை கிடை யாது. (சிரிப்பு-கைதட்டல்). திரு.வி.க. வைக்கூட அவர் ஒரு தமிழன் என்ற காரணத்தினால் அவரை அலட்சியப் படுத்தினார்கள்.

வ.உ.சி.யை வரவேற்க நாதியில்லை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் செக்கிழுத்துவிட்டு வெளியே வந்த பிறகு அவரை மாலை போட்டு வரவேற்க நாதியில்லை.

தமிழறிஞர்கள் எல்லாம் மிகச் சாதாரணமாகக் கருதப்பட்டார்கள். சாதாரண சவுண்டிப் பார்ப்பான் எல்லாம் மிக உயர்ந்த அறிவாளியாக கருதப்பட்டான்.

நான் அவர்கள் மீது கோபித்துக் கொண்டு சொல்லவில்லை. நம்முடைய முட்டாள்தனம் ஆழமாக இருந்தது. இதை எடுத்துக்காட்டஅந்த காலத்தில் பெரியாரைத் தவிர வேறு யாரும் இல்லை.

திரு.வி.க. சொன்னார்

வ.உ.சி. அவர்கள் அதை உணர்ந்தார். திரு.வி.க. அவர்களுக்குப் புரியும். அவர்கூட சொன்னார். சுயமரியாதை இயக்கம் பிறந்தது என்று சொன்னால் அதற்கு நான்தான் தாய். தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் என்ற குழந்தை பெரியார் அவர் களிடத்திலே வளருகிறது என்று திரு.வி.க. அவர்களே சொன்னார். இப்படி நாம் எண்ணிப் பார்க்கிற பொழுது இந்த அரங்கு நீங்கள் எல்லாம் கூடியிருக்கின்ற இந்த காட்சி எல்லாம் பெரியாருடைய சிந்தனை இந்த நாட்டிலே வளருவதற்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக நான் கருதுகின்றேன். (பலத்த கைதட்டல்).

வீரமணி தொண்டு தொடர வேண்டும்

அந்த கொள்கையை வளர்த்து வருகிறவர் எனது அருமை இளவல் வீரமணி அவர்கள். வீரமணி அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும். அவருடைய தொண்டு தொடர வேண்டும்.
பெரியாருடைய எண்ணம் உலக மெல்லாம் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும். பெரியாரால் பெற வேண் டிய பேறுகளை எல்லாம் நாம் பெற வேண்டும்.

தமிழன் தமிழனாக உயர வேண்டும். அதற்கு இந்த விழா நிகழ்ச்சி பயன்பட வேண்டும். என்று கூறி வாழ்க வீரமணி என்று வாழ்த்திவிடைபெறுகிறன்.
-இவ்வாறுபேராசிரியர் க.அன்பழகன் உரையாற்றினார்.

-------------------"விடுதலை” 18-12-2011


3 comments:

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரல்லாத பல்துறைத் தமிழர்களே!


பார்ப்பனரல்லாதார் கட்சி தோற்று விட்டது என்று நீலிக் கண்ணீர் விடும் தோழர்களே!

தலைவர்களையும், பாடுபட்டவர் களையும் குறை கூறும் தோழர்களே!

நீங்கள் அக்கட்சி நலத்துக்கு ஆக என்று என்ன செய்தீர்கள்?

ஆங்கிலம் கற்று, உத்தியோகத்தி லிருக்கும் பார்ப்பனரல்லாதாரும், வக்கீல் பார்ப்பனரல்லாதாரும், அக் கட்சியின் பேரால் மனிதர் என்று மதிக்கப்பட்டு பயன் பெற்றவர்களும் ஜஸ்டிஸ் பத்திரிகைக்கு சந்தாதாரர் ஆகி, அதைப் படித்திருப்பீர்களா?

அல்லது வெட்கப்படும் தமிழ் மக் களாவது ஒவ்வொருவரும் குடிஅரசு விடுதலை வாங்கிப் படித்திருப்பீர்களா?

அப்படியானால் ஜஸ்டிஸ் பத்திரி கைக்கும், குடிஅரசு க்கும் முறையே 1 மாதம், 2,500, 1,000, 250 ரூபாய் வீதம் நஷ்டம் ஏற்படுவானேன்?

பார்ப்பனர்களைப் பாருங்கள். அவர் கள் முயற்சியைப் பாருங்கள். அவர்கள் பத்திரிகைகளை அவர்கள் எப்படிப் படிக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள் பாருங்கள். ஆகவே கட்சி ஏன் ஜெயிக்க வில்லை? யாரால்? என்பதை இப்போ தாவது உணருங்கள். ஆத்திரப்படுவதில் பயனில்லை.

- இப்படிக்கு
கட்சியால் கடுகளவும் பயன் பெறாதவன்
(விடுதலை 14.3.1937)

இன்றைக்கு 74 ஆண்டுகளுக்குப் பின் மேலே கண்டவற்றைக் கொஞ்சம் அசை போட்டுப் பார்க்கலாமே!

எது எது இன்றைக்கும் பொருந்துகிறதோ, அவற்றை எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாமா?

நடந்து முடிந்த தேர்தலில் பார்ப்பனர் அல்லாதார் கட்சி தோற்றுப் போகவில்லையா?

1937 விடுதலையில் எழுதப்பட்டது இதற்கும் பொருந்தவில்லையா?

கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்சியின் ஏட்டுக்குச் சந்தாதாரராக ஆவது அடிப்படைக் கடமை அல்லவா?

கட்சி உறுப்பினர் என்றால் அதன் பொருள் என்ன? உறுப்பினர் அட்டையோடு சேர்ந்தது தான் இயக்க ஏட்டின் சந்தாவும். இரண்டையும் ஒன்றையொன்று பிரித்துப் பார்க்க முடியாதே - கூடாதே! இவை இரண்டும் இரட்டைக் குழந்தைகள் - ஒரு கொடியில் பூத்த இரட்டை மலர்கள். கழகத் தோழர்கள் உறுப்பினர்கள் சந்தா சேர்ந்தாலே அக்கணமே தீர்ந்தது நமது இலக்கு!

பார்ப்பனர்களைப் பாருங்கள் என்று அன்று விடுதலை சொன்னதே!

தினமலர், தினமணி வாங்காத பார்ப்பனர் கள் உண்டா? கல்கி, ஆனந்தவிகடன் வாங் காத கடைசிக் கிறுக்கன் கூட அக்கிரகாரத்தில் கிடையாதே! விடுதலையால் விடுதலை பெற்ற தமிழர்களே, உங்கள் கடமை என்ன? சமூக நீதி பெற்ற ஒடுக்கப்பட்ட மக்களே சந்தா சேர்ந்துவிட்டீர்களா விடுதலைக்கு?

விடுதலையின் சீரிய பணியால் மிகுதியும் பலனடைந்த பெண்குலமே, உம் கையில் இருக்க வேண்டியது விடுதலை என்னும் போர்வாள் அல்லவா?

பார்ப்பனரல்லாத வழக்குரைஞர்களே, மருத்துவர்களே, உங்கள் வாழ்வுக்கு அடித் தளமிட்டது விடுதலை என்னும் வீர மறவன் அல்லவா? தமிழ்நாடு அரசுப் பணியாளர்களே, உங்களை அங்குலம் அங்குலமாகப் பொத்திப் பொத்தி வளர்த்தது விடுதலை என்னும் தாய்ப்பால் அல்லவா? இரகசியக் குறிப்பேடு என்னும் சூழ்ச்சியைச் சுக்கல் சுக்கலாக்கி கிழித் தெறிந்தது விடு தலையாகிய இராவணன் அல்லவா? இடையில் இருப்பது இன்னும் 5 நாட்களே! 50 ஆயிரம் சந்தாக்கள் என்னும் இலக்கை முடிக்க இன்றே, இப்பொழுதே, இக்கணமே களத்தில் இறங்குங்கள், எஞ்சிய பணிகளை எடுத்து முடிப்பீர்! முடிப்பீர்!! 18-12-2011

தமிழ் ஓவியா said...

சு(கு)ட்டிக் காட்டுவது நமது கடமை!


அ.இ.அ.தி.மு.க. அதிகாரப்ப பூர்வ மான நாளேடு னுச நமது எம்.ஜி.ஆர்.
அதன் ஆறாம் பக்கத்தில் அப்படிப் போடு... என்னும் தலைப்பில் கார்ட்டூன் செய்தி இன்று.

சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் பாராட்டியுள்ளதைப் பற்றிச் சிலாகித்து விட்டு, சட்டமன்ற கூட்டத்திற்கு திமுக தலைவர் கலைஞர் வராதது குறித்து ஒன்றும் சொல்லவில்லையே என்று குத்திக் காட்டியுள்ளது.

கடந்த ஆட்சியில் சட்டமன்றக் கூட்டங்களில் எத்தனை முறை செல்வி ஜெயலலிதா வந்தார்? முக்கியமான பிரச்சினைகளில் எல்லாம் கலந்து கொண்டாரா என்பது பற்றியெல்லாம்.. திராவிடர் கழகத் தலைவர் சொல்லி யிருந்தால், இப்பொழுது இந்தக் கேள்வியையும் கேட்கலாம்.

இப்பொழுது அந்தப் பிரச்சினைகள் தேவையற்ற ஒன்றே.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழ்நாடு ஒன்றாகவே நிமிர்ந்து நிற்கிறது என்று காட்ட வேண் டிய தருணத்தில் இன்னார் வரவில்லை - என்றெல்லாம் எழுத ஆரம்பிப்பது தேவை யற்ற வேலை - இந்தப் பிரச்சினையில் ஒன்றாகவே இருக்கிறது தமிழ்நாடு என்கிற பலூனைக் குத்தி விட்டு வேடிக்கைப் பார்க்கும் சிறுபிள்ளைத்தனம்.

ஆப்பதனை அசைத்து விடும் வேலை ஆளும் கட்சிக்குத் தேவையா?

அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு, அவர் கொள்கைகளை ஆழத் தோண்டிப் புதைக்கும் இராசி பலனை முதலில் நமது எம்.ஜி.ஆர் ஏட்டில் நிறுத்துங்கள்! தாய்க் கழகம் பற்றிக் குறிப்பிட்டுள்ளதால், தாய்க்கழகம் என்கிற முறையில் இதனைச் சு(கு)ட்டிக் காட்டு வதும் நமது கடமையாகும். 18-12-2011

தமிழ் ஓவியா said...

இனமானப் பேராசிரியர் வாழ்க! வாழ்கவே!! திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி


இன்று (டிசம்பர் 19, 2011) நம் இனமானப் பேராசிரியர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் மானமிகு க. அன்பழகனார் அவர்களது 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா.

காட்சிக்கெளியர்; கருத்துக் கருவூலம்; பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை எந்த மேடையிலும் முழங்கத் தவறாத முழுதாய்ந்த பாவலர்; தனக்கென சொற்பொழிவு மேடைகளில் தனி பாணியை வகுத்துக் கொண்டு தர்க்கரீதியான வாதங்களை, கேட்போரை ஏற்போராக மாற்றும் சக்தி வாய்ந்த சொலல் வல்லர்.

மனதிற்பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத மாண்பாளர்; இரட்டை வேடம் தரிக்காதவர் எக்காலத்திலும்!

அறிஞர் அண்ணாவின் பாசத்திற்குரிய தம்பியாக, தத்துவ விளக்க கர்த்தாவாகத் திகழ்பவர். கலைஞரின் தலைமைக்கு என்றும் மாறாத விசுவாசம் காட்டும் மூத்த முதிர்ச்சியாளர். அவ்விருவரும் வீணையும் நாதமும் போல, சோதனை மிக்க ஆண்டுகளிலும் திராவிடர் அரசியல் இயக்கமாம் தி.மு.க.வை நடத்தி வரும் நிலையில், அகவை 90 காணும் அருமைப் பேராசிரியர் அவர்கள் எங்கெங்கும் சென்று எழுச்சியுரையாற்றி திராவிடர் இயக்கத்தின் திறன் மிக்க லட்சியக் கவசமாய்த் திகழ்கிறார்கள்.

அவர்கள் நல்ல உடல் நலத்தோடு, பல்லாண்டு, பல்லாண்டு வாழ்ந்து, தாழ்ந்த தமிழகத்தை தலை நிமிரச் செய்து, திராவிடத்தின் மறுமலர்ச்சியை மீண்டும் உருவாக்கி புதிய வெற்றிகளை - இயக்கத்திற்கு, கொள்கை லட்சியங்களுக்குத் தருவார்களாக!

அடக்கமும், ஆழமும் அவரிடமிருந்து இளைய தலைமுறை கற்க வேண்டிய கவினுறு பாடங்களாகும்!

வாழ்க இனமானப் பேராசிரியர்!

வளர்க அவர் போன்றவர்களால் பாதுகாக்கப்படும் திராவிடர் இயக்கம்!!

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம் 19-12-2011