கடவுள் சங்கதி என்று இவ்வியாசத்துக்குத் தலைப்புக் கொடுத்ததின் காரணம் என்னவென்றால், கடவுள் உண்டா, இல்லையா என்பதல்ல இவ்வியாசத்தின் கருத்து என்பதை விளக்கவேயாகும். கடவுள் என்பதாக ஒன்று இருக்கட்டும்; அல்லது கடவுள் என்பதாக ஒன்று இல்லாமலே போகட்டும். இருந்தால் உயர் குணங்களும் நற்பண்புகளுமே கடவுளாக இருக்கட்டும்; அல்லது கடவுள் என்பதாக ஒரு வஸ்து அய்ம்புலன்களோடு இருந்து கொண்டு நினைத்துக் கொண்டும், செய்துகொண்டும், கவனமாய் கவனித்துக் கொண்டும், பலாபலன்களை அளித்துக் கொண்டும் இருக்கட்டும், அல்லது குணமில்லாமல், உருவமில்லாமல், விளக்கிச் சொல்ல வகையும் ஆதாரமும் இல்லாமல் ஒரு அரூபி வஸ்துவாக இருந்தாலும் இருக்கட்டும். அது மனத்துக்கும் எட்டினதாகவோ அல்லது அறிவுக்கும் மனத்துக்கும் எட்டாததாகவோ இருக்கட்டும். புத்த பகவானுக்கு அறிவு வழிகாட்டிய கடவுளாக இருந்தாலும் இருக்கட்டும் அல்லது கிறிஸ்துநாதருக்கு அருள் சுரந்த கடவுளாக இருந்தாலும் இருக்கட்டும் அல்லது மகம்மது நபியை உலகுக்கு அனுப்பி மக்க ளுக்குத் தனது நீதியை எடுத்துச் சொல்லும்படி செய்த கடவுளாக இருந் தாலும் இருக்கட்டும். மற்றும் ஆகாயமாய், நீராய், நெருப் பாய், காற்றாய், நிலப் பொருளாய் இருந்தாலும் இருக்கட்டும். அல்லது எப் படியோ ஏதோ ஒருவித மாய்க் கருத்தாய்க் கற்பனை யாய் இருந்தாலும் இருக்கட்டும். அதைப் பற்றியெல்லாம் கூட உண்டு, இல்லை என்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மற்றபடி கடவுள் விஷயமாய் இக்கட்டுரையின் நோக்கம் என்ன வென்றால், கடவுள் என்பதைப் பற்றி, கடவுள் என்பதற்கு ஆக, மனிதர்கள் இன்று நடந்து கொள்ளும் தன்மை, பான்மை சரியா? அவை அவசியமா? என்பதேயாகும்.
முதலாவது இக்கட்டுரையின் நோக்கம்: கடவுளைக் காப்பாற்ற கடவுள் ஒருவரோ பலரோ உருவமாகவோ அருவமாகவோ, மற்றெப்படியாகவோ கடவுள் இருக்கிறார் என்பதாக மக்களுக்கு மக்கள் எடுத்துச் சொல்ல வேண்டி யதும் பிரசாரம் செய்யவேண்டியதும் அவசியம் தானா?
இரண்டாவதாகக் கடவுள் எண்ணம் மக்களுக்கு மறைந்து போய் விட்டது. அதை ஞாபகப்படுத்தப் பிரசாரகர் களைச் சம்பளத்துக்கு வைத்துப் பாதிரிகளை, குருமார் களை ஏற்படுத்திக் கடவுள் தத்துவத்தைப் போதிக்க ஸ்தாபனங்கள் ஏற்படுத்த வேண்டியது அவசியம் தானா? மற்றும் நாஸ்திகர்கள் பலர் தோன்றிக் கடவுள் இல்லை என்று நாஸ்திகப் பிரசாரம் செய்துவருவதால் கடவுள் கரைந்து வருகிறார். ஆதலால் கடவுளைக் காப்பாற்ற வேண்டியது மிகமிக அவசியம் என்று பலர் கருதி, ஆஸ்திகப் பிரசாரம் செய்து கடவுளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம் தானா? மற்றும் கடவுளுக்குக் கோவில் வேண்டுமா? கடவுளுக்குப் பெண்டாட்டி வேண்டுமா? கடவுளுக்குக் காமவிகாரம் உண்டா? கடவுளுக்குக் குழந்தைகள் வேண்டுமா? கடவுளுக்குத் தாசி, போக மாதர் வேண்டுமா? கடவுளுக்குப் படைப்பு, சாப்பாடு, நகை, துணி, மணி, கல்யாணம், உற்சவம், ஊர்வலம் வேண்டுமா? இவை ஒருபுறமிருக்கக் கடவுள் சக்திக்கு - செய்கைக்கு ஏதாவது அளவுண்டா? அல்லது அவர் எல்லாம் வல்லவரும் எல்லாவற்றிற்கும் பொறுப்பானவருமா? அவருடைய சக்திக்கும் செயலுக்கும் எல்லை உண்டா? இல்லையா? கடவுள் சக்தியை உணர்ந்தவன் கடவுளைக் காப்பாற்றக் கவலை கொள்ளுவானா? உண்மையிலேயே சர்வ சக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று மனப்பூர்வமாய் நம்பி இருக்கும் ஒருவன் கடவுளைக் காப்பாற்ற முற்படுவானா? கடவுள் இல்லை என்று ஒருவன் சொன்னால் அவன் மீது பாய்ந்து கோபிப்பானா?
இந்தப்படி கடவுளைப் பற்றிக் கவலைப்படுகிறவர், கடவுள் பிரசாரம் செய்கிறவர்களில் யாராவது தம் எண்ணத்தில் - நடத்தையில் கடவுள் சித்தப்படி நடப்பவர் களாகவோ, கடவுளுக்குப் பயந்து நடப்பவர்களாகவோ அல்லது கடவுள் தன்மையில் மதிப்பும், நம்பிக்கையும், பயமும் கொண்டவர்களாகவோ எங்காவது காணப்படு கிறார்களா?
கடவுள் நம்பிக்கை உடையவன் எவனாக இருந்தாலும், அவன் கடவுளைத் தொழ வேண்டுமா? பூசிக்க வேண்டுமா? தொழுதாலும், பூசித்தாலும், அதற்கு ஒரு நேரம், ஒரு இடம், ஒரு உருவம், ஒரு வாக்கியம் - பாட்டு வேண்டுமா? மற்றும் அதற்குப் பண்டம், படைப்பு வேண்டுமா? உண்மையாகக் கடவுள் இருப்பதானாலும், இருப்பதாக நம்புவதானாலும் பலமதக்காரர்களும் இன்று கடவுள் சம்பந்தமாய் நடந்து கொள்ளும் நடத்தைகள் அவசியமா? என்பனவாகி யவைகள் ஒருபுறமிருக்க, தம்மைப் பெருத்த அறிவாளிகள் என்றும், எல்லாம் அறிந்த மேதாவிகள் என்றும் கருதிக் கொண்டிருக்கும் சிலர் கூறுகிறபடி அதாவது, கடவுள் இருக்கிறதோ இல்லையோ அது வேறு விஷயம், கடவுள் என்பதாக ஒரு சர்வ சக்தியுள்ளவர் ஒருவர் இருக்கிறார் என்று மக்கள் நம்பும்படி செய்தால்தான் மக்கள் யோக்கியமாய் - பிறருக்குத் தீங்கிழைக்காமல் நடந்து கொள்ளுவார்கள். ஆதலால் கடவுள் பயம் மக்களுக்கு இருக்க வேண்டும், அந்தப் பயத்தைத் தெளியவைக்கக் கூடாது என்று சொல்லுகிறார்களே அதைப்பற்றிச் சிறிது சிந்தித்தால், அவர்கள் கருதுவதுபோல், கடவுள் உணர்ச்சியையும், கடவுள் தன்மைகளையும், நியாயத் தீர்ப்புகளையும், பயப்படத்தக்க கொடூர ரூபம் உள்ள நரக வேதனைகள், செக்கில் போட்டு ஆட்டுதல் முதலிய பலமான தண்டனை களையும் பின் ஜென்மத்தில் பல கஷ்டமான இழிவுகளையும், துன்பங்களையும் தரத்தக்க தலைவிதிகளையும், மற்றும் பலவித மோட்ச சுகங்களையும், உயர் பிறவிகளையும், சுகபோகங்களையும் தரத்தக்க முன்ஜென்ம புண்ணிய கர்மங்களையும், அவைகளுக்கேற்ற கடவுள்வாக்கு, வேதம், சாஸ்திரம், புராணம் முதலிய கற்பனைகளையும், எவ்வளவோ கெட்டிக்காரத்தனமாய் கற்பனை செய்து மக்களுக்குள் பல ஆயிரம் ஆண்டுகளாகப் புகுத்தி வந்தும்கூட, இன்றுவரையில் மக்களில் பெரும்பா லோர் - ஏறக்குறைய எல்லா மக்களும் யோக்கியமாய் மனிதனை மனிதன் ஆட்கொள்ளாமல், சராசரி மனிதனுக்கு மேம்பட்ட பொருளை அனுபவியாமல் இருக்க முடியவில்லையே அது ஏன்? என்றும், கடவுள் உணர்ச்சியை இவ்விதமாக எல்லாம் மக்களுக்குள் ஊட்டியதால் ஏதாவது பயன் ஏற்பட்டிருக்கிறதா? என்றும் பார்த்தால், மனிதன் ஒழுக் கத்திற்குக் கடவுள் உணர்ச்சி வேண்டும் என்கிற விதமும் அடிபட்டுப் போகிறதே.
ஏன் எனில், உலகில் அறிவில்லாத பாமர ஏழை மக்கள் மாத்திரம்தான், ஒழுக்கமற்று நாணயமற்று உண்மையற்று நடந்து கொள்ளுகிறார்கள் என்பது அல்லாமல், கற்ற மக்கள், செல்வவான்கள், பெரும் பதவியில் உள்ளவர்கள், மிக மிகப் பக்திமான்கள், குருமார்கள் உள்பட எல்லோருமே பெரிதும் விதிவிலக்கு இல்லாமல், கீழ்மக்கள் தன்மையாய் நடந்து கொள்ளுகிறதைப் பார்க்கிறோமே. ஆகவே கடவுள் உணர்ச்சிக்கும், ஒழுக்கத்துக்கும் உயர்குணத்துக்கும் சிறிதும் சம்பந்தமில்லை என்று தெளிவாகிவிட வில்லையா? கடவுளுக்கு உருவம் எதற்கு என்றால் அதற்கு ஒரு சமாதானம் கூறப்படுகிறது. அதென்னவென்றால்,
பாமர முட்டாள் ஜனங்களுக்குக் கடவுளின் அருவ - (உருவமற்ற)த் தன்மை விளங்காது ஆதலால், கடவுளை ஒரு உருவமாகக்காட்டி அந்த உருவம் மக்கள் உள்ளத்தில் பயரூபமாய் அடிமைரூபமாய் விளங்க, கடவுள் உருவங்களுக்குப் பல கோர கொடூரச் செயல்களைக் கற்பித்து, அதோடு கடவுளை மேல் ஜாதியாகக் கற்பித்து, அவைகளிடத்தில் பக்தி உண்டாகும்படி செய்வதற்கு ஆக உருவம் கடவுளுக்கு அறிவாளிகளால் கற்பிக்கப்பட்ட தாகும். என்று சொல்லப் படுகிறது. இதையும் சிறிது சிந்தித் தால் இதன் பயனற்ற தன்மையும், அறியாமையும், சூழ்ச்சியும் விளங்காமல் போகாது. சாதாரணமாக, நம் நாட்டில் கடவுளுக்கு உருவங்கள் ஏற்படுத்தி வழிபாடு செய்யத்துவங்கிய காலம் 2000, 3000 ஆண்டு களுக்கு மேற்பட்டதாகவே இருக்கலாம். அதாவது ஆரியர் நம் நாட்டிற்கு வந்து, அவர்களது (ஆரிய) மதத்தைப் புகுத்தி, அதன் மூலம் கடவுள்களைக் கற் பித்து, அவற்றிற்கு உரு வங்கள் ஏற்படுத்தின காலத் தில் இருந்தே, நம்நாட்டில் உருவக் கடவுள்கள் காட்சி அளித்து வருகின்றதென்ன லாம். அதற்கு ஆதாரம் என்னவெனின், எந்தக் கடவுள்களது உருவத்தை எடுத்துக் கொண்டாலும், ஆரிய மதக்கதை சம்பந்த மும், ஆரியத்தோற்ற சம்பந்தமும் இல்லாமல் காண்பது அரிதாகவே இருக்கிறது. ஆகவே, இந்தப்படி 3000, 4000 ஆண்டுகளாகக் கடவுளை உருவமாக்கி, மக்களுக்குக் காட்டி, கடவுள் தன்மையை ஊட்டி வந்தும், இன்றைக்கும் பாமர மூட ஜனங்கள் மாத்திரம் அல்லாமல் பண்டிதர்கள், ஞானிகள் என்பவர்கள் முதல் பெரும் மேதாவிகள் என்பவர்களுக்குக் கூட, உண்மையான கடவுள் பக்தி அவரவர் நடப்பில் கடவுள் தன்மை, பகுத்தறிவு ஆகியவை ஏற்படவில்லை என்றால், மூடர்களுக்குக் கடவுள் பக்தி ஏற்படுவதற்கு ஆக உருவம் (விக்கிரகம்) கற்பிக்கப்பட்டது என்பதில் ஏதாவது உண்மையோ பலனோ அறிவுடைமையே உண்டு என்று யாராவது கொள்ள முடியுமா?
மற்றும் நித்தியமான சர்வசக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றால், கடவுள் என்பதாக ஒன்று உண்டா இல்லையா? என்பதாக மக்களுக்குச் சந்தேகம் ஏற்படுவானேன்? சிலருக்குக் கடவுள் இல்லை என்றும் இருக்க முடியாதென்றும் தோன்றுவானேன்? ஏதோ அறிவிலிகளுக்கு இப்படித் தோன்றுகிறது என்று கொள்ளுவதானாலும் அறிவாளி களுக்கு கடவுளைக்காப்பாற்ற வேண்டும், கடவுள் பிரசாரம் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றுவானேன்? கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று குழந்தைகளுக்கும் பள்ளிப் பிள்ளைகளுக்கும் கற்பிக்க முயற்சி செய்வானேன்?
அவைதான் போகட்டும் என்றாலும், கடவுள் அவதாரம் என்றும், கடவுள் தன்மை அடையப் பெற்ற பெரியார்கள் என்றும், கடவுள் மனித ரூபமாய் - பன்றி ரூபமாய் மற்றும் ஏதேதோ ஆபாசரூபமாய்க் காணப்படுவானேன்? கடவுளுக்குக் குமாரரும், தூதுவரும், அசரீரியும், மக்கள் மீது மருளும், அதாவது சாமியாடுதலும் ஏன்?
இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மெய்யாய் இருந்தாலும் பொய்யாய் இருந்தாலும், இவைகள் கடவுள் இருப்பதை ஊர்ஜிதம் செய்யவோ அல்லது மக்களுக்குக் கடவுளால் பயன் ஏற்படவோ அல்லது உலக நடப்புக்காவது மனித சமுதாய நல்வாழ்வுக்காவது ஏதாவது பயன் ஏற்படுமா என்பது மிகவும் சிந்திக்க வேண்டியதாகும். இதுவரையில் காலம் எப்படிக் கழிந்திருந்தாலும், இனி மேலாவது மனித சமுதாயம் பயமும் கவலையுமற்றுச் சாந்தியாய் திருப்தியாய் நல்வாழ்வு வாழவேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வண்ணம் இனிச் சமுதாய ஒழுங்குகள், ஒழுக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலம் பயங்கரமான ஆபத்துக்குள்ளாகும் காலம். எப்படி எனில், மக்கள் இனிச் சுலபத்தில் சாகமாட்டார்கள். இதுவரை நம்மக்களுக்கு சராசரி ஆயுள் 25 என்றால், இனி மக்கள் சராசரி ஆயுள் 50க்கு மேற்பட்டுத்தான் இருக்க முடியும். சுகாதாரம் அதிகம், வைத்தியம் வசதி அதிகம், மனிதன் நோய் களையும் துன்பங்களையும் கடவுள் மீது பாரத்தைப் போட்டு விட்டு அற்பா யுளாகப் போய்க் கொண் டிருந்தவன் தன் முயற்சியில் நம்பிக்கை வைத்துப் பரி காரம் தேடி மீளுகிறான். மனிதனுக்குப் பல துறை களில் அறிவு உணர்ச்சி ஏற்பட்டு வாழ்வை நீட்டிக் கொள்ள வசதி பெற்று விட்டான்.
அதுபோலவே மக்கள் பிறப்பும் அதிகமாகிவிட்டது. கர்ப்பச் சிதைவு, சிசு மரணம், பிரசவ மரணம் இனி சுலபத்தில் ஏற்படாத மாதிரிப் பாதுகாப்புகள், பரிகாரங்கள் ஏற்பட்டுவிட்டன. இனி மலடும் இருப்பதற்கில்லாமல் நிவர்த்தி மார்க்கங்கள் ஏற்பட்டுவிட்டன. இனி விதவைகளாகவும் எவரும் காலங்கழிக்க முடியாமல் விதவை மணம், சுதந்திரக் காதல் முதலியன செல்வாக்குப் பெற்று, தாராளமாய் நடப்பில் வருவதன் மூலம் அவற்றாலும் பிறப்பு அதிகமாகின்றன.
பொதுவாகப் பிறப்பு விகிதமும், பலவிதச் சவுகரியங் களால் நபர் 1-க்கு 2, 3, 4 என்பதாக குழந்தைகள் இருந்து வந்தது மாறி, இப்பொழுது நபர் ஒன்றுக்கு 6, 8, 10, 12 என்பதாகக் குழந்தைகள் பிறப்பதும், அவைகளும் நீண்ட நாள் வாழ்வதுமாக இருக்கின்றன.
இவர்களுக்கு எல்லாம் உணவு, போக போக்கியப் பொருள், பிழைப்பு, நல்வாழ்வு ஆகியவை தேவைப்படுவதுடன் உணவுப்பஞ்சம் ஏற்பட்டே தீரும். இவைகளில் பெரும் போட்டியும் அதன் பயனாய் வெறுப்பு, வஞ்சம், துரோகம், கொள்ளை, கொலை முதலியவைகள் மலிந்துவிடும். சாதுவும் யோக்கியமுமான மக்கள் மிகமிகத் துன்பமடைய நேரிடும். அயோக்கியர்களும் காலிகளுமே நல்வாழ்வு வாழ்வார்கள் அதற்கேற்ற அரசாங்கம்தான் ஏற்படமுடியும்.
---------------தந்தைபெரியார் - “ குடிஅரசு” - கட்டுரை - 07.05.1949
0 comments:
Post a Comment