Search This Blog

16.12.11

முல்லைப் பெரியாறும் - தமிழக அரசு தீர்மானமும்


வரவேற்கத்தக்கது!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான தீர்மானம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டின் பொதுப் பிரச்சினைகளிலும் இந்த நிலை தொடரும் என்று எதிர்பார்க்கலாம். மற்ற மற்ற மாநிலங்களும் இதற்கு முன்பே இவ்வாறு தான் நடந்து கொண்டு இருக் கின்றன.

தீர்மானத்தின் சாரம்:

(1) முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவே இருக்கிறது. உடைந்து விடும் என்று சொல்லுவது உண்மையல்ல.

2) இன்றைய நிலையில் நீர் மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திட வேண் டும். எஞ்சிய பலப்படுத்தும் நடவடிக்கைகள் முடிக்கப்பட்ட பின் 152 அடிக்கு நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் (இது உச்சநீதி மன்றத்தின் ஆணையும் கூட!)

3) கேரள நீர்ப்பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு திருத்தச் சட்டம் - 2006 எனும் சட்டம் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கக் கூடியதாகும்.

4) அணையின் நீர் மட்டத்தினை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்ற கேரள சட்டப் பேரவையின் தீர்மானம் (9.12.2011) வருந்தத்தக்கது.

5) அணையின் பாதுகாப்பு மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

6) 2006 இல் கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் திருத்தப்பட வேண்டும்.

7) எந்த வகையிலும் தமிழ்நாடு அரசு தன் உரிமையை இந்தப் பிரச்சினையில் விட்டுக் கொடுக்காது.

இந்த ஏழினையும் உள்ளடக்கிய செறிவான தீர்மானம் இது என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.

தொழில் நுட்ப விற்பன்னர்களோ, உச்சநீதி மன்றமோ, நடுவண் அரசோ இந்தத் தீர்மானத்தின் எந்த வரிக்கு மாறாகக் கருத்துக் கொள்ள வாய்ப்பு அறவே கிடையாது.

இன்னும் சொல்லப் போனால் இந்த மூன்று அமைப்புகளால் ஏற்கனவே தெளிவாக சொல்லப் பட்டவைகளை உள்ளடக்கமாகக் கொண்டது தான் இந்தத் தீர்மானம்.

இந்தப் பிரச்சினையில் இரு மாநிலங்களிலும் பதற்றமான நிலை உருவாகி விட்டது. வன்முறைகள், தலை தூக்கி நிற்கின்றன.

கேரள மாநில முதல் அமைச்சரிடம், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இதுபற்றித் தெளி வாகவே கூறிவிட்டார்; போராட்டங்களை உடனடியாக நிறுத்தச் செய்யுங்கள் என்பது தான் அந்த அறிவுரை! தமிழ்நாடு அரசின் நிலைப்பாடும் அதுதான்; வன்முறைக்கு இடம் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

எவ்வளவு சீக்கிரம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லதாகும்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை அமைதியின்மை பதற்றம் நிலவினாலும் அணையின் நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் தென் மாவட்டங்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப் பாசனத்தால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய அய்ந்து மாவட்டங்களில் 17 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. மதுரை மாநகர மக்களுக்கு மட்டுமல்ல; சேடப்பட்டி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்சினையும் இந்த அணைப் பிரச்சினையில் அடங்கியுள்ளது.

இந்த மாவட்டங்களில் பயிராகும் காய்கறிகள் தான் கேரளாவையும் வாழ வைக்கிறது என்பதையும் கேரள மாநில அரசு மறந்து விடக் கூடாது.

மக்களைத் தவறான வழிக்குத் திசை திருப்பினால் பூமராங் (Boomerang) மாதிரி தன்னையே திருப்பித் தாக்கும் - எச்சரிக்கை!

--------------------"விடுதலை” தலையங்கம் 16-12-2011

4 comments:

தமிழ் ஓவியா said...

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை

ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து

தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது

தமிழகத்தின் இந்த ஒற்றுமை பொதுப் பிரச்சினைகளிலும் தொடரட்டும்!!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

தமிழ்நாடு சட்டப் பேரவையில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் உட்பட ஒரு மனதாக நின்று தீர்மானம் நிறை வேற்றியதற்குப் பாராட்டுத் தெரி வித்து இந்த நிலை அனைத்துப் பொதுப் பிரச்சினைகளிலும் தொடரவேண்டும் என்று திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியுள்ளார் அவரது அறிக்கை வருமாறு:

நேற்று டிசம்பர் 15ஆம் தேதி சட்டமன்ற சிறப்புக்கூட்டம் ஓர் அருமையான, எடுத்துக்காட்டான கூட்டம் ஆகும். முதல் அமைச்சர் அவர்களது முயற்சி, சிறப்பானது. உரையும், தீர்மானமும் தெளி வானவை! ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சிகளும், அதன் தலைமைகளும் பாராட்டிற்குரியவை.

ஒரு முகமான குரல்!

எதிர்க்கட்சிகள் தி.மு.க. உட்பட அனைத்தும் ஒரு முகமாகக் குரல் எழுப்பி - எவ்வித சுருதி பேதமும் இன்றி - தமிழ்நாட்டின், தமிழர்களின் வாழ்வுரிமையை, கேரள அரசின் அடாவடித்தனத்தை அகிலத்திற்கும் அறிவித்த அருமையான சாதனையாகும்.

தமிழ்நாட்டின் முக்கிய உயிர் நாடியான சமூக நீதி காக்கும் வகையில், 69 விழுக்காட்டினைப் பாதுகாக்க கூட்டப்பட்டு (30,31.12.1993) இதே போல எதிர்ப்பின்றி ஏகமானதாக சட்டம் நிறைவேறியது - 31சி, 9வது அட்டவணைப் பாதுகாப்பினை உள்ளடக்கியது. (வெளியில் அப்போது சற்று சுருதி பேதம் இருந்தபோதிலும்கூட) அச்சட்டம் நிறைவேறி, இந்தி யாவிலேயே தமிழ்நாடு சமூக நீதிக்களத்தில் சரித்திர சாதனை பெற்ற மாநிலமாக விளங்குவதற்கு அடிகோலியது. இன்று நிலைத்து விட்டது.

பொதுப் பிரச்சினைகளிலும் இந்த ஒற்றுமை தேவை!

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத் துள்ளதிலும், நமது தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைக் காப்ப திலும், அனைத்து எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியும் ஒரே அணியில் நிற்பது கண்டு மிகவும் பாராட்டி வரவேற்கிறோம்.

இந்த ஒற்றுமை, காவிரி நதிநீர்ப் பிரச்சினை, பாலாற்றுப் பிரச்சினை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினை, வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் இன்னல்களுக்கு ஆளாகும் பிரச்சினை, தொப்புள் கொடி உறவுகளாக உள்ளவர்களை, ஈழத் தமிழர் போன்றவர்களை ஈவு இரக்கமின்றிக் கொடுமைப்படுத்தி, அவர்கள் வாழ்வுரிமைக்கு எதிரான போர்களை பறிக்கும் மனித உரிமைப் பிரச்சினை போன்ற அத்துணைப் பொதுப் பிரச்சினைகளிலும் எல்லா கட்சிகளும் - பக்கத்திலுள்ள கருநாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் எப்படி கட்சி வேறு பாடின்றி, மாச்சரியங்களை மறந்து ஒன்றாக குரல் கொடுக்கின்றனரோ - அதுபோல - ஒன்றுபட்டு உரிமை முழக்கம் எழுப்ப வேண்டும்.

தேர்தல் நேரத்தில் கட்சி, போட்டிகள் மற்றும் ஜனநாயக முறைப்படி, எதிர்க்கட்சிகளுக்குள்ள உரிமை களையும் கடமைகளையும் தொடரலாம்.

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்!

அனைத்துக் கட்சி தலைவர்களும் நமது மகிழ்ச்சி பொங்கும் நன்றிக்குரியவர்கள்!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள தமிழர் ஒன்றாதல் கண்டே,
என்ற புரட்சிக் கவிஞரின் வரிகள்தான், பொதுப் பிரச்சினைகளிலும் தமிழர்களுக்கு - தமிழ் நாட்டவருக்கு- வழிகாட்டும் கலங்கரை வெளிச்சமாக இருக்க வேண்டும் என்பதே நமது அன்பு வேண்டுகோளாகும் - அனைத்துக் கட்சியினருக்கும்; ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!


கி. வீரமணி
தலைவர்
16.12.2011 திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

புதிய அணை கட்டுவதற்கு இனிமேலும் தாமதிக்க முடியாது- கூறுகிறார் கேரள முதலமைச்சர்


முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கு இனிமேலும் தாமதிக்க முடியாது என்று கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணைக்கு பதி லாக புதிய அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. மேலும், அந்த அணையின் நீர் மட் டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் அந்த அரசு கூறி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முல்லைப் பெரியாறு அணை விவ காரத்தில் எங்களால் நீண்ட காலத்திற்கு பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது லட்சக்கணக்கான மக்களுடைய வாழ்வு பற்றிய பிரச்சினை. அந்த பகுதியில் வசித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் இரவுநேர தூக்கத்தை தொலைத்து விட்டனர். பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்லவில்லை. சிலர் அந்த பகுதியை விட்டு, வேறு இடங்களுக்கு செல்லலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கின்றனர்.

அந்த அணைக்கு பதிலாக புதிய அணை கட்டப்பட்டாலும், தற்போது தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட்டு வரும் அதே அளவு தண்ணீரை கொடுப்பதற்கு நாங்கள் எந்த விதமான உறுதியையும் செய்துகொடுக்க தயாராக இருக்கிறோம். இதுதொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையேயும், நாங்கள் பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக உள்ளோம்.

தமிழகம் விருப்பப்பட்டால், இந்திய அரசின் தலைமையில் முத் தரப்பு ஒப்பந்தம் செய்து கொடுக்கவும் நாங்கள் தயார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திலும் உறு தியை கொடுக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

முல்லைப் பெரியாறு ஒன்றும் 2 மாநிலங்களுக்கு இடையேயான ஆறு கிடையாது.

இருப்பினும், தமிழ் நாட்டிற்கு நாங்கள் தண்ணீர் கொடுக்க விரும்புவதன் ஒரே காரணம், அண்டை மாநிலத்துடன் நல்ல நட்புறவை பேண வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே.

நாங்கள் தமிழ்நாட்டுடன் இதயப் பூர்வமான உறவுடன் இருப்பதற்கே விரும்புகிறோம்.

முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டு 116 ஆண்டு கள் ஆகி விட்டன. அந்த அணையில் நல்ல நிலைமையில் இருந்த சில கற்கள் ஏற்கெனவே, அடித்துச் செல்லப்பட்டு விட்டன. அந்த அணை 999 ஆண்டுகள் பாதுகாப்பாக இருக்கும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே, முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக நிச்சயமாக புதிய அணை கட்டப்படும். இனிமேலும், இந்த விஷயத்தில் தாமதிக்க முடியாது. தற் போதைய விவாதம் என்னவென்றால், அந்த அணைக்கு பதிலாக புதிய அணை யை இன்று கட்டுவதா அல்லது நாளை கட்டுவதா என்பது மட்டுமே.- இவ்வாறு அவர் தெரிவித்தாராம்.

தமிழ் ஓவியா said...

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை: அப்பாவி மக்கள் தாக்கப்படக் கூடாது!


முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை: அப்பாவி மக்கள் தாக்கப்படக் கூடாது!

கலவரங்களுக்குக் காரணம் கேரள அரசியல்வாதிகளே!

பகுத்தறிவுக்கு முன்னுரிமை தந்து தீர்வு காண்பீர்!

தமிழர் தலைவரின் முக்கிய வேண்டுகோள்


முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மக்களைத் தூண்டி கலவரங்களில் ஈடுபடுமாறு செய்வதற்கு மூலகாரணம் கேரள மாநில அரசியல்வாதிகள்தான்; அப்பாவி மக்கள் எந்தத் தரப்பிலும் தாக்கப்படக்கூடாது; பகுத்தறிவுக்கு முன்னுரிமை தந்து, மனிதநேயத்துடன் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கை வருமாறு:

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை திடீரென்று இப்படி பேருருவம் (விஸ்வரூபம்) எடுத்ததற்குக் காரணம் என்ன? ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு, இரு மாநில அரசுகள் சார்பிலும் உள்ளது. அணைக்கு ஆபத்தில்லை, பலமாகவே உள்ளது; கொள்ளளவு உயரத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்பதுபோன்ற ஆய்வு அறிக்கையைத் தந்ததை யும் கேரள அரசு ஆட்சேபித்ததால் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தால்.

மூல காரணம் எங்கிருந்து?

இரு மாநில அரசுகளின் வாதங்களை அக்கமிட்டிமுன் எடுத்து வைக்க, ஓய்வு பெற்ற இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதி களே அரசுகளின் சார்பில் நியமிக்கப்பட்டு, வரும் பிப்ரவரியில் ஆனந்த் குழு அறிக்கை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படி ஒரு திடீர்க் கலவரம் வெடிப்பதற்கு மூல காரணம் எங்கிருந்து, யாரால் தொடங்கப்பட்டது என்பது ஆய்வுக்குரிய முக்கிய கேள்வியாகும்.

1. டேம் 999 என்று தேவையற்ற ஒரு திரைப்படத்தை கேரளத்தவர் ஒருவர் தயாரித்து கேரள மக்களின் பயத்தையும், உணர்ச்சிகளையும் தூண்டிவிட்டது.
இடைத்தேர்தலே காரணம்

2. கேரளத்தில் ஆளுங்கட்சி (உம்மன்சாண்டி) காங்கிரஸ் கூட்டணி மிகவும் சொற்ப பலத்தில் உள்ளது. (இரண்டு இடங்களே) எதிர்க்கட்சி கூட்டணி (வி.எஸ். அச்சுதானந்தன்) தலைமையில் உள்ள இடதுசாரி முன்னணிக்கும் - ஒரு அமைச்சர் மறைவால் ஏற்பட்டுள்ள இடைத்தேர்தல் அந்த ஆட்சியின் ஆயுளை நிர்ணயிக்கக் கூடியது என்பதால், அதில் வெற்றி பெறப் போவதற்குரிய அரசியல் மூலதனத்தை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைமூலம் தீயைக் கொளுத்தி அப்பாவி மக்களைத் (கேரளப் பொது மக்கள் பலரும் நல்லவர்கள்தான்) தூண்டும் வேலை நடைபெறுகிறது.

அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்புதான் நிரந்தரம்; இந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அல்ல என்பதை தற்காலி கமாக மறந்து, ஆவேசக் கும்பலாக சிற்சில இடங்களில் நடந்து கொள்கிறார்கள் - பதிலுக்குப் பதில் என்று நடந்துகொள்வது பரிகாரமாகாது! பிரச்சினைக்குச் சம்பந்தமில்லாத பொது மக்கள் பாதிக்கப்படுவது எந்த வகையிலும் சரியல்ல- நியாய மும் அல்ல!

மத்திய அரசு உடனடியாக தன்னிடம் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படைகளை அனுப்பி எல்லைப்புறங்களில் பாதுகாப்பை மேற்கொண்டு அணையையும் அவர்கள் மேற்பார்வையில் எடுத்துக் கொண்டிருந்தால், தேவையின்றி ரத்தம் சிந்தும் நிலை; சொந்த நாட்டு அகதிகளாக புது அகதிகள் தோன்றும் நிலையும் தவிர்க்கப்பட்டிருக்குமே!

எதையும் முளையிலேயே கிள்ளி எரியும் பழக்கம் நமது மத்திய அரசுக்குக் கிடையாது; வளரவிட்டு கோடரி தூக்குவது தான் அதன் வாடிக்கையான வேடிக்கை!

இந்தப் பாழாய்ப்போன இடைத்தேர்தல்தான் இந்த திடீர் வன்முறை வெடிப்புகள் - ஆவேசங்களுக்குக் காரணம்.

கேரளத்தில் ஆளுவது காங்கிரஸ் கூட்டணியாக இருப்ப தால், மத்திய அரசும் அதன் தலைமையும் இருதலைக் கொள்ளி எறும்பாக உள்ளதுபோலும்!

ஓய்வு பெற்ற முதியவர் ஜஸ்டிஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி நாராயண குரு போன்ற நீதியரசர்கள்கூட தங்களை முதலில் மலையாளி, பிறகு தான் மனிதர் என்று கருதும் நிலையினைப் புரிந்து, அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளும், ஞானசூன்ய வழக்குரைஞர்களும் இதன்மூலம் கண் திறந்தால் நல்லது!

கேரள அரசியல்வாதிகளே முழுக் காரணம்!

எய்தவனிருக்க, அம்பை நோவதில் பயனில்லை; கேரளத்து அரசியல்வாதிகளே முழு முதற் காரணம். கேரள சகோதரர்களே, புரிந்துகொண்டு சமூக நல்லிணக்கத்துடன் வாழும் நிலையை பகுத்தறிவு கண்கொண்டு சிந்தித்து அமைதி காக்க முன்வாருங்கள். நோய் நாடி நோய் முதல் நாடுங்கள்.

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களே, நமக்கு எதிரிகள் கேரள வெகுஜன மக்கள் அல்ல; எரியும் வீட்டில் ஆதாயம் தேடும் கேரள அரசியல்வாதிகள்தான் - வீட்டை எரிய வைத்ததே அவர்கள்தான் என்பதை உணர்ந்து, வெறும் உணர்ச்சியைத் தூண்டாமல், பகுத்தறிவுக்கு முன்னுரிமை தந்து மனித நேயத்துடன் உரிமைப் பிரச்சினைகளை அணுகி விடை காணுவோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம் 17-12-2011

தமிழ் ஓவியா said...

உம்மன்சாண்டிக்கு, சென்னையில் உள்ள மதராஸ் கேரளா சமாஜம் கடிதம்


இருவருக்கும் இருப்பது ஒரே கலாசார வேர்கள் என்றும், கேரளாவில் உள்ள ஒவ்வொரு தமிழ் சகோதரர்களுக்கும், மலை யாளிகள் காவலர்களாக இருக்க வேண்டும் என்றும், கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டிக்கு, சென் னையில் உள்ள மதராஸ் கேரளா சமாஜம் கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து சென்னையில் உள்ள மதராஸ் கேரளா சமாஜத்தின் பொதுச்செயலாளர் கும்பளங் காடு உன்னிகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சில தமிழ் தொலைகாட்சி களிலும், பத்திரிகைகளிலும் வந்து கொண்டிருக் கும் செய்திகள் தமிழ்நாட்டில் வாழும் மலை யாளிகள் மற்றும் தமிழ் சமூகத்தினர்களின் மனதை குலைக்கும் வண்ணம் உள்ளன. கேரளாவில் வாழும் தமிழ் சகோதரர்கள் எந்தவித பயமும் இன்றி வாழ்வதற் கான சூழ் நிலையை யாரும் சீர்குலைக்கக் கூடாது என்று சென்னையில் உள்ள மதராஸ் கேரளா சமாஜம் சார்பில், கேரள அரசையும், கேரள மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் இருப்பது ஒரே கலாசாரத்தின் வேர்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். சாதாரண மக்களை கஷ்டப் படுத்தும் வகையில் எந்தவித செயலிலும் யாரும் கேர ளாவில் ஈடுபடவேண்டாம். ஒவ்வொரு தமிழ் சகோ தரருக்கும், மலையாளி காவலர்களாக இருக்க வேண்டும்.

எங்கேயாவது தமிழ் சகோதரர்களுக்கு கஷ்டங் கள் நேரிட்டிருந்தால் அதைப் போக்கி, கேரளாவில் அவர்களுக்கு நிம்மதியாக வாழ்வதற்கும், இழப்புகள் ஏதாவது நேரிட்டிருந்தால் அதற்கு இழப்பீடு வழங்குவதற்கும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு போடுவதற்கும் கேரள அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுபோல, தமிழ்நாட்டில் வாழக்கூடிய மலை யாளி சகோதரருடைய வியாபார நிறுவனங் களுக்கும், வீடுகளுக்கும் மற்றும் சொத்து வகை களுக்கும் எந்தவித சேதமும் வராமல் இருக்க தமிழ் சகோதரர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மதராஸ் கேரளா சமாஜம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசும், காவல்துறையும் செய்துவரும் அனைத்து பாதுகாப்புக்கும் நன்றி கூறுவதோடு, மேலும் சிறுபான்மையினருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சாதாரண மலையாளி, தமிழ் சகோதரர் களுக்கிடையே எந்தவித கோபமும், மனவருத்தமும், வெறுப்பும் இல்லாமல், நட்பு வளர்வதற்கு அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இனி மேலாவது எங்கேயும் எந்தவித அசம்பாவிதங்களும் இரு மாநிலங்களிலும் உண்டாகாமல் இருக்கட்டும் என்று மதராஸ் கேரளா சமாஜம் சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கும்பளங்காடு உன்னிகிருஷ்ணன் கடிதத்தில் கூறியுள்ளார். 17-12-2011