Search This Blog

1.12.11

கொள்கையில் சமரசம் காணாத சமூகப் போராளி வீரமணி

ஒரு நிமிடம்

(வீரமணி ஒரு விமர்சனம் எனும் நூலை எழுதிய மூத்த எழுத்தாளர் சோலை நூலின் தொடக்கத்தில் ஒரு நிமிடம் எனும் தலைப்பில் எழுதிய பகுதி இங்கே தரப் படுகிறது)

எமது பத்திரிகை உலகப்பய ணம் அறுபது ஆண்டுகளைக் கடந்து விட்டது. இந்தப் பயணத்தில் எத்தனை யோ அரசியல் தலைவர்களை, பத்திரிகை உலக ஜாம்பவான்களை, தொண்டால் பொழு தளக்கும் சமூக சேவகர்களைச் சந்தித்திருக்கிறோம்.

ஜனசக்தி நாளிதழ் தொடங்கி, நவமணி, அலை ஓசை, மக்கள் செய்தி, அண்ணா என நாளேடுகளில் தினம் தினம் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது.

அதன் பின்னர் ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் என்று எமது எழுத்துப் பணி தொடர்கிறது.

தோராயமாகக் கூட்டிப் பார்த்தாலும் கட்டுரைகளின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கைத் தாண்டும்.

தோழர் ஜீவாவின் மாணவனாகத் தலைநகரில் அடியெடுத்து வைத்தோம். தந்தை பெரியாரின் அறிமுகம் உண்டு. எம்மைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவிற்குப் பெரியவர் காமராசரின் அன்பைப் பெற்றவன். அண்ணா நம்மையும் ஒரு தம்பியாகவே கருதினார். குரோம்பேட்டையில் வசித்தபோது கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவன்.

எம்.ஜி.ஆரை எமக்கு முதன்முதலாக அறிமுகம் செய்தவர் தோழர் ஜீவா. அவரது இல்லத்திற்கு எம்.ஜி.ஆர். வந்தார். அந்தச் சந்திப்பின்போதுதான் எம்.ஜி.ஆர். அறிமுகமானார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை ரீதியாகப் பிளவுபடுகிற நேரம். தோழர் அப்புவும், நாமும் தீக்கதிர் வார இதழ் தொடங்கினோம். பின்னர் நாளிதழாக மலர்ந்தது.

தோழர் ஜீவாவின் மறைவிற்குப் பின்னர் நவமணியில் பணி செய்தோம். அப்போது எங்கள் சினிமா நிருபர் ஜோசப் மூலம் எம்.ஜி.ஆர். அழைத்தார்.

அவருக்கு ஜீவா மீது அளவு கடந்த பாசம், பற்று.

சோலை, ஜீவா இல்லை என்றாலும், நமது நட்பு தொடர வேண்டும் என்று அவர் கூறினார் - வியந்து போனோம். அதன் பின்னர், அடிக்கடி சந்திப்புக்கள்.

நாம் பேனாவில் அதிகமாகச் சண்டைபோட்டது கலைஞருடன்தான். கருத்துப் போராட்டம் தான். ஜனசக்தியில் தொடங்கிய அந்த யுத்தம் அண்ணா நாளிதழ்வரை தொடர்ந்தது. ஆனாலும், என்றுமே நாகரிகம் மறந்து, எல்லைக் கோட்டைத் தாண்டி எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எழுதியதில்லை.

இந்தப் பயணத்தில் இன்னும் பலரைச் சந்தித்தோம். அவர்கள் நினைத்தால் அமைச்சராகி யிருக்கலாம்; நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் பவனி வந்திருக்கலாம்.

ஆனால், அவர்கள் பட்டம், பதவிகளைத் துச்சமென மதிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்தது தொண்டு. அந்தத் தொண்டால் அவர்கள் அற்புத சாதனைகள் செய்திருக்கிறார்கள். ஆனால், வெளியுலகிற்கு அவர்களின் முழுமையான சிறப்புத் தெரியவில்லை. அதனை அவர்கள் விரும்புவதும் இல்லை.

அய்ம்பதிற்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்திருக்கிறோம். பல படைப்புகள் பரிசுகளும் பெற்றிருக்கின்றன. அவைகளில் பெரும்பாலானவை அரசியல் சார்புடையவைதான்.வரலாற்றில் இடம்பிடிக்கத்தக்க அளவிற்குச் சாதனைகள் செய்த - செய்கிறவர்கள் பலர். அவர்களுடைய பணியினை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று விரும்பி னோம்.

அந்த வகையில் புரட்சியில் பூத்த காந்தீய மலர்கள் என்ற நூலைப் படைத் தோம். சர்வோதய இயக்கத் தலைவர்கள் ஜெகந்நாதன்-கிருஷ்ணம் மாளைத் தெரி யாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களு டைய பணிகளின் சிறப்பு வெளிச்சத் திற்கு வந்ததில்லை.

பெருந்தலைவர் காமராசர் முதல்வராகப் பொறுப் பேற்றார். காந்தி கிராமம் ஊழியரகத்திலிருந்த ஜெகந்நாதனை அவர் அழைத்தார். தமது அமைச்சரவையில் அவர் அங்கம் பெற வேண்டும் என்றார். சுதந்திரப் போராட்டத்தில் பல முறை சிறை சென்ற ஜெகந் நாதன் அமைச்சர் பதவியை ஏற்க விரும்பவில்லை.

அவர் ஆச்சாரிய விநோபாபாவின் பூமி தான இயக்கத்தில் இணைந்தார். இன்றைக் குத் தமிழகம் முழுமையும் பூமிதானமாகக் கிடைத்த நிலங்கள் பல்லாயிரம் விவசாயிகளுக்குப் பகிர்ந் தளிக்கப் பட்டிருக்கின்றன.

கீழ்வெண்மணிக் கொடுமை கண்டு குமுறிய ஜெகந்நாதன், கிருஷ்ணம்மாள் தம்பதியர் திருவாரூர் வந்து சேர்ந்தனர். அங்கேயும் நிலச்சுவான்தார்களை எதிர்த்து நிலப் போராட்டங்கள்தான் - அவர்களின் சிறைவாசம் தொடர்ந்தது.

இன்றைக்கு நாகை மாவட்டத்தில் குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் நஞ்சை நிலம் வீதம் பத்தாயிரம் குடும்பங்களுக்கு நிலம் வழங்கியிருக்கிறார்கள்.

காந்தீயத்தின் கடைசி அடையாளமாக இன் றைக்கு 90 வயது கடந்த பின்னரும் அமைதிப் புரட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஜெகந்நாதனுக்கு வயது 96. அவர்களுடைய அந்தப் பணியை நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறுவதுதான் புரட்சியில் பூத்த காந்தீய மலர்கள் என்ற நூலாகும். திருவாரூரில் இந்த நூலை தவத்திரு குன்றக்குடி அடிகளார் வெளியிட்டார்.

ஜெகந்நாதன் - கிருஷ்ணம்மாளின் சீடராக உருவெடுத்தவர் புளியம்பட்டி சுப்பைய்யா லோகநாதன். உள்ளத்தால் இன்றைக்கும் வாலிபர்தான். புஞ்சை நிலங்களைப் பண்படுத்தி ஏழைகளுக்கு வழங்க அவர் அசெபர் என்ற இயக்கம் கண்டார். அது ஒரு காந்தீய இயக்கம்.

இன்றைக்கு அவருடைய தொண்டு, பணிகள் தமிழகத்தில் மட்டுமல்ல, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களிலும் நடைபெறுகின்றன. அறிந்தவர்கள் வியந்து போகிறார்கள். அய்.நா. மன்றம் அங்கீகரித்த தொண்டு நிறுவனங்களில் அசெபர் 11 ஆவது இடம் பெற்றிருக்கிறது, இந்திய அளவில் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது.

எனவே, லோகநாதனின் அரும்பெரும் சேவைகளை- லட்சோபலட்சம் மக்களுக்கு வாழ்வளித்த பணியினை மக்களுக்குச் சொல்லவேண்டும் என்று கருதினோம். அதன் விளைவாக நாம் படைத்தது தான் அமைதியாக ஓர் கங்கை என்ற நூலாகும். அந்த நூலினை பல்லாயிரம் கிராமவாசிகளுக்கு மத்தியில் மதுரையில் சிறந்த காந்தீயவாதி மறைந்த நிர்மலா தேஷ்பாண்டே வெளியிட்டார்.

அமைதியாக ஒரு கங்கைக்குப் பின்னர் நாம் படைத்தது ஸ்டாலின்.

ஆம்.. முத்துவேலர் கருணாநிதி ஸ்டா லினைப் பற்றிய ஓர் ஆய்வு. அந்த நூல் தி.மு.கழகத்தின் வரலாறு அல்ல. அந்தக் கழக வரலாற்றில் அவர் ஓர் அங்கமாக, அத்தியாயமாக ஆகியிருக்கிறார்.

அவசர நிலை பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் முழுப் புரட்சி இயக்கத்தை ஜெயப் பிரகாஷ் நாராயண் தொடங் கினார். பீகாரில் அந்த இயக்கத்திற்கு அவர் தேர்ந்தெடுத்த தளபதி தமிழக சர்வோதயத் தலைவர் ஜெகந்நாதன் (கிருஷ்ணம் மாள்).

அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட பின்னர் ஜெகந்நாதன் பீகாரில் கைதானார். பல மாதங்கள் இருட் சிறையில் அடைக்கப்பட்டார். பெரும் போராட்டத்திற்குப் பின்னர் அவர் சென்னை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

அப்போது ஸ்டாலின் அதே சிறையில் இருந்தார் - திட்டமிட்டு அவரை எப்படிக் கொடுமைப்படுத் தினார்கள் என்பதனை ஜெகந்நாதன் விளக்கினார்.

எங்களுக்கெல்லாம் சிறையில் நல்ல சாப்பாடு போட்டார்கள். ஆனால், ஸ்டாலினுக்கு சாம் பாரில் வேப்பெண்ணெயைக் கலந்து கொடுத் தார்கள். உணவில் கூழாங்கற்களையும், மணலையும் கலந்து கொடுத்தார்கள் என்றார் ஜெகந்நாதன்.

அண்ணன் ஜெகந்நாதன் தந்த தகவல்கள் அதிர்ச்சியானவை. ஆனால், அந்தக் கொடுமை களையெல்லாம் சகித்துக் கொண்டு ஒரு லட்சிய வாதியாக ஸ்டாலின் உருவானார்.

அவர் கழக அரசியலில் படிப்படியாக வளர்ந்தவர், திணிக்கப்பட்டவர் அல்ல. பதிமூன்று முறை சிறை வாசம் என்பதும், அதில் ஒரு ஆண்டு மிசா சிறைவாசம் என்பதும் எவ்வளவு பெரிய தியாகம்? அவருடைய அளவிற்கு இந்தத் தலைமுறையில் தி.மு. கழகத்தில் வேறு எவரும் தியாகம் செய்ததில்லை. எனவே, அவரைப்பற்றி தெரிந்ததை எழுதவேண்டும் என்று விரும்பினோம். அதன் விளைவாக உருவானதுதான் ஸ்டாலின் என்ற நூலாகும். நல்ல வரவேற்பு.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர் வீரமணியைப் பற்றிய இந்தப் படைப்பு உருவானது.
1962 ஆம் ஆண்டு முதல் நவமணி நாளிதழில் பணி செய்தோம். ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் அவ்வப்போது தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்தோம். அப்போது வீரமணியையும் சந்தித்திருக்கிறோம். அன்றைக்கு அய்யாவிற்கு நிழலாக இருந்தார் வீரமணி. இன்றைக்கு அவருடைய குரலாக இருக்கிறார்.

அவர் ஆசிரியர் என்ற நிலையிலிருந்து உயர்ந்து இன்றைய இளம் தலை முறைக்கு அய்யாவாக உருவாகியிருக்கிறார்.

அந்த வரிசையில் அய்யாவின் வாரிசு வீரமணி யைப்பற்றி எழுதவேண்டும் என்பது எமது நீண்ட நாள் கனவு, காலம் கருதி காத்திருந்தோம்.

இன்றைக்கு அவரை அறியாதவர்கள் இல்லை. அவருடைய புகழ் பாரெங்கும் பரவியிருக்கின்றது. ஆம், அவர் அய்யாவின் புகழ் பரப்ப டில்லியில் பெரியார் மய்யம் கண்டார்; உலகம் முழுமையும் அய்யாவின் அரும்பணியை படைக்க சர்வதேச மன்றங்கள் கண்டிருக்கிறார்; உலக நாத்திகர்களைக் காவிரிக் கரையில் கூட்டுகிறார்.

அவர் விரும்பியிருந்தால், எல்லாப் பதவிகளும் அவரை முற்றுகையிட்டிருக்கும். தேடி வந்த பதவிகளையெல்லாம் எட்டி நில், கிட்டே வராதே என்று விரட்டி அடித்தவர்.

காரணம் அவர் அய்யா கண்ட திராவிடர் கழகத்தை வளர்க்க விரும்புகிறார். ஆமாம், அவர் தொண்டு பாரம் சுமக்கிறார். அய்யாவின் கொள்கை, கோட்பாடு கள், தத்துவங்களை உலக மெல்லாம் பரவச் செய்யப் பாடுபடுகிறார்.

அவர் அய்யாவின் வாரிசுதானா? அவரால் திராவிடர் கழகம் ஏற்றம் பெற்றிருக்கிறதா? அய்யா வகுத்த வழியில் அவர் நடை போடுகிறாரா? அவர் சாதித்ததுதான் என்ன? என்பதனை எமக்குத் தெரிந்த அளவில் எடுத்துக் கூற விரும்பினோம். அதன் விளைவாக இந்த நூல் உருவானது.

வீரமணியைத் தெரியும். ஆனால், அவர் தமது 68 ஆண்டு காலப் பொது வாழ்வில் சந்தித்த போராட்டங்கள், சாதித்த சாதனைகள் தொகுப்பாக எவ்வளவு பேருக்குத் தெரியும்? அதனைத் தொட்டுக் காட்டுவதும் கோடிட்டுக் காட்டுவதும் நமது பணி. வெகுவிரைவிலேயே இந்த நூல் இன்னும் விரிவாகும். புதிய அத்தியாயங்கள் இணையும். ஏனென்றால், எழுதி முடித்த பின்னர்தான் எழுதியவை குறைவு; இன்னும் சொல்லவேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்பது எமக்குப் புரிந்தது. எனவே, இந்த நூல் வீரமணியைப் பற்றிய எமது அரிச்சுவடி என்ற அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

அவர் எழுத்தாளர், இதயம் கவர் பேச்சாளர், கருத்தாளர், சமூகச் சிந்தனையாளர், அவர் ஓர் பகுத்தறிவுப் பெட்டகம், அவர் கவிஞர், அவர் வழக்கறிஞர், துவண்டு விட்ட விடுதலையைத் தூக்கி நிறுத்திய பேனா மன்னன் - இப்படி அவருடைய அருமை பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, கொள்கையில் சமரசம் காணாத சமூகப் போராளி.

1986 ஆம் ஆண்டு எம்.ஃபில் பட்டத்திற்காக சென்னைப் பல்கலைக் கழகத்தில் ‘‘Veeramani as a Social Reformer’’ என்ற பொருளில் எஸ். குணசுந்தரி ஆய்வு செய்தார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் ‘‘K.Veeramani a Study’’ என்னும் பொருளில் என்.இராசேந்திரன் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு நடத்தியிருக்கிறார்.

அண்மையில் வீரமணியை முழுமையாக ஆராய்ந்து ஆய்வு செய்தவர் பேராசிரியர் நம். சீனிவாசன். அவருடைய படைப்பு அனைத்து நூலகங்களிலும் இடம்பெற வேண்டிய கருத்துக் களஞ்சியம். வீரமணியின் வாழ்வையும், சிந்தனை யையும், பணியையும் அவர் அணுஅணுவாக ஆய்வு செய்திருக்கிறார். அந்த ஆய்வினைப் புரட்டிப் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. அந்த ஆய்வே இந்த நூல் முழுமை பெறுவதற்குப் பேருதவியாக இருந்தது.

பொருளாதாரத்தில் உலக மயமாக்கல் நாட்டிற்குக் கேடு. ஆனால், பெரியாரியலை உலக மயமாக்கல் பூமிப் பரப்பிற்கே ஒளியேற்றுவதாகும். அந்த லட்சியத்தை நோக்கி, அய்யா கண்ட கழகத்தை உலக மயமாக்க வீரமணி அரும்பாடு படுகிறார்.

அய்யா அவரைக் கண்டெடுத்தார், நம்பினார். அந்த நம்பிக்கையின் நாயகனாக இன்றைக்கு வீரமணி விளங்குகிறார்.

வணக்கம்.

அய்யன்பாளையம் அன்பன்

திண்டுக்கல் மாவட்டம். சோலை

-------------------- “விடுதலை” 1-12-2011

0 comments: