Search This Blog

4.12.11

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -21


1967 தேர்தலில் பக்தவத்சலம் வெற்றி பெற்றாராம் !


இந்த வார துக்ளக் இதழில் (7-.12-.2011) திருவாளர் கே.சி. லட்சுமி நாராயண அய்யர் காமராஜரை உறவாடிக் கெடுத்த ஈ.வெ.ரா. எனும் தலைப்பில் நிதானம் தவறியும், தவறான தகவல்களுடனும் பார்ப்பனத்தனத்துடனும் எழுதி இருக்கிறார்.

1967 பொதுத் தேர்தலில் சுதந்திராக கட்சியோடு (ராஜாஜியோடு) கூட்டு சேர்ந்தது பற்றிய பழைய கதைகளையெல்லாம் - அரைத்த மாவையே அரைக்கும் புளித்த வேலையில் கட்டுரையாளர் இறங்கி இருக்கிறார்.

விருகம்பாக்கத்தில் நடைபெற்ற தி.மு.க.வின் நான்காவது பொது மாநாட்டில் கலந்து கொண்ட ராஜாஜிக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப் பட்டது பற்றியும், ராஜாஜி நெகிழ்ந்து போனது குறித்தும் பலபட எழுதப்பட்டுள்ளது.

எல்லாம் உண்மைதான். அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் அதன் பயனை - ஆச்சாரியார் நினைத்த அளவுக்கு அக்கிரகாரம் பக்கம் மடைமாற்றம் செய்ய முடிந்ததா?

தி.மு.க. கூட்டணியில் இருந்த ராஜாஜி வெற்றி பெற்றாரா? எதிர்த்த பெரியார் காரியத்தில் வெற்றி பெற்றாரா?

அண்ணாவின் நன்றி உணர்வோடு, தந்தை பெரியார் அவர்களின் இனநலக் கண்ணோட்டத்தில் மேற்கொண்ட முடிவினால் சாணக்கியர் என்று சகட்டு மேனிக்குப் பார்ப்பனர்களால் புகழப்படும் ஆச்சாரியார் ராஜாஜி தோல்வியில் துவண்டு போனதையும் மரியாதையாக ஒப்புக் கொள்ளும் நாணயமின்றி, அன்று ஏற்பட்ட அவமானத்திலிருந்து இன்றளவுக்கும் மீள முடியாத ஆத்திரத்தில் அக்ரகார எழுத்தாளர் எழுத்தாணி பிடிப்பதைப் பார்த்துப் பரிதாபப்படுகிறோம்.

ஈ.வெ.ரா.வின் இந்த தலைகீழ் மாற்றம் (தி.மு.க. ஆட்சியை ஆதரித்தது) எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று அவரது போக்கை நன்கு அறிந்த பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வருத் தத்துடன் தெரிவித்தார்கள். ஈ.வெ.ரா. காங்கிரசிலிருந்து வெளியேறிய பிறகு காங்கிரசை ஒழிப்பதே என் நோக்கம் என்று பகிரங்கமாக அறிவித்துத் தீவிரமாகச் செயல்பட்டதையும், அவர் காமராஜரை ஆதரிப்பதாக முன்வந்த போது கூட காந்தியடிகளையும், காங்கிரஸ் பேரியக்கத்தையும் ஏசிக் கொண்டிருந்தார் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள் என்று பொத்தாம் பொதுவாக எழுதப் பட்டுள்ளது.

ஈ.வெ.ரா.வை நன்கு அறிந்த பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தார்களாம்.

குறை கூறி கட்டுரை எழுதக்கூடிய ஒருவர் இவ்வளவு குறைந்த அற்பத் தகவலுடன், தலையுமின்றி, வாலுமின்றி எழுதலாமா?

யார் அந்த பல மூத்த தலைவர்கள்? பட்டியல் போட்டுச் சொல்ல வேண் டாமா? இவர் வீட்டுக்கு வந்து மெனக் கெட்டு சொன்னார்களா? அல்லது இவர் அந்த மூத்த தலைவர்களின் ஆத்துக்கெல்லாம் சென்று தகவல் திரட்டினாரா?

இப்படியெல்லாம் எழுதுவதற்கு ஒரு எழுத்தாளர், -இந்தக் குறைப் பிரசவங் களையெல்லாம் அச்சிட்டு வெளியிடுவதற்கு ஒரு இதழ்! பார்ப்பனர்களின் சரக்கு ஊசிப் போய் விட்டது என்பதுதான் இதன் பொருள்.

காமராசரை ஆதரித்தார்,. அதே நேரத்தில் காங்கிசையும், காந்தியடிகளையும் ஏசிக் கொண்டிருந்தார் என்று கூறி இருப்பது பெரியாருக்குப் பாராட்டா? குற்றச் சாற்றா?

நான் காமராசரைத்தான் ஆதரிக்கிறேன், காங்கிரசை அல்ல என்று பெரியார் சொன்னதன் மூலம் அவர் வழியில் மிகச் சரியாகவே தடம் பதித்துள்ளார் என்பதுதானே பொருள்?

காங்கிரஸ் மேடையில் ஏறிக் கொண்டு, காங்கிரசையும், காந்தியாரை யும், பார்ப்பனர்களையும் கடுமையாக விமர்சித்தார் என்பது எந்த நிலையிலும் தந்தை பெரியார் தன் கருத்தை விட்டுக் கொடுக்கக் கூடியவர் அல்லர் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் - பாராட்டுதான். அதனை ஒப்புக் கொண்டு எழுதியதற்காக வேண்டுமானால் ஒரே ஒரு முறை திருவாளர் லட்சு நாராயணன் அவர்களைப் பாராட்டலாம்தான்.

ஆளும் கட்சியான நிலையில் தி.மு.க.வை பெரியார் ஆதரித்தது எதிர்பார்க்கப்பட்டதுதான். அவர் போக்கு அப்படிப்பட்டதுதான் என்று குத்தலாக எழுதுவதாக நினைப்பு!

ஒரு கட்சியையோ, ஆட்சியையோ, எதிர்ப்பதும் ஆதரிப்பதும் தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்த வரை கொள்கையின் அடிப்படையில்தான்! அவர் ஒன்றும் ஆதாயம் தேடும் சாதாரண அரசியல் வாதியல்ல. அசாதரணமான சமூகப் புரட்சியாளர். அவரைப் பற்றிப் பேசும்போது நிதானம் தேவை!

பெரியார் காமராசரை ஆதரித்தார் என்றால் என்ன காரணம்? ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததோடு அல்லாமல், ஆச்சாரியாரால் மூடப்பட்ட ஆறாயிரம் பள்ளி களைத் திறந்ததோடு மட்டுமல்லாமல், புதிதாக 12 ஆயிரம் பள்ளிகளைத் திறந்து, ஆண்டாண்டு காலமாக மனுதர்மத்தின் அடிப்படையில் கல்வி உரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள்கல்வி என்னும் கண்ணொளி பெற வழி வகுத்தாரே!

ஆச்சாரியாரால் 50 ஆகக் குறைக்கப் பட்ட நேர்முகத் தேர்வு மதிப் பெண்ணை 150 ஆக உயர்த்தினாரே!

முக்கியமான பதவிகளில் எல்லாம் பார்ப்பனர் அல்லாதாரை அமர்த்தினாரே - இவையெல்லாம் காமரா சரைப் பெரியார் ஆதரித்ததனால் கிடைத்த வெற்றியா, தோல்வியா?

பெரியார் காமராசரை பச்சைத் தமிழர் என்றும், கர்மவீரர் என்றும், கல்வி வள்ளல் என்றும் தூக்கிப் பிடித்தது வீண்போகவில்லையே!

அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும் இதழ்களும் காமராசர் மீது சேற்றை வாரி இறைக்கவில்லையா? கறுப்புக் காக்கையைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று ஆச்சாரியார் பேசவில்லையா? பெரிய பதவி சின்னப் புத்தி என்று கல்கி விஷம் கக்கவில்லையா?

பெரியார் கொள்கை என்னும் குயிலிட்ட முட்டையைக் காமராசர் எனும் காகம் அடைகாக்கிறது என்று கல்கி கார்ட்டூன் போட்டதன் தாத்பரியம் என்ன?

காமராசரை தன்வயப்படுத்தி தம் கொள்கைகளை சாதித்துக் கொண்டது குற்றமா? ஆம், பார்ப்பனர்களின் பார்வையில் குற்றம்தான், மகா மகா குற்றம்தான்!

இதுவே மனுதர்ம ராஜ்ஜியம் என்றால் பெரியாரையும், காமராசரையும் கழுவில் ஏற்றிக் கொன்றே இருக்காதா ஆரியம்?

பார்ப்பனக் கழுமரத்தையே கழுவேற்றிய தலைவர்களாயிற்றே தந்தை பெரியாரும், பச்சைத் தமிழர் காமராசரும்! காமராசரை ஒரு பட்டப் பகலில், இந்தியாவின் தலைநகரில்- பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் இந்த ஆரியக் கூட்டம் படுகொலை செய்ய முயற்சித் தது என்பதும் உண்மைதான். பெரியார் மாளிகையைக் கொளுத்த ஆரியம் தூண்டி விட்ட நிகழ்ச்சிகளும் உண்டு.

பெரியார் காமராசரை நேசித்ததும், காமராசர் பெரியாரை மதித்ததும் இனநலன் அடிப்படையில் - மக்கள் நலன் அடிப்படையில்தானே!

பெரியார் ஏன் ஆதரித்தார் காமராசரை? அதற்குக் காமராசரே இதோ பதில் கூறுகிறார் கேளுங்கள்.

நீங்கள் மதிப்பிற்குரிய பெரியார் ஈ.வெ.ரா.வின் பெயரை வைத்துள்ளீர்கள்! பள்ளத்தெரு என்ற பெயரை மாற்றி வைத்தது பொருத்தமே. ஜாதி பேதமற்ற சமுதாயத்தைக் காணப்பாடுபட்டவர், நமது ஈரோடு தமிழ்ப் பெரியார்தான். எனவே, இந்த நகருக்குப் பெரியார் பெயர் வைத்தது மிகவும் பொருத்த மானதே!

பெரியார், காங்கிரசின் தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்தார். அப்போதே, ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்றார். பெரியார் காங்கிரசில் இருந்த போது, கேரளத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் ஜாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்தினர். அதனை எதிர்த்து காந்திஜி விருப்பப்படி பெரியார் சத்தியாக்கிரகம் ஆரம்பித்தார்.

அப்போது நான் ஒரு சிறிய தொண் டன்தான்! பெரியாருக்கு அப்போது என்னைத் தெரியாது! அவர் பெரிய தலைவர்! இப்போதும் அவரை எனக்குத் தெரியாது! (சிரிப்பு) ஏதோ நான் அவரைப் பார்த்திருக்கிறேன்.

வைக்கம் நகரில் தீண்டாமை ஒழிப்புக்குப் பாடுபட்டு, தம் வாழ்நாளிலேயே அதைக் காணவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் பெரியார்!

சர்க்கார், ஜாதி ஒழிப்புக்குப் பல சட்டங்கள் செய்துள்ளன. ஜாதி ஒழியவில்லையே என்று ஆத்திரப் பட வேண்டாம். சட்டத்தினால் மட்டுமே ஒரு சமூகத்தினை மாற்றி அமைத்துவிட முடியாது. ஜனங்களின் ஒத்துழைப்பு அதற்கு மிகவும் அவசியம். மூடப்பழக்க வழக்கங்கள் ஒழிய வேண்டும். அதற்காகப் பாடுபடும் பெரியார் ஈ.வெ.ரா. நீடூழி வாழ்ந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்.

அவருடைய பல கருத்துகளை நாம் ஒத்துக் கொள்ள முடியாது! ஆயினும், ஜாதி ஒழிப்பு, பற்றிக் கருத்து வேற்றுமை இருக்க இடமில்லை. தாழ்த்தப்பட்ட வர்கள் தாழ்ந்து இருக்க வேண்டும் என்றும், பிறவியிலேயே தாழ்ந்தவன் என்று சொல்வதும் வெட்கப்படக் கூடியதாகும். தலைவிதி எனக் கூறு கிறோம். அது தப்பு! சமுதாயம், சமதர்மம் ஆகிய கொள்கைகளை ஒப்புக் கொள்ளாவிட்டால், நாடு முன்னேறாது, வாழமுடியாது!

சர்க்கார், அரிஜன நல இலாக்கா ஏற்படுத்தியுள்ளது. பெரியார் சர்க்காரை ஆதரிக்கிறார் என்றால் அவருடைய நோக்கம் நிறைவேறுவதால்தான்! பெரியார் என்னிடம் தினமும் இரவு ரகசியமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். (சிரிப்பு) நாங்கள் அப்படிச் சந்திக்கவில்லை. பெரியார் ஆதரவு தருகிறார் என்றால், நல்ல சீர்திருத்தங்கள் சர்க்காரால் கொண்டு வரப்படுவதுதான் காரணம்.

- முதன்மந்திரி காமராஜ், திருச்சி வரகனேரியில் பெரியார் நகர் வாயிலைத் திறந்து வைத்துப் பேசியது. (நவசக்தி 11_-4_-1961).

பெரியார் - காமராசர் இணக்கம் ஏன் என்பது இப்பாழுது விளங்குகிறதா?

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள் அன்று முதல் இன்று வரை மாரடித்து ஒப்பாரி வைக்கிறார்கள்.

தந்தை பெரியார் ஓர் ஆட்சியை ஆதரிப்பது ஏன்? எதிர்ப்பது ஏன்? என்பதற்கான காரணங்களை மிக வெளிப்படையாகவே அறிக்கை ஒன்றின் மூலம் (எனது கொள்கை ஆதரவு மாற்றத்திற்குக் காரணம் எனும் தலைப்பில்) தெரிவித்தாரே!

இதோ அது:

நான் 1920ல் காங்கிரசில் சேர்ந் தேன். அதற்கு முன்பு 1900 முதல் பார்ப்பனரல்லாதவர் நல உணர்ச்சி கொண்டவனாக இருந்து வந்தேன்.

நான் 1900க்கு முன்பே கடவுள், மத, ஜாதி விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து வந்தேன்.

விளையும் பயிர் முளையிலேயே . . .


நான் அக்காலத்தில் சிறிது செல் வாக்குள்ள குடும்பத்தவனாகவும், வியாபார விஷயத்தில் ஈடுபடுபவனாக வும் இருந்து வந்ததால் யாரிடமும், தர்க்கமும், விவகாரமும் பேசுவதில் பிரியமும் உற்சாகமும் உடையவனாக இருந்து வந்தேன்.

மாடு , எருமை, கன்று போட்ட நேரங்களைக் குறித்து வைத்துக் கொண்டு, ஜோசியர்களிடம் கொடுத்து ஜோசியம் கேட்பேன்.

1900 ல் இருந்தே எனக்கு ஜோசியம், முகூர்த்தம், சகுனம் முதலியவைகளில் நம்பிக்கை இருந்ததில்லை. அப்போது என்னிடத்தில் வாய்கொடுத்து மீள முடியாது என்று எல்லோரும் பேசிக் கொள்வார்கள்.

எக்குழுவிலும் நான்தான் தலைவன்


நான் எனது 5, 6, 7 வயது முதற் கொண்டே தறுதலைப் பிள்ளையாகத் திரிந்தாலும், அந்த வயது முதற் கொண்டே நான் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் எந்தக் கூட்டத்தில் சேர்ந்தாலும் (நான்)தலைவனாகவே - மற்றவர்கள் என் சொல் கேட்பவர் களாகவே இருக்கும் வண்ணம் இருந்து வந்திருக்கிறேன்.

இன்று வரையிலும் கூட எந்தக் குழுவிலும் எந்தக் கட்சியிலும் நான் தலைவனாகவே இருந்து வந்திருக் கிறேனே ஒழிய ஒரு சாதாரண அங்கத் தினனாக எதிலும் இருந்ததில்லை.

அதுபோலவே எந்த சந்தர்ப்பத் திலும் எந்தக் குழுவிலும், கட்சியிலும் எதாலும் நான் பிரத்தியாருக்கு ஆதரவு கொடுப்பவனாகவே இருந்து வந்திருக் கிறேனே ஒழிய, நான் யாரிடமும் எதற்கும் ஆதரவு - உதவி கேட்டதே இல்லை. அது போலவே நான்தான் எனது ஆயுளில் யாருக்கும் பண உதவி செய்திருக்கிறேனே ஒழிய யாரிடமும் எந்தக் காரியத்திற்கும் பண வசூலுக்குப் போனதே கிடையாது. யாரிடமும் எந்தக் காரியத்திற்கும் பணவசூல் செய்ததும் கிடையாது.

என்னைப் பற்றி


சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் முதலியற்றிற்குக் கூட பணம் வேண்டுமென்று பத்திரிகையில் போடுவேன், கழகத் தோழர்கள் வசூல் செய்வார்கள் அல்லது பொதுமக்கள் அனுப்பிக் கொடுப்பார்கள். அவ்வளவு தான்! நான் நேரில் யாரையும் கேட்டது கிடையாது; கேட்டு வாங்கியதும் கிடையாது.

எனக்குப் பணத்தாசை ரொம்பவும் உண்டு, செலவு செய்யவும் மனது வராது, யாரையும் கேட்கவும் மாட் டேன்.

ஆனால் பணம் வந்து கொண்டே இருக்கும் . சேர்த்து கணக்குப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டே இருப் பேன். சரியாக கணக்கு வைக்க மாட் டேன். அடிக்கடி இருப்பை கணக்குக் கூட்டிப் பார்த்துக் கொள்வேன்.

எனது கொள்கைகள்


எனக்கு ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவாளர், நாத்திகர்கள் ஆக வேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர்இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. இதற்கு ஆகத்தான் காங்கிரசில் கூப்பிட்ட உடன் சேர்ந்தேன்.

நான் காங்கிரசை விட்டதற்கும் இதுதான் காரணம்:


ஜஸ்டிஸ் கட்சி என்னும் பார்ப் பனரல்லாத கட்சியில் சேராமலே அதற்கு நான் ஆதரவளித்ததும் இதற்கு ஆகத்தான்.

ஜஸ்டிஸ் கட்சி தலைமை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதும் இதற்கு ஆகத்தான். அக்கட்சி தலைமை ஏற்ற உடன் அக்கட்சி கொள்கையாக இம்மூன்றையுமே ஏற்படுத்திவிட்டு அரசியலில் (எலக்ஷனில் நிற்பதில்லை, பதவி ஏற்பதில்லை) பிரவேசிப்பதில்லை என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதும் இதற்கு ஆகத்தான். காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்து விலக்கப்பட்ட போதும் பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளினதும் இதற்கு ஆகத்தான்.

காங்கிரசை எதிர்த்ததும் ஆதரித்ததும்


வெள்ளையன் போன பின்பு 1952 இல் நடந்த தேர்தலின்போது கூட நான் காங்கிரசை எதிர்த்து வேலை செய்தபோது கூட என் கழகத்தில் இருந்து ஒரு நபரைக் கூட நிறுத்தாமல், கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸ் எதிரிகளுக்கும் ஆதரவ ளித்து, காங்கிரசை தோற்கடித்ததும் இதற்கு(எனது மேற்கொண்ட கொள்கைகளுக்கு) ஆகத்தான்.

எனது கொள்கைப்படி வேறு கட்சி பதவிக்கு வர முடியாமல் போனதால், காங்கிரஸ் பதவிக்கு வந்து எனக்கு ஆதரவளிப்பதாக கூறியும் நான் மறுத்துவிட்டு, காங்கிரசை எதிர்த்து இராஜாஜியை காங்கிரசை விட்டு போகும்படி செய்ததும் இதற்கு ஆகத்தான். அந்த சந்தர்ப்பத்தில் காமராஜரை ஆதரிக்கும் முறையில் காங்கிரசை ஆதரித்ததும் இதற்கு ஆகத்தான் - அதாவது காமராஜர் பதவிக்கு வந்த வுடன், பார்ப்பனர்களும், அவர் களது சில கூலிகளும் காங்கிரசை (காமராஜரை) எதிர்த்தபோது, தானாகவே மேல் விழுந்து காங் கிரசை (காமராஜரை) ஆதரித்ததும் இதற்கு ஆகத்தான்.

இந்த சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் காரர்கள் என்னை விரும்பவில்லை என்று தெரிந்தும், நானாகவே காங்கிரசை ஆதரித்துக் கொண் டிருந்ததும் (இந்தக் கொள்கைக்கு) இதற்கு ஆகத்தான்.

தி.மு.க.வை எதிர்த்ததேன்?


இந்த சந்தர்ப்பங்களில் தி.மு.க.வை எதிர்த்துக் கொண்டு இருந்ததும் இதற்கு ஆகத்தான். அதாவது இந்த சந்தாப்பத்தில் தி.மு.க.வுக்கு பார்ப்பனர்கள், அவர்களது பத்திரிகைகள் ஆதர வாக இருந்தாலும், தி.மு.க.வும் நாங்கள் பார்ப்பனர் கைப்பொம் மைகள்தான் என்று பட்டாங்க மாகச் சொல்லிக் கொண்டு வந்தது. தேர்தலில் காங்கிரஸ் தோற்று தி.மு.க. பதவிக்கு வந்தது. பார்ப் பனர்கள் தி.மு.க.வை ஒழிக்கப் பாடுபடுவதாலும், காங்கிரஸ் பார்ப் பனர்களுடன் சேர்ந்து கொண்டு தி.மு.க.வை ஒழிக்கப் பாடுபடுவ தாலும் நான் தி.மு.க.வுக்கு ஆதர வாளனாக இருக்க வேண்டியதாகி யதும் இதற்கு ஆகத்தான்.

நாளை எனது நிலை


ஆகவே எனது பொது வாழ்வு துவங்கியது முதல் இன்றுவரை மேற்கண்டபடிதான் பல கட்சிகளை எதிர்த்தும், பல கட்சிகளை ஆதரித் தும் தொண்டாற்றிக் கொண்டு வந்திருக்கிறேன். எல்லாம் ஒரே காரியத்திற்கு (கொள்கைக்கு) ஆகத்தானே ஒழிய கொள்கை மாற்றத்திற்கு ஆக அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும்.

இவ்வளவு மாத்திரம் அல்ல. இனியும் எந்த கட்சியை எதிர்ப் பேனோ, எதை ஆதரிப்பேனோ எனக்கே தெரியாது!

பொதுவாக நான், சாகும்வரை இந்த மேற்கண்ட கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று நான் உறுதியாய் இருக்கிறேன்.

குறிப்பு: இந்த மூன்றிலும், அதா வது பகுத்தறிவு (நாத்திகத்தன்மை) வளர்ச்சி, ஜாதி ஒழிப்பு, பார்ப்பனர் ஒழிப்பு இந்த மூன்றுக்கும் தி.மு.க. எதிரிகளாக ஆகி விடுவார்களே ஆனால் எனது நிலைமை இப் படியே இருக்கும் என்று சொல்ல முடியாது.

----------------(-தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் - 1968)

தேர்தலுக்கு நிற்காமல் வாக்குகளை எங்களுக்குத் தாருங்கள் என்று பல்லிளிக்காமல், கொள்கை களில் சமரசம் செய்து கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகாமல் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய மகத்தான விழிப்புணர்ச்சி மூலம் ஆட்சியில் அமர்ந்தவர்களை வேலை வாங்கும் அந்த நேர்த்தி மகத்தானதல்லவா? அந்த மாபெரும் இமாலயச் சாதனையைப் பாராட் டும் மனப்பக்குவம் இல்லாமல் புழுங்கிச் சாகிறார்கள் - புலம்பு கிறார்கள் பார்ப்பனர்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாதா? அதே நேரத்தில் காமராசர் ஆட்சியை தந்தை பெரியார் ஆதரித்து வந்த கால கட்டத்திலும் தம் கொள்கைக்காக போராட் டங்களை நடத்தத் தவறவில்லையே!

ஜாதி ஒழிப்புக்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத் தவில்லையா? (26-11-1957) மூவாயிரம் கருஞ்சட்டைத் தொண்டர்கள் மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை கடுந்தண்டனை அனுபவித்தது இல்லையா? 20 தோழர்கள் களப் பலியானார்களே!

தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபடத்தைக் கொளுத்தும் போராட்டம் நடத்தவில்லையா? (1-8-1960) இந்தியை எதிர்த்து தேசியக் கொடி கொளுத்தும் போராட் டத்தை அறிவித்தாரே! (1-8-1955)

உங்கள் நண்பர் ஈ.வெ.ரா.தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்த உள்ளாரே! உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தக்கூடாதா என்று பிரதமர் நேரு அவர்கள் தமிழ்நாடு முதல் அமைச்சர் காமராசரிடம் கேட்ட நேரத்தில் முதல்வர் காமராசர் சொன்ன பதில் சுவையானது:

ஈ.வெ.ரா.தான் எனக்கு நண்பரே தவிர, இந்திக்கு நண்பர் அல்ல என்றாரே பார்க்கலாம்.

வேறு வழியின்றி பிரதமர் நேரு இந்தியைப் புகுத்த மாட்டோம் என்று கூறிய உறுதி மொழியை முதல் அமைச்சர் காமராசர் வெளியிட்டார். (30-_7_-1955)

அதனை வரவேற்று தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கையில் (விடுதலை 30-7-1955) என்ன சொன்னார்?

என்னுடைய இந்தக் கொடி கொளுத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப் பாக வீணர்கள் செய்த ஆர்ப்பா ட்டம், பூச்சாண்டிகளைச் சிறிதும் மதிக்காமல், செயலில் இறங்க முன்வந்து, மடி கட்டிப் பெயர் கொடுத்த மொழிப் பற்றும், ஆண் மையும், மானமும், அறிவும், துணி வும் கொண்ட பதினாயிரக்கணக் கான வீரசிகாமணிகளுக்கு எனது பாராட்டுதலையும், உளம் நிறைந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டு, கொடி கொளுத்தும்படி மறுபடியும் எனது வேண்டுகோள் வரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க சிரம் வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.

வீண் பொய் கவுரவத்தைப் பார்க்காமல், மிகவும் அறிவுடைமை யுடன் நடந்து கொண்ட சென்னை அரசாங்கத்தையும், மனமாரப் பாராட்டுவதுடன், உறுதி மொழிக் கேற்ப நடந்து கொள்ளுமென்றே நம்புகிறேன் என்று தந்தை பெரியார் அறிவிக்கவில்லையா?

தி.மு.க.வை ஆதரித்த கால கட்டத்தில், நாவலர் இரா.நெடுஞ் செழியன் அவர்கள் கல்வி அமைச்ச ராக இருந்த நேரத்தில் நுழைவுத் தேர்வைப் பற்றி வாய் திறந்து கருத்தினை வெளியிட்ட நேரத்தில் மண்டையில் அடித்தது போல கல்வித் துறையில் அரசாங்கம் பெரிய பார்ப்பனீயம் செய்து வருகிறது என்று அறிக்கை வெளியிட (விடுதலை 17_-7_-1972) அந்தக் கருத்துக் கரு சனித்த அந்த நொடி யிலேயே சிதைவு செய்யப்பட்டு விட்டதே!

கொள்கைக்காக ஆதரவு - கொள்கைக்காக எதிர்ப்பு என்னும் தண்டவாளத்தில் விபத்து இல்லாமல் பயணிக்கும் கொள்கையே தந்தை பெரியாருடையது என்பதை மறக்க வேண்டாம்!

இதோ ஒரு முக்கியமான, சிரிப்பூட்டும் கொசுறுச் செய்தி (Tail Piece) ஒன்று உண்டு.

1967-இல் நடைபெற்ற தமிழகச் சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் எம்.பக்தவத்சலம் வெற்றி பெற் றாராம்! (அப்படிப் போடுங்கய்யா அக்கிரகார அறிவாளிகளே!)

திருபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும் தமிழ் நாடு முதல் அமைச்சருமான எம். பக்தவத்சலத்தை தோற்கடித்தவர் தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.ராஜ ரத்தினம் ஆவார். வாக்குகள் விவரம்

டி.ஆர். ராஜரத்தினம் 41,655
எம்.பக்தவத்சலம் 32,729

தேர்தலில் தோற்றவுடன் நாட் டில் விஷக்கிருமிகள் பரவிவிட்டன என்று கூறி இனி நான் சங்கீதம் கேட்டுக் கொண்டு இருப்பேன்! என்று சொன்னவர் பக்தவத்சலம்.

மேல்நாட்டுக்குச் சென்று ஓய்வெடுப்பேன் என்றவர் பெரிய தியாகி ஆர்.வெங்கட்ராமன் அய்யர். (இப்படிப் பட்டவருக்குத்தான் துணை ஜனாதிபதி, ஜனாதிபதி பதவிகள்! பிர்மாவின் முகத்தில் பிறந்தவர்களாயிற்றே!)

காமராசர்தான் தேர்தலில் தோற்றாலும், அடுத்துக் கட்சி வேலை பொதுத் தொண்டு என்று அலைந்த - உழைத்த சூத்திரப் பெருமகன்.


-------------------(அடுத்தவை அடுத்த வாரம்)

--------------------கலி.பூங்குன்றன் அவர்கள் 3-12-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

1 comments:

தமிழ் ஓவியா said...

டிசம்பர் 6

13.11.1938 - தமிழ் நாட்டின் வரலாற்றில் பட்டை தீட்டப்பட்ட வயிரம் ஜொலிக் கும் நாள். அந்நாளில்தான் தமிழ் நாட்டின் மகளிர் குலம் மாநாடு கூட்டி ஈ.வெ.ரா. அவர்களுக்கு பெரியார் என்று பட்டம் அளித்து மகிழ்ந்தது.

அம்மாநாடு முடிந்த மறுநாளே மங்கைமார் இந்தி எதிர்ப்புப் போர் முரசு கொட்டி சிறைக் கோட்டம் ஏகினர்.

டாக்டர் தர்மாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மலர்முகத் தம்மையார், சீதம்மாள், உண்ணா முலை அம்மைர் (ஒரு வயது குழந்தையுடன்), பட்டம்மாள் (பாவலர் பால சுந்தரம் அவர்களின் துணைவியார்) என்று அடுத்தடுத்து சிறைச் சாலைக்குள் வீராங்கனை களாக நுழைந்தனர்.

பெண்களைப் போராட்டத்தில் குதிக்கத் தூண்டியதாக பெரியார் மீது ஆச்சாரியார் ஆட்சி (ராஜாஜி) வழக்குத் தொடுத் தது. பெண்கள் மாநாட்டிலும் (13-11-1938) மறுநாள் பெத்த நாயக்கன்பேட்டை யில் நடைபெற்ற பெண்கள் சிறை புகுந்ததற்கான பாராட்டுக் கூட்டத்திலும் போராட்டத்தில் குதிக்க பெண்களை பெரியார் தூண்டினார் என்று குற்றச் சாற்றின் பெயரில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த தந்தை பெரியார் அவர்களுக்குச் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பெரும் வரவேற்பு காத்திருந் தது. (இதே டிசம்பர் ஆறில்தான் - 1938).

கோச் ஒன்றில் பெரியார் என்னும் தலைதாழாச் சிங் கம் வீற்றிருக்க, பல்லாயிரக் கணக்கான தோழர்கள் புடை சூழ, வாழ்த்து முழக் கங்களுடன் ஊர்வலமாக நீதிமன்றம் நோக்கி அணி வகுத்தது. 500 போலீஸ் காரர்களின் பாதுகாப்பு என்றால் சொல்லவும் வேண்டுமா?

வழக்கம் போல பெரியார் எதிர் வழக்காடவில்லை. ஆனால், அறிக்கை ஒன்றை அளித்தார். அறிக்கையா அது? அரிமாவின் வீரச் சுவைக் காவியம்!

நீதிபதியாகிய தாங்கள் பார்ப்பன வகுப்பைச் சேர்ந் தவர். முதல் மந்திரியும் (ராஜாஜியும்) பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர். இம்மாதிரியான சூழலில் நீதியை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்! எனவே கோர்ட்டார் தங்கள் திருப்தியடையும் வண்ணம், அல்லது மந்திரிமார்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்வளவு தண்டனையைக் கொடுக்க முடியுமோ, அவற்றையும், பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து, இந்த வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்க மாய்க் கேட்டுக் கொள் கிறேன் என்றாரே பார்க்க லாம். இதுபோல் வரலாற் றில் படித்ததுண்டா? கேள்விபட்டதுதான் உண்டா? மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அந்நாள் தான் இந்த டிசம்பர் 6 (1938).

- மயிலாடன் -"விடுதலை” 6-12-2011